நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, October 25, 2010

நான் என் ஹீரோவைத் தேர்ந்தெடுத்தாச்சு!!!நீங்க?

 விசு மக்களரங்கம் பார்த்தவுடன் பதிந்தது.....
CNN அமெரிக்கத் தொலைக்காட்சி உலகம் முழுவதுமான 'நிஜ கதாநாயகர்களை' அடையாளம் கண்டு வருடந்தோறும் விருது வழங்கிவருகிறது. அந்த விருதை தனது தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் மதுரை N.கிருஷ்ணன்..முதல் இடத்தை அடைவதற்கு இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது.முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்திய ரூபாய் மதிப்பில் 45 லட்சம் அக்ஷயா ட்ரஸ்ட்டுக்குக் கிடைக்கும் அது மேலும் மேலும் கிருஷ்ணனின் சேவைகளுக்கு உதவ முடியும். திரு.கிருஷ்ணன்.யார் இந்த கிருஷ்ணன்?
              இவர் மதுரை மாநகர தெருக்களில், மனநிலை குன்றிய 400 பேருக்கு வருடம் 365 நாட்களும், நாளுக்கு மூணு வேளையுமாக உணவு வழங்கிக் கொண்டு இருக்கும் இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. வெறும் 28 தான். கடந்த ஏழு வருடங்களாக, அக்‌ஷ்யா டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக இதை செய்து வருகிறார்.
கிருஷ்ணனின் எல்லை உணவு கொடுப்பதோடு முடிந்து விடவில்லை.இன்னும் பரந்து இருக்கிறது. கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணியையும் செய்து வருகிறார் கிருஷ்ணன்.பிணத்தை claim செய்து, குளிப்பாட்டி, உரிய முறையில் நல்லடக்கம் தருவதுமாக இருக்கும் இவரை, மதுரை முனிசிபாலிடியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும், இறுதி சடங்கு செய்ய சொல்லி அழைக்கிறார்கள்.

நான் ஹீரோவைத் தேர்ந்தெடுத்து விட்டேன்! நீங்க???
இங்கே போய்த் தேர்ந்தெடுங்கள்!!!
நவம்பர் 18 வரை ஓட்டுப் போடலாம். !
http://heroes.cnn.com/vote.aspx 
எவ்வ்ளவோ ஓட்டுப் போட்டிருக்கோம்!இதுக்குப் போடமாட்டீங்களா?

நன்றி!

http://www.akshayatrust.org/
http://idlyvadai.blogspot.com/2009/08/blog-post_15.html
http://edition.cnn.com/2010/LIVING/04/01/cnnheroes.krishnan.hunger/index.html
http://ithumadurai.blogspot.com/2010/05/blog-post_08.html
http://agalvilakku.blogspot.com/2010/10/blog-post.html
http://itsmeena.wordpress.com/

Tuesday, October 19, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!-7

நிலம் வாங்கியவுடன் சிலமுறை....
வீடு கட்ட ஆரம்பிக்கும் போது பலமுறை....
அப்புறம் தோன்றும் போதெல்லாம் அடிக்கடி...
ஓடி ஓடிப் போய்ப் பார்த்தாச்சு

இது உன் ரூம்....இது எங்க ரூம்
இது பாப்பாவுக்கு....
இங்கே டி.வி....
இங்கே பூந்தோட்டம்...
இங்கே பூனைக்கு மெத்தை.....
ரெண்டே தென்னைமரமாவது....
ஒரே ஒரு கருவேப்பிலை மரமும்....
கொஞ்சம் ரோஜாச் செடிகளும்...

இப்படிக் கனவுகளுக்கும்...நிஜங்களுக்கும்
பாலம் கட்டிக் கொண்டே
காலம் ஓட்டியாச்சு....

கடைசியில் கிடைத்தது...
ஐந்தாறு வீடுகளுக்கு மேல்
ஒரு கூடு.....
ஜன்னலில் தெரியும் கொஞ்சூண்டு வானமும்....
ஜன்னல் விளிம்புகளில் ரோஜத் தொட்டிகளும்...

மரக் கிளையில் கூட்டிற்கும்
பரணில் கட்டியிருக்கும் கூட்டிற்கும்
வேறுபாடு குருவிக்கென்ன தெரியவா போகிறது???
மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க ஒரு இடம்தானே?

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!
இது தமிழ்க்குறிஞ்சியில்!!

Thursday, October 14, 2010

சாலை சொல்லும் கதைகள்!

கொஞ்சம் ரத்தச் சிதறல் ....
அச்சோ என்ன விபத்தோ்....

குப்புற விழுந்திருக்கும் செருப்பு ...
அடடா.....யாருக்கு என்னவோ....

உடைந்த ஹெல்மெட் சிதறல்....
உயிரிருக்குமா ?போயிடுச்சோ?

கூடியிருக்கும் கூட்டம்....
காரும் சைக்கிளுமா?லாரியும் பைக்குமா?

108இன் திடீர் அலறல்....
எங்கே???என்னாச்சோ?

கொஞ்சம் உதிர்ந்த பூவிதழ் ......
அய்யோ யார் மரணமோ ...

முதல் முதலாகப் பைக்கில் பிள்ளையைப்
பள்ளிக்கு அனுப்பிவிட்டு......ம்ம்ம்
நல்லதையே எங்கிருந்து நினைக்க????

Saturday, October 2, 2010

Taken for granted!

இதை எப்படித் தமிழ்ப் படுத்துதல் என்று தெரியவில்லை. இது எல்லோருடைய வாழ்விலும் இப்படி ஒருமுறையாவது நிகழ்ந்தே இருக்கலாம்.அலுவலகத்தில் ஒரு சின்ன பொருளை எடுத்துக் கொடுப்பவரிடம் கூட நன்றி சொல்ல மறப்பதில்லை.அனாவசியமாகக் கூட நிறைய நேரங்களில் Excuse Me கேட்டிருப்போம்.தும்மினால் கூட!
ஆனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மை விரும்புபவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்
அது மனைவியாயிருந்தாலும்,கணவனாயிருந்தாலும்,பிள்ளைகளாயிருந்தாலும்,அக்கா தம்பியாக இருந்தாலும்,அண்ணன்,நண்பர்கள், அம்மா அப்பாவாயிருந்தாலும் ஒரு நன்றி என்ன?நமக்குச் செய்வதை,செய்ததை  உணர்ந்து கொண்டதாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை.அல்லது இப்போ என்ன அவசரம் என்று நினைத்திருக்கலாம்.அல்லது மெல்லச் சொல்லிக் கொள்ளலாம் என நினைத்திருக்கலாம்.அல்லது நன்றி சொல்லி அந்நியப்படுத்த விரும்பவில்லை என்று சப்பைக் கட்டு கட்டியிருக்கலாம்.
ஆனால் உலகில் எல்லோரும் விரும்புவது பாராட்டையும்,அங்கீகாரமும் தான்.அது கிடைக்காத நிராசையினால்தான் கோபமும் வெறுப்பும்,பழிவாங்கும் எண்ணமும்.கூடவே வாழும் அம்மாவிடம் பேச நேரமேயில்லை.வெளிநாட்டிலிருந்து வந்த நண்பனுடன் ஒருவாரம் விடுப்பெடுத்துச் சுற்றமுடிகிறது.இதெல்லாம் என்ன?Taken for granted தானே???

எல்லா நாட்களையும் நாம் கொண்டாடுவதில்லை.பிறந்த நாளோ,தீபாவளியோ,காதலர் தினமோ ஒரு சிறப்பைப் பெறுவதைப் போல ஏன் எல்லா நாட்களும் கொண்டாடப்படுவதில்லை?தினம் குடிக்கும் தண்ணீர் பெறாத சிறப்பை எப்படிப் பழச்சாறும்,இளநீரும் பெற்றுக் கொள்கிறது?இதன் அடிப்படையைப் பார்த்தால் வெகு அருகாமையில்,அல்லது நினைத்த பொழுது கிடைக்கும் அல்லது எப்போதும் தொடர்புடைய ஒன்றைப் பற்றி நமக்கு அக்கறையில்லை.நம்முடைய நினைப்பெல்லாம் கிடைக்காத ஒன்றைப் பற்றியதாகவே இருக்கிறது.இது ஒரு மாயையோ?

நதி இழுத்துச் செல்லும் மணல்துகள்,சருகு,இலை,மீன்கள் போல இழுபட்டுக் கொண்டே இருக்கிறோம்.வாழ்க்கையில் ஓட்டம் நன்றுதான்.ஆனால் பந்தயத்தின் எல்லை நூலையும் அறுத்துக் கொண்டு என் கடமை ஓடுவதே என்னும் ஓட்டத்தை நிறுத்தி மூச்சு வாங்கலாம்.
கொஞ்சம் அக்கம் பக்கம் சுற்றிப் பார்க்கலாம்.நமக்கானவர்கள்,நம்மைச் சார்ந்தவர்கள் பற்றிக கவலைப்படலாம்.அவர்கள் செய்யும் சின்னஞ்சிறு வேலைகளைப் பாராட்டலாம்.நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் இன்றே அன்பு காட்டலாம்.ஒரு சிறு புன்னகை,ஒரு கைப்பற்றுதல,ஒரு தோளில் கை போடுதல்,முதுகைத் தட்டிக் கொடுத்தல் இவை செய்யும் மந்திரங்களை உணரலாம்.
Let us not take anything for granted!