நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, December 31, 2010

இது போதுமா???

வேண்டும் என்னும் போது மழை தூற மழை நிரம்பிய ஒரு மரம்...
வேண்டுவதெல்லாம் தர ஒரு குப்பியிலடைபட்ட ஒரு பூதத்தின் விடுதலை உங்களால்....
வாசிக்க வாசிக்க முடியவே முடியாத ஒரு பிடித்த நாவலாசிரியரின் ஒரு நாவல்....
எண்ணுகிற திசையில் வாழ்வைத் திருப்பிக் கொள்ளும் சவுகரியம்....
மனதைத் துள்ள வைக்கும் மனதுக்கினிய இசை எந்நேரமும் .....
திரும்புகிற பக்கமெல்லாம் ஆத்மார்த்தமான நட்புகள்.......
இது தவிர வேறென்ன வேண்டும் வாழ்த்துக்களாய்!!!
இவையத்தனையையும் பெற்றுக் கொள்ளுங்கள் இந்தப் புது வருஷத்திலும்...அடுத்தடுத்து வரும் வருடங்களிலும்!!!
படம்:Google:Thanks!

Monday, December 27, 2010

சும்மாயிருப்பதுவும் சுகம்தன்னே....முடிந்தால்!

சும்மாவாச்சுக்கும் சும்மாயிருப்பதைத் 
தேர்ந்தெடுத்திருக்கிறேன் இன்று...
மனதொன்றி எதிலும் 
மனம் லயிக்கவில்லை

எப்போதும் கைகொடுக்கும்
இசையும்,புத்தகமும்,
தேனீரும்,மழையும் கூடக்
கைவிட்டு விட்டது....

சும்மாயிருக்கும் போது
வீடு அப்படியே சுருட்டி 
உள்ளிழுத்துக் கொண்டது...
கொடிக் கயிறு துணிமணிகள்
கழுத்தை நெறித்தது...

ஒழுங்கற்ற அலமாரிகள் என்னையும் 
உள்ளிழுத்து அடைத்துக் கொண்டது....
குப்புறப் படுத்திருந்த புத்தகங்களும்
பத்திரிகைகளும், தரை விரிப்பும்
கைப்பிடித்துக் கொண்டன...


எத்தனை கவனமாயிருந்தாலும்
சும்மாயிருக்க முடியாமல் 
சிறகசைத்துக் கொண்டேயிருக்கும்
வண்ணத்துப் பூச்சியைப் 
பார்த்துக் கொண்டே

கொஞ்சம் எழுத்துக்களைச் 
சேர்த்தும் பிரித்தும்...
கொஞ்சம் வார்த்தைகளைச் 
சேர்த்தும் பிரித்தும்...
சும்மாயிருக்கவும் முடியாமல் 
தன்னையே உருவாக்கிக் 
கொண்டது இந்தக் கவிதை ...

Friday, December 17, 2010

நானும்......!

ஆற்றோரம் ஒதுங்கிக் கிடக்கும் இறந்த மீனைப்
பார்த்தும் பாராதது போல் .....
கைகோர்த்து நடக்கும் போதும்.....

செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும்
கவிழ் பூக்களின் மேல் பாதம்
பதிக்க நேரும் போதும்....

மரத்தினடியில் கசக்கிப் போட்ட காகிதம்
ஒரு மரம் தன் வரலாறைக்
கூறும் போதும்

கிறீச்சிடும் கதவு போடும்
கூப்பாட்டைக் கேட்டும் கேட்காமலும்
எட்டி உதைத்து மூடும் போதும்....

கண்ணாடிக் குடுவைக்குள்
முட்டி மோதும் மீனின்
குட்டி வாய்க்குத் தேவை
உணவெனத் தூவும் போதும்....

இருட்டுக்கு ஒளியேற்றும்
மெழுகுவர்த்தியின் சோகம் அறியாமல்
விரல் நீட்டி விளையாடும் போதும்....

நீங்களும் என்றேனும் எங்கேனும்
ஒரு சோகப் பாடலை மனதுள்

ஒரு நாள் பாடியிருக்கலாம்....
நானும்......

Sunday, December 12, 2010

தமிழில் சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்களா????

ன்றைக்கு நம்மில் மாற்றுத்திறனாளிகள் பலர் பல்வேறு சாதனைகளை செய்து புகழ்படைத்துள்ளார்கள். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக மதுரையை சேர்ந்த 'அதிதி'( அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை) என்ற அமைப்பு தமிழ்சிறுகதை ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
மாற்று திறனாளிகள் மறுவாழ்வு பற்றிய விழிப்புணர்வு வளரும் நோக்கத்துடன் இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு   -'இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு, மனிதன் கொடுப்பது மறுவாழ்வு'தேர்வு செய்யப்படும் சிறந்த 3 சிறுகதைகளுக்கு பரிசும், பாராட்டும் வழங்கவுள்ளது இந்த அமைப்பு.
மேலும் இது பற்றிய விபரங்களுக்கு
வி.ஆர்.கணேஷ்.
நிர்வாக இயக்குநர்,
அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை.
93441 25161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இயற்கையாகவே மனிதருக்கு இரங்கும் சிந்தனை கொண்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு உஙகள் திறனை வெளிக்கொண்டு வரலாம். எடுங்கள் பேனாவை, எழுதுங்கள் உங்கள் மனவோட்டத்தை.......நன்றி!
நன்றி....விபரங்களுக்கு....

Thursday, December 9, 2010

மழையும் மழை சார்ந்த நிகழ்வுகளும்--2

முகம் நனைக்காமல் சில்லெனத் தூவும் புள்ளி மழை...
புள்ளி வைத்து ஒரு சின்ன வட்டம் போடும் சின்ன மழை.
சுள்ளென்ற தெறிப்போடு ஒரு துளியை உயர வைத்து அதிர்ந்து அடங்கும் ஒரு மழை...வரும் போதே சீறிச் சட்டென ஒரு துளியால் அறைந்து விடும் ஒரு பெருமழை.
மழையினூடே நனைவது ஒருவகை சுகம் என்றால் நனையாமல் மழை சார்ந்த நிகழ்வுகளை ரசிப்பது ஒரு சுகம். அதில் சில...
முதல் துளியைத் தவிர்க்க அவசர அவசரமாய் அத்தனை ஊறுகாய் வாளிகளையும் ப்ளாஸ்டிக் ஷீட்டினால் மூடும் தள்ளுவண்டி வியாபாரிக்கு உதவும் பூக்காரப் பாட்டியைப் பிடித்தது....


தண்ணீரில் சீறி பைக்கில் வந்த தாடிக்காரன் தேங்கிக் கிடக்கும் மழைநீரை ஒட்டி குட்டி ரெயின் கோட் போட்ட பூக்கள் பார்த்து வேகம் குறைத்து மெதுவாகப் போனது பிடித்தது.....

நின்று போன ஸ்கூட்டியைத் தண்ணீருக்குள் தள்ள முடியாமல் அந்தப் பெண் தள்ள ஓடி வந்து உதவிய வாழைப்பழ வண்டிக்காரனைப் பிடித்தது.

ஒரே குடைக்குள் மூன்று பேர் நின்றிருந்தும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த இன்னொரு தோழியை...."நீயும் வாடி" என்று சேர்த்துக் கொண்ட தோழியர் கூட்டம் பிடித்தது....


அக்காவும் தங்கையுமாயிருக்கலாம்....கைகோர்த்தபடி ஒவ்வொரு தண்ணீர்த் தேக்கத்திலும் குதித்து...ஒவ்வொரு மரமாய் உலுக்கி மரமழை அனுபவித்த குட்டீஸை ரொம்பப் பிடித்தது.

"சூப்பரா ஒரு டீ குடிக்கலாம் வாடா" எனத் தோள் மேல் கையைப் போட்டபடி போகும் இளைஞர்களையும் பிடித்தது.....

ஸ்கூட்டரியில் விரைந்த ஒரு ஜோடியின் துப்பட்டா சக்கரத்துக்கு அருகாக பறப்பதைக் கண்ட பைக்கில் போன ஒரு இளைஞன் "ஏங்க உங்க துப்பட்டா....கவனம் என்று போகிற போக்கில் எச்சரித்தது பிடித்தது...


அதைவிடவும் சரியான இடத்தில் நின்று மக்களை ஏற்றி இறக்கிச் சென்ற பேருந்து ஓட்டுநரைக் கூட அன்று ரொம்பப் பிடித்தது...


மழையில் மனிதர்கள் அழகானவர்களாயும் மனிதர்களாகவும் இருந்தது நிரம்பப் பிடித்தது.