நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, December 31, 2008

இலக்கில்லாத இனிய பயணம்.........


இலக்கில்லாத இனிய பயணம்...
எப்போதும் போல வருடக் கடைசியில் ஒரு ரிவியு...
என்ன சாதித்தோம் இந்த வருடத்தில்????
ம்ம்ம்ம்....கனவுகளை நோக்கி ஒரு சில அடி முன்னேற்றம்...
நட்புச் சிறகில் சில இறகுகளின் சேர்ப்பு.
சில முயற்சிகளின் முட்டுக் கட்டை.
சில உழைப்புகளின் வெற்றி சில..... இழப்புக்கள் சில...
சந்தோஷமாக வானில் சிறகடித்த நேரம் சில....
கண்ணீர்த் துளிகள் கன்னம் வருடிய நேரம் சில....
இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாமோ?
இன்னும் கவனமாக இருந்திருக்கலாமோ?
அந்தத் தப்பைத் தவிர்த்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் அன்பைக் கொட்டியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் கோபம் குறைத்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கலாமோ?
இன்னும் நிறைய இன்னும்கள்.....
ஒரு வருடத்தின் இறுதியில் மட்டும் இந்தக் கணக்கெடுப்பு ஏன்?
இதுவே ஏன் ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும்,
வாரத்தின் இறுதி நாளிலும்,
ஏன் ஒரு நாளின் இறுதியிலும் இந்தக் கணக்கெடுத்திருக்கலாமே?
வருடத்தின் இறுதிக்கு ஏன் அத்தனை மரியாதை?

ம்ம்ம்ம்ம் அப்பிடில்லாம் கணக்கெடுத்திருந்தால் இப்பிடியா இருந்திருப்போம்?
இந்நேரம் எங்கேயோ போயிருக்க மாட்டோமா?

உயிர்ச் சேதமில்லாத
குண்டு வெடிக்காத
இயற்கை சீறாத
அமைதியான
புது வருடம்
அன்றி வேறொன்று
வேண்டிலன்.....
அமைதியான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!

Friday, December 26, 2008

அன்னிக்கு ஒரு நாள் எங்க வீட்டுக்குள் க்ராக்கடைல் வந்துச்சே!!!அன்றொரு நாள் சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.எங்க வீட்டுப் பெரிய செல்லம் அப்போ U.K.G படித்துக் கொண்டிருந்தாள்.

"மம்மீஈஈஈஈஈ"ன்ன்னு ஒரு அலறல்.கையிலிருந்ததெல்லாம் கீழே போட்டுட்டு ஓடிப் போய்ப் பார்த்தேன்.
"மம்மி மம்மி ஒரு க்ராக்கடைல் நம்ம வீட்டுக்குள்ளே வந்துருச்சும்மா" என்றபடி நடுங்கிக் கொண்டிருந்தாள்.க்ராக்கடைல் வராதும்மான்னு எவ்வ்ளோ சொன்னாலும் ஒரே அழுகை.

திடீரென்று ஓடிப் போய் அவளுடைய ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து வந்து அதில் மிகச் சரியாக முதலையைக் காட்டி "இதுதான் வந்தது "என்றாள்...எனக்கே கொஞ்சம் பயமாய்ப் போய் விட்டது.

"சரிம்மா வீட்டுக்குள்ளே வந்து அப்புறம் எங்கே போச்சு?"

"கட்டிலுக்கடியிலே போச்சும்மா" என்றாள்.

நானும் அர்த்தமில்லாமல் கட்டிலுக்கடியிலெல்லாம் தேடிப் பார்த்தேன்.கொஞ்ச நேரம் காலை மேலே தூக்கிக் கட்டிலில் வைத்துக் கொண்டு இருவரும் உட்கார்ந்திருந்த்தோம்....அவங்க வேற ஊரில் இல்லை.நான் வேற கரப்பான் பூச்சி வெட்டுக் கிளியெல்லாம் வீட்டுக்குள் வந்தால் விரட்டவோ அடிக்கவோ பயப்பட்டு டம்ளர் போட்டு மூடுற வகை வீரனியாக்கும் ( வீரனுக்குப் பெண்பால்)

ஒரு வழியாக என் பொண்ணு பார்த்த க்ராக்கடைலான ஒரு பல்லியைக் கட்டிலுக்கடியிலிருந்த்து விரட்டியப்புறம் நிம்மதியாகத் தூங்கப் போனோம் இருவரும் ........

Friday, December 12, 2008

என் மறதியும்.... 12B-யின் மறதியும்....
டூத் ப்ரஷ் எடுக்க
அடுப்படி போய்

காப்பியில் கொஞ்சம்
உப்பு போட்டு

குழம்பில் நிறைய
சீனி போட்டு

ப்ஃரிட்ஜைத் திறந்து
சீப்பைத் தேடி

முகக் க்ரீம் எடுத்து
தலையில் தடவி

தேங்காய் எண்ணையை
முகத்தில் அப்பி

நேற்றைய டிபன் பாஃக்ஸைக்
கழுவப் போட்டு
இன்றைய டிபன் பாஃக்ஸைக்
கைப்பையில் திணித்து

ஒரு கால் செருப்பிலும்
ஒரு கால் ஷூவிலும்
நுழைத்து

ஓடிப் போய்
மூச்சு வாங்கி.....
நின்று நிமிர்ந்தால்...
ஹ்ம்ம்...

கண்ணெதிரே 12B
ஒரு வினாடி முன்னாடி
என்னை ஏற்ற மறந்து
கடந்து சென்றது.....

Wednesday, November 26, 2008

இதுவும் கடந்து போகும்......

" நான்" எனும் பாதரசம் பூசிய
மாயக் கண்ணாடி மனம்.....

முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்
உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்?

மாயக் கண்ணாடி
அந்தப் பாதரசம் இழக்கத் தயாராயில்லை
உலகம் காட்டவும் தயாராயில்லை

தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........

தப்பியோட முடியாத பிம்பங்கள்
விட்டு விலகாத "நான்" பிம்பங்கள்
சுகமாய்த்தான் இருந்தது
அந்த அடைமழையில்
நனையும் வரை

அந்த அன்பெனும் அடைமழையில்
நனைந்தது மாயக் கண்ணாடி
உதிர்ந்து கரைந்தது பாதரசம்
"நான்" இழந்தது மாயக் கண்ணாடி

ஹா..............
அழகிய உலகம் தெரிந்தது முன்னாடி...!!!!

Friday, November 14, 2008

சிபி சார் எனக்கு வைத்த பரீட்சையும் அதற்கான பதில்களும்........
1.ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேர்வில் மதிப்பெண்கள் இடுகிறார்கள்!எப்பவாச்சும் ஆசிரியர்கள் எப்படின்னு மாணவர்களிடம் கேட்டிருக்கீங்களா?(கேட்டிருக்கீங்களா என்றால் நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் பள்ளி நிர்வாகத்தில் வேறு எவரேனும் கூட)

அச்சச்சோ எந்த உலகத்துலே இருக்கீங்க?
என் வேலையே இதுதான்......ஆசிரியர்கள் appoint செய்யும் முன் டெமோ வைத்து ஒரு வாரம் பாடம் நடத்தச் சொல்லி மாணவர்கள் புரியுதுன்னு ok சொன்ன பின்தான் வேலைக்கு ஆர்டர்...அதே போல எந்த ஆசிரியரையும் மாணவர்கள் நல்லா பாடம் நடத்தலைன்னு சொன்னா மாற்றவும் செய்கிறது மேனேஜ்மென்ட்.2.குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களைக் கூப்பிட்டு கண்டிக்கும் அதே வேளையில் அவர்கள் அதிகபட்சமாய் மதிப்பெண்கள் எடுத்திருக்கும் பாடங்களைப் பற்றி அங்கே ஓரிரு வார்த்தைகள் என்கரேஜ் செய்யும் விதமாக பேசுவீர்களா?/பேஎசியதுண்டா? (ஏன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குற பசங்களை நிக்க வெச்சி கிளளப் பண்ணுவோம்னெல்லாம் சொல்லக் கூடாது)


இது தனித் தனி அணுகுமுறையைப் பொறுத்தது.....என் அணுகுமுறையே குறைவான மதிப்பெண்கள் வாங்கும் குழந்தைகளிடம் அவர்களின் மற்ற திறமைகளை சிலாகித்துப் பேசுவதுதான்.....

3. எப்பாவாவது எந்தப் பாடம் உங்களுக்கு பிடித்தது? எதெல்லாம் பிடிக்கலை? ஏன்? போன்ற கேள்விகளை மாணவர்களிடம் கேட்டறிந்ததுண்டா?


இதெல்லாம் ஆசிரியர் தினம்,குழந்தைகள் தினம் எப்போதும் நடக்கும் ஒரு மிகச் சாதாரணமான கேள்வி பதில் நிகழ்ச்சிகள்.

4. மாணவர்களிடம் இந்த மாதிரி கேட்பதற்கெல்லாம் அவர்களுக்கோ/உங்களுக்கோ நேரம் இருந்ததுண்டா?
கண்டிப்பாக இருக்கிறது.

5.பாடத்தைத் தவிர மாணவர்கள் வேற ஏதாவது பேச வகுப்பில் அனுமதிப்பதுண்டா? (தினசரி செய்தி/பொது அறிவு இப்படி அவர்கள் விருப்பம் போல்)


எங்க ஸ்கூலில் ஒவ்வொரு மீட்டிங்கிலும் இப்படித் தினமும் பேச வேண்டும் என்ற அன்புக் கட்டளையே உண்டு.

6. அது போல அவர்களாக முன்வந்து செய்கிறார்களா? (முதல் முறை மட்டும் நீங்கள் சொல்லி ஆரம்பித்த பிறகு) அல்லது தினமும்/வாரம் ஒரு மாணவன் என்று நீங்களாகவே தேர்ந்தெடுத்து செய்யச் சொல்வீர்களா?


இதெல்லாம் வகுப்பறைக் குழுக்கள் (மாணவர்கள்) கவனித்து வாராவாரம் பிரித்துக் கொண்டு செய்பவை.


7. வகுப்பறையில் எப்போதேனும் மாணவர்களுக்கு பாட்டுப் பாட அனுமதித்ததுண்டா? (ஹேப்பி பர்த்டே அல்ல)


பாடச் சொல்லி அடிக்கடி ரசித்ததுண்டு.பாடம் நடத்தும் போது இது சாத்தியமல்ல என்றாலும் ஒரு ஆசிரியை விடுப்பில் இருக்கும் போது....அந்த வகுப்பை இதற்குப் பயன்படுத்திக் கொள்வதுண்டு...

8. வகுப்பிற்குள் ஆசிரியர்கள் நுழைந்த பிறகுதான் மாணவர்கள் அமைதி காக்கிறார்களா? அல்லது அதற்கு முன்பே அமைதியாக இருக்கிறார்களா?

ஆசிரியர்கள் நுழைந்த பிறகுதான் மாணவர்கள் அமைதி காக்கிறார்கள்

9. எப்போதேனும் எந்த வகுப்பிலிருந்தேனும் கொல்லென்று அனைத்து மாணவர்களும் சிரிக்கும் சப்தம் கேட்டதுண்டா?

உண்டு...உண்டு...என் வகுப்பில் அடிக்கடி நடக்கும்

10. மாணவர்களின் பொழுது போக்குகள் என்னவென்று கேட்டறிந்ததுண்டா?


ஒவ்வொரு நீள் விடுப்புக்குப் பின்னும் முதல் நாட்கள் இப்படித்தான் போகின்றன.

11. மாணவர்கள் எவரேனும் கதை/கவிதை என்று எழுதுகிறார்களா என்று கவனித்ததுண்டா? (தமிழ் இரண்டாம் தாளில்) ஏதேனும் ஒரு வினாவிற்கு விடையளிக்கும் விதமாக அவர்களாகவே (உரையில் இல்லாத) கதை/கவிதை எழுதி இருந்தால் அது குறித்து அவர்களை ஊக்கப் படுத்தியதுண்டா? (படிச்சிப் பார்த்து திருத்தினாத்தானே என்கிறீர்கள் என்றால் இந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டாம் :))
சி.பி.எஸ்.இ கல்வி முறையில் முதல்,இரண்டாம் தாள் கிடையாது.....மேலும் நான் அறிவியல் ...இருந்தாலும் அறிவியலில் கூடக் கதை எழுதிக் கலக்கும் மாணவர்கள் கூட உண்டு....படித்து "இந்தத் திறமையை ஆங்கிலம் ஹிந்திப் பேப்பரில் காட்டலாமே" என்பதுண்டு.

12. என்.சி.சி/என்.எஸ்.எஸ் போன்ற மாணவர் அமைப்புகளில் 10,12 ம் வகுப்பு மாணவர்களை ஈடுபடுத்திக் கொள்வது உண்டா?
இல்லை. ஈடுபடுத்த பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை.
13. சினிமா/தொலைக்காட்சி/ பொதுநிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்க மாணவர்களை எப்போதேனும் அனுமதிப்பதுண்டா?
அவ்வப்போது என் வகுப்புகளில் உண்டு...அப்பப்பா அவர்கள் அதில் காட்டும் ஆர்வம் இருக்கே....முகமெல்லாம் பல்லாக....

14. பள்ளி வளாகத்திற்குள் குறிப்பிட்ட மொழியில்தான் மாணவர்கள் உரைடாடிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதேனும் உண்டா?உண்டு.....

15. மாணவர்களின் பொது அறிவு எந்த அளவில் உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்கிறீர்கள்?


க்விஸ் , மற்றும் அஸெம்ப்ளியில் கேள்வி நேரங்களின் போதும்....
என் பள்ளியில் நடப்பவை பற்றியும் என் வகுப்பைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன்...அது தவிர ஒவ்வொரு வகுப்பும் அந்த 40 நிமிடங்கள் அந்த ஆசிரியையின் கையில்.அதை எப்படி உபயோகபடுத்திக் கொள்வதென்பது ஒவ்வொரு ஆசிரியையின் ஆட்டிடியுட் (attitude ) பொறுத்தது.
ஒவ்வொரு வகுப்பிலும் ப்ளாஸ்மா டி. வி.....டிஜிட்டல் அனிமேட்டெட் படங்களுடன் படிப்பு.....எனக்குப் புரியாத பல நான் இந்த முறையில் பாடம் நடத்தும் போது புரிந்திருக்கிறது.இப்போ வகுப்பறை முன்பு போல வெறும் பாடம் நடத்தும் இடமல்ல சிபி சார்....இத்தனை கொடுத்தாலும் இத்தனை கொடுத்தாலும் புரிய மாட்டேங்குதுன்னு சொல்ற பசங்களும் இருக்காங்க என்பதுதான் உண்மை.......

Friday, November 7, 2008

குலாப்ஜாமுனும்,சாமியும்,ஒரு எறும்பும்.....
குலாப்ஜாமுனை ஜீராவுக்குள் மூழ்க வைத்து அதில் இருந்து 5 எடுத்துத் தனியாக மூடி வைத்தாள் .சின்னவள் அம்மு பக்கத்திலேயிருந்து கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"இதெதுக்கு தனியா வைக்கிறீங்க?"

"இது சாமிக்கு"

"சாமி சாப்பிடாதே..."

"ப்ச்...சாமிக்குப் படைக்கணும்."

குலாப்ஜாமுன் இருந்த பாத்திரத்தைத் தண்ணீர் நிரம்பிய பெரிய தட்டில் வைத்தாள்.

"ஏம்மா அந்தப் பாத்திரத்தைத் தண்ணீரில் வைக்கிறீங்க?"

"அப்போதான் எறும்பு வந்து இந்த ஜாமுனைச் சாப்பிடாது....."

" போங்கம்மா....உங்களுக்கு ஒண்ணுமே தெரில்லை...சாமி குலாப் ஜாமுன் சாப்பிடவே சாப்பிடாது.....அதுக்குப் போய் குலாப் ஜாமுன் சாப்பிடக் கொடுக்குறே.....எறும்புக்கு குலாப்ஜாமுன் ரொம்பப் பிடிக்கும் அதைப் போய் சாப்பிட விட மாட்டேங்குறியே?"

பளாரென்று அடி வாங்கியது போலிருந்தது அவளுக்கு....

Monday, November 3, 2008

சொசெசூ வைத்து வசமாக மாட்டிக் கொண்டேன்!!!


என்னை இந்தக் கொலைவெறித் தொடருக்கு(பெயர் உபயம்:பொடியன் சஞ்செய்) அழைத்த
சரவணகுமாருக்கும்,கார்த்திக்கும்,அழைக்க மறந்து பின் திடீர் நினைவு வந்து அழைத்த பொடியன் சஞ்செய்க்கும் நன்றி!நன்றி!நன்றி!!

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

அது எங்க அம்மாவைத்தான் கேட்கவேண்டும்....

1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

சரியாகத் தெரியவில்லை...அடிமைப் பெண் படமாக இருக்கலாம்.முதலில் பார்த்த படமான்னு நினைவில்லை.ஆனால் மனதில் முதல்ல பதிந்த படம் குழந்தைக்காக....அதில் வரும் குழந்தை நட்சத்திரம் என்னை மாதிரியே இருப்பதாக அம்மா சொல்ல, வளர்ந்த பிறகும் அந்தப் படத்தைப் பார்த்து மனதில் பதித்துக் கொண்ட படம்.


1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

என்னங்க அந்த சின்னூண்டு வயசிலெ என்னா உணர முடியும்?
எப்போடா இடைவேளை வரும்....இந்த இருட்டிலிருந்து விடுதலை கிடைக்கும்? அது தவிர கொறிக்க ஏதானும் கிடைக்குமே....

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சிவாஜி...அதிசயமாக ஜெய்ப்பூரில் இனாஃஸில் தமிழ் படம்...தெரிந்தவுடன் தெரிஞ்ச எல்லோருக்கும் தொலைபேசியில் சொல்லிவிட்டு போய்ப் பார்த்த படம்....ரொம்பவும் ரசித்துப் பார்த்தேன்...

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

குசேலன்....படம் அவ்வளவாக என்னை இம்ப்ரெஸ் செய்யாவிட்டாலும் நண்பனைப் பற்றி ரஜினி சொல்லும் காட்சிகளில் நெகிழ்ந்தேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மஹாநதி

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

சும்மா அரசியலே நமக்கு ஆகாது....இதிலே சினிமா அரசியல் வேறா??
போங்கப்பா...

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

இரட்டை வேடம், மூன்று வேடப் படங்கள்,அபூர்வ சகோதரர்கள்,அப்புறம் சூர்யா ஒரு படத்தில் கூன் முதுகோட வருவாரே.(பெயர் நினைவுக்கு வரவில்லை)அந்தப் படம் இவையெல்லாம் என்னை வியக்க வைத்தவை.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சுத்தமாக இல்லை.பயங்கர போர்.

7. தமிழ்ச்சினிமா இசை?

இசை என் சுவாசம்....என்ன கோபமாக இருந்தாலும் இசை கேட்டவுடன் மனது ஒரு உற்சாகத் துள்ளலுக்கு மாறிவிடும்.அதிகாலை அமைதியில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்ய ரொம்பப் பிடிக்கும்.எல்லாம் தமிழ்ச் சினிமா இசையும்,ஹிந்தி சினிமா இசையும்தான்.

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

மனதைப் பாதித்த, தொட்ட படங்கள் நிறைய....அதில் சில...நூல்வேலி,அவர்கள்,கன்னத்தில் முத்தமிட்டால்,சொல்லத்தான் நினைக்கிறேன்,ஹிந்தியில் Black,lamhe,இன்னும் நிறைய.....

8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

ஹிந்திப் படம் பார்ப்பேன் ....வேற வழி.??? ஆங்கிலப் படங்கள் ரொம்ப ஸ்பெஷலான படங்கள் பார்ப்பதுண்டு....

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

சினிமாத் தொடர்பு....ம்ம் என்னுடைய இந்தக் கவிதையைப் படித்துத் தான் குருவி படம் எடுத்ததாக "ஜி" அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.....

அட..நீங்க வேற...அப்பப்ப விசுவின் மக்கள் அரங்கம் பார்த்து ஒரு மெயில் அனுப்பி பதில் வாங்குறது ஒண்ணுதான் சினிமா தொடர்புடைய நபருடன் தொடர்பு.


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுக்கென்னங்க? நிறைய புதியவர்கள் புது உற்சாகத்தோடு புதுப் புது தொழ்ல் நுட்பத்தோடு வருகிறார்கள்.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் ஜெகஜோதியாகத்தான் தெரிகிறது.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய
சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ம்ம்ம்...
எனக்கு ஒண்ணுமே ஆகாது.

ஆனால் அதை நம்பியிருக்கும் ஆயிரக் கணக்கானவங்க வேலையில்லாமல் போய் விடுவார்கள் எனக் கவலையாய் இருக்கும்.

தமிழர்கள் இன்னும் முழுமூச்சாக மெகா சீரியலால் அழுவார்கள்..

வேறென்ன? மொபைல் போனில் படமெடுத்து வெளியிடும் தொழில்நுட்பத்தால் எல்லோர் வீட்டிலும் ஒரு மொபைல் போன் பட டைரக்டர் உருவாகிவிடுவார்கள்.

இந்தப் பதிவைத் தொடர யாரைக் கூப்பிடுவது???

"யான் பெற்ற துன்பம் இவ்வையகம் பெறவேண்டாம்" என நினைத்து யாரையுமே கூப்பிடாமல் விடுகிறேன்......( அட நீங்க வேற கூப்பிட்டாலும் யாரும் தொடரப் போவதில்லை...நம்ம வட்டம் அப்படிப் பட்டது....)

Thursday, October 30, 2008

மிக ஜாலியான ஒரு தொடர்பதிவு...

இந்த தொடர்பதிவை எனக்கும் கூட மிகவும் பிடிச்சிருக்கு.. ஏனென்றால் மிகச் சுலபமான ஒரு தொடர்பதிவு....இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்தது சரவணகுமாரும் கார்த்திக்கும்..

என்னோட Desktop Screenshot -ஐ பதிவில் போட்டால் போதும்.. இதுதான் டார்கெட்....ரெண்டு பேரும் கூப்பிட்டு ஆறு நாள் இருக்கும்....கொஞ்சம் தீபாவளி கலாட்டாலே பிஸியாயிருந்தோமில்லே??? அதனாலே கொஞ்சம் லேட்....இதுதான் என்னோட ஆறு நாளைக்கு முந்திய Desktop.. நான் அடிக்கடி மாற்றாவிட்டாலும் என் குட்டீஸ்கள் அடிக்கடி மாற்றிவிடுவார்கள்......அதற்கப்புறம் 10 அல்லது பதினைந்து தடவை மாற்றி இன்னிக்கு இதுதான் என் Desktop...ஜெய்ப்பூர் பிர்லா மந்திர்...இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்கும் நண்பர்கள்.....
எந்தத் தொடர் பதிவுக்கு அழைத்தாலும் கண்டுக்காமல் இருக்கும்:
1.அந்தோணி முத்து.
2.வினையூக்கி
3.அனுஜன்யா
என்னப்பா பண்றது? எனக்கு இவங்களைத்தான் தெரியும்....இவங்களோ ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப
பிஸி.

இன்னும் தெரிஞ்ச ஸ்ரீ ஏற்கெனவே desktop மூஞ்சி பற்றி எழுதிட்டாங்க...சரவணகுமார்,கார்த்திக்,ரெண்டு பேரும் சேர்ந்துதான் என்னை மாட்டி விட்டுருக்காங்க...அப்புறம் நான் என்ன பண்றது?

Monday, October 20, 2008

வலைச்சரம் ஆசிரியர் ஆகிட்டோமில்லே!!!


உங்களுக்கெல்லாம் என் வலைப்பூவிலிருந்து ஒருவாரம் விடுமுறை.....
ஆனாலும் விடமாட்டேனே.....!!
இந்தவாரம் முழுவதும் இங்கே போய் நான் எழுதுவதைப் படிங்க...
ok va??
வலைச்சரம்ஆசிரியர் ஆகிட்டோமில்லே...!!

Tuesday, October 14, 2008

மீண்டும் பாலகுமாரனின் ரசிகையாகிட்டோமில்லே.......!!!!!


எனக்கு நல்லா நினைவு இருக்கு பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்களும்,இரும்புக் குதிரையும் ஒரே இரவுக்குள் படித்து முடித்தது...பாலகுமாரனின் கதைகளை இப்படித்தான் அவசர அவசரமாக முழுமூச்சாய் ஒருமுறையும்,பின்னர் ஆற அமர நிதானமாக பலமுறையும் படிப்பது என் வழக்கம்.

அப்படித்தான் அவரின் "பச்சை வயல் மனதை"யும் படித்தேன்...அவசர அவசரமாய்...படித்து முடித்தவுடன் சுறு சுறுவென்று கதை நாயகன் மேலுள்ள கோபத்தை இப்படி பாலகுமாரனிடம் காண்பித்தேன்..மிக அவசரமான ஒரு விமரிசனக் கடிதம்.....

அன்புள்ள ஆசிரியர் பாலகுமாரனுக்கு,
பாலகுமாரனின் பழைய ரசிகை
பச்சை வயல் மனதினைப் படித்து விட்டு
விமரிசராகப் படிதாண்டி
வந்திருக்கிறேன்.....

இலவச இணைப்பு இதழைப் படித்து
இதயம் வலிக்கும் இளம் பெண்களின்
குமுறல்களின் சார்பில் வலியைக்
குறைத்துக் கொள்ள எண்ணி எழுதுகிறேன்...

தவறுகளுக்குச் சூழ்நிலை காரணம் எனத்
தானே ஒத்துக் கொண்ட பத்மநாதன்
சூழ்நிலை காரண்மாகப் பொய் சொல்லி
சுத்தமாக் இருக்கும் கல்பனாவை
ஒதுக்கிவிட்ட முடிவில் இருந்து
ஒன்று மட்டும் புரிகிறது....

எழுத்தாளர் தானும் ஓர் ஆண்வர்க்கம்
எனவே அவர்களின் பக்கமிருந்துதான்
எதையும் தீர்மானிப்பதென்னும் அவரின்
எண்ணம் என்னுள்ளே எரிய வைக்கிறது...

பசுமையான என் மனதினைப்
பச்சை வயல் மனது அதிகமாகவே
பாதித்து விட்டது.....
பரிகாரமாக வேறொரு கதையைத் தேடுகிறேன்...
அருணா

இப்படி எழுதி அனுப்பிவிட்டேன்...என்ன ஆச்சரியம்??!!
ஒரே வாரத்தில் பதில்...

அந்த 24 வருஷப் பழைய கடிதம் இன்னும் என் பொக்கிஷப் பெட்டியில் பத்திரமாய்....மூடிய புத்தக மயிலிறகாய்......
அவ்வ்ளோதான் என் கோபமெல்லாம் பறந்து போய்....மீண்டும் பாலகுமாரனின் ரசிகையாகிட்டோமில்லே.......!!!!!

Friday, October 3, 2008

அப்பப்போ அலாவுதீன் ஆவோமில்லே!!!!!!!!!அப்போ எனக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும்.அப்போதான் நான் அலாவுதினும் அற்புத விளக்கும் கதை படிச்சேன்.

அப்போ அக்காகிட்டே போய் பாவம் போல, "அக்கா நமக்கும் இப்பிடி ஒரு விளக்கு இருந்தால் நல்லாருக்குமேக்கா"..... அப்பிடின்னு கேட்டேன்....அதுக்கு அக்கா, "யார் கண்டா?? நம்ம வீட்டிலே இருக்கிற விளக்கிலே கூட இப்படி ஒரு சக்தி இருந்தாலும் இருக்கும்....நம்மதான் விளக்கையெல்லாம் தடவிப் பார்க்கிறதேயில்லை"...... அப்படீன்னு சொன்னாங்க.

அன்னிக்குப் பிடிச்சது இந்தக் கிறுக்கு.....மெல்ல பூஜை அறையில் இருந்த விளக்கையெல்லாம் தடவித் தடவி...
"வா பூதமே வா..." அப்படீன்னு மானசீகமா வேண்டிக்குவேன்.

அப்போ நாங்க ரொம்பக் கஷ்டத்திலே இருந்தோம்....கொண்டு போகச் சாப்பாடு இல்லாததினாலே ஸ்கூலுக்கு லீவ் போட்டதெல்லாம் உண்டு....
எப்பிடியாவது கஷ்டத்துக்கு விடிவு காலம் வராதா? என்பதுதான் ஒரே எண்ணமாக இருந்தது...

ஸ்கூல் சினேகிதிகள் யார் வீட்டுக்குப் போனாலும் அவங்க பூஜையறைக்குப் போகாமல் இருந்ததில்லை.....எந்த உறவுக்காரங்க வீட்டுக்குப் போனாலும் அவங்க வீட்டு விளக்கைத் தடவிப் பார்க்காமல் வந்ததில்லை...

பரிசுப் பொருள் வாங்க எந்தக் கடைக்குப் போனாலும் விளக்குகளை ஒரு ரவுண்ட் அடித்து தடவிப் பார்த்து விட்டுத்தான் மறுவேலை....

இந்தப் பூதக் கதையை என் தோழிக்கும் சொல்லியிருக்கேன்...
அவ சொன்னா.. "எங்க அண்ணன் கல்யாணத்துக்கு ஒரு கலைநயம் உடைய விளக்கு ஒண்ணு வந்திருக்கு....பூதம் தேட வர்றியா"-ன்னு கூப்பிட்டா....
என்னவோ இன்டரஸ்ட் இல்லாத மாதிரிக் காட்டிக்கிட்டே போனேன்.....

அவள் சமையலறையில் இருக்கும் போது மெல்ல அந்த விளக்குப் பக்கத்துலே போய் தடவிப் பார்த்தேன்.....
திடீர்னு ஒரு பயங்கரமான குரல்..... "நான் உங்கள் அடிமை ஆகா!!!!" என்றது!

அவ்வ்ளோதான் ஓவென்று அலறி மயக்கமடைந்ததுதான் தெரியும்.....

அப்புறம்தான் தெரிந்தது இது என் தோழியும் அவள் அண்ணனும் சேர்ந்து நடத்திய நாடகம்னு.....

இதென்னங்க ? திருமணமாகிப் புகுந்த வீட்டுலே விளக்கேற்றும் போது கூட இந்தப் பூதத்தைத் துணைக்குக் கூப்பிட்டுருக்கேன்னா பார்த்துக்கோங்க…இன்னும் கூட விளக்கைப் பார்க்கும் போது அவ்வப்போது அலாவுதீனா ஆவறது உண்டுங்கோ!!!!

Tuesday, September 30, 2008

இரவுத் தூக்கம் போயிருந்தது ........வியர்வைக்கு விசிறி விடும்
பனிக்காற்றை சிதறிவிடும்
பனையோலை விசிறி இரண்டு
பானைச் சோறு வடிக்க
அடுப்புக்குள் குடி போக..........

இன்று.......
இரவுக்கு அந்தக் குடிசைக்குள்
பானைச் சோறிருந்தது.....
படுக்கை வியர்வையில் நனைந்திருந்தது.....
இரவுத் தூக்கம் போயிருந்தது ........

நேற்றோ????
இரவுக்கு அந்தக் குடிசைக்குள்
பனையோலை விசிறியிருந்தது
பானைச் சோறில்லை.....
இரவுத் தூக்கம் போயிருந்தது........

எப்படியோ
தூக்கம் அந்தக் குடிசைக்குள்
நிரந்தரமாய் தங்குவதில்லை..........

Friday, September 19, 2008

இன்னமும் தேடுகிறேன்.........


தொலைந்து போயிருக்கும்
காற்றைத் தேடும் வேலை
எனக்கு........

நட்சத்திரக் கூட்டத்தில்
அப்பாவை எங்கே
தேடுவது?

அப்பா இறந்த நாள்
அப்பா நட்சத்திரமாகி
விட்டார்...என்று
அம்மா சொன்னது
முதல் தேடுகி்றேன்......

இலதென்பர்
உளதென்பர்
அதனாலெல்லாம்
தேடுவதை விட்டு
விடுவதா?

இன்னமும் தேடுகிறேன்.........

உதிர்ந்த ஒற்றைச் சிறகு..........


மனதின் பட்டாம்
பூச்சியின் சிறகுகள்
இன்று ஏனோ
திறந்தே இருக்கின்றன...

நிதம் பல
யுத்தங்கள் செய்யும்
அவை இனறு ஏன்
மௌனங்களை
அறிமுகப் படுத்துகின்றன..

என் வானம்
முழுவதுமாய் உடைந்து
போன நிலவுத் துண்டுகள்
சிதறிக் கிடக்கிறது..........

பறக்கப் பார்க்கும்
உதிர்ந்த சிறகின் மேல்
கல் வைத்துப்
பாதுகாக்கும் உத்தி
எனக்கு உகந்ததல்ல......

நான் நானாக
இருக்கப் பார்க்கிறேன்.....
வித்தை வசமாகவில்லை
என்பதுதான் வருத்தம்......

Tuesday, September 9, 2008

அ......ஆ....இ...ஈ.....உ...ஊ.......


மறுபடியும் நர்சரியிலிருந்து ABCD படிச்சுட்டு வ்ரச் சொல்லிட்டாங்க சரவணகுமார்.......சரி மீற முடியுமா?
அதனால படிக்க ஆரம்பிச்சுட்டோமில்லே.....A for Apple.....


தமிழ் எழுத...................azhagi

தேடலுக்கு....................google

உதவிக்கு.....................help

வலைப்பதிவுக்கு............tamilmanam

அறிவுக்கு.................encyclopedia

ஆசைக்கு.................wishuponahero

கவிதைக்கு...............vaarppu

தமிழ் செய்திக்கு..........dinamalar

தன்னம்பிக்கைக்கு........mindpower1983

குழந்தைகளுக்காக........mazhalaigal

ஆங்கிலச்செய்திகளுக்கு....hinduonnet

தரவிரக்கத்துக்கு...........download

சிந்தனைக்கு...............inspirational quotes

பாட்டுக்கு................raaga

வார்த்தைகளுக்கு..........dictionary

ஹிந்திப் பாட்டுக்கு.........bollywoodmusic

அகில உலகப் பாட்டுக்களுக்கு..zero-inch


மனத் திண்மைக்கு..........sahodari

பணத்தைக் கரைக்க........ebay

அரட்டைக்கு...............messenger.yahoo.com/

ஆங்கில வலைப் பூவுக்கு...Web2Upgrade

மீண்டும் கவிதைக்கு......xavi

வீடியோவுக்கு.............youtube

பல்சுவை விருந்துக்கு.....nilacharal

இப்போதானே ABCD படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.....அதனாலெ வரிசையா இல்லாமல் கொஞ்சம் கலவையா எழுதிருக்கேன்.......போங்கப்பா வரிசை மறந்து போச்சு.........நீங்களே அடுக்கிப் படிச்சுக்கோங்க.......ஒண்ணு ரெண்டு எழுத்துககள் எழுத்துக்கள் வேற விட்டுட்டேன்.....அதைக் கண்டு பிடிச்சு எழுதுறவங்களுக்கு ஒரு பின்னூட்டம் இலவசம்....

ஒண்ணு ரெண்டு எழுத்துககள் வேற திருப்பித் திருப்பி எழுதிருக்கேன்........அதைக் கண்டு பிடிச்சு எழுதுறவங்களுக்கு ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் இலவசம்......

அப்புறம் 3 பேரை வேற பழி வாங்கணும்னு சொல்லிருக்காங்க......
வழக்கம் போல.....

அந்தோணி முத்து....
ரசிகன்......
அனுஜன்யா....

ப்ளீஸ் அடிக்க வராதீங்கப்பா....ரூல்ஸ் அப்பிடி....

இதுக்காக நம்ம வலைப் பக்கம் வராம இருந்துடாதீங்கப்பா....!!!!!Rule:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People.


நன்றி.. நன்றி.. நன்றி.. :) :) :)

Thursday, August 28, 2008

அனுராதா எனும் ஓர் மழைத் துளி.......

பதிவர் "அனுராதா" துன்பங்களிலிருந்து விடுதலை! "லக்கிலுக்" அவர்களின் இந்தப் பதிவின் தொடர் பதிவு
அந்த மழைத் துளிக்கு
என்னைத் தெரியாது
எனக்கும் அந்த
மழைத் துளியைத்
தெரியாது.

ஆயினும் அந்த
மழைத் துளியின்
மரணம்
என் விழிகளில்
அடை மழையை
வரவழைத்தது.

எல்லா மழைத் துளியும்
மண்ணைத்தானே
முத்தமிடும்.....??????

மண்ணை முத்தமிடும்
முன்
மழைத் துளிக்கும்
மண்ணுக்கும்
இடையில் ஏன் வந்தது
இந்தக் கேன்சர்?

ஒவ்வொரு
யுத்தங்களின் முடிவில்
ஜெயித்தவனும்
ரணங்களுடன்
தோற்றவனும்
ரணங்களுடன்
யாரை யார்
தேற்றுவது?

இங்கே
ஜெயித்தது, யார்?
தோற்றது யார்?

Friday, August 22, 2008

எங்கேயிருந்து வந்தது அந்தத் திமிர்?


சுடும் சூரியனாய்த்தான் இரேன்....
மாலையானால் மறையத்தான் வேண்டும்

பின் எங்கேயிருந்து வந்தது
நான் ஒருவனே என்ற திமிர்?

பச்சையாய் மரத்துடன் ஒட்டிக்
கொண்டிருக்கும் இலைக்குத் தெரியாது...

காய்ந்தவுடன் சருகாகி உதிர
வேண்டியதுதான் என்று...

பின் எங்கேயிருந்து வந்தது
அந்தத் திமிர்?

மின்னிச் சிணுங்கும் நட்சத்திரங்களுக்கு
என்ன தெரியும்? விடிந்தால்
காணாமல் போய்விடுவோமென்று?

வெறும் இரவு வாழ்க்கைக்கே இந்தச்
சிமிட்டலா?
எங்கேயிருந்து வந்தது
அந்தத் திமிர்?


எல்லோருக்கும் பிடித்த மழையாய்
இருந்தென்ன பலன்...
வீழ்ந்தால்தான் நீ மழை....

பின் எங்கேயிருந்து வந்தது
அந்தத் திமிர்?

எல்லா பறவைகளின்
சிறகுகளுக்குள்ளும் கூரிய நகங்கள்
ஒளிந்து கொண்டு இருப்பது போல்....
எல்லா மனங்களுக்குள்ளும்
இந்தத் திமிர் சிக்கிக்
கொண்டுதான் இருக்கிறது....

மனதைத் திறந்து வைப்போம்...
திமிரைத் திணறடிக்கும்
அன்பினால் விரட்டுவோம்...

அதிரடி வேக வாழ்க்கையில்
திமிரையும் அன்பையும் ஒன்று சேர
பத்திரப் படுத்துவது..........
சில நேரங்களில் மௌனங்களைச்
சுமக்கும் கண்ணீராய் கஷ்டப் படுத்துகிறது......

மண்தரையும் மலர்களும்
சேரக் கூடாதா என்ன?
அதுபோல் திமிரும் அன்பும்
இணைந்திருந்தால்தான் என்ன?

Monday, August 11, 2008

ஒரு புது மாதிரியான இன்ப அதிர்ச்சி
ஒரு புது மாதிரியான இன்ப அதிர்ச்சி சரவணகுமார் கொடுத்துருக்கார்......."Blogging Friends Forever Award".... என்ற அவார்ட் கொடுத்திருக்கிறார்........அவார்ட் வாங்குவது நமக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ஆச்சே...ஆனால் அது கூடவே ஒரு சிக்கலும் வச்சுருக்காங்க....அது என்னான்னா?????

1)நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்..
(அஞ்சே பேருக்கு எப்பிடி? எல்லோரும் கோபித்துக் கொள்ளமாட்டார்களா?..)

2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்.. ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்..
(இங்கே ஆரம்பிக்குது சிக்கல்........நாலு பேராவது படிக்கிறாங்களா??)

3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரணும்..
(அப்பாடா இந்த ஒரு வேலையாவது கொஞ்சம் சிக்கலில்லாமல் முடிக்கலாம்..)

இவங்க தான் அந்த ஐந்து நண்பர்கள்......

முதல்ல இப்போ எழுதுவதை நிறுத்திவிட்ட dreamzzக்கு அவருடைய சுறு சுறுப்புக்கு எல்லோர் blogலெயும் முதல் கமென்ட் போடுறதுனாலெ கொடுக்கலாம்னுதான் நினைச்சேன் ....ஆனால் அவர் இப்போ ஆட்டத்துலேயே இல்லையேன்னு ஒரு சிக்கல்.அதனாலே...

நேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி.........புன்னகையுடன் வாழ்வை....எதிர் நோக்கும் .......அந்தோணிமுத்து

ஒரு நிமிடக் கதைகளில் அடித்து ஆடும்.......வினையூக்கி

மொக்கைக்கு மேல மொக்கை போட்டு கொலை வெறியோட பதிவும், ரசித்து ரசித்துக் கமென்டும் போடும்..........ரசிகன்

அக்கா...... அக்கா...என்று சுற்றி வரும் தம்பி..........ஸ்ரீ

புதுசா என் blog படிக்கிறவங்களில் அனுஜன்யாவிற்கு இந்த அவார்டைக் கொடுக்கப் போறேன்.

அப்புறம் என்னை இப்படிப் பிரபலமாக்கிய சரவணகுமாருக்கு ஒரு நன்றி card போட்டுடலாமா???..........

Monday, July 28, 2008

அந்தக் காம்பில்லாத பூக்கள்......


அந்தப் பூக்கடைக்காரர் மிகக் கவனமாகப் பூக்களை அடுக்கி பூங்கொத்து தயாரித்துக் கொண்டிருந்தார்.....

ராஷி அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.அவர் எல்லாக் காம்பு உடைந்த பூக்களையும் தனியே பிரித்து வைத்து விட்டு மற்ற பூக்களை அடுக்கிக் கொண்டேயிருந்தார்.

மெதுவாக அவர் அருகில் சென்ற ராஷி...."அந்தக் காம்பில்லாத பூக்களை ஏன் உபயோகப் படுத்தவில்லை" எனக் கேட்டாள்....

அதற்கு அவர்.."அவைகள் காம்பு இல்லாதவை...ஒன்றிற்கும் பிரயோசனமில்லை...."என்றார்.

"அந்தக் காம்பில்லாத மலர்களை எனக்குத் தருவீங்களா" என்றாள் ராஷி

ஓ இந்தா வைத்துக் கொள்...என்றார் பூக்காரர்
.திடீரென்று நினைவு வந்தவராக "ஆமாம் அந்தப் பூக்களை வைத்து என்ன செய்யப் போகிறாய்?"என்றார் பூக்காரர்.

உடனே ராஷி"அவைகளை இறைவனின் பாதத்தில் வைக்கலாமே?....நான் கூட ஒரு காம்பில்லாத பூதானே????எனக்கும் கால்கள் இல்லை...."
என்றவாறு கட்டைகளை ஊன்றியவாறு செல்வதை நீர் நிரம்பிய விழிகளோடு பார்த்துக் கொண்டேயிருந்தார் பூக்கடைக்காரர்...

Wednesday, July 23, 2008

இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது...


இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது...

கரடு முரடான மலைகள்....
மென்மையான மணல்துகள்...
உடலை உலுக்கும் சரிவுகள்
மனதை அமைதியாக்கும் சமவெளிகள்.....

சில நேரம் பூக்களை உடுத்தி....
சில நேரம் உதிர்ந்த இலைகளைப் போர்த்தி...
சில நேரம் இரவு நிலவைச் சுமந்து....
சில நேரம் பிணங்களைச் சுமந்து...
பல நேரம் மழையைச் சுமந்து.....

சற்றே திரும்பிப் பார்க்கும் இந்த நதி
எதற்காகக் கவலைப் படப் போகிறது?

எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும்
சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?

உயிர்வலிப் பயணமாக இருந்தாலும்....
நினைவுச் சுவடுகளை கூடவே எடுத்துச் செல்வதை நினைத்தா?

அடித்துப் புரண்டு சேருமிடம்
கடலைப் பார்த்து மிரளப் போகிறதா?

பூ,இலை,நிலவு,பிணம்,மழை இன்னும் பல
சுமக்கும் என் சுயம் எங்கே?என்று தேடித் தேடியா???....

இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது...
இந்த நதி திரும்பிப் பார்த்து அழுதால் கூட
யாருக்குத் தெரியப் போகிறது?????

Sunday, July 13, 2008

புரிகிறதா உனக்கு..?

Click here to enlarge pic.

வேர்க்கிறதா உனக்கு...
வண்ணத்துப் பூச்சிகள்
அனுப்புகிறேன்.....
அந்த இறகுகளால்
விசிறிக் கொள் ....

குளிர்கிறதா உனக்கு
சூரியனை அனுப்புகிறேன்
இஷ்டப் படிக்
குளிர் காய்ந்து கொள்...

வலிக்கிறதா உனக்கு?
மயிலிறகுகளை உனக்குக்
கடன் தரும் மயில்களை
அனுப்புகிறேன்

அழுகை வருகிறதா உனக்கு?
வானம் மடித்து அனுப்புகிறேன்...
கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டையாய்
பயன் படுத்திக் கொள்......

தனிமை வாட்டுகிறதா உன்னை?
நட்சத்திரக் கூட்டம் அனுப்புகிறேன்...
இரவு முழுவதும் பேசிக் காலை
அனுப்பி விடு


கசக்கிப் பிழியும் துக்கத்தின்
வேதனையாஉனக்கு?
தயவு செய்து அது அத்தனையயும்...
என்னிடம் கொடுத்துவிட்டு...
பதிலுக்கு என் சந்தோஷத்தை
எடுத்துக்கொள்..!

மரண பயமா உனக்கு?
நான் எதுவும் செய்ய முடியாது..!
அந்த பயம் எனக்கும் உண்டு..!
ஏனென்றால் மரணத்தில்...
உன்னைப் பிரியும் அபாயம் உண்டு..!

Tuesday, July 8, 2008

திண்ணையில் பூத்த மலர்கள்!!திண்ணைக்கு ஸ்ரீ கூப்பிட்டிருக்கார்.

எனக்கு நினைவு தெரிந்து நாங்கள் எந்தத் திண்ணை வைத்த வீட்டிலும் இருக்கவில்லை.

புகை மூட்டம் போல எங்கள் மாம்மை (அம்மா வழிப் பாட்டி)இருந்த ஏதோ ஒரு வீட்டில் சின்னத் திண்ணை இருந்ததாக நியாபகம்.

அந்தத் திண்ணை எங்களின் விளையாட்டுக் களமாக இருந்ததால் தான் அதைப் பற்றி நினைவு இருக்கிறதோ என்னவோ?.கல்லா மண்ணா,தாயம்,சுட்டிக் கல்...சீட்டுக் கட்டு.....பல்லாங்குழி .....இன்னும் எல்லாமே அந்தத் திண்ணையில்தான்..என் திண்ணை பற்றி இவ்வ்ளோதான் மலரும் நினைவுகள்..

ஆனால் எங்க மாம்மை வீட்டுக்குப் பக்கத்து வீட்டுத் திண்ணையும் அதையொட்டிய கதவும்(பெரிய ராஜா காலத்துக் கதவு பெரிய குமிழ் வைத்து, ஓரத் திண்டு வைத்து)அந்த ஓரத் திண்டில் கால் வைத்து செய்யும் ஒற்றைக் கால் சவாரியும் எனக்கு மட்டுமல்ல எங்க கூட்டத்துக்கே ரொம்பவும் பிடித்த விஷயம் ...ஆனால் அந்தப் பக்கத்து வீட்டுப் பாட்டிக்குப் பிடிக்காத விஷயம்..]

எப்போதும் அந்தப் பாட்டி அந்தத் திண்ணையில்தான் படுத்திருக்கும்.

நாங்கள் அது கண்ணயரும் நேரமாப் பார்த்து அந்தக் கதவில் ஏறி விர்ரென்று ஒரு சவாரி செய்வதுண்டு...

அந்தக் கதவு போடும் கிறீச் என்ற சத்தத்திற்கு...
பாட்டி கண் விழித்து காட்டுக் கத்தல் கத்த ஆரம்பித்து விடுவாள்.

வெள்ளைப் புடவையும் வெள்ளைச் சுருள் முடியுமாய் ஒல்லி உடம்புமாய் பாட்டி ஒரு வெண் பேயாய்தான் காட்சியளிப்பாள்.

அவளைச் சீண்டிப் பார்ப்பதில்தான் எவ்வ்ளோ சந்தோஷமோ?

அந்தப் பெர்ரீய கதவுக்குத் தொலையவே முடியாத ஒரு சாவி...

ஆனாலும் எப்போதும் அதை முந்தானையில் முடிந்து கொண்டு அந்தத் திண்ணையில் படுத்திருப்பாள்.

மெல்ல அதை எடுத்து ஒளித்து வைத்து அவளை அலைய வைப்போம்.

அந்த வயசிலும் கண் பக்கத்திலே வைத்துக் கொண்டு திண்ணைத் தூணில் சாய்ந்து உட்கார்ந்து ஆனந்த விகடன் படிப்பாள்...

அப்போ பின்னாலிருந்து வேப்பங்கொட்டை அடிப்போம்...

அவள் முற்றம் கூட்டிப் பெருக்கும் போது எங்க வீட்டு மாடிலேருந்து புஸ் புஸ் பாட்டிலிலிருந்து தண்ணீரடித்துக் கலாய்ப்போம்.

இரவானால் அவள் வீட்டிற்கு மட்டும் லைட் கிடையாது.

அந்தத் திண்ணையின் சுவரில் ஒரு விளக்குப் பிறை...

அதில் ஒரு மண்ணெண்ணை விளக்கு எரியும்.

அந்தப் பின்னொளியில் வெண் பாட்டி வெண் பேய் போலவே இருப்பாள்..

அப்புறம் ஒரு விடுமுறைக்குப் போயிருக்கும் போது அந்த வீடும் திண்ணையும் காலியாக இருந்தது.

மாம்மையிடம் பாட்டியைப் பற்றிக் கேட்டதற்கு செத்துப் போச்சு என்றார்கள்.அந்தப் பெர்ரீய கதவு திறந்துதான் கிடந்தது....

எனக்கு ஒற்றைக் கால் சவாரி மறந்தே போய் விட்டது.திடீரென்று மாம்மை வீடு பிடிக்காமல் போய் விட்டது.

இப்பவும் திண்ணை என்றால் வெள்ளைப் பாட்டிதான் நினைவுக்கு வருகிறது.பாவம் பாட்டி ..ரொம்பத்தான் பாடாய்ப் படுத்தியிருக்கிறோம்...

ரெண்டு பேரைத் திண்ணை மலரும் நினைவுக்குக் கூப்பிடணுமாமே???நான் நினைவுகளை மலர வைக்க அழைப்பது........

1.வினையூக்கி
2.அந்தோணிமுத்து...

வருவீங்கதானே???

Saturday, June 28, 2008

நானும் என் கடவுள்களும்

Click here to enlarge Picture

Hearty thanks for the picture...

சின்ன வயசுல கடவுள் நம்பிக்கை ஒருவித பயத்தோடவே இருந்தது.

அப்பிடி செய்யாதே... இப்பிடி செய்யக் கூடாது, சாமி தண்டிக்கும் இந்த வார்த்தைகளில் இருந்து நானும் தப்பிக்கவில்லை.

அப்புறம் என் ஷெல்ப் சுவரில் என் இஷ்ட தெய்வங்கள் அவ்வப்போது மாறுவதுண்டு.

மாற்றங்களுக்குப் பெரிய Strategy எதுவும் இருந்ததில்லை.

துணைவன் படம் பார்த்த மறுநாள் முருகன் படமும்,
திருமால் பெருமை பார்த்த பின் பெருமாள் படமும்,
சபரிமலை ஐயப்பன் பார்த்தபின் ஐயப்பன் படமும்,
ஜீஸஸ் பார்த்த பின் கர்த்தர் படமும்,
அன்னை வேளாங்கன்னி பார்த்த பின் வேளாங்கன்னியுமாக...
மாறிய படியே இருந்திருக்கிறது என் இஷ்ட தெய்வங்களின் வரிசை.


பின் சில காலங்களுக்கு சாமியிடம் வெரும் வியாபாரம் மட்டுமே நடத்தியிருக்கிறேன்.

80% மேல மார்க் தந்து விடு உனக்கு, ஒரு மாலை,
காணாமல் போன பேனாவைக் கண்டுபிடித்துக் கொடு, உனக்கு ஒரு ரூபாய்,
லேட்டா வீட்டுக்குப் போறதுக்கு அம்மா திட்டக் கூடாது, ஒரு விளக்கு.
இந்த ரேஞ்ச்லேதான் இருக்கும்.

இப்போ கொஞ்சம் மனது விரிந்து எண்ணங்கள் தெளிந்து கடவுள் உண்டு ...
அதற்கு கெட்டது செய்யவே தெரியாதுன்னும் நல்லது மட்டும்தான் செய்யும்னு தெளிவு வந்துருக்கு....

ரொம்ப எளிமையான வரிகளில் சொல்லணும்னா...

எனக்குக் கடவுள் உண்டு ஆனால் அதற்கு மதமும் பெயரும் கிடையாது! (இது என் நட்பின் பேட்டியிலிருந்து சுட்டது)

பின்னே நமக்கு நடக்கிற கெட்டதற்கெல்லாம் காரணம்...???

அட நாம் தாங்க!!!

அதுக்குப் போய் வீணாக் கடவுள் மேல பழியைப் போட்டுக்கிட்டு!!!!

Sunday, June 1, 2008

50-ஐ முடித்து 100-ஐ நோக்கி....போகும்போது..அடித்துக் கொள்ளும் சுய தம்பட்டமுங்கோ!!!

அரை சதம் அடிச்சாச்சுங்கோ!!!!!

இது Dreamzz- இடமிருந்து கற்றது...
மு.கு:1.இது எனது 50-வது பதிவுங்கோ...

மு.கு:2.அதனால் பிடிச்சுருந்தாலும்..பிடிக்காட்டாலும் குறைந்தது 50 பின்னூட்டமாவது வேணுங்கோ...

50-வது பதிவு சும்மா நச்சென்று இருக்க வேண்டும் என்று ரூம் போட்டு யோசிச்சதுதான் மிச்சம்....

ஒண்ணும் தேறலை...

சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் இந்த ஐடியா வந்தது...

ரொம்ப நாளா எனக்குப் பிடித்த என் பதிவு பற்றி நானே ஒரு பதிவு போடணும்னு ஒரு ஆசை..

பின்னே நம்மளப் பத்தி யாரும் போடலைன்னா நாமளே போட்டுக்க வேண்டியதுதானே....

இந்த 50-வது பதிவைச் சாக்கு வைத்து இது ஒரு சுய தம்பட்டமுங்கோ.......

அது என்னன்னு தெரிலெங்க.

நான் என்னோட எழுத்துக்குப் பெரிய ரசிகைங்க....

எப்போ என் வலைப் பூவைத் திறந்தாலும் என் பழைய பதிவுகளில் ஒன்றிரண்டாவது மீண்டும் மீண்டும் படிப்பது வழக்கம்....

அதுலே எனக்குப் பிடித்தது "மூடிய புத்தக மயிலிறகாய்..."

அப்புறம் நான்தான் மழைப் பையித்தியம் ஆச்சே...அதனாலே மழை பற்றிய அத்தனையும் ரொம்பப் பிடிக்கும்.அதிலேயும் அந்த "மீண்டும் ஒரு மழை நாளில்...." ரொம்பப் பிடிக்கும்....

அப்ப்புறம் "என் வீட்டுக் கதை...."யின் கடைசிப் பகுதி என்னை ரொம்ப உணர்ச்சி வசப் படுத்துவது....

அப்புறம் நான் எழுதிய "ஒருநாள் ஆகிட்டொமில்லே..." சீரீஸ் எனக்குப் பிடிக்கும்.

நான் எழுதின பதிவுலேயே உபயோகமுள்ள இரு பதிவுகள் இவைதான்னு நினைக்கிறேன்..

1) "நிலாச் சாரலில் நான்...."

2) "நாங்க அழகிக்கு மாறிட்டோமில்லே!!!!"

இது அழகியை பத்திப் போட்ட உருப்படியா பதிவு...

ஆனால் எந்த விதமான வரவேற்பும இல்லை....

நாம எப்பவுமே இப்படித்தானே...!!!!

உபயோகமான விஷயங்களை உதறித்
தள்ளுவதுதானே நம் இயல்பு!!!

அப்புறம் அந்தப் "பறவைகளுக்கு ஒரு மின்னஞ்சல்..." கவிதை ரொம்ப உணர்ந்து எழுதுனது....

இதெல்லாம் விட "இன்றுமுதல் அன்புடன் அருணா..." ரொம்பப் பிடிக்கும் அதிகப் பின்னூட்டம் வந்ததனாலே..!!!

"எது இல்லை என்றாலும் அது வேண்டும் உனக்கும் எனக்கும்..." இந்தக் கவிதை நான் ஸ்கூல் படிக்கும் போது எழுதினது..எனக்கு ரொம்பப் பிடித்தது.

இந்த "மனமென்னும் மரம்..." படிச்சீங்களா?அது சும்மா என்ன எழுதுறதுன்னு யோசிச்சுட்டே எழுத ஆரம்பித்து முடித்தது....

இதெல்லாவற்றையும் விட நான் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் எழுதிய முதல் பதிவு..."நான் இறக்கப் போகிறேன்..." என் வலைப் பூவின் பெயருக்கு காரணம் சொல்லும் பதிவு அது.

நாம என்ன பெரிய சுஜாதாவோ, பாலகுமாரனோ இல்லையே?

சாதரண அருணாதானே?

ஏதோ எழுதுறதுனால என்னை நானே சந்தோஷப் படுத்துன திருப்தியும்...உங்களைக் கொஞ்சம் அறுத்த திருப்தியும்தான் மிச்சம்``````````````?

என்ன நான் சொல்றது???


பி.கு:1- மு.கு:2 -ஐ மீண்டும் படித்து அதன்படி செய்யவும்.

Friday, May 30, 2008

சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...
சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...

சிட்டுக் குருவியின் வாலில்
வாழ்க்கையைக் கட்டி விட்டு
வேடிக்கை பார்த்தேன்......
மேலே...கிழே.....
அங்கும்..... இங்கும்....
சிறகை விரித்துப் பறந்தது...

சமையலறையும்...சமையலும் இல்லை.
பணத்துக்காக ஓடும் வேலை இல்லை
தினசரிக் குளியல்,செய்தித் தாள்
படிக்கும் வேலை இல்லை...
டி.வி பார்க்கும் கால அட்டவணை இல்லை

பள்ளிக் கூடம், வீட்டுப் பாடம்
பரீட்சை, ரிசல்ட் டென்ஷன் இல்லை....
நீயா.... நானா ...சண்டை இல்லை..
ஓடிக் கொண்டே இருக்கும் அவசரம் இல்லை.

சுதந்திரம்...............விடுதலை...
சுதந்திரக் காற்றே மூச்சு......
பிறந்தால் பறக்கும் குருவியாக....
சிறகடிக்கும் சிட்டுக் குருவியாக....
பிறந்து பறக்க வேண்டும்...

எண்ணங்கள் சிறகடிக்க.....
மின்விசிறியைச் சுழல விட
....
அடடா.... ஒரு நிமிடத்தில் அதில்
சிக்கிச் சிறகொடிந்து மரித்தது..
அந்தச் சிட்டுக் குருவி
என் வாழ்க்கையுடன்....

Thursday, May 22, 2008

ஒரே நாளில் எழுத்தாளராயிட்டோமில்லே!!!!ஒரே நாளில் எழுத்தாளராயிட்டோமில்லே!!!!

அப்போ எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..எங்க அப்பா ரொம்ப இலக்கிய ஆர்வம் உள்ளவங்க..திடீரென்று ஒரு நாள் என்னையும் என் அக்காக்கள் இரண்டு பேரையும் கூப்பிட்டு "ஒரு நல்ல கதை எழுதிட்டு வாங்க...யார் நல்ல கதையா எழுதிட்டு வர்றாங்களோ அவங்களுக்கு ஒரு பரிசுன்னு சொன்னாங்க...

நான் கொஞ்சம் மக்கு அப்போ...

உடனே உள்ரூமுக்குப் போய் கதவை மூடிக் கொண்டு பழைய ஆனந்த விகடன்,குமுதம்,கல்கி புத்தக மூட்டையைப் பிரித்து...நல்ல கதை வேட்டையில் இறங்கி விட்டேன் எனகென்ன தெரியும்.....எங்கப்பா சொந்தமா கதை எழுதச் சொன்னாங்கன்னு....நான் நினைத்தேன் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து எழுதணும்னு.....(என்னா மூளை???!!!!)

என் அக்காக்கள் இருவரும் ரொம்பக் குளிரா (அட ரொம்ப cool-a)இருந்தாங்க....என்னை மேலும் கீழுமாக முறைத்துக் கொண்டே இருந்தார்கள்...."அட பொறாமை" அப்படின்னு மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்..


ஒரு வழியா விகடன்லே வந்த "முடிவு" கதை எனக்கு ரொம்பப் பிடித்து இருந்தது...அதை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடிப் போய் அழகாக அப்படியே காப்பியடித்தேன்..என் செலெக்ஷன் திறமைக்கு நானே என் முதுகில் தட்டிக் கொண்டேன்.

அப்பா வந்ததும் எல்லோரும் அவங்க அவங்க கதையைக் காட்டினார்கள்.....ஒன்று கூட மனிதர்களைப் பற்றியது இல்லை...சிங்கம் ,புலி,ஆமைன்னு எல்லாக் கதாநாயகர்களும் விலங்காக இருந்தன. "சே இதுகளுக்கு இப்பிடி ஒரு ரசனையா?" என நொந்து கொண்டேன்...

இப்போ அப்பா என் கதையைப் படித்ததும்...ரொம்ப சந்தோஷப் பட்டு இதுதான் சிறந்த கதை...

"நம்ம அருணா இனிமேலிலிருந்து எழுத்தாளர் அருணா"...

அப்பிடின்னாங்க...ஒரெ பெருமை எனக்கு....அதுக்குள்ள எங்க பெரியக்கா ஓடிவந்து அந்த விகடனை எடுத்துட்டு வந்து அப்பா முன்னால் போட்டங்க....அந்தக் கதை எழுதியது யாரோ பிரபு என்றிருந்தது.அக்கா அது பக்கத்திலே

"எழுத்தாளர் அருணாகிட்ட இருந்து பிரபு திருடிய கதை" என்று பேனாவால் எழுதியிருந்தாள்....


அப்பா ஓவென்று சிரித்து
"காப்பியடித்த எழுத்தாளர் அருணாவா நீ? என்றதும்
நான் "ஙே" என்று விழித்தேன்....

இப்பிடித்தான் நான் எழுத்தாளராகினேன்!!!!!!

Wednesday, May 14, 2008

ஜெய்ப்பூரில் தீவிரவாதமும், மனிதத்துவமும், நானும்

ஏன் அப்படிசொன்னேன் தெரியாது....
என் நட்பிடம் மே 13
அதிர்ஷ்டம் கெட்ட நாள் என்று....
அதிர்ஷ்டம் கெட்டுத்தான் போய் விட்டது..

காற்றில் வெடிகுண்டுத் துகள்கள்...
கலவரத்தில் ஓடும் கால்கள்...
ரத்தத்தின் சிகப்பு வாசனை..
காமெராவும் கையுமாய் பத்திரிக்கையாளன்....

இமைகள் விழியைக் காட்டப் பயந்து
இறுக்கமாய் மூடிக் கொள்ள
மூச்சு விட மறந்து திசை தெரியாத
பயணமானாலும் வீடு சேர்ந்தது கால்கள்.

தொலைக் காட்சிப் பெட்டி நிமிடத்திற்குப்
பத்து என்று இறந்தவர்களின்
எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போனது..
மரணத்தின் நிழல் பட்டு விலகியது என்மேல்தானா??

அடப்பாவி, வெடிகுண்டு வைத்து விட்டுத் தூரம் போய்
யாரை அழைத்தாய் தொலைபேசியில்?
அம்மா நீயும் என் குழந்தையும் நலமா என்றா?
பத்திரமாய் கவனமாய் இருங்கள் என்று சொல்லவா?

திடீரென்று தொலை பேசி அழைத்தது...
அம்மாதான்....
மகளே நீ நலமா?குழந்தைகள்?
அவர் வீட்டிலே இருக்கிறாரா? நலமா?
கவனம் வெளியே செல்ல வேண்டாம்....

அவ்வளவுதான்....நாம்...
நாமும், நம் கூடும் நலமென்றால்
சந்தோஷமே!!
அங்கே உயிரிழந்த நூறு பேரைப்
பற்றிக் கவலைப் படத்தான்
அவர்கள் அம்மா, அப்பா, மனைவி,
கணவன்,குழந்தைகள் உள்ளனரே

தீவிரவாதமும் மனிதத்துவமும்
ஒன்றையொன்று அடித்துப்
போட்டுக் கொண்டு அந்த மனித உடல்கள் மேல்
நடந்து போய்க் கொண்டே இருந்தன.....

Tuesday, May 13, 2008

இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே!!!


தென்றல் புயல் எனத் திமிறும்
காற்றின் திமிர்.....

பூமியைத் துளைக்கும்
விதை வித்தை....

கோள்களை நெருங்க விடாத
சூரியனின் தகிப்பு....

மனதைக் குளிர்விக்கும்
மழையின் இனிமை...

காற்றுக்கே தலையசைக்கும்
மலரின் மென்மை.....

விரிந்து கிடக்கும்
வான் போல் மனது....

மீண்டும் மீண்டும் கரையுடன்
சேரும் கடலலை போல் உழைப்பு....

என்றேனும் எதுவேனும் எனக்குத்
தர வேண்டும் என்றால் இறையே.....
இவையத்தனையும் தா....

அல்லெங்கில்
ஒன்றும் வேண்டிலன்....
இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே!!!

Wednesday, May 7, 2008

இரு கொஞ்சம் செத்துவிட்டு வருகிறேன்.........

இரு கொஞ்சம் செத்துவிட்டு வருகிறேன்.........

ஒரு கவிதை எழுதும் முன்......
ஒரு பெண்ணைப் புரியும் முன்.....
ஒரு ஆணைத் திருத்தும் முன்....
ஒரு தவறைச் செய்யும் முன்.....
ஒரு தப்பைத் திருத்தும் முன்....

இரு கொஞ்சம் செத்துவிட்டு வருகிறேன்.........

ஒரு மலரைப் பறிக்கும் முன்....
ஒரு மழைக்கு ஒதுங்கும் முன்....
ஒரு மெழுகுவர்த்தியை அணைக்கும் முன்....
ஒரு காதல் கடிதம் எழுதும் முன்...
ஒரு காதலைச் சொல்லும் முன்....

இரு கொஞ்சம் செத்து விட்டு வருகிறேன்.....

Thursday, May 1, 2008

நிலாச் சாரலில் நான் .........ஒரு தெய்வக் குழந்தையைப் பற்றிய எனது ஒரு படைப்பு நிலாச்சாரல் இணையப் பத்திரிகையில் வெளி வந்துள்ளது.....படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்!!!!!

"சொர்க்கத்தின் விலாசம் கேட்டேன்
இரங்கும் குணம்,
உதவும் மனம்,
உள்ள இதயம்
என்று சொன்னார் கடவுள்!!
இவ்வளவுதானா என்று வியந்தேன்?

மேலும் அறிய....

படித்துவிட்டு....
பிடித்திருந்தால்...
அங்கேயே உங்கள் பின்னூட்டங்களை பதிவு செய்யுங்களேன்....!

Tuesday, April 29, 2008

என் வேர்கள் என்னை அழைக்கின்றன


திடீரென ஒரு நாள்
என்னைப் பிரித்தெடுத்து
எங்கோ ஒரு ஈரமண்ணில்
என்னைப் புதைத்து

இலையாய் மலராய்
உயிராய் உணர்வாய்
பூத்துக் குலுங்க வைத்து
புன்னகை பூக்க வைத்து

வெயில் மழையில் நனைய வைத்து
இரவு நட்சத்திரங்களுடன் பேச வைத்து
என்னைப் பற்றி மறக்க வைத்து
பறவை பல கூட வைத்து
அன்பு நிழல் குடை விரித்து

சட்டென்று திரும்பிப் பார்க்க
அட வாழ்வுப் பாதையில் எங்கோ
ஒரு மைல் கல் முன் நான்.....
திடீரென்று கண்ணீர் துளிர்க்க

என் வேர்களை நினைத்துக் கொள்கிறேன்
அம்மா........
ஆமாம் என் வேர்கள் என்னை அழைக்கின்றன...
அம்மா உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.....

Tuesday, April 15, 2008

நாங்க அழகிக்கு மாறிட்டோமில்லே!!!!!


யாரந்த அழகி...?

ஏனிந்த அழகி...?

ஏன் இப்படி ஈர்க்கிறாள்?

மற்றவரிடம் இல்லாத என்ன விசேஷம் அவளிடம்?

அவள் மட்டும் அப்பிடி என்ன உசத்தி?

எளிமையான சிநேகிதியாக இருப்பதாலா?

சொல்ல நினைப்பவற்றைச் சுலபமாய்ச் சொல்ல உதவுவதாலா?

மற்றவைகளிடமிருந்து தனித்துத் தோன்றுவதனாலா?

எல்லோரையும் கட்டிப் போட வைக்கும் சிறப்புகளோடு இருப்பதனாலா?

மயங்க வைக்கும் சிறப்பம்சங்களோடு இருப்பதாலா?

இப்பிடி எல்லா விததிலும் பாடாய்ப் படுத்தும் போது
நாங்க அழகிக்கு மாறாமல் எப்பிடி இருப்பது????

அதனால் நாங்க அழகிக்கு மாறிட்டோமில்லே!!!!!

யாரந்த அழகி...?

Wednesday, April 9, 2008

மீண்டும் ஒரு மழைநாளில்.....


இது கதையுமில்லாமல், நிகழ்வுமில்லாமல், மொக்கையுமில்லமல் ஒரு பதிவு ...ஆனாலும் எனக்குப் பிடித்த ஒரு பதிவு.......

அன்று அதிகாலயில் ஆரம்பித்த மழை காலைக் கோலத்தைப் புள்ளியாக புள்ளியாக அழித்தது.....சட்டென்று இமைகளின் மேல் ஒரு மழைத் துளி
கன்னங்களின் மேலொரு மழைத் துளி
குட்டி நகங்களின் மேலொரு மழைத் துளி
இப்படித்தான் ஆரம்பிக்கும் ஆரவாரமில்லாமல்.
ஆனாலும் அடித்துக் கொண்டு ஓடிவிடும் மனதை.......

மழையில் நனையும் மலரழகு...மலரை நனைக்கும் மழையும் அழகு.....9 மணிக்கெல்லாம் தெருவெங்கும் குடை மலர்கள்...நிறைய கறுப்பு மலர்கள்...குடையைக் கண்டு பிடித்தவனை மனதுக்குள் கண்டித்தேன்.மெல்ல வெழியே வந்து ...வானத்தை விரும்பிப் பார்த்தேன்.
"குடை எடுத்துப் போடா" என்ற அம்மாவை கோபமாகப் பார்த்து விட்டுத் தெருவில் நடந்தேன்....

பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் இடம் கிடைத்தவுடன் ஆனந்தமாக அமர்ந்தேன்....சில்லென்று சீறிய துளிகளை கண்ணை மூடி ரசிப்பதற்குள் "ஜன்னலை மூடுங்க தண்ணீர் தெறிக்குதுல்லே" என்று ஒரே காட்டுக் கத்தல்..."அட ரசனை கெட்ட ஜென்மங்களா" என்றவாறு மூடினேன்...

வேலையே ஓடவில்லை....ஜன்னல் வழியே மழையில் நனையும் குருவி,மழையில் நனையும் வெயில்,நனைய மறுத்து ஓடும் மனிதர்கள் என்று மனம் பறந்து கொண்டே இருந்தது...மழையில் விரும்பி நனையும் அனைவரும் மனதில் நச்சென்று ஒட்டிக் கொண்டார்கள்.

சாயங்கால வேளை மழை சந்தோஷப் படுத்த, உடனே கடற்கரைக்கு ஓடினேன்.மழையும் கடலும் ஓவென்று இரைச்சலுடன் என்னை வரவேற்றது.......மழையும் கடலும் என்ன பேசியிருக்கும்? கடலில் பாதம் நனைய...உடம்பு முழுவதும் மழையில் நனைய மனம் ஆனந்தக் கும்மியடித்தது...

இன்னும் மழை விடவில்லை.இருட்டு மழை இரகசியமாக மனதைச் சிலிர்க்கச் செய்தது.மொட்டை மாடிக்குப் போய் மேலே நிமிர்ந்து பார்த்தால் நட்சத்திரங்களுடன் மழை...இதயம் சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது.
கரண்ட் கட் ஆகி விட்டது..அம்மா மேலே வந்தாங்க ....கவனமாக நனைந்து விடாமல் எட்டிப் பார்த்து "என்னடா பண்றே மழையிலே? உள்ளே வாடா..." என்றார்கள்.இப்பிடித்தான் மழையில் நனையத் தெரியாதவர்களைப் பற்றியும், வாழத் தெரியாதவர்களைப் பற்றியும் கவலைப் படாமல்....நனையவும் ,வாழவும் தெரிந்தவர்கள் மேல் இஷ்டப் பட்டுப் பெய்து கொண்டே இருந்தது மழை!! .

Friday, March 28, 2008

அன்றைக்கு ஒருநாள் ஜெயிலுக்குப் போனோமில்லே!!!!அந்தப் போலீஸ் ஜீப்பில் ஒரே இட நெருக்கடி...பின்னே என்ன?ஆறு பேர் உட்கார்ந்து போற இடத்திலே பன்னிரண்டு பேரை அடைச்சு வச்சா எப்பிடி?? ஆனாலும் ஒரே அமர்க்களம்தான் போங்க....வேற யாரு நாங்கதான்...??ஜெயிலுக்குப் போறமேன்னு கொஞ்சம் கூடக் கவலைப் படாமல்..அத்தனை பேரும் பல்லைக் காட்டிக் கொண்டு இருந்தோம்!...அட நீங்க வேற!! ஒரு இன்டர் காலேஜ் போட்டிக்காக எங்க கல்லூரி நிர்வாகம் பாதுகாப்புக் கருதி ஏற்பாடு பண்ணின வண்டிதான் இந்த போலீஸ் ஜீப்!!நல்ல வேளை நாய் வண்டி வரல்லையேன்னு கொஞ்சம் ரொம்பவே சந்தோஷப் பட்டோம்....

போற வழிலெ கொஞ்சம் பின் அது இதுன்னு வாங்க வேண்டி இருந்ததால் இடையில் வண்டியை நிறுத்தி ரெண்டு பேர் மட்டும் இறங்கிப் போக நாங்க எல்லொரும் வண்டியிலேயே இருந்தோம்...கல்லூரிப் பெண்கள் போலீஸ் ஜீப்பில் காம்பினேஷன் கொஞ்சம் வினோதமாக இருந்ததனால் ஒரே கூட்டம் கூடிருச்சு...

அதிலே ஒரு பெரிசு என்னைப் பார்த்து "என்னம்மா என்ன ஆச்சு?" அப்பிடின்னு ரொம்ப சீரியஸாக் கேக்க நானும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு
"பரீட்சையில் காப்பி அடித்தோம் தாத்தா இதுக்குப் போய் ஜெயில்ல போடப் போறாங்க "என்றேன்.பெரிசு விடாமல்"எந்தப் போலீஸ் ஸ்டேஷன்?"என்றது...
வாய்க்கு வந்தபடி "சிதம்பர நகர் போலீஸ் ஸ்டேஷன்"என்று அழுற மாதிரி சொன்னேன்...அதிசயம் என்னன்னா....கூட இருந்ததுக அத்தனையும் சிரிக்காமல் இருந்ததுதான்....

அப்புறம் ? எனக்கெப்பிடிங்க தெரியும்?அந்தப் பெரிசுக்கு எங்க அப்பாவைத்
தெரியும்னு? அது போய் எங்க அப்பாகிட்ட ஊதின சங்குலெ என் சொந்தக்காரங்க எல்லாம்
" சித்தி வந்திருக்காக.......
சித்தப்பு வந்திருக்காக...மாமா வந்துருக்காக.......
அத்தை வந்துருக்காக....பெரியப்பா வந்திருக்காக......
பெரியம்மா வந்திருக்காக.......
அம்மா மின்னல் அருணா நீ எப்பம்மா வருவேன்னு கவலையான முகத்தோட உட்கார்ந்திருந்தாங்க....வேறென்ன நான் ஜெயிலுக்குப் போனதைக்
கொண்டாடத்தான்.....இது ஒண்ணும் தெரியாமல் போட்டியிலே ஜெயிச்ச சந்தோஷத்துலே அதே சனி பிடித்த போலீஸ் ஜீப்பிலே வந்திறங்கியதைப் பார்த்த அம்மா முந்தானையில் முகத்தை மூடிக் கொண்டு ஓ வென்று அலறியழ...ம்ம்ம்ம் அதுக்கப்புறம்........

நடந்த முதுகிலே டின் கட்டற விழா பற்றியெல்லாம் எழுதணும்னா இன்னொரு பதிவாதாங்க போட முடியும்...என்னங்க ஜெயிலுக்குப் போறேன்னு சொல்றதிலே இவ்வளோ வில்லங்கமா?...
ஆனால் அன்றொரு நாள் நான் ஜெயிலுக்குப் போகலையே!!!

Wednesday, March 19, 2008

அன்றொரு நாளில் முட்டாளாகிட்டொமில்லே!!!!கல்லூரிக் காலங்களில் வம்புக்கும்,சிரிப்புக்குமா பஞ்சம்?அப்பிடித்தான் ஆரம்பித்தது தமிழ் வகுப்பு.அன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி.முட்டாள்கள் தினம்.

ஒவ்வொரு வகுப்பின் ஆரம்பத்திலும் ஒரு சின்ன ப்ரேயருடன் ஆரம்பமாகும்.அப்பிடி ப்ரெயர் நடந்து கொண்டு இருக்கும் போது வகுப்பின் ஒரு வால் ஒன்று மெதுவாக தமிழாசிரியையின் பின்னால் சென்று ஒரு பேப்பரில் "நான் ஒரு முட்டாளுங்க!" என்று எழுதி பின் பண்ணி விட்டாள்...என் நாக்கில் சனிதான்..... அதற்கு அப்போதுதானா தண்ணீர் தாகம் எடுத்திருக்க வேண்டும்..நான் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்தவள் "அடடா இதென்ன கலாட்டா" என்று அந்தப் பேப்பரை எடுத்துவிட நினைத்து மெதுவாக பின்னால் போய் அந்தப் பேப்பரில் கையை வைத்து.....அட! இதென்ன ?ப்ரேயர் முடிந்து தமிழாசிரியைத் திரும்பி ....ஒரே ஒரு வினாடிக்குள் தமிழாசிரியையின் கைகளில் என் கைகளும் ,என் கைகளுக்குள் அந்த முட்டாள் பேப்பரும்...

"There was no question of any questions you know?"

எந்தவிதமான கேள்விகளோ,விசாரணையோ,விளக்கத்துக்கோ இடமில்லாமல் நான் தான் கையும் களவுமாகப் பிடி பட்டிருக்கிறேனே....
தமிழாசிரியை ஒன்றும் பேசாமல் அமைதியாக என் சேலையில் அந்தப் பேப்பரை பின்னால் மாட்டி விட்டு ....ஒவ்வொரு வகுப்பாக ஒரு நாள் முழுவதும் வலம் வரச் சொன்னாங்க..பார்த்துக்கிட்டு இருந்த நம்ம சக ஜீவ ராசிகளெல்லாம் "என்னம்மா இப்பிடிப் பண்ணிட்டியேன்னு" ஒரு பார்வையோடு தேமேன்னு உட்கார்ந்துக்கிட்டு இருந்ததுகள்!


அப்புறமென்ன?திரு திருவென்று முழித்துக் கொண்டு.... ஒரு கையால் அந்தப் பேப்பரை மறைத்துக் கொண்டு.......முகம் முழுவதும் டன் டன்னாக அசடு வழிந்துக் கொண்டு........பிரின்ஸி பார்த்தால் என்ன ஆகும் என்று பயந்து பயந்து ஒளிந்துக் கொண்டு....அப்பப்பா "எனக்கு மட்டும் ஏனிப்படி? உருப்படியா ஒண்ணு பண்ண விட மாட்டீங்களாடா?" அப்பிடின்னு ஒரு தினுசாக செய்யாத தப்புக்காக தண்டனை அனுபவித்துக் கல்லூரியில் அன்னிக்கு முழுவதும் முட்டாளாகிட்டோமில்லெ!!!

Wednesday, March 12, 2008

ஒருநாள் கோவில் பூசாரியாகிட்டோமில்லே!!திருமணமாகி ஒரு வாரம்தானிருக்கும்..மதுரைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காகப் போக வேண்டியதிருந்தது....சரி..மதுரை மீனாக்ஷியையும் போய் பார்த்து என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வந்துரலாம்னு கோவிலுக்குப் போனோம்.
"மாலை வாங்கலாமா?"
"பூசைத் தட்டு வாங்கலாமா?"
என்ற ஒவ்வொரு கேள்விக்கும் பிடிக்குதோ இல்லியோ...நாய்க்குட்டி போல "ம்ம்" "ம்ம்" என்று சொல்ல வேண்டிய அழகான தருணங்கள் (அட இம்ப்ரெஸ் பண்ணத் தாங்க!!)

மாலையும் ,பூசைத் தட்டுமாக பக்திப் பழங்களாக சன்னிதிக்குள் நுழைந்தோம்..கையில் மாலை,பூசைத் தட்டுக்களோடு பூசாரியை நோக்கி கையை நீட்டி தவமிருக்க ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது.கூட்டமோ பயங்கரக் கூட்டம்.பூசாரிக்கு மாலையுடன் 50/- 100/- ரூபாய் நோட்டுக்கள் பிடித்திருந்த தட்டுக்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.

பொறுமையிழந்து அவரும் ஒரு 50/-ரூபாய் நோட்டை எடுக்க நான் சாமி சன்னிதியுலுமா லஞ்சம் எனத் தடுத்தேன்..இப்போ அவர் நாய்க்குட்டியாக வேண்டிய அழகான தருணம்(அட இம்ப்ரெஸ் பண்ணத் தாங்க!!)ஒன்றும் பேசாமல் உள்ளே வைத்து விட்டார்.

இன்னும் அரை மணி நேரம் போனதுதான் மிச்சம்...எங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம் மீனாக்ஷியை என்ன ஏதுன்னு விசாரித்து விட்டுப் போய்க் கொண்டே இருந்தார்கள்.ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து ....தொண்டை அடைக்க .."வாங்க போகலாம்" என்று மீனாக்ஷியின் செக்ரட்டரியுடன் கோபித்துக் கொண்டு வெளியே வந்தோம்.....

அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தார்....பின் "இதை என்ன செய்வது" என்பது போல மாலையையும் பூசைத் தட்டையும் பார்த்தார்.

அமைதியாக ஆனால் அடங்காத கோபத்துடன் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம்....அங்கே ஒரு ஓரத்தில் இருட்டுக்குள் ஒரு விளக்கு கூட இல்லாமல்...ஒரு பூ கூட இல்லாமல், ஒரு பூ கூட இல்லாமல் ஒரு அம்மன் சிலை வருத்தத்துடன் இருந்தது...
அட! பளிச்சென்று ஒரு சூரியன் என் மனதில் உதித்தது...அந்தச் சிலையை நோக்கி நடக்கையில் என் எண்ணம் அவருக்கும் புரிந்தது போலும் .....புன்சிரிப்புடன் அவரும் கூடவே.....

கையால் அம்மன் சிலையைத் தூசி தட்டி, மாலையைப் போட்டு,ஊது பத்தி பொருத்தி ...விளக்கைப் ஏற்றி ....சூடத்தை ஏற்றி அம்மனுக்குக் காட்டி கண்ணில் ஒற்றிக் கொண்ட போது..."ஓவென்று அலறிய மனம் சட்டென்று நிசப்தமாகி....கண் ஓரம் துளிர்க்க ....

"அட அன்றைக்கு ஒருநாள் கோவில் பூசாரியாகிட்டோமில்லே!!

Monday, March 3, 2008

அப்பப்போ வில்லனாவோமில்லே!!!

அது கல்லூரிக் காலம்.எல்லோரும் "எனக்கொரு boy friend வேண்டும்...வேண்டும்னு ஏங்கும் காலம்.இந்த விடுதிப் பெண்கள் எல்லாம் எப்படித்தான் டே ஸ்காலர்ஸை
மடக்குவாங்கன்னு தெரியாது....எல்லாம் லெட்டர் எழுதி அவுட் போஸ்ட் பண்ணக்
கொடுக்கலாம்னுதான்...ஏன்னா விடுதி வார்டன் லெட்டரைப் படிப்பாங்கன்னுதான்...
எனக்கு எப்பவுமே ஒரு கேள்வியுண்டு...அப்பிடி வார்டனுக்குத் தெரியாமல் என்னதான் எழுதணும் வீட்டுக்குன்னு?..ஏன்னா போஸ்ட் பண்ணும்போது "விடுதி பற்றி அம்மாவுக்கு எழுதிருக்கேன்...வார்டன் படிச்சா அவ்வளவுதான்" ...அப்பிடின்னு டையலாக் வேற.

இப்பிடித்தான் அந்தப் பொண்ணு என்கிட்டயும் ஒரு லெட்டரைக் கொடுத்து போஸ்ட்
பண்ணச் சொன்னது...அவ்வளவுதான் எனக்கு அதை படிக்கத் தாங்க முடியாத ஒரு ஆவல்.வீட்டுக்குக் கொண்டு வந்த பின்பு...இதென்ன பெரிய தப்பா? ராணுவ ரகசியமா?
அப்பிடி என்னதான் எழுதிருக்குன்னு பார்க்கப் போறேன்...மற்படியும் ஒட்டி அனுப்பப் போறேன்...இதிலென்ன தப்பு? உலகத்திலே என்னன்னமோ தப்பெல்லாம் பண்றாங்க...இது கூடப் பண்ணக் கூடாதா?....என்று மனதில் நினைத்துக் கொண்டு.....
"தப்பு....தப்பு ...செய்யாதே...செய்யாதே"..என்று மிரட்டிய மனசாட்சியை.....
"அட அடங்குடா ..." என்று பதிலுக்கு விரட்டிவிட்டு...மெல்ல மெல்ல ஓரம் கிழிந்து விடாத படி தண்ணீர் தொட்டுத் திறந்தேன்

"அன்புள்ள அம்மா.,
நான் நலமே...அங்கு எல்லோரும் நலமா?...

"ஐயோ பாவம் ..அம்மாவுக்குத்தான் எழுதியிருக்கிறாள்"...என்று கொஞ்சம் (ரொம்பவே)ஏமாற்றத்துடன் மேலே படித்த என்னை ஒரேயடியாக ஏமாற்றியது அந்தக் கடிதம்.
அட அது ஒரு அருமையான காதல் கடிதமுங்க!
"அன்பே...பொன்னே...மானே.."போங்க எனக்கு வெட்கமாக இருக்கிறது!!!! இதற்கு மேல எழுத......கடைசியாக ஒரு வரி
"அடுத்த வாரக் கடைசியில் ஊருக்குக் கிளம்பும்போது "அம்மாவுக்கு சனிக்கிழமை காலை வருவதாகச் சொல்லி விடுகிறேன்...வெள்ளி மாலையே கிளம்பிடுவேன்...பாளையங்கோட்டை காளிமார்க் பக்கத்தில் நில்லு ....OK? I'm waiting for that day dear..............................என்றிருந்தது...

எனக்கு நானே அந்தத் தப்பைச் செய்வது போலிருந்தது.கை டப டப வென்று அடித்தது..அடடா....பட படவென்றுதான் அடித்தது.வேர்த்து வேர்த்து வழிந்தது....
இப்போ இதை போஸ்ட் பண்ணவா வேண்டாமா?ன்னு ஒரே மண்டைக் குழப்பமாக இருந்தது....கடிதத்தை மடித்து வைத்து விட்டு"ஒரே யோசனை..என்ன பண்ணலாம்?

அடியே ராணி...நீ இவ்வளவுதானாடி? என்று கேட்கலாமா?....
நேரா விடுதி வார்டன்கிட்ட கொடுக்கலாமா?
கல்லூரி முதல்வரிடம் கொடுக்கலாமா?
பேசாம அம்மாகிட்ட காட்டிரலாம்???
எதுவுமே புரியவில்லை....ஆனால் இவர்கள் அத்தனை பேரை விட என் மேல் எனக்கிருந்த நம்பிக்கைதாங்க ஜெயிச்சுது!!!!
நானே சமாளிக்கலாம்னு முடிவு பண்ணி ......
அந்தக் கடைசி வரிகளை பேனாவால் அடித்தேன்..கீழே
"இந்த லெட்டர் எங்கள் கையில் கிடைத்த நிமிடமே ராணியை கல்லூரியிலிருந்து நீக்கியிருக்க முடியும்.ஆனாலும் ஒரு படிக்கிற பெண்ணின் வாழ்க்கையை பாழ் பண்ண விரும்பவில்லை...இது கடைசி வாய்ப்பு.இனி அவளைப் பார்க்கவோ,அவளுடன் பேசவோ முயற்சி பண்ணினால் அவளைக் கல்லூரியிலிருந்து நீக்கி அவள் அப்பா அம்மாவிற்குத் தெரியப் படுத்துவோம்.
இப்படிக்குக் கல்லூரி முதல்வர்
Sr.Rita
என்று கையெழுத்திட்டு ஒட்டி அனுப்பி விட்டேன்..

அப்புறம் அந்த வாரக் கடைசியில் வீட்டுக்குப் போய் விட்டு வந்த பின்பு முதல் கடைசி வருடம் முடிக்கும் வரை ராணி என்னுடன் பேசவே இல்லை..
அவள் காதலை(காதல்தானா அது????)கட் பண்ணியதால் நான் வில்லனா?(வில்லியா?)அல்லது அதிலிருத்து காப்பாற்றியதால் கதாநாயகியா???....எனக்குத் தெரியலை...நீங்கதாங்க சொல்லணும்.....சொல்லுங்க ப்ளீஸ்

எப்படியிருந்தாலும் காதலுக்கு வில்லனாயிட்டோமில்லெ!!!!!!!

Wednesday, February 27, 2008

ஒரு நிமிஷத்திலே திருடனாயிட்டோமில்லெ!!

நமக்கு எப்போதுமே ஒற்றைப் பெட்டிதானுங்க...அது ஜெய்ப்பூரிலிருந்து சென்னையானாலும் சரி,சென்னையிலிருந்து கனடாவானாலும் ச்ரி.அதையும் ஸ்டையிலாகப் பிடித்துக் கொண்டு அந்த ஜெய்ப்பூர் டு சென்னை ரயிலில் ஏறி உட்கார்ந்ததுமே இரண்டு பேர் கொண்ட அந்தக் குடும்பம் 24 பெட்டியை வைத்துக் கொண்டு வேர்த்து விறு விறுத்த அந்தக் குடும்பத்துத் தலையும் மற்றும் அங்கிருந்த பெரியோரெல்லாம் என்னை விசித்திரமாகப் பார்த்ததில் எனக்குக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தது
அப்போதான் அவர்கள் வந்தார்கள்..ஒரு அழகான Made for each other ஜோடி.புது வாழ்வின் மினு மினுப்பு முகத்திலும்,சந்தோஷப் பூக்களின் மின்னல் கண்களிலும் தெரிந்தது.தேனிலவுப் பயணம் போல..இரண்டே இரண்டு பெட்டி..அந்தப் புதுப் பொண்ணைப் போலவே அந்தப் புதுப் பையனும் வெட்கப் பட்டான்.எனக்கு எதிரில் உள்ள சீட்டில் வந்து உட்கார்ந்தார்கள்.
செயின் போட்டுரலாமா என்று அவன் பொதுவாகச் சொல்லிவிட்டு ஒரு பெட்டியைத் திறக்க முயன்றான்.திறக்கவில்லை.அப்படியும் இப்படியுமாக திருகித் திருகிப் பார்த்தான்.ஒன்றும் நடக்கவில்லை.திருகித் திருகிக் கை சிவந்ததுதான் மிச்சம்.உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அந்தப் பெண்ணிடம் கொடுத்தான்.அவளும் அவளால் இயன்றவரை திருகித் திருகிப் பார்த்துவிட்டு... ப்ச்..ப்ச். என்றாள்.

"டிக்கெட்,மேற்கொண்டு பணம் எல்லாம் அதில்தான் இருக்கு" என்றான் மெதுவாக.
"இப்போ என்ன பண்றது?"என்றாள் அவள்.

நாம கொஞ்சம் இளகின மனசுங்க...ரொம்பப் பாவமாக இருந்தது."இப்பிடிக் கொடுங்க என்று உரிமையோடு பெட்டியை வாங்கிக் கொண்டேன்.சும்மா "கணேஷ் வசந்த்" ரேஞ்சுக்கு ஆராய்ந்தேன்.அப்படியும் இப்படியும் திருகிவிட்டு உதட்டைப் பிதுக்கினேன்.

அதற்குள் அங்கிருந்தோர் அத்தனை பேர் பார்வையும் என் மேல்..மனசுக்குள் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன்.இன்னமும் கொஞ்சம் சாகசம் செய்ய எண்ணி என் சாவிக் கொத்தையும் எடுத்து திருகித் திருகி அடிக்கடி அனைவரையும் பார்த்து ஒரு பெருமைப் புன்னகையும் செய்து கொண்டே என் வேலையில் கவனமாயிருந்தேன்..
இதை.... இதை...இதைத்தானே எதிர்பார்த்தேன் என்று மனது கூ...கூ..என்று கூக்குரலிட்டது. அட....க்ளிக் என பெட்டி திறந்து கொண்டது.ஒரு வீரப் புன்னகையுடன் ஏதோ அவார்ட் வாங்குபவனைப் போல ரொம்பப் பெருமையுடன் பளிச்சென்ற சிரிப்புடன் பெட்டியைத் திருப்பிக் கொடுத்தேன்.
என் பக்கத்தில் இருந்தவன் ஒருவிதக் கடுப்புடனேயே இருந்தான்.திரு திருவென்று அங்கும் இங்கும் பார்த்தான்.விருட்டென்று எழுந்து போனான்."வயிற்றெரிச்சல் பிடிச்ச பாவிங்க" என்று மனதுக்குள் கறுவினேன்.....
அட அவன் டி.டி.ஈ உடன் வந்தான்.அவர் என்னருகில் வந்து ......
"உங்க டிக்கெட்டைக் காட்டுங்க.."என்றார்.நான் ஒன்றும் புரியாமல் டிக்கேட்டை எடுத்துக் காட்டினேன்.
"எங்க வேலை பார்க்கிறீங்க?"
"ஐ.டி கார்ட் இருக்கா?"
"ஐ.டி.கார்ட் காட்டுங்க"
"எங்க போறீங்க?"
"என்ன விஷயமாகப் போறீங்க?"
"வேலை பார்க்கிற இடத்து அட்ரெஸ் சொல்லுங்க..
"போற இடத்துலே எங்க தங்குவீங்க?"
"அந்த அட்ரெஸ் கொடுங்க..."
"எந்தச் சாவி கொத்தால திறந்தீங்க..அதைக் காட்டுங்க..."
என்று சகட்டுமேனிக்கு கேட்ட கேள்வில நான் வேர்த்து விறு விறுக்க "அடப் பாவிகளா ....ஒரு பாவி வாய் திறக்கட்டுமே உதவிக்கு?அட அந்தப் பெட்டி கோஷ்டியாவது உதவிக்கு வரும்னு பார்த்தால்"அடச் சே!" நான் நொந்து நூடுல்ஸ் ஆகி மெல்ல எல்லோரையும் "பெட்டியைத் திறந்து கொடுத்தது தப்பாடா" என்று வடிவேல் ரேஞ்சுக்குப் பரிதாபமாக பார்க்கையில் அத்தனை பேர் கண்களிலும் "அட! ஒரு நிமிஷத்தில திருடனாயிட்டோமில்லே!!!

Tuesday, February 19, 2008

நீயும், நானும்,நம் கோபங்களும்.....

உன் கோபமும்
என் கோபமும்
யாரை என்ன செய்து விட முடியும்?
சரியாகப் போடாத சாலைகளுக்காக அரசாங்கம் மேல்
உன் கோபம்...
போட்ட சாலைகளை குப்பைக் கூடமாகிய மக்கள் மேல்
என் கோபம்..
மரம் நட்டு பராமரிக்காத அரசாங்கம் மேல்
உன் கோபம்...
மரம் வெட்டி வருமானம் பார்க்கும் மக்கள் மேல்
என் கோபம்..
தேவைக்குத் தண்ணீர் தராத அரசாங்கம் மேல்
உன் கோபம்...
சொட்டுப் போடும் குழாயை சரி செய்யாத மக்கள் மேல்
என் கோபம்..
சாதி,இனம்,மதம் இவற்றை முன் வைத்தே ஜெயிக்கும் அரசாங்கம் மேல்
உன் கோபம்...
சாதி,இனம் ,மதம் என்றே வாழ்ந்து வரும் மக்கள் மேல்
என் கோபம்..
சாலை விதிகளை மீறும் மக்கள் மேல்
உன் கோபம்..
சாலை விதிகளை மீறுபவனிடம் கையேந்தும் காவலன் மீது
என் கோபம்..
உன் கோபமும்
என் கோபமும்
யாரை என்ன செய்து விட முடியும்???

Tuesday, February 12, 2008

ஒரே நாளில் கதாநாயகியாயிட்டோமில்லே!!!

அருட்பெருங்கோவின் கால்குலேட்டரின் ரணகளம் படித்த பின் வந்த மலரும் நினைவுகள் இந்தப் பதிவு ...சம்பத்தப் பட்டவர்கள் படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பெயர் மாற்றம் செய்து போட்டிருக்கேனுங்கோ! அப்பிடியே படிச்சு ப்ழைய கால நினைவுகள் வந்தாலும் நான் செஞ்ச தப்பை மறந்து மன்னிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..என்னா பில்ட் அப் நல்லாருக்கா?

பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது.அது ஒரு கோ-எட் பள்ளிக் கூடம்.ஆனாலும் பெண்கள் எண்ணிக்கையில் மிகவும் கொஞ்சம்.36 பசங்க அனால் 11 பேரே பெண்கள்..அப்பப்பா பண்ற அலப்பறை இருக்கே!!

அதுல ஒரு பொண்ணு ஒரு டீச்சரோட பொண்ணு.என்ன ஆட்டம் போட்டாலும் அதோட பிட் அந்த டீச்சருக்குப் போயிரும்...அவ்வ்ளோ தான் அடுத்த நாள் வந்து காவடி எடுத்து ஆடிடும்..

விளையாட்டு மைதானத்தின் பின்னால ஒரு சின்ன வாசல் ..அது பெண்களின் அந்தப் புற திட்டி வாசல்.அதில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி..அதன் பக்கத்தில் ஒரு சின்னூண்டு சுவர்.அதுதான் பையன்களோட காதல் நோட்டீஸ் போர்ட்.தினம் ஒரு பொண்ணொட பெயர் யாராவது ஒரு பையனோட "I love you" மெசேஜோட அதில எந்த லூஸோ எழுதி வைச்சுட்டு அது பாட்டுக்கு போயிடும்.இங்க காலையில இருந்து ஒவ்வொருத்தரா வந்து கிழித்து பந்தல் போட்டு விடுவார்கள்.ஒரு தப்புமே செய்யாத அந்தப் பொண்ண எல்லோரும் ஒரு தினுசா திரும்பித் திரும்பிப் பார்த்துட்டு போவார்கள்.

அந்த டீச்சர் அம்மா கொஞ்சம் ஜாஸ்தி..."பொண்ணுங்க ஒழுங்கா இருந்தா யாரும் இப்பிடி எல்லாம் எழுத மாட்டாங்க..என் பொண்ணுக்கு எவனாவது எழுதுறானா? ஏன்னா என் பொண்ணை நான் வளர்த்த விதம் அப்பிடி இப்பிடின்னு ஆரம்பிச்சா இன்னிக்கி எல்லாம் ஒரு மெகா சீரியலா போடுற அளவுக்கு மேட்டர் வெளிய வந்து கொட்டும்.

இதை இப்பிடியே விடக் கூடாது...பொண்ணுங்க மனசோட சிந்திச்சா இதுக்கு வழி கிடைக்காதுன்னு ஒரு வில்லத்தனமா சிந்திக்கணும்னு ஒரு மாநாடு போட்டு கடைசியா குட்டியூண்டா இருந்த என்னைத் தேர்ந்தெடுத்து அந்த் வேலையை ஒப்படைத்தார்கள்...அது வேறொன்றுமில்லை...அந்த டீச்சர் பொண்ணோட பெயரை ஒரு பையனோட சேர்த்து அந்தக் காதல் நோட்டீஸ் போர்ட்லெ எழுதிப் போடற வேலைதாங்க அது.....கொஞ்சம் உதறல்தான் இருந்தாலும் அவ்வளோ பேர் இருக்கும் போது என்னைத் தேர்ந்தெடுத்ததனால நம்ம ஸ்டார் அந்தஸ்தைக் காப்பாற்ற வேண்டி ரொம்பத் தைரியமா இருக்கிற மாதிரி இளித்துக் கொண்டே சரி என்றேன்.

ஒவ்வொரு அடிக்கு ஒருத்தியாக நின்று எனக்கு சிக்னல் கொடுப்பதற்குத் தயாராக நின்று கொண்டார்கள்.எனக்கு வேர்த்து விறு விறுத்தது..கையில் பிடித்திருந்த சாக் பீஸ் ஈரமாகியது..கை நடுங்க 100 வயது கிழம் எழுதியது போல கிறுக்கி விட்டு ஓடியே வந்து விட்டேன்.

பெரிய சாதனை செய்தது போல ஒரு மகிழ்ச்சி இருந்தாலும், அடுத்த நாள் என்ன ஆகுமோ என்ற பயமும் இருந்தது.இரவெல்லாம் ஒரே கனவு..அந்த டீச்சர் என் கையெழுத்தையும் அந்த போர்ட்லெ உள்ள கையெழுத்தையும் ஒன்று என்று கண்டு பிடித்து விட்டதாகவும்,போலீஸ்காரங்க நாயெல்லாம் கூட்டிட்டு வந்து மோப்பம் பிடிக்க வைத்து என்னைக் கண்டு பிடித்து விட்டதாகவும்,என் நட்புகள் எல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜகா வாங்கியதாகவும்,என்னை போலீஸ் ஜீப்பில் ஏற்றும்போது என் அம்மா பின்னல் ஓடியே வருவதாகவும், எல்லா கனவுகளும் ஒரே நாளில் விட்டு விட்டு பட ட்ரெயிலர் போல பிட் பிட்டாக வந்தது.

இந்தக் கொடுமையில் காய்ச்சல் வேறு வந்து விட்டது.ஒரு மாதிரி மந்திரித்து விட்ட கோழி மாதிரிதான் ஸ்கூலுக்குக் கிளம்பினேன்.

அட ரொம்ப சூப்பரா எங்க ப்ளான் வொர்க் அவுட் ஆகியிருந்துதுங்க.!!அதே டீச்சர் தன் பொண்ணின் அழுகையை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தார்."பாருங்கம்மா எப்பிடி ஒழுக்கமா இருந்தாலும் இந்தப் பையனுங்க விடறதில்லெ! இந்தப் பையனுங்க பண்ற வேலையினாலே சேட்டையினாலே பொண்ணுங்களுக்கு எவ்வளோ கஷ்டம்?பாவம்......நீங்க என்னம்மா பண்ணுவீங்க?....என்று ஒரே பாச மழைதான் போங்க.!!

இதுல சந்தடி சாக்கில நடந்த இன்னொரு நல்லது..எந்தக் கூட்டம் அங்கே தொடர்ந்து எழுதுச்சோ அதுங்க மிரண்டு போய்அதுக்கப்புறம்எழுதவேயில்லை!!!.ஒரே நாளில் பெண்கள் கூட்டத்திலே ஒரு கதானாயகியாயிட்டோமில்லே!!!!!!!!

Thursday, February 7, 2008

எத்தனை நாளாச்சு!!!

உன் கண்களில் நட்சத்திரப் பூக்கள் பார்த்து
எத்தனை நாளாச்சு?

நட்சத்திர வானம் பார்த்தும்தான்
எத்தனை நாளாச்சு?

உன்னோடு சிரித்துப் பேசி
எத்தனை நாளாச்சு?

என் வீட்டு ஜன்னலில் நிலவு எட்டிப் பார்த்தும்தான்
எத்தனை நாளாச்சு?

உன் கையோடு கைகோர்த்து
எத்தனை நாளாச்சு?

மழையோடு வானவில் பார்த்தும்தான்
எத்தனை நாளாச்சு?

உன்னோடு சண்டை போட்டு
எத்தனை நாளாச்சு?

இடியோடு மின்னலும்தான் பார்த்து
எத்தனை நாளாச்சு?

Friday, February 1, 2008

இன்று முதல் அன்புடன் அருணா!

ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.என் ப்ளாக் பெயரை மாற்றி விடலாம் என்று ...இது இந்த மாற்றம் என்னைத் தவிர மற்றவர்களுக்காக....முதல் முதல் பெயரைச் சொன்னவுடனே "பெயரை மாத்து இல்லைன்னா உன் பேச்சு கா" என்று வாரிய சேகரனுக்காகவும்,

"ஏன் இந்தப் பெயரை வைத்தாய்" என்று தினம் என்னை வதைக்கும் அந்தோணி முத்துவுக்காகவும்,

ப்ளாக் பெயரை மாற்றுங்க என்று 4 முறை கமென்ட் பண்ணிய,//இந்த 'வலைப்பூ'வின் தலைப்பை படிக்கும் போது ஆமாய்யா போய்சேரத்தானே போறோம் என்னத்துக்கு அதை இதை செஞ்சிகிட்டு என்ற சலிப்பு மனோபாவம்தான் ஏற்படுகிறதே தவிர நீங்கள் சொலவது போல ஆணவத்தை ஒன்றும் அழிப்பதாக தோன்றவில்லை :(// என்று சலித்துக் கொண்ட மங்களூர் சிவாவுக்காகவும்,


//ஒரு எட்டு பாத்துட்டுப் போலாம்ன்னு வந்தாப் பதிவு தலைப்பே மிரட்டுதுங்களே// என்று மிரண்ட தேவ்-க்காகவும்,

அப்புறம் இந்த தலைப்பை மாத்தீடுங்களேன் ப்ளீஸ் என்று கெஞ்சிய நிலாவுக்காகவும்,

//எல்லோரும்தான் இறக்கப் போகிறோம்-ஒருநாள்,அதை நித்தமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன??????// என்று கேட்ட அறிவனுக்காகவும்,

//பலர் உங்களின் வலைப்பூவின் தலைப்பை மாற்ற வேண்டும் என்பதற்கு காரணம் அது உங்களின் உள்ளத்தை எல்லோரும் அறிந்திருப்பதாலும் நீங்கள் யாராக இருந்தாலும் அன்பு உள்ளம் கொண்ட நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற அன்பால் தான்.// //இறந்துகொண்டேயிருக்கிறேன் மீண்டும் பிறந்து கொண்டேயிருக்க//என்று புதுமையான விளக்கம் சொல்லும் என்சுரேஷ்க்காகவும்,


//அப்புறம் அருணா உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லறேன்..
எல்லாரும் தான் இறக்க போறோம்.. ஆனா பிறந்து இறக்கும்
அந்த இடை வெளி இருக்கு பாருங்க, அதுல வாழலாம் :)
நம்ம சந்தோஷமா இல்லன கூட அடுத்தவங்களை சந்தோஷ படுத்தின,
நம்ம மனசுக்கு நிம்மதியாசும் கிடைக்கும்..// என்று நல்ல ஐடியா கொடுத்த ட்ரீம்ஸ்க்காகவும்,


//என்ன மேடம் இப்படி ஒரு தலைப்பு குடுத்திருக்கீங்க. மாத்துங்க முதல்ல// என்று கட்டளையிட்ட ஸ்ரீக்காகவும்,


// (என்ன ஒரு பேருடா சாமி. பேரக் கேட்டாலே சும்மா அலறுவானுவ)//
//இந்த அருணா இருக்கே, பேருதான் அப்படியே தவிர, அதுக்கிட்டப் பழகிப் பாத்தா வாழணும்ங்கற ஆவல்தான் வரும். அது ரொம்ப, ந்ல்ல பிள்ளைப்பா, பேருக்கோசரம் அதை இப்படிப் போட்டு வார வேணாம் கண்ணுங்களா.//என்று எனக்கு சப்போர்ட் பண்ணும் சாம் தாத்தாவுக்காகவும்,


//ப்ளாக் பெயரை இப்படியா வைப்பது.... ஏனுங்க இந்தக் கோபம்?// என்று கேட்ட தமிழ் நெஞ்சத்திற்காகவும்,//


அடப்பாவமே... ஏனுங்க அருணா.. புதுசா இருக்கே உங்க பேருன்னு உங்க வலை வீட்டுக்கு வந்தாக்கா.. இப்பிடியா வெல்கம் போட்டு வச்சி பயம்புறுத்தறது..// என்று பயந்து கொண்ட ரசிகனுக்காகவும்,


//நான் குட்டிபாப்பாவா இருக்கலாம், இங்க இதுல நாந்தான் குரு,எனக்கு குருதட்சிணை வேணும் குருதட்சிணை என்ன தெரியுமா? உங்க ப்ளாக் தலைப்பை மாத்துனா அதுதான் எனக்கு குருதட்சிணை.மாத்துவீங்களா? இல்ல குட்டி பாப்பா பேச்செல்லாம் கேக்கறதான்னு விட்றுவீங்களா?// என்று குருதட்சிணை கேட்ட நிலாக் குட்டிக்காகவும்,

குருதட்சிணையாக பெயரை மாற்றி விடலாம் என்று நினைத்து இன்று முதல் ""நான் இறக்கப் போகிறேன் அருணா" "அன்புடன் அருணா"வாக பெயர் சூட்டப் படுகிறது.....பெயர் சூட்டும் விழாவுக்கு அனைவரும் வருக வருக என்று அன்புடன் அழைக்கிறேன்.....
அன்புடன் அருணா

Tuesday, January 29, 2008

"என்னடா செல்லம்?"

நான் சுக்கு நூறாய் உடைந்தேன்.என் கண்ணிலிருந்து கண்ணீர் என்னையறியாமலே வழிந்தது..நான் உனக்காக அழுதேனா?எனக்காக அழுதேனா?எனக்கே புரியவில்லை.நீ சொன்னதெல்லாம் மீண்டும் மீண்டும் மனதில் மின்னலடித்தது..மனது திடீரென்று "கனவிலிருந்து விழித்துக் கொள்ள மாட்டேனா" என்று அநியாயத்துக்கு ஆசைப் பட்டது.
எனக்கு உன் மேல் கோபம் வரவில்லை...கோபத்தைதான் உன்னைப் பார்த்த நாளிலே தொலைத்து விட்டேனே....என் மேலேயேதான் கோபம் கோபமாக வந்தது...அவ்வளவுதான் வாழ்ந்தது போதும் என்று நினைத்தேன்.தொண்டை அடைத்துக் கொண்டது...கால் போன போக்கில் வேக வேகமாக நடந்தேன்.மழைக்காக வானம் கருப்புக் கொடி காட்டியது....அந்த முதல் மழைத் துளி என் கைக்ளில் பட்டுத் தெறித்தது.எப்போதும் மழைத் துளி என்னில் கொண்டு வரும் சந்தோஷச் சில்லிப்பு வரவேயில்லை.மண்வாசனை என் மூளைக்குள் பதிய மறுத்தது...வழியெங்கும் உள்ள பூக்களையெல்லாம் கூட மனதிற்குள் சீ... போ...என்று கோபித்துக் கொண்டேன்..கால்கள் தன்னையறியாமல் அந்தப் புல்வெளியில் கொண்டு சேர்த்திருந்தது...வேக வேகமாக நடந்ததில் அந்த மழையிலும் கூட வேர்த்திருந்தது."இனி நான் உன்னிடம் பேசப் போவதில்லை...இன்று மட்டுமில்லை வாழ்நாள் முழுவதும்தான் உன்னிடம் பேசப் போவதில்லை...."இன்றோடு வாழ்க்கையை முடித்துக் கொண்டால் என்ன........ என்று மனதில் நினைத்தவாறு ஆயாசத்துடன் புல்தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு கண்களை மூடினேன்..கண் ஓரங்களில் எனக்கென்ன என்று கண்ணீர் கோடு போட்டது.என்மேல் நானே இரக்கப் பட்டேன்.இனி கவிதாவைக் கண்டால் யாரோ எவளோ என்பது போல கண்டுக்காமல் இருக்க வேண்டியதுதான் என்று வைராக்கியதுடன் அழுகையை நிறுத்தினேன்.....அருகில் எதோ சலனம்...கண்திறக்காமல் இருந்தேன்.முன் நெற்றியின் முடிக் கற்றையை யாரோ ஒதுக்கி விடுவது போல ஒரு உணர்வு...நம்பிக்கையில்லாமல் கண்திறந்தேன்...ஐயோ...."கவிதா" வாழ்நாள் முழுவதும் பேசவே மாட்டேன் என்ற அத்தனை வைராக்கியமும் தூள் தூளாகி "என்னடா செல்லம்?" என்று பளீரென்று சிரித்து 178-வது முறையாக மீண்டும் வாழும் ஆசையுடன் எழுந்து உட்கார்ந்தேன்....

Sunday, January 27, 2008

மண்ணுக்குள் புதைந்தும் புதைத்தும் விடாதே...

பனிக்கும் புயலுக்கும்
நெருப்புக்கும் மழைக்கும்
தப்பிய பூவே
பூஜைக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை...
மண்ணுக்குள் புதைந்து விடாதே....

சூரியனுக்குத் தப்பிய
நிலவே!
இருட்டுக்குத் தப்பிய
நட்சதிரமே!
வானத்தில் ஒரு இடம் இல்லையென்றாலும் பரவாயில்லை..
மண்ணுக்குள் புதைந்து விடாதே....

கண்ணுக்குத் தப்பிய
கனவே!
கனவுக்குத் தப்பிய
காதலே!
மனதில் இடமில்லையென்றாலும் பரவாயில்லை..
என்னை மண்ணுக்குள் புதைத்து விடாதே....

Thursday, January 24, 2008

என் வீட்டுக் கதை இது.....

என் வீட்டுக் கதை இது.....
நாங்கள் எனக்கு விபரம் தெரிந்த போது டைடஸ் வீட்டில் இருந்தோம்..சுற்றிலும் மாந்தோப்பு...கொய்யா மரங்கள்,பலா,சீதாப் பழ மரங்கள்...நினைத்த போது நினைத்த பழம்...எனக்கு நினைவு தெரிந்து நாங்கள் பழம் விலைக்கு வாங்கியதில்லை...பலாப்பழம் வேர்ப்பலா..மரத்திலிருக்கும்போதே மரத்தின் பாதத்திலேயே உட்கார்ந்து பலாச் சுளையை எடுத்துச் சாப்பிட்டிருக்கிறோம்.

அப்புறம் மாடி வீடு..அது ஏனோ அவ்வளவாக ராசி இல்லாத வீடாகவே எல்லோராலும் நினைக்கப் பட்டது.அதனால் சீக்கிரமாகவே மாற்றி விட்டோம்.அடுத்தது பங்களா வீடு..அந்த வீட்டில் ஒரே ஒரு நாள் தான் இருந்தோம்...முதல் நாள் இரவே அம்மாவுக்கு அடுப்பு உடைவது போல கனவு...அது கெட்ட சகுனம் என்று அடுத்த நாளே வேறு வீடு மாறி விட்டோம்.ஆனால் எனக்கு ரொம்பவும் பிடித்த வீடு அதுதான்..வீட்டைச் சுற்றி லில்லி செடிகள்...சின்ன நெல்லிக்காய் மரம்,பார்க் போன்ற வடிவில் ஒரு தோட்டம்..ஆளாளுக்கு ஒரு அறை என்று நாங்கள் பங்கு போட்டுக் கொள்ளும் முன்னரே வீடு பறி போயிற்று..

அடுத்தது புலி வீடு...அதுதான் நாங்கள் அந்த வீட்டிற்கு வைத்த பெயர்...காரணம் வீட்டிற்குச் சொந்தகாரர்...புலி போலவேதான் இருப்பார்..முன் மண்டையிலும்,காதோரங்களிலும்,காது மடலிலும்,மட்டும் முடி..எப்போதும் ஒரே உறுமல்தான்...அடுத்ததுதான் கொக்கு வீடு...இது எனக்குப் பிடித்த ரெண்டாவது வீடு.இந்த வீட்டுக்காரருக்கு கொக்கு மாதிரி ஒரு கழுத்து....இது ஒன்றேதான் இந்தப் பெயருக்கான காரணம்...பன்னிரெண்டு அறைகள்..ஆளுக்கு ரெண்டு அறையாகப் பிரித்துதான் பெருக்க முடியும்...கடைசியாக ஒரு கிணறு...அதற்குள்தான் என்னிடம் சண்டை போட்ட என் தம்பி என்னிடமிருந்த குட்டி குட்டி பினாகா பொம்மைகளையெல்லாம் வீசியெறிந்தான்.அந்த வீடு மாறும் போது என் உயிரே போனது போல ஒரு வலி...இப்போதும் கிணறுகள் என் குட்டி குட்டிப் பொம்மைகளைத்தான் நினைவு படுத்துகிறது.

அதற்கப்புறமும் ஓனாய் வீடு,நரி வீடு,குண்டு வீடு என எத்தனை வீடு மாறிய போதும் கலாம்மா வீடு எப்போதும் வலி கொடுக்கும் வீடாக மாறிப் போனது....அப்பாவை விழுங்கிய வீடு....அந்த வீடு மாறும் போது மறுபடி ஒருமுறை அப்பாவை இழந்தது போல ஒரு உணர்வு.அப்பா வழக்கம் போல ஈஸி சேரில் சாய்ந்து படுக்குமிடத்தில் தலைமுடியின் எண்ணை பட்டுப் பட்டு உண்டான எண்ணைக் கறையை அம்மா தடவிக் கொண்டு அங்கேயே நிற்கும் போது..
"அம்மா கவலைப் படாதேம்மா ...இதே வீட்டை நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்" என்று பெரிய மனுஷியாட்டம் சொல்லி விட்டேன்....

பின்பொருமுறை கலாம்மாவைப் பார்க்கப் போகும் சாக்கில் அப்பாவின் எண்ணைக்கறையைப் பார்க்க நினைத்துப் போனேன்...சுவரெல்லாம் நீலக் கலர் டிஸ்டம்பரில் பள பளத்தது...நானும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்க்க நினைத்தும் முடியாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டே கண்ணீரை உள்வாங்கினோம்.....மீண்டும் ஒரு முறை அப்பாவை இழந்தோம்.....

Wednesday, January 23, 2008

மழையுடன் ஒரு ஊடல்........

மழையுடன் ஒரு ஊடல்........
அன்று நான்
மழையுடன் பேசவில்லை
மழைக்குத் தெரியும்
ஏன் என்று?
மழைக்கு இதுவும் தெரியும்
நஷ்டம் எனக்குத்தான் என்று!
தான் வருவதைத்தான் என்னிடம் சொல்லவில்லை...
அவள் வருவதையும் கூடவா என்னிடம் சொல்லக் கூடாது?
மழையும் நானும் செல்லமாகச் சண்டை போட்டுக்
கொண்டிருக்கும் போதே........
அவள் புன்சிரிப்புடன் கடந்து விட்டாள்!!!
மீண்டும் மழையுடன் ஒரு சண்டைக்குத் தயாராகினேன் நான்!!!!

Saturday, January 19, 2008

மூடிய புத்தக மயிலிறகாய்.......அருணா

மூடிய புத்தக மயிலிறகாய்.......
புதுப் புத்தக வாசனை...அந்தப் புத்தகத்தை திறந்து மூடினேன்..முகத்தோடு வைத்துத் தேய்த்தேன்....அந்தப் பள பள அட்டை என் வேர்வைத் துளிகளில் ஒட்டிக் கொண்டுவிடமாட்டேன் என்றது...எனக்கு புத்தகம் படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை.... எல்லாம் இப்போ......புதுசாய் ஆரம்பித்ததுதான்......அது அவள் எனக்கே எனக்காய் கொடுத்த புத்தகம்.

ஒரு துளி மழைத் துளி என் கன்னத்தில் பட்டுத் தெறித்தது.... மழையின் முதல் துளி ...அப்படியே பதறிப் போய் புத்தகத்தை சட்டைக்குள் நுழைத்து பத்திரப் படுத்தினேன்....சட சடவென்று மழைத் துளி என் சட்டையையும் கூட நனைத்தது....எப்போதும் மழைத் துளியில் மகிழ்ந்து நனையும் நான்...புத்தகத்தைப் பாதுகாப்பதற்காக ஓடிப் போய் அந்தக் கடைக்குள் நின்றேன்..கும்மென்று மண் வாசனை ஆளை அசரடித்தது..

இந்தப் புத்தக வாசனை, மழையின் மண்வாசனை இவையெல்லாம் மனதின் சந்தோஷச் சாரல்களையெல்லாம்எப்படித்தான் நினைவுபடுத்துகிறதோஎனக்கு....ஓடிப் போய் மழைத் தூறலின் சாலையின் நடுவே போய் நின்று சினிமாக் கதாநாயகன் போலக் கை விரித்து நின்று சத்தமாகப் பாட வேண்டும் போலத் தோன்றியது ......

"என்னடா கார்த்திக் இங்க நிற்கிறே?" என்றபடி வந்தான் ரவி.அவ்வளவுதான் இந்தத் தனிமை, இனிமை எல்லாவற்றையும் ஒரெயடியாக அடித்துக் கொண்டு போகும் சுனாமி.....பேய் மழை பெய்தால் கூட அவன் அரட்டையில் அடங்கி விடும்..."சும்மாதான்" என்று சிரித்து வைத்தேன்...என் சட்டையை உற்று உற்றுப் பார்த்தான்.. .என் கை என்ன என்னையறியாமல் புத்தகத்தின் மேல் சென்றது...

"என்னடா கார்த்திக் அதுக்குள்ளே தொப்பையா ?இன்னும் கல்யாணம் கூட ஆகலை? என்றவாறு வயிற்றில் ஓங்கிக்குத்தினான்...."
என்னமோஇருக்கு"என்றான்."ஒண்ணுமில்லைடா புத்தகம்" என்றவாறு சட்டயினுள் கையை விட்டு எடுத்தேன்....இழுத்துப்பறித்தான்...உள்ளே திறந்து பார்த்தான்....
"கிருத்திகா கொடுத்தாளா?"என்றான். ஐயையோ....இவனுக்கு எப்படித் தெரியும்?...என்று நினைக்கும் போதே சொன்னான்...

"அவங்க அப்பா அப்பா ஒரு காலத்தில் நிறைய எழுதுவார்..அவரே புத்தகம் வெளியிட்டார்...ஒன்றும் சரியாப் போகலைடா..இந்தக் கிருத்திகாப் பொண்ணு பார்க்கிறவங்க பழகினவங்க எல்லோருக்கும் அன்புடன் கிருத்திகா என்று எழுதிக் கொடுத்துட்டு இருக்கா....நான் மெல்லத் திறந்து பார்த்தேன்

"அன்புடன் கிருத்திகா" என்று இருந்தது."எனக்குக் கூட ரெண்டு கொடுத்திருக்காடா "என்றான்.நான் உணர்ச்சிகளை எதுவும் வெளிக் காட்டாமல் வானம் வெறித்து விட்டதா என்பத் போல மேலே வானத்தைப்
பார்த்தேன்..மழைதான் எவ்வளவு ஆறுதல்..அதுவும் என்னுடன் சேர்ந்து அழுவது
போல் இருந்தது.....
"நான் கிளம்புறேன்டா"...என்று வந்த வேலை முடிந்தது போல ரவி கிளம்பி
விட்டான் என் மனதில் ஒரு சுனாமியை உருவாக்கி விட்டு...... அந்தப் புத்தகம் இப்போ சுமக்கவே முடியாத பாரமாகிப் போனது.அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது "சே சே...இந்த ஆம்பிள்ளைங்களே ரொம்ப மோசம்" என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் ரகசியம் போல உலகத்துகே கேட்கும் படி சொல்லிக் கொண்டு போனாள்.."நாங்களாடி மோசம்" என்று மனதிற்குள் கறுவினேன்.....

கொஞ்ச தூரத்தில் ரவி ஒரு கனவைக் கலைத்ததற்காகவோ அல்லது ஒரு உண்மையை நண்பனுக்கு சொல்லிவிட்டதற்காகவோ விசிலடித்துக் கொண்டே ரொம்ப சந்தோஷமாக மழையில் நனைந்தான்........

Monday, January 14, 2008

பாவம்.... அந்தப் பறவைகளுக்கொரு மின்னஞ்சல்......

பாவம்.... அந்தப் பறவைகளுக்கொரு மின்னஞ்சல்

பட்டத் திருவிழா....
மாஞ்சா நூலின் நுனியில் கட்டிப் பறக்கும் பட்டம்....
என் கையின் இழுப்பில் மேலும்,கீழும் அங்கும் ,இங்கும்
முடிவே இல்லாத தேடலில் .....
வான் வெளியின் எந்த காற்றைத் தேடி
இந்தப் பயணம்?

உனக்கெங்கே தெரிய போகிறது?
உன் பயணத்தின் பாதையில்
பாவம் அந்தப் பறவைகளின்
இறகுகளிலோ,சிறகுகளிலோ,
கால்களிலோ,கழுத்தினிலோ
சிக்கி சின்னா பின்னமாகப்போகிறதென்று?

நிலத்தையும்,நீரையும்
சூறையாடிய மனிதர்களுக்கு
வானமென்ன பெரிய விஷயமா?
குட்டிப் பறவையே.....
"இன்று மட்டும் வெளியே வராதே....
நாளையிலிருந்து நீ உன்
செல்லச் சிறகுகளை விரித்துப் பறக்கலாம்"
என்று உனக்கொரு மின்னஞ்சல்.....
அனுப்பிப் பின் தூங்கினேன்

Sunday, January 13, 2008

பட்டத் திருவிழா

பட்டத் திருவிழா
தமிழ் நாட்டில் பொங்கல் திருவிழா வட நாட்டில் சங்க்ராந்தி பட்டத் திருவிழா.பட்டம் நிறைந்த வானத்தை பார்க்கும் போது தொன்றியதை பதிவாக்கி விட்டேன்
அளக்க முடியாத வானத்தை என் ஒற்றைப் பட்டத்தால் அடைத்து விட முடியாது தான்...இருந்தாலும் அந்த ஆசையால் ஒரு பட்டத்தைப் பறக்க விட்டேன்.ஆயிரக் கணக்கான பட்டங்களின் நடுவே என் பட்டமும் ஒரு புள்ளியாய்.....அப்பாடி எத்தனை வகை,நிறம்.வானம் பட்டப் பட்டாடை உடுத்தியது.திடும்மென்று காற்று என் பட்டத்தை கீழ் நோக்கி இழுத்தது......அதே காற்று திடீரென்று மேலே ஏற வைத்தது. இந்தப் பட்டங்கள் போல்தான் என் வாழ்விலும்தான் எத்தனை நிற வகை மனிதர்கள் என் நட்பில்...நான் நூல் ,நீ பட்டம் என்று மகிழும் ஒரு நட்பு....இன்றோ நாளையோ உன்னை விட்டுப் போய் விடுவேன் என்று அறுந்து போகத் துடிக்கும் பட்டம் போல பயமுறுத்தும் ஒரு நட்பு....உன்னை விட நான் சிறப்பு என்று ஒய்யாரம் காட்டும் பட்டம் போல ஒரு பளப் பள நட்பு.பட படவென்று சிறகடிக்கும் பட்டம் போலப் பொறிந்து கொட்டும் ஒரு நட்பு.பறக்கும் பல நிறப் பட்டங்கள் போல நட்புக்குத்தான் எத்தனை நிறங்கள்
நிமிர்ந்து பார்த்தால் அத்தனை பட்டமும் என்னைப் பார்த்துக் கொண்டு...அத்தனை பட்டங்களின் நூல் மட்டும் என் கையில்.....என் அன்பெனும் நூலில் பறக்கும் அவை அறுந்து விடக் கூடாதென்று அத்தனை அக்கறையையும் காட்டிக் கையால் இழுத்துப் பிடித்து கொஞ்சம் விட்டு ,கொஞ்சம் டீல் விட்டு,கொஞ்சம் சுண்டி அத்தனை சாகசமும் செய்தும் சில மட்டும் எப்போதும் அறுந்து விடும் துடிப்புடன் பட பட பட படவென............இப்போது அறுந்து விடப் போகிறேன் எனப் பயம் காட்டிக் கொண்டே........ம்ம்ம்ம்ம்ம்ம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை.....

Thursday, January 10, 2008

தொலைத்ததும் நானே!!!!!தொலைந்ததும் நானே..!!!..

நீ பார்க்கும்போது
நீ சிரிக்கும்போது
நீ கோபிக்கும்போது
என்று தினம் ஒன்றாகச் சேகரித்த இறகுகள்
படக்கென்று விரிந்து காதல் சிறகாயிற்று...
பறப்பது இவ்வளவு இன்பமா?
மேலும்,மேலும் உயர உயரப் பறந்தேன்..
மேகம் தொடும் தாகத்துடன் பறந்தேன்..
நீயே எறிந்த கற்களினால்
என் சிறகின் இறகுகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தன..
இறகுகளின் உதிர்தலால் உன்னைத் தொலைத்தேன்...
உன்னைத் தொலைத்ததனால் நானும் தொலைந்தேன்..
என்ன செய்வதடி?இங்கே
தொலைத்ததும் நானே.!!!...
தொலைந்ததும் நானே..!!!..

Tuesday, January 8, 2008

மற்றுமொரு 5 நிமிடக் காதல்

மற்றுமொரு 5 நிமிடக் காதல்

முதல் நிமிடம்
ஊர்,வயது, ஆணா பெண்ணா?
இரண்டாவது நிமிடம்
நீ என் சினேகிதியாகிறயா?
மூன்றாவது நிமிடம்
புகைப்படம் அனுப்பேன்???
நான்காவது நிமிடம்.....
நான் உன்னைக் காதலிக்கிறேன்...
ஐந்தாவது நிமிடம்
உன் மொபைல் நம்பர் கொடேன்???
ஆறாவது நிமிடத்திலிருந்து
பாவம் அந்த மொபைல்
தடங்கலில்லாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது....
ஆறாவது நாளில்
"என்னப்பா போன் பண்ணவேயில்லை"....
"என்னன்னே தெரியலை நெட் வொர்க் பிரச்சினை"
மின்னஞ்சல் கூட இல்லை...
"என்னன்னே தெரியலை நெட்
கனெக்ட் ஆக மாட்டேங்குது"
அவளுக்கெப்படித் தெரியும்?
மற்றுமொரு முதல் நிமிடத்தில்....
ஊர்,வயது, ஆணா பெண்ணா? என்று
மற்றுமொரு 5 நிமிடக் காதல் உருவாகி விட்டதென்று....

Saturday, January 5, 2008

நீயும்,நானும் தான் பூவை வேறு வேறாய்ப் பார்த்தோம்...

பூக்கள் மலர்ந்தன.....
இதழ்களில் பனித்துளி......
சிரித்துக் கொண்டே அழ பூவால் மட்டுமே முடியும் என்றாள் அவள்..
கண்ணில் நீர் வரச் சிரிக்க பூவால் மட்டுமே முடியும் என்றேன் நான்...
பூவும்,இதழும்,பனியும் ஒன்றுதான்
நீயும்,நானும் தான் பூவை வேறு வேறாய்ப் பார்த்தோம்...
பூ மரிக்கவுமில்லை....
பூ சிரிக்கவுமில்லை...
பூ வாழத் துடிக்கிறது...
இன்னும் ஒரு நாள் நான் செடியிலிருப்பேன் என்றால்?
ஒட்ட வைத்துக் கொள்ளுமா செடி?
நாம் தான் விட்டு வைத்து விடுவோமா?