நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, April 27, 2010

கேட்கும் வரம் ஒன்றே....

முன்பொரு நாள்
கூட்டம் கூட்டமாய்
வாழ்ந்திருந்தோம்

அப்புறமாய்

என் இலையுருவி
ஆடையாக்கி அணிந்து
கொண்டீர்கள்.........

மற்றொருநாள்

என் உடமைக்
காய் கனி கவர்ந்து
உணவென்றீர்கள்.....

சிலநாள் மலர்
பறித்து மாலையாக்கிக்
கடவுளைக் கொண்டாடினீர்கள்

பின்பொருநாள்
என் கைகாலுடைத்து
அடுப்பெரித்துக் கொண்டீர்கள்.........
வீடு கட்டிக் கொண்டீர்கள்

வன்மம் காட்டக் காரணங்கள்
இத்தனையிருந்தும் மௌனமாய்க்
கைகள் விரித்து வானம் பார்த்துத்
தவமிருந்தோம்......

கேட்கும் வரம் ஒன்றே
எங்களைப் புதைக்கும் போது
மரப் பெட்டியில் புதைக்காதீர்..
அதற்காகவும் மரம் ஒன்றை வெட்டாதீர்..

எங்களின்
புகைப்படம் ஒன்றெடுத்து
பத்திரப் படுத்துங்கள்....
வருங்காலத் தலைமுறைக்குச்
சொல்லுங்கள்
"இதுதான் மரமென்று!"....

Monday, April 19, 2010

சிலச் சில நேரங்களில்..

மாடிப்படியிலிருந்து
அறுந்து விழுந்த
கழுத்து மணி போல
சிதறித் துடிக்கின்றன
சிலநேரங்களில்...

பைட் பைப்பரின் இசை
பின்னால் போகும்
எலிகள் போல ஓடிப் போய்
நதியில் விழுந்து உயிர் விடுகின்றன
சில நேரங்களில்....

நடுக்கடலில் ஆடிக்
கொட்டமடிக்கும்
கப்பல் போல்
தனித்துத் திரியும் போது
ஆர்ப்பரித்து அடங்குகிறது
சில நேரங்களில்....

பிழைத்துக் கிடந்தால்
மீட்டெடுத்துக் கொள்வதற்கான
மனக் குறிப்புகளைப் பதிய முடியாத
இயலாமை உணர்வோடு
பூங்காவின் வட்டப்பாதையில்
சுற்றிச் சுற்றி வரும்
சில நேரங்களில்...

எல்லோருக்குமான
வானம் விரிந்து பரந்து கிடந்தது....
எனக்கான எண்ணங்களுக்காய்
நானும் வானம் பார்த்துக் கிடந்தேன்...

Thursday, April 15, 2010

நிமிடத்தில் கடவுளாகலாம்-3

இங்கே ஜெய்ப்பூரில் எனக்குத் தெரிந்த தமிழ்க் குடும்பம்.கணவன்,மனைவி,இரு குழந்தைகள்.அந்தப் பெண்ணின் தம்பிக்கு இருநாட்கள் முன்னால் ரத்தப் புற்று நோய் என்று தகவல் வந்தது.வாரம் ஐந்து லட்சம் செலவாகும், முடியாத பட்சம் சென்னைப் பொது மருத்துவமனையில் சேருங்கள் என்ற மருத்துவரின் மிரட்டல்.அவ்வளவு செலவளிக்க முடியாத நிலமை.நிலம் நகைகளை விற்று ஒரு லட்சம் புரட்டிக் கொண்டு உடனடியாக சென்னை வந்து பொது மருத்துவமனையை அடைந்தால்......இன்று அரைநாள் விடுமுறை..நாளை சித்திரைத் திருநாள் விடுமுறை...15ம் தேதி காலையில் வாருங்கள் என்ற பதில்.கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள்.என்ன செய்ய...என்று எதுவும் புரியாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நோயாளிக்கும் கஷ்டம் என இங்கே இவர்களிடம் தொடர்பு கொள்ளக் குடும்பம் இடிந்து போனது.

அந்தப் பெண் அழுது பதறிப் போய் அவர்களுக்குத் தெரிந்த ஒரே தமிழ்க் குடும்பமான எங்களுடன்
என்ன செய்ய ...என்று தொடர்பு கொள்ள.....எனக்கும் ஒன்றும் புரியவில்லை.சென்னையில் அக்கா இருந்தாலும் பொது மருத்துவமனையில் யாரும் தெரியாத நிலையில் என்ன செய்ய என்று திகைத்துப் போன போது .............
நினைவு வந்தது....பதிவுலகம்...என்னென்னமோ படிக்கிறோமே உதவி கிடைக்குமா என்று சிறிது யோசித்துக் கொண்டே கோவை சஞ்செய் காந்திக்கு ஒரே ஒரு ஃபோன்தான் செய்தேன்.......ஒரே முறை பேசியிருக்கிறேன்...மற்றபடி அப்பப்போ எப்பவாது
Hi !how r u?..chatting....அவ்வ்ளோதான் அறிமுகம். என்னென்னவோ செய்து உடன் மருத்துவரும் பதிவருமான ப்ரூனோவின் தொலைபேசி நம்பர்.....உடன் என்ன செய்யவேண்டும் என்று அடுத்தடுத்து தகவல் வர..இன்று அந்தப் பெண்ணின் தம்பி பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்......
நிறைய நேரங்களில் இந்த இடத்திலா நாம் இருக்கிறோம் என வருத்தப்பட்டு எழுதுவதை நிறுத்தலாமா என்று கூட நினைத்திருக்கிறேன்.
இன்று இங்கே இருப்பதற்காகப் பெருமைப் படுகிறேன்...
ம்ம்ம்.....தொலைபேசி மூலம் கூட நிமிடத்தில் கடவுளாகலாம்...
மனம் நிறைந்திருக்கிறது.
சஞ்செய்க்கும் மருத்துவர் ப்ரூனோவுக்கும் வெறும் நன்றி என்ற வார்த்தை மட்டும் சொல்வது சரியாகுமா???தெரியாது....ஆனாலும் நன்றி!

Monday, April 12, 2010

நானும் பெண்தானே!!!

புடிச்ச பத்து பெண்கள் ரூல்ஸ் எல்லாம் எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்....ஏன்னா எல்லாரும் எழுதி முடிச்சப்புறம் கடைசியா அசைன்மென்ட் முடிக்கிறவங்ககிட்டே எந்தக் கேள்வியும் இல்லாமே வாங்கிக்கிற ஆசிரியர் மாதிரி ஏத்துக்கோங்க! ப்ளீஸ்..லேட்டாயிடுச்சு!                       
 எல்லாரும் எழுதிட்டதுனாலே யாரையுமே எழுதக் கூப்பிடலை!
அப்புறம் ஒன்பது பெண்கள்தானே இருக்குன்னு கவலைப்படுறவங்களுக்குத் தனியா ஒரு டிஸ்கி:நானும் பெண்தானே!!!

Tuesday, April 6, 2010

வில்லங்கம் புடிச்ச பாட்டி...

                 எப்போதும் போல நிறுத்தத்தில் நிற்காமல்............தூஊஊஊஊஊஊஊஊஊஊஊரமாகப் போய் நிறுத்தினார் பஸ் ஓட்டுனர்.அந்தப் பாட்டி தூக்க முடியாத பெரிய கூடையுடன்
"கடங்காரன் எம்புட்டுத் தூரத்திலே போய் நிறுத்துறான்" என்றவாறே வாசலில் நின்றிருந்த கல்லூரி மாணவர்களை இடித்துக் கொண்டே கூட்டத்தில் நுழைந்து பொதுவில் பார்த்துச் சும்மா சிரித்து வைத்தாள். 

"பாட்டி டிரைவர் உங்களுக்கு எம்புட்டுக் கடன் த்ரணும்னு சொல்லுங்க பாட்டி ....தூக்கிரலாம்" என்றான் அருண். அவ்வ்ளோதான் இன்னிக்குப் பொழுது பாட்டியைக் கலாய்ப்பதில் போகப் போகிறதென்பது புரிந்தது எல்லோருக்கும். 

"எனக்கெதுக்குப்பா டிரைவர் கடன் தரணும்" என்றாள் பாட்டி அப்பாவியாக. நீங்கதானெ பாட்டி டிரைவரைக் கடங்காரன்னு சொன்னீங்க"என்றான் அருண் விடாமல். பொக்கை வாயை அகலமாய்த் திறந்து சிரித்தாள் பாட்டி. 

"எப்பா...கொஞ்சம் தள்ளி உக்காரேன்! நானும் செத்தோலெ உக்காந்துக்கிறேன்" என்றாள் பாட்டி 
"என்னா பாட்டி இவ்வ்ளோ பெரிய பாம்படம் போட்டிருக்கே....எத்தனை பவுனு ? " பவுனு வெலை தெரியுமா??? அத்துட்டுப் போயிருவானுங்க! பாத்துக் கவனமாயிரு பாட்டி" என்று முனைப்போடு  கலாய்த்துக் கொண்டிருந்தான் அருண்..
" என்னாப்பா...எனக்குக் காது கொஞ்சம் மந்தம்ப்பா...சரியாக் கேக்காது...கொஞ்சம் சத்தமாச் சொல்லுப்பா"
அருண் சும்மா ஏதோ சொல்வது போல வாயைசைத்தான்.."இப்போ கேக்குதா பாட்டி" என்றான்
பாட்டி அருணின் காதிலிருந்த ஹெட் போனைக் காட்டி
"அச்சோ உனக்கும் காது கேக்காதா தம்பி...செவிட்டு மெஷின் மாட்டிருக்கே..???

"ஹூம்....முன்னெல்லாம் எங்கியோ யாருக்கோ காது கேக்கலைன்னு ஒண்ணு ரெண்டு பாம்படக் கிழவிகள்தான் சொல்லுவாய்ங்க....இப்போ பாரு யாரைப் பார்த்தாலும் செவிட்டு மெஷினை மாட்டிருக்காங்க......செவிட்டு மெஷின் அவ்வ்ளோ சல்லிசாவா கிடைக்குது?????........என்று எங்களைச் செமையாய்க் கலாய்த்து விட்டுக் கலாய்த்தது தெரியாமல் இறங்கிப் போய்க் கொண்டிருந்தாள் வில்லங்கம் புடிச்ச பாட்டி...

Friday, April 2, 2010

நட்சத்திரங்கள் ஏன் மரணிக்கிறது?

ஒற்றைப் பனை மரத்தின்
உச்சியில் கூடு கட்ட
முயற்சித்துத் தோற்றது
அந்த ஒற்றைப் பறவை ..

தொங்கு கிளையில்
அழகானச் சிக்கல்களாய்
ஊஞ்சல் போல்
எளிதில் கூடு கட்டிக் கொண்டது
இன்னொரு பறவை..

ஜெயித்தலும் தோற்றலும்
அவரவர்
கண்டடைந்த வழிகளின்
தவறேயன்றிக் கூடு
கட்டுதலே தவறன்று..

தோற்றுப் போனவர்களுக்கான
புதிய உலகத்தின்
வானத்தில் நட்சத்திரங்கள்
தானே விழுந்து
மரணித்துக் கொண்டிருந்தன..

ஜெயித்தவர்களுக்கான
புதிய உலகத்தில்
வானமே நட்சத்திரமாய்
ஜொலித்துக் கொண்டிருந்தது!
ஜெயிப்போம்..!!ஜொலிப்போம்!!!