நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, February 28, 2011

பிரியம் சுமக்கும் உயிர்கள்...

இன்று முதல் தமிழ்மண நட்சத்திரம். தமிழ்மணத்தில் பதியத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த காலம் நினைவுக்கு வருகிறது.

வளைகாப்புக்கு எடுத்த ஃபோட்டோ ரோலை அவங்க பேன்ட்லே வச்சுட்டு அப்பிடியே தண்ணிக்குள்ளெ தோய்க்கப் போட்டா என்ன ஆகும்?அது ஒரு தடவை...

திடீர்னு நைனிதால் போய் ஒரு வாரம் இருக்க வந்த வாய்ப்பு.எல்லாம் ரெடி.லீவே கொடுக்காத பள்ளியிலிருந்து லீவும் கிடைச்சாச்சு.வீட்டுக்குப் பொய் வண்டியில் ஏறவேண்டியதுதான் பாக்கி........படியிறங்கும் போது வழுக்கி விழுந்து மண்டை உடைந்து ஆஸ்பத்திரி...அது இதுன்னு...ம்ம்ம்...

புது வீட்டு பால்காய்ப்பு விழாவை வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்துட்டு ஸ்டூடியோலே போய் உள்ளே ரோலே இல்லைன்னு தெரிஞ்சா எப்பிடி இருக்கும்?இது இன்னொரு தடவை...
அப்படி ஒரு ராசி நம்ம ராசி!

வலைச்சர ஆசிரியரா இருக்கும் போது சீனா சார் வலைச்சர வலைப்பூவுக்குள் நுழைய முடியாத படி ஏகக் குழப்பம்....அப்புறம் ஒரு வாரத்துக்கு தினமும் தொடர்ந்து மின்சாரத்தடை.அதையும் மீறி எப்பிடியோ ஒரு வாரத்தை ஓட்டியாச்சு.

திரட்டி நட்சத்திரமா இருந்தப்போ பி.எஸ்.என்.எல் சதி செய்து இணையம் படுத்துக் கொண்டது.இன்டெர்னெட் கஃபே போய் ஒருவழியாக முடித்துக் கொண்டாயிற்று.

இப்போ சரி நட்சத்திரமாகப் போறோமேன்னு கொஞ்சம் அழகு படுத்தலாமேன்னு டெம்ப்ளேட் மாற்றி விட்டுப் பெருமையாப் பார்த்தா.....தமிழ்மண ஓட்டுப் பட்டையைக் காணோம்.இண்ட்லி ஓட்டுப் பட்டையையும்தான்........ம்ம் ஒருவழியா எல்லாத்தையும் திரும்பிக் கண்டுபபிடிச்சு வெட்டி ஒட்டி, வெச்சுட்டு இருக்கற அழகே போதும்னு முடிவு செய்தாச்சு...ம்ம் இனி நான் ரெடி ...நீங்க ரெடியா??
வாய்ப்பை அளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி!

பிரியம் சுமக்கும் உயிர்கள்

பயணப்பட்டுக் கொண்டிருக்கும் பாதையில் அவ்வப்போது மனதை நெகிழ்த்தும் நிகழ்வுகளும்,இப்படியான உலகத்திலேயா இருக்கிறோம் என்னும் எண்ணத்தை வரவழைக்கும் நிகழ்வுகளும் நிக்ழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.அவற்றையும் கண்டும் காணாமல் சில நேரமும்,கண்ணில் நீருடன் சிலநேரமும் கடந்து கொண்டுதான் இருக்கிறோம்.இது கண்ணில் நீருடன் கடந்து சென்ற ஒரு நிகழ்வு.

குழந்தைகளிடம் இரக்க குணத்தை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் அனாதை ஆசிரமம் அல்லது முதியோர் இல்லம் இப்படி அழைத்துச் செல்வது வழக்கம்.அங்கு செல்லும் நாளுக்கு முன்னதாகவே குழந்தைகளிடம் அவர்களுக்குக் கொடுக்க் அவர்களால் முடிந்ததைக் கொண்டு வரவும் (சோப்,பிஸ்கெட்,இனிப்பு) சொல்லி எடுத்துக் கொண்டு செல்வதும் வழக்கம்.

அங்கு முதியோர்களிடம் த்னித்தனியாகக் குழந்தைகளைப் பழகச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்து சில ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை வழங்கி அவர்களை சந்தோஷப்படுத்துவது வழக்கம்.சிலநேரங்களில் குழந்தைகள் அவர்களின் பெயர் வாங்கி வந்து தீபாவளி, வருட பிறப்பு அன்று வாழ்த்து அட்டை அனுப்பவும் செய்வார்கள்.

ஒன்பது, பத்தாவது வகுப்புக் குழந்தைகளே அங்கே ஒரு அசாதரணமான அமைதியுடன் இருப்பார்கள்.அவர்கள் அந்த முதியவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதை உணரவைக்கும் மௌனமாக அது இருக்கும்.மற்றபடியான் பிக்னிக்,சுற்றுலா எல்லாம் மாணவர்களுடன் நான் செல்வதில்லையென்றாலும் இந்த நிகழ்வுக்கு நான் கூடச் செல்வது வழக்கம்.கண்ணில் நிற்காமல் வழியும் நீருடனும்,கிழிந்த சட்டையுடனும்,சுருங்கிய தோலுடனும்,தலை நிறைய பனி பொழிந்தது போன்ற வெண்முடியுடனும்,பற்கள் கொட்டிப் போன பொக்கை வாயுடனும் விதம் விதமாக பெரியவர்கள்.

இருந்தாலும் எல்லோரின் கண்ணிலும் அணைபுரண்டு பெருக்கெடுத்தோடும் பிரியம் மட்டும் நிறைந்து இருக்கும்.கொடுப்பது ஒரு சோப்பென்றாலும் அதைக் குழந்தைகளிடமிருந்து பெற்றுக் கொள்வதில்தான் எவ்வளவு ஆனந்தம்.உடனே பிரியம் தெரிவிக்கும் ஒரு உச்சி முகர்தல்.கைகளோடு கைகளைச் சேர்த்துக் கொள்ளும் போது தொற்றிக் கொள்ளும் பிரியம் சுமக்கும் ஒரு வெம்மை.

எப்போதும் அது ஒரு மறக்கமுடியாத அனுபவமாகத்தான் இருந்து விடுவதுண்டு.ராகுல் பத்தாவது வகுப்பு மாணவன்.முதியோரில்லத்தை விட்டு வெளி வந்தவுடன் என்னிடம் அவசரமாக வந்து ஒரு சின்ன காகிதத்தைக் கொடுத்தான்.அதில் நடுங்கும் விரல்களால் எழுதிய ஒரு செல் நம்பர்."மேம் அவர் இந்த நம்பரை யாருக்கும் தெரியாமல் கொடுத்து "இது என் மகனோட நம்பர்.இந்த நம்பருக்கு ஒரே ஒரு தடவை ஃபோன் செய்து "உங்க அப்பா சாரி சொல்லச் சொன்னார்.அவர் இங்கே சந்தோஷமாயில்லேன்னு சொல்லச் சொன்னார்" அப்படீன்னான்.

நான் கொஞ்சம் அதிர்ச்சியாகவும்,வருத்தமாகவும் கொஞ்சம் குழம்பிய நிலையிலும் இருந்தேன்.சரி என்று வாங்கி வைத்து விட்டு வேலைகளை முடித்து விட்டு பலமுறை யோசித்து விட்டு அந்த நம்பருக்கு ஃபோன் செய்தேன்.

எடுத்தவுடன்....."உங்க அப்பா இருக்கும் முதியோரில்லத்தில் உங்க அப்பாவைப் பார்த்தேன்..."இவ்வ்ளோதான் சொன்னேன்.உடனே கட் செய்யப்பட்டது.மீண்டும் மீண்டும் ஃபோன் செய்யும் போதும் கட் செய்யப்பட்டது.பின்னர் எடுக்கப்படவேயில்லை.
மரம், செடி, கொடி மாதிரி அவ்வப்போது உதிர்த்தும் துளிர்த்தும் கடக்கிறது வாழ்வு.

Tuesday, February 22, 2011

"டேய் மாட்டுனே வெடி வெடிச்சுடுவேன்"

எங்க எட்டாம் வகுப்பு மாதிரி அழகான வகுப்பு எங்கேனும் இருக்குமா என்பது சந்தேகமே.கால்ட்வெல் ஹை ஸ்கூலில் இபபோவும் அந்த வகுப்பு அப்படியே இருக்கான்னு பார்க்கணும்னு ஆசை.உட்கார்ந்திருக்கும் திசைக்கு எதிர் திசையில் எழுதிடும் போர்டை ஒட்டிய ஜன்னலில் தெரியும் கடல்.வகுப்பு போரடிக்கும் பொழுதெல்லாம் ஆசையோடு பார்த்துக் கொண்டு கனவுகளில் மூழ்கி விடலாம்.தூரத்தில் தெரியும் கப்பல்களையும் கடற்கரை ஓரத்தில் நடக்கும் சல சலப்பையும் பார்த்தே பொழுதை ஓட்டி விடலாம்.

இன்னமும் நினைவிருக்கிறது ஈரோட்டிலிருந்து மாற்றலாகி வந்த ஒரு பையனிடம் கணக்கு ஆசிரியர்,"பழைய பள்ளிக்கூடத்திற்கும் இந்த பள்ளிக் கூடத்திற்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்டவுடன் அந்தப் பையன் "அங்கெ வகுப்பு ரொம்பப் புழுக்கமா கசகசன்னு இருக்கும்...இங்கே நல்லா சிலு சிலுன்னு காத்து வருது சார்"அப்படீன்னு சொன்னவுடன் எல்லோரும் சிரிச்சது.

வகுப்பு ஆசிரியர் ஜெயச்சந்திரன் சார்,கணக்கு ஆசிரியர் டேவிட் சார்,தமிழ் ஆசிரியர் அருள்ராஜ் சார்,அப்புறம் ஹிந்தி ஆசிரியர் நாராயணன் சார்...இவர் பாடும் ரெம்மாமே ரெம்மாமே ரே...பாட்டு வகுப்பில் ரொம்ப பிரபலம்.

தமிழாசிரியர் அருள்ராஜ் சார் வகுப்பில் நடக்கும் கலாட்டாக்கள் ரொம்ப கலகல.அப்படித்தான் ஒருநாள் இன்ஸ்பெக்க்ஷன்.அப்போலாம் இன்ஸ்பெக்க்ஷன்னா நோட்டுக்கு அட்டை போடுவதிலிருந்து யூனிஃபார்ம் வரைக்கும் நீட்டா இருக்கணும்.

ரெண்டாவது பீரியட் தமிழ்.எப்பவுமே அருள்ராஜ் சார் வகுப்பில் பாடம் வாசிக்கச் சொல்லிட்டு காலைத் தூக்கி மேஜையில் போட்டுக் கொண்டு கண்ணை மூடி விடுவார்.இடையிடையே பசங்க சத்தம் போட்டா"டேய் மாட்டுனே வெடி வெடிச்சுடுவேன்"அப்படீன்னு அடிக்கடி சொல்வார்.பசங்க சும்மா புத்தகத்தைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர்,சிவாஜி பட பாடல்களையும் வசனங்களையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.அவரும் கண்டுக்கவே மாட்டார்(தூங்கினா எப்பிடிக் கண்டுக்க முடியும்?)அன்னிக்கு வகுப்பில் வந்தவுடன் காளியப்பா "டி.இ.ஓ எங்கே வந்துட்டிருக்காருன்னு பாரு"அப்படீன்னார்.

காளியப்பன் அவருக்குப் பிடித்தமான பையன்.நல்லா வெளு வெளுன்னு வெள்ளாவியில் வச்சு எடுத்தது போலிருப்பான் குண்டுத் தக்காளி போலிருப்பான்.அவனும் ஓடிப் போய்ப் பார்த்துட்டு "இப்போதான் சார் ப்ரைமரிக்குப் போயிட்டிருக்கார்னு தகவல் கொடுத்தான்..

"சரி...இப்போதைக்கு இந்தப் பக்கம் வரமாட்டார்...ம் காளியப்பா வாசிக்க ஆரம்பி"அப்படீன்னு சொல்லிட்டுக் காலைத் தூக்கி மேஜையில் போட்டு தியானத்தை ஆரம்பிச்சுட்டார்.ஆனால் என்ன மாயமோ?எப்பிடி டி.இ.ஓ ரூட்டை மாற்றினாரோ தெரியவில்லை.பத்தாவது நிமிடத்தில் எங்க வகுப்பில் இருந்தார்.அவர் உள்ளே நுழைந்து நாங்க எழுந்து வணக்கம் சொன்னப்போ எப்பவும் போல ஆனந்தமா"டேய் மாட்டுனே வெடி வெடிச்சுடுவேன்"அப்படீன்னு சொல்லவும்....பசங்க சார்னு கத்திட்டாங்க.அவர் அவசர அவசரமா எழ, தலைமையாசிரியர் நெற்றிக்கண் திறந்து காட்ட அப்படியே வெல வெலத்துப் போயிட்டார்.

டி.இ.ஓ எங்க முன்னாலேயே "ஒண்ணும் சரியில்லையே"அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.பத்தே நிமிடத்தில் பியூன் வந்து சார் உங்களை ஹெட்மாஸ்டர் கூப்பிடுறாருன்னு சொன்னதும் அவர் பதறி ஓடியதும் பசங்க "இன்னிக்கு சார் மாட்டினார் வெடி வெடிக்க போகுது"ன்னு சொல்லி ஒரே கலகல!

Wednesday, February 16, 2011

அப்படிச் செய்வது நாங்களில்லை....

                            அவன் பெயர் அபிஷேக்.அவன் ரொம்ப நல்லா படிப்பான்.ஆனால் எப்போதும் ஒரு சின்ன பதட்டத்தோடவேதான் இருப்பான்.வகுப்பு பரீட்சையானாலும் சரி அரையாண்டுத் தேர்வு ஆனாலும் சரி,முழு ஆண்டுத் தேர்வு ஆனாலும் சரி ஒரே விதமான பதட்டத்திலிருப்பான்.ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.போட்டியெல்லாம் நமன் கூட மட்டும்தான்.மதிப்பெண்கள் தந்த உடனே நமன் மதிப்பெண்கள் தெரியாவிட்டால் மண்டை உடைந்து விடும்.அது என்ன மாயமோ நமனை விட எப்படியாவது ஒரு மதிப்பெண்ணாவது அதிகமாக வாங்கி விடுவான்.
                            எப்போ பார்த்தாலும் நமன் ப்ராஜெக்ட் எப்படியிருக்கு?என்னை விட நல்லா பண்ணியிருக்கேனா என்றுதான் அவன் கவலையிருக்கும்.ஆசிரியர்களும் இப்படிப் போட்டியிருந்தால்தான் குழந்தைகள் நல்லா பண்ணுவாங்க என்றே பேசிக் கொள்வார்கள்.
                  ஒரு நாள் அவனை அசெம்பிளி நேரம் அங்கே செல்லாமல் ஒரு ஓரமாக நின்று  கொண்டிருந்தான்.
 "என்னடா அசெம்பிளிக்குப் போகலியா?இங்கே ஏன் நிக்கிறே?"
"இன்னிக்கு எனக்கு உடம்பு சரியில்லே மேம் ...கணக்கு பரீட்சை எழுத முடியாது போல இருக்கு.ஆனால் ஆப்சென்ட் ஆனா மதிப்பெண்கள் போய்விடுமேன்னு இன்னிக்கு வந்தேன்" என்றான்.
தொட்டுப் பார்த்தால் உடல் கொதித்தது.
"வா என் கூட"
"டைரி கொண்டு வா"
"மேம் ப்ளீஸ் மேம் வீட்ட்டுக்கு ஃபோன் போடாதீங்க மேம்....அம்மா திட்டுவாங்க மேம்.எப்பிடியாவது பரீட்சை எழுதிட்டுப் போயிட்றேன் மேம் இல்லைன்னா அப்பா கொன்னே போட்டிருவார்"
"அட!இன்னிக்கு வெறும் யூனிட் அஸெஸ்மென்ட்தானேடா?இதிலென்ன இருக்கு முதல்லே உடம்பைப் பார்த்துக்கோ.அப்புறமாய் பார்த்துக்கலாம்"
"கொண்டு வா டைரியை"
வேண்டாம் மேம்" எனப் பயங்கரமாய் அழ ஆரம்பித்து விட்டான்.
என்ன செய்வதென்றே புரியவில்லை
"சரி பரீட்சை முடிந்ததும் ஆஃபீஸ் ரூமுக்கு வா வீட்டுக்குப் ஃபோன்  போட்டு அப்பாவை வரச் சொல்லலாம்"
என்றபின் அரை மனதாக ஒப்புக் கொண்டு போனான்.

          அவங்கப்பா வந்தால் அவரிடம் அபிஷேக்கின் மனப்பதற்றத்தைப் பற்றிப் பேசவேண்டும் என மனதிற்குள் நினைத்தவளாய் வேலையில் மூழ்கினேன்.

ஆனால் வந்ததென்னவோ கடைப்பையன்.எனவே ஒன்றும் சொல்லாமல்"அபிஷேக்கின் அப்பாம்மாவைப் பார்க்க வேண்டும்" என்று மட்டும் சொல்லியனுப்பினேன்.

                                  மீண்டும் ஒரு நாள் அபிஷேக்கின் வகுப்பாசிரியர் அபிஷேக்கைக் கூட்டிக் கொண்டு என்னிடம் வந்தார்.
"மேம் அபிஷேக் காலையிலிருந்து ஒரே அழுகை.என்னவென்றும் சொல்ல மாட்டேனென்கிறான்.லன்ச் கூட சாப்பிடவில்லை.He is disturbing the whole class"என்று சொல்லி என்னிடம் விட்டுப் போனாள்.

        "என்ன அபிஷேக்?என்ன பிரச்னை?ஏன் அழுகிறாய்?"
"ஒன்றுமில்லை மேம்."என்ற படியே கண்ணீர் கொட்டியது.
அமைதியாக,அன்போடு,அதட்டி என்று பலமுறையாகக் கேட்ட போதும் சொல்லாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான்.நான் பியூனை அனுப்பி அவன் டைரியைக் கொண்டு வரச் சொன்னேன்

                     அவ்வ்ளோதான்"ப்ளீஸ் வேண்டாம் மேம்....ப்ளீஸ் மேம் வேண்டாம் மேம் "எனக் கதற ஆரம்பித்தான்.
"அப்போ சொல்லு"
"மேம் இன்னிக்கு கணக்குப் பரீட்சை மதிப்பெண்கள் கொடுத்தாங்க.நமன் என்னை விட ரெண்டு மார்க் அதிகமா வாங்கிருக்கான் மேம் என்னாலே தாங்கவே முடியலை மேம்.நான் எப்பிடி அம்மாகிட்டே சொல்வேன் மேம் பயம்மாயிருக்கு.அதான் மேம் அழுகையா வருது."

                  என்ன சொல்லியும் சமாதானமாகாத அவனைப் பள்ளி நேரம் முடிந்து விட்டதால் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவன் அப்பாவிடம் தொடர்பு கொண்டேன்.அவரும் ரிசல்ட் வெளியிடும் நாள் என்னை வந்து பார்ப்பதாகவும் கூறினார்.நிறைய யோசனைகளூடே இருந்தேன்.
ரிசட் நாளில் எங்கள் பள்ளியில் முதலில் வகுப்பாசிரியரைச் சந்தித்துப் பேசி ரிசல்ட் வாங்கி  விட்டு அப்புறம் தேவைப்பட்டால் முதல்வரைச் சந்திப்பது வழக்கம்.
                                  அபிஷேக்கின் அப்பாவும் அம்மாவும் வந்தார்கள். பிரச்னையைச் சொன்னவுடன் சொன்ன விஷயம்"நமன் எங்க பக்கத்து ஃப்ளாட் பையன்.பொதுவா நாங்க எல்லோரும் சேர்ந்தால் பேசுவது நமன் அபிஷேக் படிப்பு பற்றித்தான்.அது தவிர இதை இவ்வ்ளோ சீரியஸா எடுக்க வேண்டியதில்லை.நாங்க என்ன நினைக்கிறோம்னா இந்த பயம் அவனோட முன்னேற்றத்துக்கு உதவுதுன்னா அவனோட மார்க் வாங்குற திறமையை உயர்த்தினால் அதிலென்ன தப்பு?Don't bother about him,He'll be alright.We know about him.Anyways thank you for your concern....என்றவாறு எழுந்தவர் "அன்னைக்கு அவன் அழுதிருக்கவே வேண்டியதில்லை.ஏனென்றால் இப்பவும் அவன் நம்னை விட ரெண்டு மார்க் அதிகம் தான். பேப்பரில் ஒரு சரியான விடைக்கு ஆசிரியர் மார்க் கொடுக்கவிலலை.She will discuss that with you"என்றவாறு சென்றார்.
                            உடனடியாக ஐந்தாம் வகுப்பு ஆசிரியரைக் கூப்பிட்டுப் பேப்பரைப் பார்க்கையில் சில தவறான பதில்களை எரேஸரால் அழித்திருக்கும் தடம் தெரிந்தது.
                         அடுத்தநாள் அபிஷேக்கின் வகுப்பில் சென்று
"மதிப்பெண்களே வாழ்வின் முடிவன்று.நம் உழைப்பில் கிடைக்காத ஒரு மதிப்பெண் கூட நமக்குச் சொந்தமில்லை.மதிபெண்களை விட மற்றவர்களிடம் நன்மதிப்பைப் பெற நற்குணங்கள் வேண்டும்.ஒருமுறை தப்புச் செய்தால் அதை ஒத்துக் கொண்டு திருந்திக் கொள்ளலாம்.தவறை உணர்ந்து ஒத்துக் கொள்வதற்கு ஒரு மனம் வேண்டும்"என்றெல்லாம் அறிவுரை கூறிவிட்டு அறைக்குத் திரும்பினேன்.பத்தாவது நிமிடத்தில் என் முன்னால் அபிஷேக் இருந்தான்.

                  "I'm sorry Mam,I was forced to rub and rewrite the answer by my Father Mam.Please don't tell this to anyone Mam.I'm sorry Mam"என அழ ஆரம்பித்தான்.
அபிஷேக்கைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.

Thursday, February 10, 2011

ஒளிந்து கொண்டது காடு!


சிப்பிக்குள் ஒளிந்து கொண்டது
மழைத் துளி
கிடைத்தது முத்து....

இதழ் இதழாக உதிரும் பூ
ஒளித்து வைத்திருந்தது
நல் கனியை

மரம் ஒளித்து வைத்தது
சூரியக் கிரண்
கிடைத்தது நிழல்...

நிறம் ஒளித்து வைத்தது
வெள்ளைப் பக்கங்களை
உருவாகியது ஓவியம்...

கொஞ்சம் கொஞ்சமாக
ஒளிந்து கொண்டது காடு
உருவாகியது நகரம்

ம்ம்ம்....இந்த வார்த்தை விளையாட்டில்
உங்களுக்கான சேதி
ஒளிந்து கொண்டது...
புரிகிறதா?

Saturday, February 5, 2011

பரீட்சைக்கு நேரமாச்சு!

எல்லா வருடமும் சொல்றதுதான்.ஆனா சொல்லாம விடவும் மனசில்ல!.ம்ம்ம் கடமையுணர்வு.......பரீட்சை நெருங்குதே...கொஞ்சம் சின்னதா செய்ய வேண்டியவை,செய்ய வேண்டாதவை பற்றி சொல்லிரட்டுமா?
24 மணிநேரம் படிக்க வேண்டியதில்லை
குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டுப் படியுங்கள்.
தூங்காமலே படிப்பது அவசியமில்லை.எப்போதும் போல உடம்புக்குத் தேவையான நேரம் தூங்குங்கள்
எண்ணெய்ப் பலகாரங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
பச்சைக் காய்கறிப் பழங்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
படிக்கவேயில்லாத பாடங்களைப் புதிதாகப் பரீட்சைக்கு முந்தியநாள் படிக்காதீர்கள்.மனதிற்குக் கலக்கத்தையும் பயத்தையும் உண்டாக்கும்.
கடைசி நேரத்தில் ஏற்கெனவே படித்து திரும்பிப் பார்க்கவேண்டிய பாடங்களைப் படியுங்கள்.
கேபிள் டி.வி,இசை,சினிமா,போனில் அரட்டை இவை எல்லாவற்றையும் மறந்து அறவே துறந்து சன்னியாசியைப் போலப் படிக்கவேண்டியதில்லை.
அவ்வப்போது எப்போதும் போல் அளவுக்கு மிஞ்சி விடாமல் ஈடுபடுவது நல்லது.
படிக்கும் நேரத்தில் அருகினில் மொபைல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அடிக்கடி நண்பர்களிடம் நீ அது படிச்சுட்டியா?இது முடிச்சுட்டியான்னு ஸ்டேடஸ் கேட்காமலிருப்பது நல்லது.அது மனப்பதற்றத்தை ஏற்படுத்தும்.
படிக்கும் போதே குறிப்பெடுத்துக் கொண்டால் திரும்பிப் படிக்கும் போது எளிதாக இருக்கும்.
சில ப்ராசஸ்களைப் படங்களாக மேப்பிங் செய்து வைத்துக் கொள்வது கூட நல்லது.
காலையோ மாலையோ உங்களுக்கு ஒத்து வரும் நேரத்தில் படியுங்கள்.
அட்டவணை போட்டுப் படித்தல் நல்லதுதான்.ஆனால் அதைக் கடைப் பிடிக்க முடியவில்லையெனில் கவலைப்படாமல் தொடர்ந்து படிக்கலாம்.அதையே நினைத்து படிக்கமுடியாமல் அவதிப் படவேண்டாம்.
பரீட்சைகள் வாழ்வின் முடிவன்று.
முடிவினைப் பற்றிக் கவலைப் படாமல் படியுங்கள்.
எல்லா விஷயமும் எல்லா வருடமும் சொல்வதுதான்.புதுசா எதுவும் இல்லையென்றாலும் சில விஷயங்கள் சில நேரங்களில் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்ளும்.அப்படி ஒட்டிக் கொள்வதற்கான நேரமிது....பரீட்சைக்கு நேரமாச்சு!
நல்லா படியுங்க!பரீட்சை நல்லா எழுதுங்க!வாழ்த்துக்கள்!!!