நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, June 29, 2009

அவ்வ்ளோதான் ஆட்டம் க்ளோஸ்!!


ஒரு அழகான "பளிச்பின்னால்"... பின்னே என்னாங்க .ஃப்ளாஷ் பேக்" னு சொன்னா ஒரு மாதிரி பேக்கு மாதிரி இருப்பதால் இந்த தமிழாக்கம்...
                                                 நல்லா வெளிச்சம் வரும் வரை தூக்கம்.....அப்புறம் செய்தித் தாளை நிதாஆஆஆஆஆஆஆஆஆஆனமாக மேய்தல்.....ரொம்ப மெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல காலை உணவு தயாரித்தல், அதை விட ரொம்ப மெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல அதைச் சாப்பிடுதல்...அப்புறம் வலை,இணையம்,இன்ன பிற.........என்று அருமையாகப் போய்க் கொண்டிருந்த அந்த சில நாட்கள் ஒரு முடிவுக்கு வந்தே விட்டது....................

                                                          ம்ம்ம்......ஆமாங்க......அவ்வ்ளோதான் ஆட்டம் க்ளோஸ்....இன்னிக்கிலிருந்து ஸ்கூலுக்குப் போகணும்.....ஒருநாள் விட்டு ஒரு நாள் பதிவெல்லாம் போட முடியாது...இனி வாரம் ஒரு பதிவுதான்…..ஓடி ஓடி பின்னூட்டமெல்லாம் போட முடியாது..........பாவம் நீங்கதான்.........என் பதிவை எப்படியெல்லாம் மிஸ் பண்ணப் போறீங்களோன்னு எனக்குக் கவலையாயிருக்குது!!!! வர்ட்டா???

Wednesday, June 24, 2009

யாரைத்தான் நம்புவதோ?????


அவங்க சீமா.எட்டு வருடமாக எங்கள் வீட்டில்தான் வேலை பார்க்கிறாங்க.அப்படியொரு நேரம் தவறாமை,வேலையில் சுத்தம்,அக்கறை...எந்தக் குறையும் சொல்லவே முடியாது.....அவங்களை அவ்வ்ளோ நம்பினோம்....

அவங்கதான் இன்று இதைச் செய்தாங்க.அவங்க பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கும்போது நான் திடீரென்று உள்ளே நுழைந்து விட்டேன் அவங்க பதட்டமாக குப்பையை ஒரு பையில் திணித்துக் கொண்டிருந்தாங்க.....எனக்கு சந்தேகமாக இருக்கவே அங்கேயே நின்று கொண்டேன்.அடிக்கடி குப்பையை அவங்களே கொண்டு வெளியில் போடுவாங்க....அன்று எனக்குச் சந்தேகமாக இருக்கவே குப்பை வண்டிக்காரன் வருவான்...நானே போட்டுக்கறேன்னு சொல்லிட்டேன்.....

அவங்க போனதும் பையைத் திறந்து ஆராய்ந்து பார்க்கையில் ஒரு பை நிறைய அரிசி............
இதற்குக் காரணம் ????
என்னுடைய கவனக் குறைவா?
அவங்களை அளவுக்கதிகமா நம்பியதாலா?
இப்போ என்ன செய்வது?
எட்டு வருட உழைப்பைப் பற்றிக் கவலைப் படாமல் அவங்களை வேலையை விட்டுத் தூக்குவதா?
இல்லை அவங்களைக் கூப்பிட்டு நீங்க செய்தது எனக்குத் தெரிந்து விட்டது...இனி அப்பிடிச் செய்யாதீங்க எனச் சொல்வதா?
இல்லை எதுவுமே சொல்லாமல் அவங்களை வேலையைத் தொடரச் சொல்லி விட்டு இனி அவங்களைக் கண்காணிப்பதா?
ஒரே குழப்பமும் வருத்தமும்..........

Monday, June 22, 2009

இயல்புக்கு மாறாக ........

அதிகாலை பெய்த
அந்தப் பெருமழையில்
உதிர்ந்து கிடந்த
இலையும் பூக்களும் திடீரென்று
நீந்தக் கற்றுக் கொண்டன

அடை மழையின் பெருந்துளிகளால்
உறங்கிக் கிடந்த
நீர்க் குமிழிகள் சட்டென்று
விழித்துக் கொண்டன

துரத்திப் பிடித்து நெடுநாளாய்
அடைத்து வைத்த வண்ணத்துப் பூச்சி
விடுவித்த அன்று
பறக்க மறந்து போயிருந்தது.....

இயல்புக்கு மாறாக ..............
அடித்துப் பெய்யும் மழையில்
குடை வைத்துக் கொண்டு
நனைந்து போகும் என்னைப்
பரிதாபமாகப் பார்த்தார்கள்
அவர்கள்!!

Friday, June 19, 2009

ரயில் பயணங்களில்.....3.....(T.T.E கடவுளுக்கே அல்வாவா??)

நீண்ட தூர ரயில் பயணங்களில் இப்போல்லாம் சைட்லெ இருக்கும் ரெண்டு பெர்த்தை மூன்றாக மாற்றியிருக்கிறார்கள்.......அதனால் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.........ஏறும் போதே டிக்கெட்லே உள்ள நம்பரும் சார்ட்லெ உள்ள நம்பரும் வேற வேற..ட்ரெயின் நம்பர் ப்ளேட்லெ ஒரு வரிசை...பக்கத்துலேயே வேற ஒரு வரிசை கருப்பு மார்க்கரினால் எழுதியிருந்தது...சரி ஏதுக்கும் சார்ட்லெ உள்ள நம்பர் படியே உட்கார்ந்து கொள்ளலாம்னு உட்கார்ந்தோம் ....பத்தே நிமிஷத்திலே ஒரு குடும்பம்......
"இது எங்க சீட்"
"இல்லைங்க சார்ட் படி எங்க சீட்"
"அட டிக்கெட்லெ இந்த நம்பர் எங்க சீட்ங்க"
"இல்லீங்க மூன்று பெர்த் மாற்றினதுனதுனாலே வந்த குழப்பம்ங்க...T.T.E வந்த பின்னாலெ மாற்றிக் கொள்ளலாம்ங்க"
இல்லைங்க பின்னாடி பிரச்னை வரும் நாங்க டிக்கெட் நம்பர் படியே உட்கார்ந்துக்கிறோம்...நீங்க உங்க சீட்டுக்குப் போங்க!...
மறுபடி மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக்கிட்டு....ம்ம்ம்
T.T.E வந்தார்...
என்னங்க சார்ட்லெதான் நம்பர் தெளிவா இருக்கே...அதுபடி உட்காரலாமே??
உங்க சீட் ஐந்து சீட் தள்ளி...அங்கே ...அங்கே போங்க....
"நாங்க சரியாதான் உட்கார்ந்தோம் சார்...ஆனால் ......"
எங்க காதிலே வாங்கறார்???
" பார்த்தா படிச்சவங்களா இருக்கீங்க!! இப்படி..." ஏதோ முணுமுணுத்துக் கொண்டே போனார்....
மறுபடி மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக்கிட்டு....ம்ம்ம்
ஒருவழியா T.T.E யின் வாக்கை வேத வாக்கா நினைச்சு அந்தக் குடும்பமும் மாறி உட்கார்ந்தது....
கோட்டா வந்தது சுமார் 12:30 மணிக்கு....அசந்து தூங்கிட்டு இருந்தோம்
ஒருவர் வந்து "சார் இது எங்க சீட்...எழுந்திருங்க......."
சார்ட் படியா.....டிக்கெட் படியா???
டி.டி அலாட் பண்ணியிருக்கார்ங்க"
"எந்த T.T.E ??"
"இது எங்க சீட்டுப்பா"
அவர் ஓடிப் போய் டி.டி கடவுளைக் கூட்டி வந்தார்.பதறிய படி வந்த T.T.E கடவுள் அடடா பழைய நம்பர் படி அலாட் பண்ணிட்டேன்....சாரி சாரி...... கொஞ்சம் குழம்பிட்டேன் "என்றபடி ஈஈஈஈஈஈஈஈஈஈஈன்னு இளித்தார்............................T.T.E கடவுளுக்கே குழப்பம்னா சாதரண பக்தர்கள் குழம்ப மாட்டாங்களா??????

Tuesday, June 16, 2009

இந்தப் பரீட்சைப் பேப்பரை நீங்கதான் திருத்துங்க!!

முன்குறிப்பு: இது எங்கள் பள்ளி மாணவர்களின் பேப்பர் அல்ல!!!
யார் பாவம் நாங்களா? மாணவர்களா?இதைத் திருத்தப் போகும் நீங்களா???


விரிவு படுத்துக!!!!!

விடை சரிதானே ?????!!!!!
கண்டு பிடிச்சாச்சு X!!!!!

Friday, June 12, 2009

நூறாவது பதிவும்......." T "புதிருக்கு விடையும்!!!!


விடை....மொத்த T எண்ணுங்க!!! TEN T---TENT!!!!
எப்பிடீஈஈஈஈஈ?????

முதல் முதலா பதில் சரியா சொன்னவங்க ஒரே ஒருத்தருதான்...அதுவும் புதுசா இந்தப் பக்கம் முதல் முதலா வந்தவங்க..........meproteus
அப்புறம் .....கௌரி,ராமலக்ஷ்மி,சுபாங்கன்,மின்னுதே மின்னல்,shirdi!!!!

ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு வால் இருந்துச்சாமே அது போல ........வலைப் பூ ஆரம்பித்த காலத்தில் எழுதியவையெல்லாம் புரட்டிப் பார்க்கும் போது....அய்யே...எப்பிடில்லாம் எழுதியிருக்கிறோம்னு ( அட இப்போ கூடத்தான்) வருந்தியிருக்கிறேன்...(வருந்துகிறேன்) ஒரு வழியா 100 பதிவு போட்டாச்சு....102 பேர் பின்தொடருகிறார்கள்( ஐயோ பாவம்ங்க)

50-வது பதிவை எனக்கே டெடிகேட் செய்து என் வலைப்பூவில் எனக்குப் படித்த பதிவுகள் பற்றி எழுதினேன்......
சரி இந்தப் பதிவை யார்க்கு டெடிகேட் பண்ணலாம்னு யோசிச்சேன்....
வலையுலகத்துக்கு????
வலைப் பதிவர்களுக்கு??
பின்னூட்டம் போட்டு என்னை வளர்த்தவர்களுக்கு???
பின்னூட்டம் போடாமல் அமைதியாக என்னை ஆதரிப்பவர்களுக்கு.???
சரி சரி....இதுக்குப் பின்னூட்டம் போடுங்க உங்களுக்கே டெடிகேட் பண்ணிடறேன்!!!!!ஹி...ஹி...

டிஸ்கி1: 50-வது பதிவுக்கு 50 கமென்ட் போட்ட சாம் தாத்தா said...
"அதுக்காக 100-வது பதிவுக்கு, 100 கமெண்ட் வேணும்னு கேக்கப் படாது! ஆமா?" அப்படீன்னு அதனாலே கேக்கலை!!!!

டிஸ்கி2: அதனாலே கமென்டே வேண்டாம்னு அர்த்தமில்லே!!!

Thursday, June 11, 2009

இந்திய வலைப் பூக்களில் முதல் முறையாக !!!!!


இந்திய வலைப் பூக்களில் முதல் முறையாக இப்படி ஒரு பதிவு/இடுகை!!!!!

கதையும் படிக்க மட்டீங்க!!!!!
கவிதையும் பிடிக்காது...
அறிவுரையும் பிடிக்காது...
கட்டுரையும் பிடிக்காது .....
உபயோகமா ஏதாவது சொன்னாலும் படிக்க மாட்டீங்க!!
அப்புறம் என்னதான் எழுதுவது?
அதான் இப்படி!!இது ஒரு ஆங்கில வார்த்தை....பதில் சொல்பவர்களுக்கு 100 பின்னூட்டம் இலவசம்!!!!!!

Tuesday, June 9, 2009

அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்......

உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டிக்கான கதை


எல்லா நாளும் நட்சத்திரம் அழகாய்த் தெரிவதில்லை.இன்றும் அப்படித்தான். எனக்கு அழகாய்த் தெரியவில்லை .என்னால் அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.அப்பாவின் கண்களை நேருக்கு நேர் சந்திக்கத் தைரியமில்லை.அப்பா நண்பர்களின் கேள்விக்குப் பயந்து லீவ் போட்டுவிட்டார்..அம்மாவும்தான்....

தொலை பேசிச் சத்தம் என்னை நடு நடுங்கச் செய்கிறது..இன்றைக்குன்னு பார்த்து எல்லோருக்கும் அவ்வ்ளோ அக்கறை...........கதவை மூடிக் கொண்டாலும் ஓயாமல் விசாரிக்கும் பக்கத்து வீட்டு நலம் விரும்பிகள்?????

சரி இன்றோடு முடியப் போகிறதா? நாளை??? கதவைத் திறந்துதானே ஆக வேண்டும்.அம்மாவும் அப்பாவும் ஆஃபீசுக்குப் போகத்தானே வேண்டும்.என்னால் எவ்வ்ளோ கஷ்டம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்....கட்டுப் படுத்த முடியாமல் கண்ணீர் கொட்டியது.

ரெண்டு பேரும் என்னைப் போட்டு நாலு அடி அடித்திருந்தாலும் நல்லாயிருந்திருக்கும்.ஆனால் இப்படி அமைதியா இருக்கறதுதான் என்னைக் கொல்லுது.....
அம்மா அம்மம்மாவிடம் ஃபோனில் சொல்லிக் கொண்டிருந்தாங்க" நான் ஒண்ணுமே சொல்லலைம்மா....அவன் வழியில் விட்டுட்டேன்" அப்படீன்னு.....
அவ்வ்ளோதானா? கணக்கில் அந்த ஐந்து மார்க் கிடைக்காமல் நான் ஃபெயிலாகியதால் என் வாழ்க்கை இன்றோடு முடிந்ததா?அந்த ஐந்து மார்க் ஏன் என் வாழ்வை முடிக்க வேண்டும்?...நானே முடித்துக் கொள்கிறேன்.....ஆமா அது ஒன்றுதான் வழி...... நான் பரீட்சைக்குப் படிக்கும் போது பால் ஜூஸ்னு தந்த அம்மா இன்னிக்கு சாப்பிட வான்னு கூட சொல்லலியே? வாழ்நாள் முழுக்க இப்படி மௌனமா சாவுறதுக்கு ஒரேயடியாச் செத்துப் போறதுதான் நல்லது......அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்......

யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது."அவன் ரூமில் இருக்கான்"னு அம்மா சொன்னாங்க. நான் கண்களை இறுக மூடி தலையணையில் முகம் புதைத்துக் கொண்டேன்.......... "நான் யாரையும் எப்படிப் பார்ப்பேன்???உலகமே இருண்டு விடக் கூடாதான்னு இருந்தது.....

அப்பாவும் அம்மாவும் மெல்லிய குரலில் ஏதோதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள்
"ஸ்கூல் ரிசல்ட் எப்படி??
"இவனாலெ பாஸ் பெர்சென்டேஜ் குறைந்திருக்குமே??"
"உங்க ஸ்கூல் பேரைக் கூட நாசமாக்கிட்டானே'
" 100% ரிசல்ட் இவனாலே போச்சே" "உங்க பள்ளியில் 100% ரிசல்ட் வரும்கிற பேரைக் கூடக் கெடுத்துட்டானே" வந்திருப்பவர் ஸ்கூல் ப்ரின்ஸிபல்தான்...எங்க வீட்டுக்கு அடுத்த வீடுதான் ......ஸ்கூல் ரிசல்ட் மேல் உயிரையே வைத்திருப்பவர்...
"கடவுளே! நான் எப்படி அவங்க முகத்தில் முழிப்பேன்...ஏதாவது செய்து அவங்களை இங்கிருந்து போக வைத்துவிடு.....அல்லது என் உயிரை எடுத்து விடு...தலையணையில் முகம் புதைத்து தன்னிரக்கத்தில் அழுதேன்...
இவராவது பரவாயில்லை கணக்கு ஆசிரியரை எப்படி சமாளிக்கப் போகிறேன்??? "என் சப்ஜெக்ட்லெ யாராவது ஃபெயிலாகினீங்க அவ்வ்ளோதான் உயிரை எடுத்துவிடுவேன்னு மீசை முறுக்கிக் கொண்டே மிரட்டியது கண்முன் வந்து போனது....

கோச்சிங் வகுப்பு ரமண் சார் அவரோட பேரே போச்சேன்னு கத்தப் போறார்...வகுப்பில் சேர்வதற்கு முன்பே பையன் ஆவரேஜ் சேர்த்துக்க மாட்டேன்னு அடம் பிடிச்சார்... ம்ம்ம் எல்லாம் இன்னிக்கு மட்டும்தான்....அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்....இன்றோடு என்னை முடித்துக் கொள்கிறேன்.....

மறுபடியும் யாரோ வந்திருக்காங்க........
அம்மா மெதுவாக "காலையிலிருந்து ரூமை விட்டு வெளிலெ வர்லெ.....உங்களையெல்லாம் எப்பிடிப் பார்ப்பான்?...அப்புறமா வா அருண்"
"இல்லை ஆன்டி நான் அவனைப் பார்க்கணும்.....ரொம்ப அப்செட் ஆகியிருப்பான்...நான் பார்த்துட்டே போறேன் ஆன்டி....."
"சொன்னாக் கேளு அருண்.....நீங்கல்லாம் அவன் நண்பர்கள்தானே???புத்தி சொல்லிப் படிக்க வச்சுருக்கலாம்லெ???அதை விட்டுட்டு இப்போ வந்து என்ன ஆறுதல் சொல்லப் போறீங்க??? போங்க.....போங்க" அம்மா வேணும்னே சத்தமாகச் சொல்வதாகப் பட்டது....
எனக்கு அருணிடம் மட்டுமாவது பேசவேண்டும் போல இருந்தது.......

அம்மா அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் போச்சு....நண்பர்கள் எல்லோரும் என்னை விட்டு விலகி விடுவார்கள்......எல்லோரும் காலேஜ் போய் விடுவார்கள்...நான்???

டி.வி யில் அந்த மாணவி முதல் மதிப்பெண்...இந்த மாணவி இரண்டாவது மதிப்பெண்...என்று நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்...அவங்க வீட்டில் எல்லாம் கேக்கும் கொண்டாட்டமுமாக இருந்தது......எனக்கு மட்டும் ஏன் இப்படி?

குட்டிம்மா ஏதோ படம் வரைந்து கொண்டிருந்தது...அம்மா அப்பாவின் நடவடிக்கையால் அதுக்கும் கூட ஏதோ புரிந்தது போல பக்கத்திலேயே வராமல் ஏதோ படம் வரைந்து கொண்டிருந்தது.....குட்டிம்மா மாதிரியே இருந்திருக்கலாம் போல....ரிசல்ட் .மார்க்,பெர்ஸென்டேஜ் இப்படி எந்தப் பிரச்னையும் இல்லாம இருந்திருக்கலாம்....

குட்டிம்மா தான் வரைந்த பாப்பா படத்தை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் போனது...கண்ணைக் கசக்கியது...
"ம்மா......படம் நல்லால்லை தண்ணீ கொட்டிருச்சு.......படம் நல்லால்லை"
இல்லைடா செல்லம்...போனாப் போட்டும்டா செல்லம்....அடுத்த தடவை நல்லா வரை சரியா? அழாதேக் குட்டிம்மா" என்றாள்

குட்டிம்மா படத்தை எடுத்துக் கொண்டு அப்பாவிடம் போனது
"சூப்பரா இருக்குடா..... இல்லைப்பா நல்லால்ல...
"இல்லைக் குட்டிம்மா நல்லாதாண்டா இருக்கு.... "
"ம்ம்ஹுமஹஹும் ...... "
"சரிடாக் குட்டி அடுத்த தடவை குட்டிம்மா அழகா வரையுமாம் சரியா???
"அம்மா நான் கூட அடுத்த தடவை நல்லா படிச்சு நல்லா எழுதறேம்மா.....எங்கிட்டே பேசுங்கம்மா...."

"அப்பா அடுத்த தடவை நான் பாஸாகிடுவேம்பா எங்கிட்டே பேசுங்கப்பான்னு" மனசுக்குள்ளே கத்தறேன்....கத்த நினைத்ததாலே தொண்டை வலித்தது........கண்ணில் மறுபடியும் நீர் கொட்டியது....
குட்டிம்மா படத்தை என்னிடம் கொண்டு வந்தது....
அம்மா அதற்குள் கத்தினாங்க ... "குட்டிம்மா சாப்பிட வா"
குட்டிம்மா"சாப்பிடலாம் வா குட்டிப்பா "என்றது.....
அவள் என்னைக் குட்டிப்பா என்றுதான் அழைப்பாள்...குட்டிம்மா கையைப் பிடித்ததும்..துக்கம் தொண்டையை அடைக்க குமுறிக் குமுறி அழுதேன்.... அம்மா என்னைக் கூப்பிடவில்லை...... ஏதோ சாப்பிட்டேன்.

அம்மா மறுபடியும் "குட்டிம்மா வா தூங்கலாம்"என்று கூப்பிட்டாங்க... குட்டிம்மா தூங்கப் போகாமல் படம் வரையப் போனது.......... "ஏண்டா செல்லம்? தூங்கலாம் வாடா...ஏன் வரமாட்டேங்கிறே?"
"போம்மா .....நல்லா அழகா பாப்பா படம் வரைஞ்சுட்டு வர்றேன்மா அப்புறம்தான் தூங்கணும்" என்று மீண்டும் படம் வரைய உட்கார்ந்தது....
அம்மாவும் அப்பாவும் தூங்கியதும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெளிவாகியிருந்தது இப்போது........புத்தகப் பையை ஒரு உறுதியுடன் எடுத்துக் கொண்டேன்.

Thursday, June 4, 2009

என்னைக் கண்டுபிடித்தேன்!!!!!!

இந்தப் பதிவு விகடன் good blog listலெ!!!!!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஏரலில் உள்ள அருணாசலேஸ்வரக் கடவுளின் மேல் அம்மம்மாவிற்கு உள்ள அதீத விருப்பத்தினால்.....

ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப!

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

நான் ரொம்ப அழுமூஞ்சி!!! ரொம்ப சென்சிடிவ்...........நேற்றுக் கூட அழுதேன்...
காரணம் எல்லாம் கேக்காதீங்க.....அடச்சே!ன்னு சொல்லிடுவீங்க!

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப

4. பிடித்த மதிய உணவு என்ன?
வேற யாராவது சமைச்சுப் போட்டா எதுன்னாலும் ரொம்பப் பிடிக்கும்!!!!

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இல்லை.....வாங்க பழகலாம்ங்கிற டைப்!!!....கொஞ்சம் பழகிப்ப் பார்த்தபின்தான் நட்பு எல்லாம்............

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம் - என்னுடைய கடின உழைப்பு,

பிடிக்காத விஷயம் - அழுகை, கோபம்

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம் - அவரின் பொறுமை

பிடிக்காத விஷயம் - அதே அதீதமான பொறுமைதான்

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அப்பா......அம்மா அக்கா தம்பி தங்கை எல்லோரும்.........எப்போதும் நான் மட்டும் ஜெய்ப்பூரில் தனியாக இருப்பது போல ஒரு உணர்வுண்டு எனக்கு......

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

அட இப்பிடில்லாம் எப்பிடிப்பா கேக்க முடியுது????

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்ப்பது கணினியின் திரையை....

கேட்பது "விழிகளின் அருகினில் வானம்".....பாட்டு

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு.

14. பிடித்த மணம்?

மழை மண் வாசனை, மல்லிகை

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

1.ராஜேஸ்வரி
....எது எழுதினாலும் ஒரு ரசனையோடு
எழுதுவாங்க...அதனாலெ..!!!
2.டோன்'லீ......ரொம்ப நாளா எதுவும் எழுதாமல் இருப்பதால்!!!


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

இரண்டு பேர் என்னை அழைத்துள்ளனர்.

சஞ்சய் - நிறைய டமாசா எழுதுவார்.....
எனக்குப் பிடித்தது இதுதான்
வழிப் போக்கன்----குட்டிப் பையன்...இப்போ மார்ச் மாதத்திலிருந்துதான் எழுதுகிறார்.அதில்
எனக்குப் பிடித்தது இதுதான்

17. பிடித்த விளையாட்டு?

tennikoit ரிங்க் (இப்போ நிறைய பேருக்கு இது என்னன்னு கூடத் தெரியாது) . காலேஜ் டேஸ்ல காலேஜ் ப்ளேயராக்கும்

18. கண்ணாடி அணிபவரா?
அட!! போடலைன்னா வெறும் கோடுதான் தெரியும்!!


19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மனதைப் பாதிக்கும் படங்களும்.......த்ரில்லர் படங்களும்,

20. கடைசியாகப் பார்த்த படம்?

தியேட்டரில்...... சிங் இஸ் கிங்! வீட்டில்.......அந்தாஸ் அப்னா அப்னா!

21. பிடித்த பருவ காலம் எது?

மழைக் காலம், ஆரம்ப காலக் குளிர் காலம்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
Killing me softly by Nicci french

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு
நாள் மாற்றுவீர்கள்?

எப்பவாவதுதான்...அந்த வேலையை என் குட்டீஸ்பார்த்துக் கொள்கிறார்கள்

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் சிட்டுக் குருவிகளின் கீச்!!! கீச்!!! கீச்!!!
பிடிக்காத சத்தம் குறட்டைச் சத்தம்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

ஜம்மு வைஷ்ணவி தேவி கோவில்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித்திறமைன்னு எதுவும் தெரிலை.....வரைதல்,பெயின்டிங்,எழுத்து,டான்ஸ் கோரியோக்ராஃப், ட்ராமா தயாரிப்பதுன்னு எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்..........எந்த வேலைன்னாலும் ஒழுங்கா கொடுத்த நேரத்துக்குள்ளே செய்து கொடுத்து விடுவது தனித்திறமைன்னா.....ஹி ஹி.... உண்டு

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

எனக்குப் பிடிச்சவங்க எங்கிட்டே பொய் சொன்னால்..............

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அருவி,கடல்,ஆறு,பனி இப்படி தண்ணீர் இருக்கும் எல்லா இடமும்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எந்த இடத்துலே இருந்தாலும் "The Best" ஆக இருக்கணும்னு ஆசை....


31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

தோழிகள் கூட ஷாப்பிங்!!!!

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா
!!!!!

Monday, June 1, 2009

அச்சச்சோ எனக்கு வந்த சோதனை!!!!!

ஒரு விடுகதை....
எப்போ வரும்னு தெரியாது
என்னா பண்ணும்னும் தெரியாது
முழுசா ஆக்கிரமித்து விடும்
ஒண்ணுமில்லாமப் பண்ணிடும்
மனுஷனை லூஸாக்கிடும்.....
வேலை பார்க்கவிடாது...
அழுகை அழுகையாய் வரும்....
வந்தால் அதே நினைப்புத்தான்
கொஞ்சம் கொஞ்சமாய்
அழித்துவிட்டுத்தான்
நிம்மதி!!!!

என்னா பதில் காதல்னுதானே
நினைச்சீங்க???
தப்பு! தப்பு!! தப்பு!!!
கம்ப்யுட்டர் வைரஸ்!!!!!!

டிஸ்கி!:
கொஞ்ச நாளா என் வலைப் பூவைத்
திறப்பதில், படிப்பதில்,
பின்னூட்டமிடுவதில் கொஞ்சம் சிக்கல்!!!
என் பதிவுகளைப் படிக்க முடிகிறதா?
பின்னூட்டம் போட முடிகிறதா?
சொல்லுங்க ப்ளீஸ்!!!