நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, March 31, 2011

ராஜஸ்தான் திவஸ் கொண்டாட்டங்கள்!

                        மார்ச் 28 முதல் 30 வரை ராஜஸ்தான் திவஸ் இங்கே ராஜஸ்தான் முழுக்கக் கொண்டாடப்படுகிறது. 28ம் தேதி குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி ஃபில்ம் ஷோ, கொஞ்சம் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது.அதில் கலந்து கொள்ள என் பெண்ணையும் அழைத்துச் சென்றிருந்தேன்.ஏதோ நம்ம பங்களிப்பு கொண்டாட்டத்தில்!

ஏதோ முக்கியமான விபரம் எனத் தெரிகிறது.ஆனால் புரியவில்லை.அங்கிருப்பவர்களிடம் கேட்டும் சரியான விடை கிடைக்கவில்லை!

குழந்தைகளை மகிழ்விக்க மாறுவேடத்தில் கலைஞர்கள்!


 மொத்தத்தில் மற்றுமொரு குழந்தைகள் தினம்!

Tuesday, March 22, 2011

எவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம்?

முதல் நாள் அம்மா வலுக்கட்டாயமா அழ அழ என்னை விட்டுட்டுப் போன உடனே உங்க கையைத்தானே மேம் பிடிச்சுக்கிட்டேன். அதை எப்போதும் பிடிச்சுட்டேயிருக்கணும்னு ஆசையாதான் இருந்துச்சு. ஆனா நீங்க உடனே என் கையை விட்டுட்டு உங்க நோட்புக்கை எடுத்து வச்சுட்டு ஏதோ எழுதப் போனீங்களே டீச்சர் அன்னியிலிருந்து உங்கமேல ஒரே கோபமா வந்துச்சு டீச்சர். முதல் நாள் டாய்லெட் போன போது ஆயாம்மா கோபமா ட்ரெஸ் கழற்றி விட்டதனாலே எனக்கு ஆயாம்மா பிடிக்கவே பிடிக்காது.

என்னிக்காவது நாங்க சொல்ற மாதிரி எங்களை விளையாட விட்டுருக்கீங்களா? எப்பவும் நீங்க நினைக்கிற, சொல்லுற விளையாட்டைத்தானே விளையாடச் சொல்றீங்க... எனக்கு என்னிஷ்டம் போல விளையாடணும்னு ஆசைஆசையா இருக்கும். அப்புறம் எனக்கு ரவிகிட்டேயும்,மலர் பக்கத்திலேயும்தான் உக்கார்ந்துக்கணும்னு ஆசை... நீங்க க்ளாஸ்லே வந்தவுடனே ரொம்ப பேசறீங்கன்னு எங்களை ஆளுக்கொரு மூலைக்கா உக்கார வச்சுருவீங்க.. எனக்கு அழுகை அழுகையா வரும். அப்புறம் எனக்கு அவசரமா டாய்லெட் போணும்னாலும் உடனே அனுப்பமாட்டீங்க...அப்பவும் எனக்கு அழுகை அழுகையா வரும

ஸ்கூலுக்கு வந்தவுடன் அம்மா நினைப்பா வரும்....உடனே பிஸ்கெட் சப்பிடணும்னு இருக்கும். அதான் முடியாதே பெல் அடிச்சப்புறம்தான் லன்ச் பாக்ஸ் திறக்கணும்னு சொல்வீங்க. தண்ணி குடிக்கணும்னா எல்லாரும் லைன்லே போய்தான் குடிக்கணும்.கலரடிக்கணும்னு இருக்கும் போது எழுதச் சொல்வீங்க. எழுதணும்னு இருக்கும் போது விளையாடச் சொல்வீங்க.விளையாடணும்னு இருக்கும் போது ஓரல்ஸ் சொல்லச் சொல்வீங்க.

ஆர்ட் ஆக்டிவிடி நான் நல்லா பண்ணமாட்டேங்கிறேன்னு நீங்களே பண்ணி நோட்டில ஒட்டிர்றீங்க......எனக்கு அதை நானே செய்யணும்னு ஆசையா இருக்கும். நான் அழுதா உடனே சுவர் பக்கம் திரும்பி நிக்கச் சொல்லி பனிஷ் பண்ணுறீங்க. நீங்க பக்கத்து க்ளாஸ் மேம் கிட்டே நீங்க சிரிச்சு சிரிச்சு பேசுறது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது மேம்.

A for appleனுதான் சொல்லணுமா ?A for Air னு சொல்லக்கூடாதா? எனக்கு எப்பதான் மழை வரும்னு இருக்கும் கப்பல் செய்து விளையாடாலாம்னு இருக்கும்.நீங்க Rain Rain go away பாடச் சொல்வீங்க

உங்க மேஜை கிட்டே வந்து நின்னு உங்ககிட்டே பேசிட்டேயிருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும் மேம். நீங்கதான் உடனேயே "go to your place" அப்படீன்னு சொல்லிருவீங்களே. சொன்னவுடனே கேட்கணும் உங்களுக்கு .இல்லைன்னா நீங்க கோபமாக் கத்திருவீங்க. அது எனக்கு ரொம்ப பயம். நீங்க கோபமாயிருக்கும் போது நாங்கல்லாம் கப்சிப்னு இருந்துடுவோம்....இல்லாட்டி அடி விழுந்துருமே...

உங்களைப் பற்றி இந்த ஒரு வருஷத்துலே இவ்வ்ளோ புரிஞ்சு வச்சிருக்கேனே நீங்க என்னைப் பற்றி எவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம்?

Monday, March 14, 2011

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!-10

மூடித் திறந்த பூ இதழ்களிருந்து
விடுதலையாகியது
தேனீ

தீப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்ட
கூட்டுப் புழு உயிர்த்தெழுந்தது
வண்ணத்துப் பூச்சியாய்

நிழல் தேடி ஒடுங்கிக் கொண்ட
இடம் விட்டு மரத்தினடியில்
ஒடுங்கியது நாய்

மத்தியானத்துக்கு மட்டும்
சுகமாகத் தூங்க அடுப்பங்கரையில்
இடம் மாறியது பூனை..

சில மாதம் மட்டும்
இந்தியாவிலிருந்து சைபீரியாவுக்குப்
பறந்து கொண்டிருந்தன
சில பறவைகள்...

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!

Sunday, March 6, 2011

அன்னிக்கு ஒருநாள் ஸ்டாராயிட்டோமில்லே!

                     இந்த ஒரு வாரமும் சும்மா கலகலன்னு போச்சு. வந்தவங்கல்லாம் திரும்பி வந்தாங்க, வராதவங்கல்லாம் விரும்பி வந்தாங்க. ஒரே நேரத்துலே ஆன்லைன்லே 20 பேர் முதல் தடவையா பார்த்துருக்கேன். எப்போ பார்த்தாலும் ஒரே ஜே ஜேன்னு இருந்தது...
சரி நாமளும் "ஒரு வாரத்துக்கு ஷ்டாராயிட்டோம்லே"ன்னு பெருமையா பதிவே போடலாம்.
இதே மாதிரியான பதிவாலேதான் என் வலைப்பூவுக்கு கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வர ஆரம்பிச்சாங்க! அதனோட மலரும் நினைவுகள்.
அன்னிக்கு ஒருநாள் ஜெயிலுக்குப் போனோமில்லே !
அன்னிக்கு ஒருநாள் எங்க வீட்டுக்கு முதலை வந்துச்சே!
அன்னிக்கு ஒருநாள் பூசாரியாகிட்டோமில்லே!
இந்த வரிசையிலே கதாநாயகி, திருடன், முட்டாள், வில்லி(வில்லன் பெண்பால்) இப்படி நிறைய எழுதிருக்கேன்!
என் கவிதையில் பிடித்தது
கை விரித்துச் சிரித்தது மரம்!
உணர்வு பூர்வமான இடுகையில்
என் வீட்டுக் கதையிது
நகைச்சுவையில்
அதுவா??இதுவா??
என் கதையில்
குலோப்ஜாமுனும், சாமியும், எறும்பும்
அன்பானாலும் சரி, காதலானாலும் சரி, நட்பானாலும் சரி, அறிவுரையானாலும் சரி, நல்லவைகள் அனைத்தும் விதைகள் போன்றவை. என்றாவது ஒருநாள் எங்காவது உயிர் கொண்டெழும். அதனால்!!....
விதை உறங்கும்
நிலங்களைத் தண்ணீர்
தெளித்துத் தட்டியெழுப்புங்கள்

உயிரைக் கட்டிக் காத்துக்
கொண்டிருக்கும் விதைகள்.
கைகள் நிறைய அள்ளுங்கள்
விதைகளை.....

கைக்கெட்டா தூரம்
வரை விசிறியடியுங்கள்
விதைகளை....

ஒரு பறவையின்
நோக்கத்தோடு
பறந்து பறந்து
விதை தூவுங்கள்...

எங்கேனும் அவை
தன் வேரை
ஊன்றிக் கொள்ளட்டும்.
மழை குடிக்கட்டும்.
காற்றைச் சுவாசிக்கட்டும்....
வெயிலை உடுத்தட்டும்.

என்றேனும் ஒருநாள்
யாருக்கேனும்
இலை உதிர்க்கட்டும்...
நிழல் கொடுக்கட்டும்.....
பழம் கொடுக்கட்டும்
பூக்கள் கொட்டட்டும்.

கொஞ்சமாய் உலகம்
துளிர்த்துக் கொள்ளட்டும்!!

வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கு நன்றி!
மீண்டும் சந்திப்போம்! வர்ட்டா???!!

Saturday, March 5, 2011

அப்பா இறந்த பின்னர் செய்த கள்ளத்தனங்கள்...

அலமாரி திறந்து
கொள்ளையடிக்கும்
கள்ளத்தனத்துடன்
அம்மாவுக்குத் தெரியாமல்
நுகர்ந்ததுண்டு அப்பாவின்
வியர்வைச் சட்டை...

அம்மா தூங்கும் போது
அம்மாவுக்குத் தெரியாமல்
பொட்டு வைத்துப்
பார்த்ததுண்டு அம்மாவின்
நெற்றியில்...

யாருக்கும் தெரியாமல்
அப்பாவின் செருப்புக்குள் கால்
நுழைத்து ஒரு நடை நடந்து
பின் துடைத்து
அதே இடத்தில்
வைத்து விடுவதுண்டு

அப்பாவின் துண்டுடன் 
குளியலறை நுழைந்து
அடக்க முடியாமல் வாய்
பொத்தி அழுததுண்டு...

நடு இரவில் போர்வைக்குள்
முகம் புதைத்து
அப்பா என ரகசியமாய்
அழைத்துப் பார்ப்பதுண்டு...

அப்பா புகைப்படத்தில்
வைத்த பொட்டை அழித்து
அப்பாவைத் திருப்பிக்
கொண்டுவர நினைத்ததுண்டு...

மரணமே நிகழாத வீட்டில்
இருந்து ஒரே ஒரு பிடி
கடுகு வாங்கி வர
வீதி வீதியாய் அலைந்ததுண்டு....

பசிக்கும் கொலைப்
பட்டினியில் காலி
அரிசி டப்பா பார்த்து
"என்னமோ தெரியவில்லை
இப்போலாம் பசிப்பதேயில்லை"
எனப் பொய் சொல்வதுண்டு
அம்மாவிடம்...

தூங்குவது போல நடிக்கையில்
தலை வருடும் கைகளும்
அடிக்கடி அம்மாவின் கன்னம்
நனைக்கும் நீரும் சொல்லியது....

"எனக்கு எல்லாம் தெரியுமென்று"...

Friday, March 4, 2011

பேனாக் காலம்!

               எங்க அம்மா காலத்தில் மைக்கூடும் மரக்கட்டைப் பேனாவும்....மையைத் தொட்டுத் தொட்டு எழுதவேண்டும். ஆறாம் வகுப்புக்கு மேல்தான் மை பேனா. தினமும் அம்மாவின் அம்மாவிடம் இருந்து அம்ம்மாவுக்குத் திட்டு விழும். ஒரு நாளாவது சட்டையை மையாக்காமல் வர்றியா? அப்படீன்னு....காலையில் எழுந்ததும் குடத்தைத் தூக்கிட்டு ஆற்றுக்குப் போகணும் தண்ணி கொண்டுவர.....வரும் போதே ஆற்றில் குளித்து விட்டு வர வேண்டும்....வந்ததும் தீக்குச்சிக் கட்டை அடுக்கவேண்டும்...குறைந்தது பத்துக் கட்டையாவது அடுக்கவேண்டும்....அப்புறம்தான் பள்ளிக்கு....

             அதுவும் இப்போ மாதிரி வீட்டு முன்னாலெல்லாம் எந்த வாகனமும் வந்து ஏற்றிச் செல்லாது.லொங்கு லொங்கு என்று பள்ளிக்கு ஓடவேண்டும்.அப்படி ஓடும் போது மைக்கூட்டிலிருந்து மை கொட்டிக் கறையாக்காமல் எப்படிப் போக?பள்ளியில் ஏன் இப்பிடி மைக்கறையோடு வர்றேன்னு கேம்ஸ் ஆசிரியர் தோலை உரிப்பார்.வீட்டுக்குப் போனா அம்மாவின் வசவுகள்....இப்படித்தான் நகர்ந்தது பேனாக்காலம் அம்மாவுக்கு...

          அப்புறம் என் காலம். ஐந்தாம் வகுப்பிலேயே மை பேனா.ஆனால் மைக்கூடெலாம் இல்லை..மரக்கட்டைப்பேனாவும் இல்லை.நல்ல அழகான குண்டு பேனா.கேம்லின் பேனாக்கள்...புதுசு புதுசான நிறங்களிலும் தங்க நிற வளையம் மூடியின் மேல்.மை பாட்டில்,மை நிரப்ப ரப்பர் ஃபில்லர்....அந்த ஃபில்லரை உபயோகிக்க நடக்கும் போட்டியோ போட்டி!

                 அப்புறம் அழகழகான ஹீரோ பேனாக்கள்.தங்க நிற மூடியுடன்.அப்பொவெல்லாம் "அதுமட்டும் கிடைச்சுடணும் சாமி உலகத்துலே எதுவும் வேண்டாம்"னு வேண்டியிருக்கேன்னா பார்த்துக்கோங்க. எனக்கு ஒரு பேனா வாங்கித் தந்தால் அது எவ்வளவு ஒழுகினாலும் நூல் சுற்றி எடுத்துப் போகவேண்டும். அதைத் துடைப்பதற்காகத் தனியே துணி ஒன்று ஜாமெட்ரி பாஃக்ஸில் ஒளிந்திருக்கும்.நிப் உடைந்தால் நிப் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் புதுப் பேனா ஒரு வருடத்திற்கு ஒன்று கிடைத்தாலே அதிகம்.

                பொண்ணுங்க எல்லம் பேனாக்களை டப்பாவுக்குள் பூட்டி வைக்க ஒழுகும் பேனாக்கள் பையன்களின் சட்டைப்பையை நீலமாக்கி அப்போதும் பி.டி வாத்தியாரிடம் அடிவாங்க வைத்தது. வாத்தியாரெல்லாம் ஹீரோ பேனாக்களுக்கு மாறி விட்டிருந்தார்கள். பால் பாயின்ட் பேனா பழக்கத்திற்கு வந்திருந்தது. அதன் லீக் ஆகாத தன்மை,நோட்டில் மை கொட்டாத வித்தை பள்ளிக் கூடத்தில் அனைவரையும் ஒன்று சேரத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது.

     இப்போ என் பொண்ணுங்க மை பேனாவா?அய்யே...என்கிறார்கள்.பால் பாயின்ட் பேனாவா.....போங்கம்மா....ரோட் ப்ரேக்கர் என்கிறார்கள். இப்போலாம் வழ வழன்னு எழுதும் ஜெல் பேனாதான்.வாங்கிட்டு வரும்போதே பத்து இருபது ஒரு சேர வாங்கிக் கொள்கிறார்கள். இன்னமும் என்னிடம் ஒரு பத்து மைப்பேனா பத்திரமாக வைத்திருக்கிறேன் சில நினைவுகளின் உறைவிடமாக.....அவ்வப்போது கன்னத்தில் அது தரும் சில்லிப்புக்காக உரசிக் கொள்கிறேன். இது முதல்லே வாங்கின பேனா..இது மாமா வாங்கித் தந்தது, இது பரிசு கிடைத்தது அப்படீன்னு வரிசைப் படுத்த முடியும்.

           இப்போதும் யாராவது பேனா கேட்டால் மூடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு கொடுப்பேன்....கண்டிப்பாகப் பேனா திரும்பி வந்துவிடும் என்ற நினைப்பில்தான்...புதுப் பேனாவும் அதால் முதல் முதல் நம்ம பெயரை எழுதி எழுதிப் பார்ப்பதே ஒரு ஆனந்தம்.இப்போ யாருக்காவது பேனா பரிசாகக் கொடுக்கச் சொன்னால்...ஐயே பேனாவெல்லாம் யாராவது வாங்கிக் கொடுப்பாங்களா? போங்கம்மா...என்னும் போதும்...................

           எழுதி முடிந்த பேனாக்களை நிமிடத்தில் குப்பைக் கூடைக்குள் "Use and throwமா" என்று தூக்கியெறியும் போதும் கொஞ்சம் மனது வலிக்கத்தான் செய்கிறது!
                  பேனாக்காலம் பற்றிப் பேசும் போது பேனா நட்பும் நினைவுக்கு வருகிறது. எங்கேயோ இருப்பவர்களிடம் கடிதம் மூலமாகத் தொடர்பு கொண்ட நாட்களும், விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட நாட்களும், ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு அந்த நட்பைப் போற்றித் தொடர்ந்த கடிதங்களும், ஒரு மாதத்துக்கு ஒன்றாய் வந்தாலும் அந்தக் கடிதம் கொண்டு வரும் உறவுப் பாலத்துக்காய்க் காத்துக் கிடந்ததுவும் ஒவ்வொன்றாய் மனதுக்குள் ஊஞ்சலாடுகிறது.

ம்ம்ம்...இப்போலாம் நாளுக்கு ஐம்பது நட்புகள் நட்புக் கணக்கில் ஏறிக் கொள்கிறது! இந்தக் கூட்டத்தில் உன்னைத் தொலைத்து விட்டேன் கேதெரீன் டௌஷ் (Catherine Douche) பேனா நட்பே எங்கிருக்கிறாய் நீ???

Thursday, March 3, 2011

உதய்ப்பூர் ஒரு அழகிய புகைப்படப் பயணம்.

ஒவ்வொன்றாய் விளக்கப் போவதில்லை.உதய்ப்பூர் அரண்மனை,முகப்பு,கதவு,அரண்மனையின் உள்புறம்,தோட்டம்,ரஜா ராணி உபயோகித்த பொருட்கள் என அனைத்தும் அழகியல் சார்ந்தவை. படித்தல்ல.....பார்த்து ரசிக்க வேண்டியவை. பார்க்கும் போது என்னே ஒரு ராஜபோக வாழ்வு என எண்ணத் தோன்றுகிறது!