நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, January 14, 2012

இன்று பறவைக்குப் பின்னால் போனது மனம்.....

அங்கே பொங்கல்...இங்கே சங்க்ராந்தி!
ம்ம்...பட்டம் வங்கியாச்சு...மாஞ்சாவும் ரெடி.விடிந்தவுடன் அலறும் ஸ்டீரியோ தட்டு தட்டாய்த் தின்பன்டங்கள் ஒருவீடு இல்லாமல் அத்தனை பேரும் மொட்டை மாடியில் ஒரு நாள் முழுவதும் பட்டம்....விடுவதும்...அறுபடுவதுமாய்....அறுபட்டவுடன் "ஓ காட்டியோ" என்ற அலறலும்.....சில வீடுகளில் மைக்கில் "நீலப் பட்டம் வெள்ளைப் பட்டத்தை அறுக்கப் போகிறது....இதோ நீலப் பட்டம் சிக்கலுக்குள்ளாகிறது...இதோ...ஆஹா...அறுந்தேவிட்டது நீலப் பட்டம்.."என்று ரன்னிங்க் கமென்ட்ரி கூட உண்டு.இது ஒரு புது வகையான பொங்கல்தான்.
              
                வீட்டினுள் பொங்கல் வைத்துப் பூஜை செய்தும் பொங்கல் கொண்டாடிவிட்டு மொட்டை மாடியில் பட்டம் விட்டுச் சங்க்ராந்தி கொண்டாடுவதாகவுமே பொங்கல் பல வருடங்களாக மாறிவிட்டிருக்கிறது..
          
                  முற்றம் நிறைக்க கோலம் போட்டு,வெளியில் பனியில் வெண்பொங்கலும்,சர்க்கரைப் பொங்கலுமாகப் பொங்க வைத்து குலவையென்ற பேரில் கூப்பாடு போட்டு,கரும்பு கடித்துத் துப்பி,பனங்கிழங்கு உடைத்து ம்ம்ம் எவ்வ்ளோ நாளாச்சு இப்படிப் பொங்கல் கொண்டாடி....
              
                நீர் நிலம் எல்லாம் எனக்கேயென எடுத்துக் கொண்டாலும் இன்னும் திருப்தியில்லாமல் இன்று வான்வெளி முழுவதையும் எனக்கே என எடுத்துக் கொண்டு பறவைகளைப் பயப்படுத்துகிறான் மனிதன்.இந்த வாரத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான அடிபட்ட பறவைகளையும் இறந்து போன பறவைகளையும் கணக்குக் காட்டுகிறது செய்தித் தாள்.பள்ளிகளில் பிரார்த்தனையின் போது காலை 9 மணிக்கு மேலும் சாயங்காலம் 4 மணிக்குள்ளும்தான் பட்டம் விடவேண்டும் என்றும் அறிவுரை சொல்லப்படுகிறது ஆனாலும் விடியும் முன்னே பட்டம் என்னவோ பறக்க ஆரம்பித்து விடுகிறது.
                 
                வீட்டுக் கூண்டுக் கிளிகளின் மேலும் நாய்க்குட்டிகளின் மீதும் வைக்கும் பாசம் பொதுவாக பறவைகளின் மீது இல்லாமல்தான் போய்விடுகிறது.இங்கே ஜெய்ப்பூரில் அடிபட்டு விழும் பறவைகளை உடன் எடுத்து சிகிச்சை அளிக்க என்றே ஒரு இளைஞர் குழு ஊர் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதல்.
               
                      ஊரில் ஏதாவது கலவரம் என்றாலோ,சூரிய கிரஹணம் என்றாலோ பிள்ளைகளிடம் இன்று வெளியே போகவேண்டாம் என்று சொல்வதைப் போலப் பறவைகளும் தன் குஞ்சுகளுக்கும் சொல்லிப் பத்திரப்படுத்துமா?கொஞ்சம் பறவைகளுக்காய் இன்று மனம் பதறுகிறது.கூட்டை விட்டு வெளியில் வராமலிருந்தால் தப்பித்து விடும்..அப்புறம் அதுகளுக்கு இன்றைக்குச் சாப்பாடு.???
                         
                     கம்பு கம்பாய் இணைக்கிற கயறுகள் குருவிகள் ஊஞ்சலாடாமல் தனியே ஆடிக் கொண்டிருந்தது.வீட்டு ஜன்னல்களின் ஓரம் வைக்கப் பட்ட தண்ணீர் குடிக்காமல் தளும்பியிருந்தது.தூவப்பட்ட அரிசி கேட்பாரற்றுக் கிடந்தன்...மொட்டை மாடி நிறைக்க மனிதர்கள்...மனிதர்கள்...வீடு நிறைய வருவோரும்..போவோரும்...
                  
                       மனது மட்டும் தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் முங்க முடியாமல் கிடக்கும் ப்ளாஸ்டிக் மக் போல பறவைக்குப் பின்னால்.......விரித்து வைத்த செய்தித்தாளின் மேல்  சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று விழுந்து கிடந்தது......ம்ம்ம்....காயம் பட்டு வீழ்ந்த பறவையோடதா??????....உயிர் பிரிந்து வீழ்ந்த பறவையோடதா????கவலையாயிருந்தது.

Wednesday, December 14, 2011

சிக்கிக் கொண்டிருந்தாள் அம்மா ...

ரபுன்செல்லின் சிடுக்கில்லாத கூந்தலின்
இடுக்குகளிலும்

சின்ட்ரெல்லாவின் உடுப்புகளின்
மடிப்புகளிலும்

ஆலிஸ் இன் வொண்டர்லேண்டின்
குட்டி உலகத்தின்
குட்டிச் செப்புச் சாமான்களுக்குள்ளும்

குட்டித் தேவதை தம்போலினாவின்
இறகுகளுக்குள்ளும்

ஏழு குள்ளர்களின் சூப்
கிண்ணங்களுக்குள்ளுமாய்த்

தொலைந்து கொண்டிருந்த குட்டிம்மா
திடீரென வீட்டுப் பாடக் கணக்குகளில் மூழ்கிய போது

செய்ய ஒன்றுமில்லாமல்
தேவதைக் கதைகளுள்
கொஞ்சம் கொஞ்சமாய்ச்
சிக்கிக் கொண்டிருந்தாள் அம்மா ......



Monday, November 21, 2011

பிட்ஸா ஹட்டில் ஒரு இரவு!

                 எதையும் ரசிப்பதற்கும் அதைப் பாராட்டுவதற்கும் ஒரு தனிப்பட்ட மனநிலை தேவையாக இருக்கிறது. அது இல்லாத பட்சத்தில் அதை எதிர் கொள்பவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு கண்டும் காணாமல் நகர முடிகிறது.
          
          இப்படித்தான் ஒரு முறை பிட்ஸா ஹட் போயிருந்த போது Hot 'n' Spicy Pepperoni, Fresh Tomato Margherita ,Tuscani Lasagne,Meatball Napolitana - என என்னென்னவொ வாயில் நுழையாத பெயரையெல்லாம் ஆர்டர் செய்து கொண்டிருந்தார்கள் பொண்ணுங்க.அவனும் விதவிதமான நிறங்களில் விதவிதமான குடுவைகளில் விதவிதமான வடிவங்களில் கொண்டு வந்து வைத்தான்.சிலவற்றை எப்படிச் சாப்பிடுவதென்றே தெரியவில்லை.சிலவற்றை தொட்டுச் சாப்பிடுவதா இல்லை குழைத்துச் சாப்பிடுவதா அல்லது ஸ்பூனால் அள்ளிச் சாப்பிடுவதா என்ற குழப்பம் கடைசி வரையில் இருந்தது.  எனக்கு இந்தக் குழப்பங்களெல்லாம் பிடிக்காததனால் எப்பவும் தோசை மாதிரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டு அமைதியாகி விடுவது வழக்கம்.

                  நாசுக்கான  ஆங்கிலத்துடன் நளினமான நடையுடன் பரிமாறுபவர்களாக இருந்தாலும் அழகாக மிடுக்கோடு நடந்தார்கள். எப்பவுமே அங்கே சாப்பிடப் போவதென்றால் 8 மணிக்குச் சாப்பாடு வேண்டுமென்றால் 6 மணிக்கெல்லாம் போய் உட்கார்ந்து விடவேண்டும்.ரெண்டு மணி நேரம் வாய் பார்த்துக் கொண்டிருந்தால் பசி போய் ஒரு விதமான யோகநிலைக்கு வந்திருப்போம் அப்போது பார்த்துச் சின்னச் சின்னக் கிண்ணியாகக் கொண்டு வந்து வைத்தால் அம்ருதம் போல் கொஞ்சமாகச் சாப்பிட்டு விட்டு (அவ்வளவுதான் இருக்கும்) வயிறு நிறைந்தது போல பாவ்லா செய்து கொண்டு கிளம்பி விடலாம். ஆனாலும் பில் என்னவோ ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வந்திருக்கும்.
               
              கொண்டு வைத்த White Sauce தீர்ந்து போனதால் இன்னும் கொஞ்சம் கேட்டால் "You have to order sir"அப்படீன்னான்.ம்ம்ம் இனி ஆர்டர் பண்ணி இன்னும் ரெண்டு மணிநேரம் காத்துக் கிடந்து....போதுண்டாப்பான்னு விட்டாச்சு.ம்ம் நம்மூரிலே சாம்பார் வாளியைப் பக்கத்திலேயே வச்சு தோசையை ஊறவச்ச காலம் நினைவுக்கு வந்துச்சு.! ரொம்ப சளிப் பிடிச்சு இருந்ததாலே கொஞ்சம் வெந்நீர் கொண்டு வாப்பான்னா "Yes Sir" அப்படீன்னு சொன்னவன் கிளம்பற வரைக்கும் கொண்டே வரல்லை. சரி இதுதான் போகட்டும்னு பார்த்தால் நாங்க சாப்பிடாத ஏதோ ஒரு "Deluxe Carbonara" அப்படீங்கற ஏதோ ஒரு ஜந்துவையும் நாங்க சாப்பிட்டதா பில்லிலே சேர்த்திருந்தான். இதை எப்படிப்பா கேக்குறதுன்னு முழி முழின்னு முழிச்சு "கம்"முனு இருந்தாச்சு.
             " Did you enjoy the food Mam?" எனக் கேட்டதற்கும் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு கண்டும் காணாமல் நகர முடிந்தது   

           சாப்பிட்டு முடிக்கிறவரைக்கும் கோவில் மணி போல ஒரு மணி அடிக்கிற சத்தம் கேட்டுட்டேயிருந்துச்சு. சாப்பிட்டு முடிச்சுட்டு போறவங்க சாப்பாடும் செர்வீஸும் நல்லாருந்தா அதை அங்கே வெலை செய்றவங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான் அந்த மணி தொங்க விட்டிருக்கும். பொண்ணுங்க ரெண்டும் நான் ரெண்டு தடவை, நான் மூணு த்டவை அடிக்கப் போறோம்னு கத்துச்சுங்க. வ்யித்துப் பசி அடங்காத கோபத்திலேயும் இவனுக பண்ணுன செர்வீஸுக்கு மணி அடிக்கிறதுதான் கொறைச்சல்னு இழுத்துக்கிட்டு வந்தேன்.
             
          வர்ற வழியெல்லாம் புலம்பிகிட்டே வந்தேன்.உருப்படியா நல்ல ரெஸ்டாரென்டுக்குப் போயிருக்கலாம்னு. வீட்டுக்கு வந்து சாவியை எடுக்க......."அய்ய்யய்யோ பர்ஸ் மொபைல் எல்லாத்தையும் "பிட்ஸா ஹட்லே" விட்டுட்டு வந்துட்டேனே" என்ன செய்றதுன்னு ஒரே பதட்டம். ஏற்கெனவே மணி பதினொண்ணு.அய்யோ பூட்டியிருப்பானோ. இப்போ என்ன பண்றதுன்னு எல்லார் மேலேயும் ஒரே கத்தல்.
      
     இவங்கதான் முதல்லே பொறுமையாயிருங்க...அப்படீன்னுட்டு என் நம்பருக்கு டையல் செய்தார்.வந்த பதில் .

 "No worries Sir , we are waiting for you ...your things are safe"அதே வெயிட்டர்
அடிச்சு பிடிச்சு ஓடிப் போனா அதே வெயிட்டர் புன்னகையுடன்

           "Here are the things Mam, please check"
ஓடிப் போய் யாருமேயில்லாத அந்த நேரத்தில் அந்தப் பாராட்டு மணியை மீண்டும் மீண்டும் சந்தோஷத்துடன் எல்லோருமாய் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டேயிருதோம்

Tuesday, November 8, 2011

உயிர் மீது வைக்கப்பட்ட "செக்"


உயிர் மீது வைக்கப்பட்ட
"செக்" போலச்
சிரித்துக் கொண்டு உடல்
நுழைந்தது நோய்......

எனககே தெரியாமல்
என் உயிரைப் பிடித்து
இழுத்துக் கொண்டு
யாருக்கும் தெரியாமல்

ஏழு கடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
ஏழு வானம் தாண்டி
ஏழு நிறம் கொண்ட

கண்ணாடிப் பேழையில்
வைத்துப் பூட்டிச் சாவியைத்
தொலைக்கும் கனவை
அடிக்கடிக் கண்டது மனம்......