நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, May 28, 2009

ரயில் பயணங்களில்.............1


இந்தக் கதை யூத்ஃபுல் விகடனில்.....
ம்ம்ம்...டாக்ஸி வந்தாச்சு...நகரு..நான் கொண்டு போறேன்.
பெரிய பெட்டியை இப்படி வை...தண்ணி கேம்பர் எங்கே?
பூட்டை எங்கே??.....சாவி எங்க????.....ஏறுங்க.....கதவை அடித்து மூடுங்க..
கேள்விகளும் ...அறிவுரைகளுமாய் ஒருவழியாய் ஏறியாயிற்று...

"என்னங்க? பூட்டை வெளிலே போட்டீங்களா? உள்ளேயுள்ள கொக்கியில் போட்டீங்களா?"
"ஆரம்பிச்சிட்டியா?"
சரி விடுங்க!"

இரண்டு தெரு தாண்டியதும் "ஏங்க "வெளி லைட் போட்டீங்களா??"
இப்போ போட்டேன்னு சொல்லவா??..போடலைன்னு சொல்லவான்னு குழம்பியதிலே போட்டேனா போடலையான்னே குழப்பம்....


அடுத்த 10 நிமிடம் சுமுகமாக.நகர்ந்தது...
"என்னங்க கேஸ் கீழே உள்ள ஸ்விட்சை மூடினீங்களா?"
ஆமாம்மா...

அடுத்த ஐந்தாவது நிமிடம்
"ஏங்க.."
"என்னம்மா?"
"கிச்சன்லே குழாயை மூடினீங்களா??"
இப்படிக் கேல்வி மேல கேள்வி கேட்டாலே பதிலைப் பற்றிய குழப்பமும் கை நடுக்கமும் ஆரம்பிச்சுடுதே எனக்கு....


இல்லைங்க.....பாத்ரூம்லே யார் கடைசியா போனது?

குழாயை மூடினீங்களா?
லைட் ஆஃப் செய்தீங்களா?
ஹாலில் ஃபேன் ஆஃப் செய்தீங்களா?


இந்தக் கேள்விக் கொண்டாட்டத்தையெல்லாம் வீட்டிலேயே கேட்டுக் கொண்டாடியிருக்கக் கூடாதா???

கொலை வெறியுடன் ஆனால் பரிதாபமாகப் பார்த்தேன்...


நிறைய தடவை என்னுடைய குழப்பமான பதில்களால் வீட்டுக்குத் திரும்பிப் போய்ச் சரிபார்த்த அனுபவம் கூட உண்டு எனக்கு...


அப்பாடா!! ஸ்டேஷன் வந்தாச்சு...இனிமேல் வீட்டுக்கு அனுப்ப மாட்டாள்...

ரொம்ப நம்பிக்கையுடன் ட்ரெயினிலும் ஏறியாச்சு.


"சாவியைக் கொண்டா.....பெட்டிக்கெல்லாம் சங்கிலி போட்டுரலாம்...."

"அச்சோஓஓஓஓஓஓ"

"என்னம்மா...சாவி கொண்டு வரலியா???

ஒண்ணும் பிரச்னையில்லை...பூட்டு சாவி ரிப்பேர் பண்றவன் வருவான் திறந்திடலாம்..."

நான் வீட்டுக்குப் போவதைத் தடுப்பதிலேயே குறியாயிருந்தேன்...


"இல்லைங்க டிக்கெட்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன்....

சரி சரி இறங்குங்க....ஒரு நடை போய் டிக்கெட்டை எடுத்திட்டு அப்பிடியே கேஸ் திறந்திருக்கான்னு செக் பண்ணிட்டு, பாத்ரூம்,கிச்சன் குழாயைத் திறந்திருக்கான்னு பார்த்துட்டு, ஃபேனை அணைத்து விட்டு,வெளி லைட்டைப் போட்டுட்டு....வீட்டை உள்ளேயுள்ள கொக்கியில் பூட்டைப் போட்டுப் பூட்டிட்டு வாங்க...

பதறாதீங்க...இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு.."


"கிராதகி...இப்படி எல்லாத்தையும் செக் பண்ணுவதற்கே டிக்கெட்டை வீட்டில் விட்டு வந்தாளோ????" மூஞ்சைத் தொங்கப் போட்டுக் கொண்டே இரண்டடி வைத்திருப்பேன்.

"என்னாங்க???? வீட்டுச் சாவி எடுத்துக்கிட்டீங்களாஆஆஆஆஆஆ??????"

நான்......ஙே!!!!!!!!

Wednesday, May 27, 2009

மழைக்கு என்னைப் பிடிக்கும்.......

இந்தக் கவிதை YOUTHFUL VIKADANIL.....!!!!!
ரயில் பயணங்களில்....

ஜன்னலில் கூடவே
ஓடி வரும்
நிலவு

கூந்தல் கலைத்து
வருடி வரும்
காற்று

கன்னம் சிலிர்க்க
சிரித்துத் தெளிக்கும்
சாரல் மழை

கையசைத்து விடை கொடுத்து
வழியனுப்பாமல் கூடவே
வந்ததால்

எனக்குப் புரிந்தது
நிலவுக்கு
காற்றுக்கு
மழைக்கும்
என்னைப் பிடிக்கும் என்று!!!!

Tuesday, May 19, 2009

இன்று முதல் பல்புக்கு விடுமுறை......!!!!

இன்னும் ஒரு வாரத்துக்கு பல்பை ஆஃப் செய்து வைத்துவிட்டு நல்லா ஊர் சுற்றப் போறேன்.....


ஒரு வாரம் எங்கிடேயிருந்து உங்க எல்லோருக்கும்
விடுதலை!! விடுதலை!!! விடுதலை!!!


ஒரு வாரம் எங்கிட்டேயிருந்து பல்புக்கு
விடுமுறை!! விடுமுறை!! விடுமுறை!!!


அதுக்குள்ளே என்னை மறந்துர மாட்டீங்களே?????
வர்ட்டா!!!!


Saturday, May 16, 2009

ஆயிரம் பல்ப் வாங்கிய அபூர்வ சிந்தாமணி!!!


இப்போ கொஞ்ச நாளாவே இப்படித்தான் மண்டைக்குள் அடிக்கடி பல்ப் எரிகிறது....அன்னிக்கு இப்படித்தான் பைக்கில் போயிட்டிருக்கும் போது திடீர்னு மண்டைக்குள் பல்ப்......அவசர அவசரமாய் ஓரங்கட்டி பேப்பர் பேனா எடுத்து குறிச்சுக்கிட்டேன்........

அப்புறம் எங்க டேமேஜர் கிட்டே பேசிக்கிடிருக்கும் போது இப்படித்தான் பளிச்ச்னு பல்ப்....நான் பதறிப்போய் உடனே குறிச்சுக்கிட்டேன்........டேமேஜர் பதறிப் போய் ஆம்புலன்ஸ் கூப்பிட்டது தனிக் கதை!!!!

இன்னொரு நாள் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பளீர்னு பல்ப்.....வாயில் வைத்ததை முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஓடிப் போய்க் குறிச்சுக்கிட்டேன்........தங்கமணி தூக்கமுடியாத உடம்பைத் தூக்கிட்டு ஓடிப்போய் டாக்டரக் கூட்டிட்டு வந்துட்டாங்க!!!

நேற்று டி.வி பார்த்துக்கிட்டிருக்கும்போது எரிஞ்ச பல்புக்கு நான் துள்ளிக் குதித்து எழுந்துவிட்டேன்...பக்கத்திலிருந்த பசங்க ஒரு தினுசாப் பார்த்துக்கிட்டு ஒதுங்கிப் போயிட்டாங்க........

சரின்னு வெறுத்துப் போய் தூங்கப் போனால் ஒரு பின்னிரவின் முன்னிரவில் மீண்டும் இந்தப் பல்ப் பளீர்னு எரிந்து ......நான் படுக்கையில் இருந்து துள்ளிக் கீழே விழுந்து மண்டை உடைஞ்சதுதான் மிச்சம்..........

இது என்ன வியாதின்னு தெரிலியே??? உட்கார்ந்தால் பல்ப்...நின்னா பல்ப்...நடந்தா பல்ப்னு.....பல்ப் எரிஞ்சு எரிஞ்சு மண்டையில் வலது பக்க மூலை எரிந்தே போச்சுங்க.........

ம்ம்ம்ம்...எப்போருந்து இப்படீன்னு யோசிச்சதிலே ஒரு விபரம் புரிஞ்சுதுங்கோ.....வலைப்பூ ஆரம்பிச்சதிலிருந்துதாங்க இப்படி!!!! வலைப்பூவுக்கு மேட்டர் தேடித் தேடிக் கிடைச்சவுடன் பல்ப் எரிய ஆரம்பிச்சு இப்போ இப்படி ஆயிரம் பல்ப் வாங்கிய அபூர்வ சிந்தாமணியாகிட்டேனே!!!!

Thursday, May 14, 2009

இரவல் உறவுகள்......

வீடு அமைதியாய் இருந்தது....ராம் லேப்டாப்பில் முகம் நுழைந்திருந்தான்...ராஷி டி.வியில் மூழ்கி அழுது கொண்டிருந்தாள்....சின்னு வீடியோ கேமில் எதிரியைக் கொலைவெறியோடு துரத்திக் கொண்டிருந்தான்........
முகம் கழுவி வந்தமர்ந்த போதும் யாரும் கவனிப்பதாயில்லை....இந்த இரவல் உறவுகளாலும் உணர்வுகளாலும் நிஜ உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் அர்த்தம் இல்லாமல் போய் விட்டதாக நினைத்தேன்...

ராமின் முகமறியா நட்புடனான சத்தமான சிரிப்பு....
ராஷியின் உண்மையில்லாத உறவுகளுக்கான அழுகை....
சின்னுவின் எதிரியைத் துரத்தித் துரத்திக் கொல்லும் ஆவேசம்......

இந்த இரவல் உறவுகள் நிஜ அப்பாவை மறக்கச் செய்து விட்டதுதானே???

கண்ணாடி தம்ளரைக் கோபத்துடன் கீழே போட்டு உடைத்தேன்....ஒரு கண்ணாடிச் சில்லு காலின் பெருவிரலைப் பதம் பார்த்தது......ரத்தம் கொட்டியது...

அய்யோஓஓஓஓஓஓ........என்றலறினான் ராம்
அச்சச்சோ .................என்றலறினாள் ராஷி
அடச்சே! ..........என்றலறினான் சின்னு
சந்தோஷமாக இவர்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்ட வெற்றியுடன் திரும்பிப் பார்த்தேன்........
ம்ம்ம்ம்
முகமறியா நட்பின் கடி ஜோக்குக்காக ராமும்,


டி.வியின் உண்மையில்லாத உறவின் இறப்புக்காக ராஷியும்...


தப்பித்து விட்ட வீடியோ கேம் எதிரிக்காக சின்னுவும்


அலறி விட்டு அவரவர் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.......

நான் கோபம்,வருத்தம்,அழுகை,இயலாமை கலந்த ஒரு விசித்திர உணர்வுக் கலவையுடன் யாருமற்ற அனாதை போல கொட்டும் ரத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்....

Saturday, May 9, 2009

இது அம்மாவுக்கு.......


வருடம் ஒருமுறை
பூக்கும் விடுமுறைப் பூக்கள்........
செடியைச் சேரும் இந்தப் பூ.......
நீண்ட ரயில் பயணம்..........
ஜன்னலில் ஓடி மறையும்
காட்சி போல ஓடி வரும்
அம்மா வீட்டு நினைவலைகள்....

அம்மா செய்யும் ஆப்பம்
அம்மா செய்யும் அவியல்
அம்மா செய்யும் கேப்பஞ்சோறு
அம்மா செய்யும் மீன் குழம்பு...

அம்மா தலை முடிக்கு
செய்யும் சேவகம்
அம்மா மடியில் தலை
சாயும் அந்த நேரம்.....

தேக்கி வைத்திருக்கும்
வருடக் கதைகளின்
நேரம் தெரியாமல் பேசும்
அந்தக் கணக்கு வழக்குகள்.......

ஒரு வருடம் சேமித்து வைத்த
சண்டைகளைப் பத்து நாட்களில்
தீர்த்துக் கொள்ளும் வேகம்.....

இந்த வருடமும் பூக்கும்
விடுமுறைப் பூக்கள்....
செடியைத்தான் சேராது இந்தப் பூ!
இந்த வருடம்.....

ம்ம்ம்ம் .......
அம்மா கத்தாரில்.......
நான் இந்தியாவில்!!!

Wednesday, May 6, 2009

मुझे हिन्दी मालुम हैं!!!सब्को प्यार और नमस्कार .....
कुछ दिनो से लिखने को कुच सूज नही रहा था...
सोचा आज कुछ लेती हूँ...... क्या लिखूँ??? चलो आज मैने अलगी में हिन्दी लिखना सीखा है....उस्के बारि मैं लिखने वाली हूँ......अलगि इस्तेमाल कर के तमिल लिख सकते हैं न वैसे ही हिन्दि भी लिख सकते हैं.....सम्झे? इस सेवा के लिये धन्यवाद विशि!!! ...अलगि इस्तमाल कर के और भी भार्तिय भाशाए में आप लिख सकते हैं....
பேசமட்டுமே தெரிந்த ஒரு மொழியை இவ்வ்ளோ அழகா எழுதவும் முடியுதே??? இனி ஹிந்தி நாடகம், சொற்பொழிவுகளுக்கு உதவியாளர்கள் இல்லாமல் நானே எழுதிக் கொள்வேன்!!!
அப்பாடா இது ஒரு வரம் எனக்கு!!!!
இந்த வரத்தை எனக்களித்த அழகிக்கு நன்றிகள் பல!!!! அது மட்டுமில்லீங்க....தமிழ்,ஹிந்தி, மட்டுமில்லாமல் சமஸ்கிருதம்,தெலுங்கு,கன்னடம், மலையாளம்,மராத்தி,
கொங்குணி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒரியா, நேப்பாளி ஆகிய
மொழிகளிலும் எழுதிக் குவிக்கலாம்.........

चलो.....शुरु करें???? सब तैयार हैं क्या????