நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, August 31, 2009

இதெல்லாம் ஒரு டெக்னிக்குங்க!!!


"எப்போ வருவீங்க?"

"லேட்டாகும்..."

"லேட்டாகுமா????"

"அதான் சொல்றேன்லே லேட்டாகும்னு.."


"ஏன் லேட்?"

"லேட்டாயிருச்சு...."

"அதான் ஏன் லேட்?"

"கொஞ்சம் லேட்டாயிருச்சு.."

"5 மணிக்கு ஏன் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சீங்க?மீட்டிங்க்லெ இருந்தேம்மா..."

"அதென்ன உங்க ஆஃபீஸ்லெ காலையிலெல்லாம் மீட்டிங்க் வைக்காம சாயங்காலம் வைக்கிறாங்க????"

இந்த டையலாக் எல்லாத் தங்கமணியும் ரங்கமணியும் பரிமாறிக் கொண்டவையாகத்தான் இருக்கும்....

இதுக்கு அர்த்தம் ஒருவரையொருவர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதாகவோ...அல்லது சந்தேகப் படுவதோ அல்ல...

ரெண்டு பேருக்குமே தெரியும் இறுக்கிப் பிடிக்கும் அந்தக் கயிற்றின் ஒரு நுனி ரங்கமணிகிட்டேயும் இன்னொரு நுனி தங்கமணிகிட்டேயும் இருக்குன்னு....

அப்பப்போ இரண்டு பேரும் அதை இழுத்துப் பார்த்து நல்லா இறுக்கமாதான் பிடிச்சுருக்காங்களான்னு பார்த்துக்கத்தான் அந்த இழுவை?

ரெண்டு பேருக்குமே தெரியும்......அந்தக் கயிறு ஒரு நேசத்தின் இழை என்பது.......அதில் ஒரு நுனி பிடியில் இருந்து நழுவினாலும் மறு நுனியில் பல்ப் எரியும்.........கொஞ்ச நாள் இழுக்காமே இருந்து பாருங்க வாழ்க்கை செம போர் அடிக்கும்...இதெல்லாம் ஒரு டெக்னிக்குங்க!.

Sunday, August 30, 2009

இலவசமாய் ஒரு அழகியுடன் ஒரு பயணம்...................

                                                         வெறும் ஆங்கில வலைப்பூவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நேரம்....தமிழ் எழுதத் தெரியாமல் எதையெதையோ தரவிறக்கம் பண்ணி அரைகுறையாக எழுதி.....அங்கிருந்து வெட்டி...இங்கே ஒட்டி...என்று என்னென்னமோ செய்து.......பத்து நாட்களில் ஒரு பதிவுக்கு மூக்கால் அழுது எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த அழகியின் அறிமுகம் கிடைத்தது....
இன்று ஒரு நாளைக்கு ஒரு பதிவு சிரித்துக் கொண்டே போட  முடிகிறது....
அன்று முதல் இன்று வரை அழகியுடனான பயணம் மிகவும் இனிமையாகவே இருக்கிறது.....
 அதற்காக அழகிக்கு  நன்றிகள் பல!
அந்த அழகிதான் முற்றிலும் இலவசம்....
அழகியைப் பற்றி அறிந்து கொள்ள.....இங்கே.....
மேலும் தெரிந்து கொள்ள.........இங்கே...

Saturday, August 29, 2009

கடவுள்...........108


இது என் நண்பரின் மெயில் மூலம் அறிந்து கொண்டது...
பாண்டிச்சேரியிலிருந்து கோயம்பத்தூருக்குப் பஸ்ஸில் போகும்போது..திடீரென்று விபத்து அடிபட்டதில் ஒரு பொண்ணும் அதன் குழந்தையும் (15 மாதம்)பயங்கரமாக அடிபட்டிருந்தார்கள் ....குழந்தை பேச்சு மூச்சில்லாமலிருந்தது....முதல் உதவிப் பெட்டி பஸ்ஸில் இல்லை...

நேரம் நடு இரவு 12:57...உடனடியாக அந்த நண்பர் 108-க்கு த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் சொல்லி முடிக்கும் போது 1:02 நிமிடம்....ஒரு நிமிடத்துக்குள் 108-லிருந்து ஃபோன் வந்தது.....மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து விபரம் சொல்லி முடிக்க மூன்று நிமிடம் ஆனது....மணி 1:08-க்கு ஆம்புலன்ஸ் வந்து கொண்டு இருப்பதாக தகவல் மீண்டும் 108-லிருந்து..

1:17-க்கு ஆம்புலன்ஸ் வந்து உடனடியாக மருத்துவ உதவி கொடுத்துக் குழந்தைக்கு நினைவு திரும்பியது.....பெண்ணுக்கும் உடனடி மருத்துவ உதவி கிடைததது....இதில் அதிசயம்.....அந்த நண்பரைத் தவிர யாருக்குமே EMRI-108 (EMRIEmergency Management and Research Institute) சேவையைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை...அவசர காலத்தில் மின்னல்வேக உதவி அளிக்கிறது இந்த EMRI-108 ......

இது ஒரு எடுத்துக்காட்டுதான்....எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எந்தவிதமான உதவியென்றாலும் மின்னல்வேக நடவடிக்கைதான்.................18நிமிடங்களுக்குள் உதவி கிடைததுவிடும்..........................இந்த எண் சேவை தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா,குஜராத்,ராஜஸ்தான்,அஸ்ஸாம்,மேகாலயா,மத்தியப் பிரதேசம்,கோவா,உத்தராகான்ட் ஆகிய இடங்களில் உள்ளது.திடீர் விபதது,குற்றங்களைப் பதிவு செய்ய,மற்றும் தீ விபத்து போன்ற சமயங்களில் கடவுளாகக் கை கொடுக்கிறது....108!!!

எப்போதும் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய எண்...."108"

Friday, August 28, 2009

உறவுகளைச் சேமிப்போம்!!!


என்னாது "கல்யாணமா?..நோ சான்ஸ்..நீ மட்டும் போயிட்டுவாம்மா."
"என்னங்க என்தங்கை கல்யாணத்துக்குக் கூட வர முடியாம அப்பிடி என்ன வேலை?"
"உனக்கென்னம்மா தெரியும்?....தலைக்கு மேல வேலை இருக்கு."
"ஆமாமா எனக்கென்ன தெரியும்?போனவாரம் உங்க தம்பி பொண்ணுக்குக் மொட்டை போட்டு காது குத்துறதுக்கும் போகலை....."
என்னம்மா "மொட்டை போட்டு காது குத்துறதுல்லாம் ஒரு விஷயமா? இதுக்கெல்லாம் போய் லீவ் போடமுடியுமா?"
"இப்பிடி எதுக்குமே போகாம எனக்குத்தான் கெட்டபேர்..ஏதோ நாந்தான் உங்களைப் போகவிடாமல் புடிச்சு வச்சுருக்க மாதிரி என்னைப் பேசுறாங்க"
இங்கே பாரும்மா மற்றவங்களை மாதிரி ...மாசம் பத்தாயிரம் ரூபாய் வாங்கலை....மாசம் பொறந்தா முப்பதாயிரம் ரூபாய் வாங்குறேனாக்கும்...என்னாலே இப்பிடி நினைச்ச நேரமெல்லாம் லீவ் போடமுடியாது....
இதை எல்லோருக்கும் சொல்லிப் புரிய வை.... "

"சரிங்க...இதெல்லாம் பரவாயில்லங்க....உங்க நெருங்கிய நண்பன் குமார் விபத்துலெ இறந்ததுக்குக் கூட ஒரு நடை ஊருக்குப் போயிட்டு வர முடியலை இல்லை?"
"அய்யோ என்னடி புரியாதவளா இருக்கே?...எனக்கு அந்த குமாரைத்தான் தெரியும்...அவனே இல்லைங்கறப்போ அங்கே போய் யார்கிட்டே என்னத்தைக் கேக்க?இதுக்கு லீவ் வேற போடச் சொல்லறே?"
ஆறு மாசத்துக்கு அப்புறம்...
"மிஸ்டர் கண்ணன்...இது தவிர்க்க முடியாதது..."
சார் இந்த ஆஃபீஸ்க்காக நான் உயிரையே கொடுத்திருக்கேன் சார்......... என்னைப் போய்...."
I'm helpless Mr. Kannan.."
எல்லாத்தையும் இந்த ஆஃபீஸ்க்காக நான் இழந்திருக்கேன் சார்"
"You were paid for that Mr.Kannan"
உலகமே இருண்டது....என்னையா வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள்....எப்படியெல்லாம் ஓடி ஓடி உழைத்தேன்..என்னையா?"


சவிதா...ரொம்ப மனசுக்குக் கஷ்டமாயிருக்கு...வா...ஊருக்குப் போய் எல்லோரையும் பார்த்துட்டு வரலாம்"
சவிதா புருவம் உயர்த்திப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பினாள்...
அட?? கண்ணனா?எப்பிடிப்பா இருக்கே...பார்த்து எவ்வ்ளோ நாளாச்சு..எவ்வ்ளோ இளைச்சுப் போயிருக்கே...வேலை வேலைன்னு ...உடம்பைக் கவனிச்சாதானே???..கண்ணா...

ண்ணான்னு....வீடு அமர்க்களப்பட்டது... பாசமலர்கள் சூழ்ந்து கொண்டன....சொர்க்கம் இதுதானோ???

அதற்காகவா இதை இழந்தேன்....இழப்பின் வலி இதயத்தைத்தாக்கி கண்ணில் கண்ணீர் கரை கட்டியது... கண்ணன் இத்தனை நாள் இழந்த சொர்க்கத் தருணங்களுக்காகக் கதறி அழுதான்.

வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டும்தான்...உழைப்பின் மோகத்தில் உறவுகளையும் உணர்ச்சிகளையும் இழந்துவிடவேண்டாம்............
வாருங்கள்.......இன்று முதல் உணர்வுகளைப் பகிர்வோம்......உறவுகளைச் சேமிப்போம்!!!

Thursday, August 27, 2009

பகிரப்படாத அன்பென்பது...........

நகம் கடித்துத் துப்பும்
மணித்துளிகளில்
எதுவும் சொல்லாமல் நீ
எழுந்து போன நிமிடங்களில்
தேநீர் அருந்த ஆளில்லாமல்
ஆறிப் போயிருந்தது..........


பகிரப்படாத அன்பென்பதும்
சொல்லாத காதலென்பதும்
சேர்ந்தருந்தாத தேநீரும்
நேரம் கடந்த பின் உபயோகமில்லை.....


இழப்புக்களையெண்ணி மூடிககுள்
சிறை வைத்த பேனாக்களைப்போல
வெளியே முகம் காட்டும்
நேரமெல்லாம் கண்ணீர் விட்டு
அழுது கொண்டேயிருக்கிறது...... மனம்.......


அந்தப் பகிராத அன்பும்
அந்தச் சொல்லாத காதலும்
அந்த அருந்தாத தேநீரும்
உபயோகமில்லையெனத் தெரிந்திருந்தும்
ஜன்னலருகில் எதையோ எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டேயிருக்கிறது.........

Wednesday, August 26, 2009

மறக்க முடியாத தருணங்கள்.................

மறக்க முடியாத தருணங்கள்.........மறக்கபபடவேண்டிய தருணங்கள்....எல்லோர் வாழ்விலும் அவ்வப்போது இப்படிப்ப்பட்ட தருணங்கள்...நிகழ்ந்திருக்கும்..சில சம்பவங்கள் அப்படியே மனதோடு ஒட்டிக் கொண்டுவிடும் விரும்பியும் விரும்பாமலும்....... 

மனதின் விசேஷ வீச்சுகளில் இதுவும் ஒன்று..எதை விட்டு விலகவேண்டும் என நினைக்கிறோமோ அது விட்டுவிலக முடியாத அளவு கவ்விப் பிடித்துக் கொள்ளும்.அது போல மனம் கவ்விக் கொண்ட தருணங்கள்...நான் மறக்க நினைக்கும் தருணங்கள் இவை..சிலநேரங்களில் என்னை நினைத்து நானே வெட்கித் தலைகுனியும் தருணங்கள் இவை. 

ஒரு இரவு நேரம்....அப்பாவுக்கு நேரம் கிடைக்காததால் அப்பா ராத்திரி இரண்டாவது ஷோ படத்துக்குத்தான் கூட்டிட்டுப் போவாங்க..அப்படி ஒரு தடவை படம் முடிந்து வரும்போது....ஒரு பெண்ணை ரெண்டு பேர் கதறக் கதற ஒரு தெருவுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள்...அவளின் அலறல் சத்தம் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது....எந்த கதாநாயகனும் காப்பாற்ற வரவில்லை...எங்களில் யாரும் கதாநாயகர்களாகவும் ஆகவில்லை...அவள் என்ன ஆனாள் என்றும் தெரியவில்லை..... 

மற்றொன்று நாங்கள் திருமணமாகி தனியாக ஜெய்ப்பூரில் ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டுத் திரும்பும்போது ஒருவர் ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்து கிடந்தார்.....இன்னும் ஓரிரு வண்டிகளும் பார்த்தும் பார்க்காதது போலக் கடந்து போயின.....ஒரு முடிவெடுக்கமுடியாமல்...சிறிது நேரம் தயங்கிவிட்டு குடிச்சுட்டு விழுந்திருப்பாரோ...என்று எங்களுக்கே கேட்காத குரலில் முணு முணுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போயே விட்டோம்...இன்னும் அந்த சாலையைக் கடக்கும் போது....அந்த ஒருவரின் நினைப்பு வந்து மனதை அரிக்கிறது.... 

சினிமாவில் வருவது போல் ஒருதிடீர் வீரம் தேவையான பொழுது ஏன் நம்மிடம் வருவதில்லையென்று அடிக்கடி நினைப்பதுண்டு........இப்பவும் கூட.......அடிக்கடி நினைப்பதுண்டு....

Tuesday, August 25, 2009

இந்த மன்றம் சந்தித்த வினோத வழக்குகள் சில........

அந்த அம்மாவும் அப்பாவும் இப்படித்தான் ஆரம்பித்தார்கள்.....

"நீங்க இன்னும் கொஞ்சம் ஸ்டிக்கா (strict) இருக்கணுங்க...கொஞ்சம் கூட மேனஸ் (manners)இல்லைங்க பையன்கிட்டே..."

"சொல்லுங்க...அப்படி என்ன பண்றான் உங்க பையன்?"
"பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் ரிமோட்டை எடுத்து வச்சுக்கிட்டு எங்களை ஒரு சீரியல் பார்க்க விடமாட்டேங்குறான்.....அவனே டி.வி பார்த்துக்கிட்டிருக்கிறான்"

இதுக்கு நாங்க எப்பிடி ஸ்டிக்கா இருக்கறதுன்னு நான் ஙே!!!!

அடுத்த அம்மா அப்பாவின் கவலை....

"என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான்...எதைச் செய்யக் கூடாதோ அதைத்தான் செய்யறான்....கொஞ்சம் கண்டிக்கக் கூடாதாங்க...,...""அப்படி என்ன செய்யறான்?"எப்பவும் செல் போனில் எதையாவது பண்ணிக்கிட்டிருக்கான்....செல் ஃபோனின் செட்டிங்கை மாத்திக்கிட்டேயிருக்கான்..சமயத்துலே நானே ஃபோன் பேச முடியாத படி எதையெதையோ பண்ணி வச்சுடறான்...கொஞ்சம் சொல்லிக் கண்டிச்சு வைங்க..."

இதுக்கு நாங்க எப்பிடி கண்டிப்பா இருக்கறதுன்னு நான் ஙே!!!!

மற்றொரு வழக்கு...
"மேடம்...இவங்க அப்பா ஊருக்குப் போகும்போதெல்லாம் ஒரு நாளைக்கு 50 ரூபா கேட்டு அடம் பிடிக்கிறான்...ரெண்டு நாள் அவங்க அப்பா வீட்டிலே இருந்தாலும் ஏம்பா நீங்க டூர் போகலையான்னு கேட்கறான் மேடம்....கொஞ்சம் சொல்லி வைங்க..."

எத்தனை தடவைதான் நான் "ஙே"வாகிறது???நீங்களே சொல்லுங்க...??????

Sunday, August 23, 2009

மின்னுவதெல்லாம் நட்சத்திரமல்ல!!!!

பெரிய பெரிய பத்திரிக்கையிலெல்லாம் நம்ம எழுத்தை எங்கே போடுவாங்க? நாமே நம்ம வலைப்பூவிலெ எழுதிக்கவேண்டியதுதான்...இப்பிடியாக எழுத ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே சீனா அய்யா அவர்கள் வலைச்சரத்தின் ஆசிரியராக்கினார்...வலைச்சர ஆசிரியரா இருந்தப்போ எழுதியதைப் படிககணுமா??????......இங்கே போங்க....

அது போக ஒரு நாள் கதாநாயகி, முட்டாள்,வில்லி,எழுத்தாளர் ஆகிட்டோமில்லே அப்பிடீன்னு எழுதிய இந்த சீரீஸ் எனக்கு ரொம்பப் பிடித்தது...இதை மறுபடியும் படிக்கணுமா???? இங்கே போங்க.....இங்கே போங்க.. இங்கேயும் போங்க...

எனக்குத்தெரியாது நான் நட்சத்திரமா இல்லை வெறும் கண்ணாடிக்கல்லான்னு தெரியாது ........... இருந்தாலும் இந்த ஒருவாரம் கண்சிமிட்டுவதற்கும் மினுமினுக்கவும் மறுபடி ஒரு மலரும் நினைவுகளுக்கும் வாய்ப்பளித்த

திரட்டி.காம் நிர்வாகத்திற்கு நன்றி!!!

Thursday, August 13, 2009

புரியவில்லயே எங்கிருந்து ஆரம்பிப்பதென்று...????

வறுமைக்கும் பசிக்கும்,
என்ன சம்பந்தம் என
யோசிக்கக் கூட நேரமின்றி
ஈட்டலுக்கு ஓடிக் கொண்டிருக்கும்
மனித இயந்திரங்களாய்
நாங்கள்.....
சுதந்திரக் காடுகளில்
உலவ மட்டும் அனுமதிக்கப் பட்ட
சிங்கங்கள் நாங்கள்......

இந்தியா எதையெல்லாம் என்னிடம்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறதென்று?
எனக்கே தெரியவில்லை....
உதிரம் சிந்தி வாங்கிய
சுதந்திரமெனப் புரிகிறது

என்ன வேண்டும் இந்தியா?
என் உதிரமா?
எடுத்துக் கொள்.......
உயிர் கொடுத்து வாங்கிய
சுதந்திரமெனப் புரிகிறது

என்ன வேண்டும் இந்தியா?
என் உயிரா?
எடுத்துக் கொள் ...........

யார் யாரின் உயர்வுக்கோ உதிரம் சிந்தி
உழைத்து மடியப் போகும்
உயிர்தானே?
உனக்காவது உதவட்டும்
எடுத்துக் கொள்
 உயிரையும்.....

காதலர்தினம்,
நண்பர்கள் தினம்
அப்பாக்கள் தினம்,
அம்மாக்கள் தினம் போல
"சுதந்திரதினம்"
கொண்டாடுவதற்கு ஒருசாக்கு....
இனிப்பு வாங்க,வழங்க ஒரு சாக்கு
சிலருக்கு...........
எனக்கல்ல........

பொறுப்புகளும்
கடமையும்
கண்ணருகில் காவலிருக்கிறது....
இருந்தும் புரியவில்லையே  இந்தியா...
உன் உதயத்திற்கு
எங்கிருந்து ஆரம்பிப்பதென்று...????

Wednesday, August 5, 2009

விருதுகள் வாஆஆஆஆஆஆஆஆஆரம்!!!!


இந்த விருதை எனக்குக் கொடுத்தது இயற்கை, ஞானசேகரன்
ஆறு பேருக்கு கொடுக்கணுமாமே!!!... வெறும் ஆறு பேருக்கு மட்டுமா? அதுக்கப்புறம் நடக்குற சண்டையை எப்படி சமாளிக்க???


இந்த விருதை எனக்குக் கொடுத்தது முரளி குமார் பத்மநாபன்.... ஆறு பேருக்குக் கொடுக்கணுமாமே!..............நிறைய சுவாரஸ்யமான பதிவர்கள் இருக்காங்களேப்பா!!! இப்போ என்னா பண்றது?



இந்த விருதை எனக்குக் கொடுத்தது ஸ்ரீவட்ஸ் இதையும் குறைந்தது ஏழு பேருக்குக் கொடுக்கணுமாமே!!!
விருது கொடுத்தவங்களுக்கு நன்றி!!! நன்றி!! நன்றி!!
நான் கொஞ்சம் லேட் போல! நான் கொடுக்கணும்னு நினைச்சவங்க எல்லோரும் ஏற்கெனவே போர்ட் மாட்டி வச்சிருக்காங்க!........இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்..................என்னைக் கவர்ந்த பதிவர்களை கீழே கொடுத்திடறேன்.....நீங்களே தொகுதியைச் சண்டையில்லாமல் பிரிச்சு எடுத்துக்கோங்க!!! சரிதானே!!!


அந்தோணி முத்து -----சஹாராதென்றல்

காமராஜ் ------------ அமித்து அம்மா

சந்தனமுல்லை ----------- தமிழ்நெஞ்சம்

கார்த்தின் ------------ ராகவேந்திரன்.டி

நிலாரசிகன் ------------ஜெஸ்வந்தி


புதுகைத் தென்றல் -------பிரியமுடன் வசந்த்


கௌரிப் பிரியா -------------சஞ்செய் காந்தி


ராமலக்ஷ்மி --------------பாசமலர்


ராஜேஸ்வரி --------------பாசகி



Monday, August 3, 2009

ஒற்றைச் செருப்புடன் ஒரு பயணம்.......



அதிகாலையில்
நெடுஞ்சாலையில்
ஒரு குட்டி ஒற்றைச் செருப்பும்
சில துளி ரத்தமும்..................

தனியே ஓடிச் சிக்கியிருக்குமோ?
அம்மாவுடன் வரும் போதா???
சைக்கிளில் சிக்கியதா?
பைக்கில் சிக்கியதா??

நடந்தது இதுதான்
என மூளை சொன்னாலும்
நடந்தது அதுவாக
இருக்கக்கூடாதென
மனம் கெஞ்சியது

பயணம் முழுவதும்
தினம் கூடவரும்
ஜன்னலோரச் சிலிர்க்
காற்றையும்
மழைச் சாரலையும்
தவிர்த்து........

அன்று
அந்தக் குட்டி
 ஒற்றைச் செருப்பு
கூடவே பயணித்தது.....