நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, May 28, 2011

அது ஒரு காலம்....

ஊருக்கு வரும்போதெல்லாம்
அம்மம்மாவின் சுருக்குப் பை
கொண்டு வந்த கனவுகள்
கழுத்துவரை உண்டு...
அது ஒரு காலம்....

காது குடையும் கோழிச்  சிறகும
கொஞ்சம் சில்லறையும்
கசங்கிய ஒத்த ரூபா நோட்டுக்களும்
எப்போதும்  கொண்டு வரும்
பெரும் பிரியத்தையும்
சுமந்திருக்கும் அந்தச்
சுருக்குப் பையைத் திறந்து
வாசம் பிடிச்சது ஒரு காலம்...

ஒல்லிக்குச்சி பாட்டிகள் எல்லோரின்
முகங்களும் ஒரே மாதிரியானதாக
சுருக்கங்களுடனும், இடுப்பில்
சுருக்குப் பைகளுடன்
பை நிறைய பிரியங்களுடனும்
இருக்கிறது எல்லா ஊரின்
அம்மம்மாக்களின் அடையாளங்களாய்...
என மயங்கியது ஒரு காலம்..

பட்டுத் துணியின் சுருக்குப் பையினுள்
சில்லறைகளுக்காக கைவிட்ட
சுருங்கிய கை விரல்களை இறுக்கி
"இதை எல்லோர் முன்னாலேயும்
வெளியே ஏன் எடுக்கிறே?"
என்று எரிச்சல்பட்டு
முகம் வாடிய அம்மம்மாவைக்
"கிழவி உயிரை எடுக்குது" ன்னு
சொல்ல வைத்ததுவும்
ஒரு காலம்.......


Monday, May 2, 2011

நினைவு வந்து விடாமலிருக்க...

மீன் தொட்டியில் கொஞ்சம் 
ப்ளாஸ்டிக் இலைகளையும்
செயற்கை அருவியும்
கூழாங்கற்களையும்
போட்டு வைத்தாள்
மீனுக்கு ஆற்று நினைவு
வந்து விடாமலிருக்க...

குருவிக்கூண்டில்
குட்டிக் குட்டியாய்
ப்ளாஸ்டிக் மரம் நட்டு
கிளை, பூ, பழம் 
தொங்க விட்டாள்
குருவிக்குக் கூடு நினைவு
வந்து விடாமலிருக்க...

அம்மா செருப்பு 
மாட்டிக் கொண்டே 
"ஆயாம்மாகிட்டே சேட்டை
பண்ணாம, அழாம இருக்கணும்..
சாக்லேட் வச்சிருக்கேன்" என்றாள்
பாப்பாவுக்கு அம்மா நினைவு
வந்து விடாமலிருக்க...