நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, October 14, 2012

கடவுளின் ஞாபகம் வருகிறது....

கையில் காசு இல்லாமல்
கடந்து செல்லும் பெரும் செலவு
மருத்துவர் அறையில் காத்திருக்கும் நொடி 
இயல்பாகக் கடவுளை ஞாபகப் படுத்துகிறது.....

கூடிப் பிரியும் நட்பு நிரந்தரமாக் விலகிப் 
போகும் நிராகரிப்பின் போதும்
தனிமை கழுத்தை நெறிக்கும் போதும்
எப்போதும் கடவுள் ஞாபகம் வருகிறது....

சுனாமி, பூகம்பம், நில அதிர்வு
தீவிரவாதம்,குண்டு வெடிப்பு, விபத்து
இவையெல்லாம் வெறுமே உச்சரிக்கும் போது கூட
கடவுள் ஞாபகம் வருகிறது....

தன்னைக் குறித்த அயர்ச்சியும்
வாழ்வைக் குறித்த அச்சமும்
கொஞ்சமாய் எட்டிப் பார்க்கும் போது
கடவுளின் ஞாபகம் வருகிறது....

இயல்பாக வாழும்
இனிமையான காலங்களிலும்
வெள்ளிக்கிழமைகளில் கூட
எண்ணெய்க் கிண்ணத்துடன் சுற்றும் போதும்
கோவிலின் சூடம் ஒத்தும் போதும் கூட
என்னை நினைப்பதில்லையென
வருந்திக் கொண்டிருந்தார் கடவுள்.....