நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, August 23, 2010

மன்னிக்க வேண்டுகிறேன்--1

இரவு ஏழு மணிக்காகக் காத்திருப்போம்.அப்போதானே பெட்டிக் கடை மொட்டைத் தாத்தா விளக்கேத்துவார்.சின்னதா ப்ரௌண் கலர் க்ளைகோடின் பாட்டிலில் துணித்திரி போட்டு ஒரு அலுமினியப் பெட்டி மேல வச்சு அவ்வ்ளோ புகையாக்கிக் கொண்டிருப்பார் கடையை ...அப்புறமா பூதங்களாகிய நாங்க வெளியே கிளம்புவோம்.வேறொண்ணுமில்லை.வீட்டில் மாம்மை கொடுத்த பழங்காலத்து செப்பு நாணயங்கள்.....ராஜா, ராணி படம் போட்ட செல்லாத காசு...ஆனால் அதைச் செல்ல வைக்கணுமே.அதுக்கு தேர்ந்தெடுத்த நேரம்தான் இரவு ஏழு மணி.அவர்கிட்டே சூப்பரான கல்கோணா மிட்டாய் கிடைக்கும்.ஒரு மணி நேரம் ஆனாக் கூட கரையவே கரையாது......அந்தச் செல்லாத செப்புக் காசை 25 பைசாவாக நினைத்து 5 கல்கோணா கொடுப்பார்.ஆனாலும் அவ்வ்ளோ சீக்கிரம் கொடுத்து விடமாட்டார்.......விளக்குப் பக்கத்தில் காசை வைத்துக் கொண்டு புரட்டிப் புரட்டி ஐந்து தடவையாவது பார்ப்பார்.

ஆனாலும் கண்டு புடிச்சதேயில்லே.....சந்தோஷத்தில் வீடு அதிரும்.ஏமாத்துறொம்னு கொஞ்சம் கூட உணர்வேயில்லாத வயசு.தினம் தினம் இப்படிச் செல்லாத செப்புக் காசுகள் தீரும் வரைக்கும் தினம் தினம் கல்கோணாதான்.யோசிச்சுப் பார்த்தா பாவமாயிருக்கு இப்போ....

அப்புறமா பதின்ம வயதில் பெரிய மேதாவித் தனத்தைக் காட்ட அப்போதுதான் கற்றுக் கொண்ட ரூபா நோட்டை வெயிலில் உயர்த்திப் பிடித்து ஒற்றைக் கோடு பார்த்துக் கள்ள நோட்டு நல்ல நோட்டுக் கண்டு பிடிக்கும் உத்தியைப் பரிசீலிக்கும் ஆர்வத்துடன் அப்பா முன்னிலையில் வீட்டுக்கு வந்த டோபியின் முன்னால் செய்ய...."நல்ல நோட்டுத்தான் பாப்பா" அப்படீன்னு அவர் சொல்லச் சொல்லத் திரும்பவும் வெயிலுக்கு நேரே உயர்த்திப் பிடிக்க அப்பா சொன்னது

"நோட்டை உயர்த்திப் பிடித்து மனுஷனைக் கீழே தள்ளாதீங்கப்பா...."

தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றியதற்காகவும், மனதை நோகடித்ததற்காகவும் இருவரிடமும் மன்னிக்க வேண்டுகிறேன்.

Tuesday, August 17, 2010

மழையும் மழைசார்ந்த நிகழ்வுகளும்--2.

தேங்கிக் கிடக்கும் மழை நீரில்.........

முகம் பார்த்துக் கொண்டது மரம்...
பூ உதிர்த்து அழகு பார்த்தது செடி...
விழுந்து கிடந்தது வானம்....
குனிந்து அலகால் நீர் குடித்தது குருவி....
கத்திக் கப்பல் விட்டான் பையன்...
கல்லெறிந்து ஆனந்தித்தான் இன்னொருவன்..
குதித்துத் தண்ணீர்ச் சிதறியடித்தாள் சிறுமி.....
அத்தனையும் நிமிடத்தில் கலைத்து
விர்ரெனச் சீறிப் பறந்தான் பைக் இளைஞன்....

மழையின் நினைவாக வீட்டுக்கு எடுத்துச் செல்ல
உடையின் ஈரம் மட்டுமே மிஞ்சியிருந்தது...
பாதம் பதித்த ஈரம் சொல்லியது
வீதியில் பெய்த மழையின் மீதி கதையை!!

Monday, August 2, 2010

எனக்கெனவும் ஒருநாள்!

புதுக் காலண்டர் வாங்கி
அம்மாவுக்கு ஒன்று
அப்பாவுக்கு ஒன்று
காதலுக்கு ஒன்று
அக்கா,தங்கை,
தம்பி,அண்ணன்
இன்னும் பொங்கல்,தீபாவளி,
தண்ணீர்,மகளிர், சுதந்திரம்
அது இதுவெனவும்
நண்பர்களுக்கும் ஒன்றெனப்
பிரித்துக் கொடுத்த பின்
மிஞ்சிய அட்டையை
முன்பின் திருப்பிப் பாவமாய்
எனக்கெனவும் ஒருநாள்
கொடுங்கப்பா!
என்று சிரித்துக் கொண்டேன்!