நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, July 28, 2011

எழுத ஆசைப்படுறவங்கல்லாம் எழுதுங்கப்பா!!

1.நீங்கள் விரும்பும் 3 விஷயங்கள்.
நிறைய இருக்குப்பா!
இரவு நேர மொட்டைமாடியில் பாட்டு,
சாரலடிக்கும் மழை,
நீண்ட பயணம் !

 
2. விரும்பாத 3 விஷயங்கள்:
முடியவே முடியாத சீரியல்கள், காலை நேரத்து அலார்ம், மீட்டிங் நடுவில் வித விதமான பாடலுடன் ஒலிக்கும் மொபைல் ஃபோன்...

3. பயப்படும் 3 விஷயங்கள்:
பல்லி,உயரம்,ஹாஸ்பிடல்

4. உங்களுக்குப் புரியாத 3 விஷயங்கள்:
அரசியல், பின் நவீனத்துவம், சில நேரம் சில விஷயங்கள் நடக்கும் போது இது அப்படியே ஏற்கெனவே நடந்தது போல் தோன்றுவது!!

5.உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்:
தொலைபேசி,பேனா,கணினி!

6. உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்:
கிச்சுகிச்சு!அரசியல்வாதிகளின் பேச்சு,பசங்க அடிக்கிற லூட்டி!

7. தாங்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்:
செய்தப்புறம் சொல்றேனே! அதனாலே இந்தக் கேள்விக்குப் பாஸ்!!

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்:
ஆசிரியர்களை ஊக்குவிக்க ஏதாவது எழுதணும்.
இரண்டு அனாதைக் குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்க வேண்டும்.
ஒரு கப்பல் பயணம்.


9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்:
அட! அதென்ன மூணு! நிறைய இருக்கு!

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்:
பொறுமை,தியானம்,யோகா!!

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்:
நான் சமைக்காத எதுவும்!
யாராவது சமைச்ச எல்லாமும்!
அம்மா சமைக்கும் எல்லாமும்!


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்:
No,முடியாது,நாளைக்கு!

13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்:
அய்யோ இது அப்பப்போ மாறிட்டேயிருக்குமே! மூட் ஸ்விங் மாதிரி!!

14. பிடித்த 3 படங்கள்:
மூணே மூணு படப் பேரெல்லாம் எப்பிடிச் சொல்றது? நிறைய பிடிக்குமே!

15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்:
ஹிஹிஹி! காற்று,நீர்,உணவு ஹிஹிஹி!

16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேரு:
யாரைக் கூப்பிட்டாலும் எழுதப் போறதில்லை! எதுக்கு வம்பு? எழுத ஆசைப்படுறவங்கல்லாம் எழுதுங்கப்பா!!

Wednesday, July 6, 2011

இந்தத் தலைமுறையினை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை :(

            அவள் பெயர் சாரிகா. பத்தாவது வகுப்பு. மைதா மாவு வெள்ளையில் எல்லாப் பெண்களும் இருக்கையில் கொஞ்சம் கறுப்பாக சுமாரான அழகாய் இருப்பாள். அவள் வகுப்பில் நான் எந்தப் பாடமும் நடத்தவில்லை.அப்பப்போ வாழ்வியல் கல்விக்காக (life skill) ஏதாவது ஒரு ஆசிரியை வராத போது செல்லும்போது வகுப்பில் அவளைப் பார்த்ததுண்டு.
                               ரொம்ப துடிப்பாக ஆர்வமாகப் பதில் சொல்வதிலும் கலந்து பேசுவதிலும் சிறப்பானவள்.செல்ஃப் இன்ட்ரோ கொடுக்கச் சொல்லும் போது ரொம்பத் தெளிவாக அவளது பலவீனம் ஸ்போக்கன் இங்கிலிஷ் எனவும் பலம் தவறு என்று தெரிவதை யாரானாலும் சுட்டிக்காட்டுவது எனவும் சொன்ன போது வித்தியசமாகவும் தெளிவான சிந்தனையுள்ளவளாவும் தெரிந்தாள்.வகுப்பு நேரம் முழுவதும் கலகலவென எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பாள்
                            கொஞ்ச நாட்களாக ஒரு மௌனத்துக்குள் போய் விட்டாள். இந்த வயதில் அடிக்கடி இப்படி மூட் ஸ்விங்க் வருவது சகஜம் என நினைத்து வகுப்பினூடே கவனிக்காதது போல் விட்டு விட்டேன். இடையிடையில் வகுப்பின் முடிவில் உங்களுக்கு எல்லோர் முன்னிலையில் தெரிவிக்க முடியாத பிரச்சினைகள் இருப்பின் எழுதிக் கொடுக்கலாம் என்று சொல்வதுண்டு. அநேகமாக படிக்க முடியவில்லை, கான்சென்ட்ரேஷன் குறைகிறது போன்ற பிரச்சினைகள்தான் வருவதுண்டு.
                              அன்று அவள் கொடுத்த தாளில் இருந்த பிரச்சினை என்னைத் திகைக்க வைத்தது. " என்னை நீரஜ் கொன்று விடுவானோ என்று பயமாக இருக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள்" என்றிருந்தது. ஒரு கணம் உடல் அதிர்ச்சியில் அதிர்ந்தது. அவளை ஒருமுறை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அங்கிருந்து சென்றுவிட்டேன். அப்படியென்ன பிரச்சினையாக இருக்கும் என்று ஒரே கவலை. என் அறைக்குள் போனவுடன் பியுனை அனுப்பி சாரிகாவை அழைத்து வரச் சொன்னேன்.
                           விஷயம் இதுதான். ஒருநாள் நீரஜ் வகுப்பிற்கு மொபைல் கொண்டு வ்ந்திருக்கிறான்.அதைத் தெரிந்து கொண்ட சாரிகா எப்பவும் போல "நீ செய்தது தப்பு உடனே இதை வகுப்பாசிரியரிடம் கொடுத்து விடு" என்று எடுத்துக் கூற நீரஜ் மறுக்க இந்தப் பெண் வகுப்பாசிரியரிடம் நீரஜ் மொபைல் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறாள். அங்கே ஆரம்பித்திருக்கிறது பிரச்சினை.

                               ஏற்கெனவே படிப்பில் நீரஜ் முன்னணியில் இருந்திருக்கிறான். சாரிகா இந்த வருடம் சேர்ந்த மாணவி. வந்த சில நாட்களிலேயே படிப்பில் எல்லா ஆசிரியர்களின் வாயிலும் சாரிகா சாரிகாதான். ஏற்கெனவே இந்தக் காரணத்தினால் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த நீரஜ், மொபைல் கொண்டு வந்ததைக் காட்டிக் கொடுத்தவுடன் மனதில் வன்மம் அதிகமாக தினமும் ஒரு கடிதத்தைக் கம்ப்யுட்டரில் டைப்படித்து சாரிகாவின் பையினுள் வைத்திருக்கிறான்.

                 அதில் வரும் வாசகங்கள் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மனதை ரணமாக்கும் வார்த்தைகள். சாரிகாவின் அப்பாம்மாவைத் தவறாகச் சித்தரிக்கும் வாசகங்கள். நாளைக்கு உன் பையிலிருந்து தவறான புத்தகங்கள் ஆசிரியரால் கண்டு பிடிக்கப் படும் என்றும் நீ அனுப்பியதாகத் தவறான் வாசகங்கள் கொண்ட எஸ்.எம்.எஸ் ஆசிரியரின் பார்வைக்குப் போகுமென்றும் கடிதம் வைத்தவன் அதிர்ச்சி தருவதாக "இன்று நீ உயிரோடிருக்கும் கடைசி நாள் "என்றும் ஒரு கடிதம் வைத்திருக்கிறான் .

                   அவ்வளவையும் யாரிடம் சொல்வதெனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறது இந்த அப்பாவிப் பெண் சாரிகா. அம்மா அப்பாவிடம் சொன்னால் என்ன ஆகுமோ என்று பயம். வகுப்பாசிரியரிடம் கூடக் கூற முடியாத பயம். தினம் வகுப்பிற்குப் போனாலும் தூர நின்று பாடம் மட்டுமே நடத்தும் வகுப்பாசிரியரின் தவறும் கூட இந்தப் பிரச்சினைக்குக் காரணமாயிருக்கலாம் .
              இவ்வ்ளோ சின்ன வயதில்  மனதிற்குள் இவ்வளவு வெறுப்பு எங்கிருந்து வந்தது? இதற்குக் காரணங்கள் என்று எவையெல்லாவற்றையும் யார் முன்னால் எடுத்து வைப்பது ? இப்படியெல்லாம் ஒரு பெண்ணை மனக் கஷ்டத்துக்குள்ளாக்கலாம் என்று எங்கிருந்து கற்றுக் கொண்டான் நீரஜ்? இப்படிப் பேப்பரில் எழுதிப் பிரச்சினைகளை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத எத்தனையோ சாரிகாக்கள் இருக்கலாம். அவர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு?
                                  நட்பென்றால் ஃபேஸ் புக் நட்புக்குக் கூட உயிரை விடத் தயாராயிருக்கும் அன்பை வைத்திருக்கும் இவர்கள் வெறுப்பென்றால் எந்த நிலைக்கும் போய் உயிரை எடுக்கவும் தயாராயிருக்கும் இந்தத் தலைமுறையினை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.