நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, January 26, 2011

ஒரு கொடி தன் கதை சொல்கிறது....

கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஏற்றப்பட்ட முதல் இந்தியக் கொடி.
பின்னர், 1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்து அந்தக் கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும், அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர்.
1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3ம் முறையாக மாற்றப்பட்டது. இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், பாலகங்காதரதிலகரும் இந்தக் கொடியை வடிவமைத்தனர்.
1921ல் ஒரு ஆந்திர இளைஞர் வடிவமைத்த கொடியில் சில மாற்றங்கள் செய்து இந்தக் கொடியை ஏற்றினார்கள்.
1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தி இந்தக் கொடி ஏற்றப்பட்டது.

பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, இந்தக் கொடி ஏற்றப்பட்டது.
22 - 07 - 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து, அதன்பின், முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது இந்தக் கொடி.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
படங்களும் தகவலும்:
இணையத்திலிருந்து 
நன்றி....
http://india.gov.in/myindia/national_flag.php
பனித்துளி சங்கர்http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9002:2010-05-26-06-50-28&catid=26:india&Itemid=135
http://ariviyalselvam.blogspot.com/2010/12/blog-post_2378.html

Friday, January 14, 2011

இன்று பறவைக்குப் பின்னால்.......போகும் மனம்...

அங்கே பொங்கல்...இங்கே சங்க்ராந்தி!
ம்ம்...பட்டம் வங்கியாச்சு...மாஞ்சாவும் ரெடி.விடிந்தவுடன் அலறும் ஸ்டீரியோ தட்டு தட்டாய்த் தின்பன்டங்கள் ஒருவீடு இல்லாமல் அத்தனை பேரும் மொட்டை மாடியில் ஒரு நாள் முழுவதும் பட்டம்....விடுவதும்...அறுபடுவதுமாய்....அறுபட்டவுடன் "ஓ காட்டியோ" என்ற அலறலும்.....சில வீடுகளில் மைக்கில் "நீலப் பட்டம் வெள்ளைப் பட்டத்தை அறுக்கப் போகிறது....இதோ நீலப் பட்டம் சிக்கலுக்குள்ளாகிறது...இதோ...ஆஹா...அறுந்தேவிட்டது நீலப் பட்டம்.."என்று ரன்னிங்க் கமென்ட்ரி கூட உண்டு.இது ஒரு புது வகையான பொங்கல்தான்.
               வீட்டினுள் பொங்கல் வைத்துப் பூஜை செய்தும் பொங்கல் கொண்டாடிவிட்டு மொட்டை மாடியில் பட்டம் விட்டுச் சங்க்ராந்தி கொண்டாடுவதாகவுமே பொங்கல் பல வருடங்களாக மாறிவிட்டிருக்கிறது..
முற்றம் நிறைக்க கோலம் போட்டு,வெளியில் பனியில் வெண்பொங்கலும்,சர்க்கரைப் பொங்கலுமாகப் பொங்க வைத்து குலவையென்ற பேரில் கூப்பாடு போட்டு,கரும்பு கடித்துத் துப்பி,பனங்கிழங்கு உடைத்து ம்ம்ம் எவ்வ்ளோ நாளாச்சு இப்படிப் பொங்கல் கொண்டாடி....
               நீர் நிலம் எல்லாம் எனக்க்கேயென எடுத்துக் கொண்டாலும் இன்னும் திருப்தியில்லாமல் இன்று வான்வெளி முழுவதையும் எனக்கே என எடுத்துக் கொண்டு பறவைகளைப் பயப்படுத்துகிறான் மனிதன்.இந்த வாரத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான அடிபட்ட பறவைகளையும் இறந்து போன பறவைகளையும் கணக்குக் காட்டுகிறது செய்தித் தாள்.பள்ளிகளில் பிரார்த்தனையின் போது காலை 9 மணிக்கு மேலும் சாயங்காலம் 4 மணிக்குள்ளும்தான் பட்டம் விடவேண்டும் என்றும் அறிவுரை சொல்லப்படுகிறது ஆனாலும் விடியும் முன்னே பட்டம் என்னவோ பறக்க ஆரம்பித்து விடுகிறது.
                  வீட்டுக் கூண்டுக் கிளிகளின் மேலும் நாய்க்குட்டிகளின் மீதும் வைக்கும் பாசம் பொதுவாக பறவைகளின் மீது இல்லாமல்தான் போய்விடுகிறது.இங்கே ஜெய்ப்பூரில் அடிபட்டு விழும் பறவைகளை உடன் எடுத்து சிகிச்சை அளிக்க என்றே ஒரு இளைஞர் குழு ஊர் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதல்.
                ஊரில் ஏதாவது கலவரம் என்றாலோ,சூரிய கிரஹணம் என்றாலோ பிள்ளைகளிடம் இன்று வெளியே போகவேண்டாம் என்று சொல்வதைப் போலப் பறவைகளும் தன் குஞ்சுகளுக்கும் சொல்லிப் பத்திரப்படுத்துமா?கொஞ்சம் பறவைகளுக்காய் இன்று மனம் பதறுகிறது.கூட்டை விட்டு வெளியில் வராமலிருந்தால் தப்பித்து விடும்..அப்புறம் அதுகளுக்கு இன்றைக்குச் சாப்பாடு.???கம்பு கம்பாய் இணைக்கிற கயறுகள் குருவிகள் ஊஞ்சலாடாமல் தனியே ஆடிக் கொண்டிருந்தது.வீட்டு ஜன்னல்களின் ஓரம் வைக்கப் பட்ட தண்ணீர் குடிக்காமல் தளும்பியிருந்தது.தூவப்பட்ட அரிசி கேட்பாரற்றுக் கிடந்தன்...மொட்டை மாடி நிறைக்க மனிதர்கள்...மனிதர்கள்...வீடு நிறைய வருவோரும்..போவோரும்...மனது மட்டும் தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் முங்க முடியாமல் கிடக்கும் ப்ளாஸ்டிக் மக் போல பறவைக்குப் பின்னால்.......விரித்து வைத்த செய்தித்தாளின் மேல்  சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று விழுந்து கிடந்தது......ம்ம்ம்....காயம் பட்டு வீழ்ந்த பறவையோடதா??????....உயிர் பிரிந்து வீழ்ந்த பறவையோடதா????கவலையாயிருந்தது.

Wednesday, January 12, 2011

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-8

வீடு கட்டக் கடன்
கேள்விப்பட்டவுடன்
முதல் தடவையாய்
கனவுவீடு கனவில்
வரத் தைரியம் பெற்றது....

நிறையக் காகிதங்களும்
கொஞ்சம் மிஞ்சிய நகைகளும்
வங்கிக்கு இடம் பெயர்ந்தன
வீடு ஆசையில்......


வெறும் மணல் வீடாய் சில நாளும்
வெறும் செங்கல் வீடாய் சில நாளும்
கொஞ்சம் சிமென்டுப் பூச்சில் சில நாளும்
கதவில்லா நிலையும் ஜன்னலும்....
கொஞ்சம் கொஞ்சமாய் உருமாற.....


இது என் அறை
இங்கே படுக்கையறை
இது படிக்குமிடம்....
இது கூடிப் பேசுமிடம்

இங்கே சாப்பாட்டு மேஜை

இங்கே விளையாடுமிடம்
எனப் பாகம் குறிக்கையில்
மறக்காமல் இது ஒளிந்து
விளையாடுமிடமும்
இடம் பெற்றது......


முழுதாக முகம்
காட்டிய வீட்டில்
பாகம் குறித்த இடங்கள்
எல்லாம் ஒற்றை அறையாய்
சுருங்கிப் போனதில்
கலைந்தது கனவு வீடு.....

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!

Wednesday, January 5, 2011

வேறு வேறு!

                 வீடு மாற்ற வேண்டும் என்று சொன்னவுடன் மறுபடியும் மலைப்பாக இருந்தது.எதையெல்லாம் எப்படிப் பாதுகாத்துக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று மனக்கணக்கு ஆரம்பித்தது.சாமான்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு சேர்ப்பதா??ஒட்டு மொத்தமாக ஒரே நாளிலா?சின்ன  ட்ரக்கா???பெரிய லாரியா?ஒரு ட்ரிப்பா?ரெண்டா?மண்டை காய்ந்தது.
                                மனைவி அதைவிட மண்டையைக் குழப்பினாள்.கறுவேப்பிலைச் செடியை முதலில் காப்பாற்றவேண்டும் என்றாள்.ஸ்கூல் பக்கமா?ஆஃபீஸ் பக்கமா?பஸ் ரூட் எப்பிடி?காய்கறிக்கடை?பக்கத்துலே மளிகைக் கடை இருக்கா?இப்படி ஒவ்வொன்றுக்காக ஒருதடவையாகப் பத்து தடவை புது வீட்டைப் பார்த்து வந்தாள்.நாய்க்குட்டிக்கு  இடம் வசதிப் படுமா என்று ஒரு தடவை போய்ப் பார்த்து வந்தாள்.
சரி ஞாயிற்றுக் கிழமையன்னிக்கு மாறிடலாம்னு முடிவு செஞ்சாச்சு.
வீடு முழுக்க சாமான்கள் இறைந்து கிடந்தது.
"அய்யோ இதைக் கீழே போட்டுறாதீங்க...இது வேணும்"
"இது முதல்லெ நான் வாங்கின பூ ஜாடி..வேணும்"
அச்சோ இதை எப்பிடி மறந்தேன்?
"இந்த ரோஜாப்பூச் செடி மைசூர் போயிருக்கும் போது வாங்கியது...வேரோடு எடுத்து வைங்க"
"இந்தக் கடிகாரத்தைக் கீழே போடும்மா ஓடாது..."
"அய்யோ போட்டுடாதீங்க...அது என் சென்டிமென்ட் கடிகாரம்"
இப்பிடி ஓடி ஓடிச் சாமானைச் சேர்த்துக் கொண்டிருந்தாள் சாரதா.
குட்டிம்மா அவள் பங்குக்கு மயிலிறகு,செப்புச் சாமான்களையும், மிட்டாய் சுற்றிய சரிகைத் தாள்களையும்,பொம்மைகளையும் சேர்த்துக் கொண்டிருந்தாள்.
பழையவைகளை நினைவுக் கூட்டிலே சேர்த்து வைப்பதில் குழந்தைகள் பெரியவர்கள் என ஒன்றும் வித்தியாசம் இல்லை போல.எங்களுக்குப் போட்டியாய்ச்  சேகரித்துக் கொண்டிருந்தாள் குட்டிம்மா.என் சிறிய வயது சித்திரக் கலை நோட்டையும்,படக்கதை பைண்டிங்க் புத்தகங்களையும் கூட விட மனதில்லை.நான் அதை எடுத்து வைத்துக் கொண்டால் அவள் வீடு,சூரியன் படம் வரைந்த காகிதத்தை எடுத்து வைத்தாள்.

                        கலைந்து கிடக்கும் பொருட்களில் தேடித் தேடிச்  சேகரிக்க,பழைய நினைவுகளில் மூழ்க வீடு மாற்றும் போதுதான் தோதுப் படுகிறது.இதற்கென்று தனியாக நேரமெல்லாம் ஒதுக்க முடிவதில்லை.12-ம் வகுப்பு ஃபேர்வெல் போட்டோ ஒன்று அகப்பட்டது.அதில் என்னைப் பார்த்தவுடன் எனக்கே சிரிப்பாக வந்தது.எவ்வளவு அசடாக இருந்திருக்கிறோமென்று....அந்த முன்நெற்றியில் விழும் சுருள் முடிக்காக காலையில் இருந்து கஷ்டப்பட்டதெல்லாம் நினைவுக்கு வந்தது.கூடவே கொஞ்சம் அந்த நேரத்து உணர்வுகளும் வந்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

ஆச்சு...சாமான் எல்லாம் வண்டியில் ஏற்றியாச்சு.
என்னம்மா பக்கத்து வீட்டுலே,எதிர் வீட்டுலே எல்லாம்  சொல்லிட்டு வரலாமா? "
"ஒண்ணும் வேணாம்....ஏற்கெனவே கரிஞ்சுக்கிட்டு இருந்தா...இப்போ பெரிய வீட்டுக்குப் போறோம்னு சொன்னா இன்னும் கரிச்சுக் கொட்டுவா.....சத்தம் போடாமெக் கிளம்புங்க"
குட்டிம்மாவைக் காணோம்....
"எங்கேடி போனே?" அதட்டினாள் சாரதா.
"பாபுகிட்டே,ரகுகிட்டே,விஜிகிட்டே,ராணிகிட்டே அப்புறம் செல்வா ,புஜ்ஜிகிட்டே  சொல்லிட்டு வரப் போனேம்மா"என்றபடி குதித்து ஏறினாள் குட்டிம்மா!
பழையவைகளை நினைவுக் கூட்டிலே சேர்த்து வைப்பதில் குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றல்ல... வேறு வேறு!