நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, May 30, 2008

சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...




சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...

சிட்டுக் குருவியின் வாலில்
வாழ்க்கையைக் கட்டி விட்டு
வேடிக்கை பார்த்தேன்......
மேலே...கிழே.....
அங்கும்..... இங்கும்....
சிறகை விரித்துப் பறந்தது...

சமையலறையும்...சமையலும் இல்லை.
பணத்துக்காக ஓடும் வேலை இல்லை
தினசரிக் குளியல்,செய்தித் தாள்
படிக்கும் வேலை இல்லை...
டி.வி பார்க்கும் கால அட்டவணை இல்லை

பள்ளிக் கூடம், வீட்டுப் பாடம்
பரீட்சை, ரிசல்ட் டென்ஷன் இல்லை....
நீயா.... நானா ...சண்டை இல்லை..
ஓடிக் கொண்டே இருக்கும் அவசரம் இல்லை.

சுதந்திரம்...............விடுதலை...
சுதந்திரக் காற்றே மூச்சு......
பிறந்தால் பறக்கும் குருவியாக....
சிறகடிக்கும் சிட்டுக் குருவியாக....
பிறந்து பறக்க வேண்டும்...

எண்ணங்கள் சிறகடிக்க.....
மின்விசிறியைச் சுழல விட
....
அடடா.... ஒரு நிமிடத்தில் அதில்
சிக்கிச் சிறகொடிந்து மரித்தது..
அந்தச் சிட்டுக் குருவி
என் வாழ்க்கையுடன்....

Thursday, May 22, 2008

ஒரே நாளில் எழுத்தாளராயிட்டோமில்லே!!!!



ஒரே நாளில் எழுத்தாளராயிட்டோமில்லே!!!!

அப்போ எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..எங்க அப்பா ரொம்ப இலக்கிய ஆர்வம் உள்ளவங்க..திடீரென்று ஒரு நாள் என்னையும் என் அக்காக்கள் இரண்டு பேரையும் கூப்பிட்டு "ஒரு நல்ல கதை எழுதிட்டு வாங்க...யார் நல்ல கதையா எழுதிட்டு வர்றாங்களோ அவங்களுக்கு ஒரு பரிசுன்னு சொன்னாங்க...

நான் கொஞ்சம் மக்கு அப்போ...

உடனே உள்ரூமுக்குப் போய் கதவை மூடிக் கொண்டு பழைய ஆனந்த விகடன்,குமுதம்,கல்கி புத்தக மூட்டையைப் பிரித்து...நல்ல கதை வேட்டையில் இறங்கி விட்டேன் எனகென்ன தெரியும்.....எங்கப்பா சொந்தமா கதை எழுதச் சொன்னாங்கன்னு....நான் நினைத்தேன் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து எழுதணும்னு.....(என்னா மூளை???!!!!)

என் அக்காக்கள் இருவரும் ரொம்பக் குளிரா (அட ரொம்ப cool-a)இருந்தாங்க....என்னை மேலும் கீழுமாக முறைத்துக் கொண்டே இருந்தார்கள்...."அட பொறாமை" அப்படின்னு மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்..


ஒரு வழியா விகடன்லே வந்த "முடிவு" கதை எனக்கு ரொம்பப் பிடித்து இருந்தது...அதை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடிப் போய் அழகாக அப்படியே காப்பியடித்தேன்..என் செலெக்ஷன் திறமைக்கு நானே என் முதுகில் தட்டிக் கொண்டேன்.

அப்பா வந்ததும் எல்லோரும் அவங்க அவங்க கதையைக் காட்டினார்கள்.....ஒன்று கூட மனிதர்களைப் பற்றியது இல்லை...சிங்கம் ,புலி,ஆமைன்னு எல்லாக் கதாநாயகர்களும் விலங்காக இருந்தன. "சே இதுகளுக்கு இப்பிடி ஒரு ரசனையா?" என நொந்து கொண்டேன்...

இப்போ அப்பா என் கதையைப் படித்ததும்...ரொம்ப சந்தோஷப் பட்டு இதுதான் சிறந்த கதை...

"நம்ம அருணா இனிமேலிலிருந்து எழுத்தாளர் அருணா"...

அப்பிடின்னாங்க...ஒரெ பெருமை எனக்கு....அதுக்குள்ள எங்க பெரியக்கா ஓடிவந்து அந்த விகடனை எடுத்துட்டு வந்து அப்பா முன்னால் போட்டங்க....அந்தக் கதை எழுதியது யாரோ பிரபு என்றிருந்தது.அக்கா அது பக்கத்திலே

"எழுத்தாளர் அருணாகிட்ட இருந்து பிரபு திருடிய கதை" என்று பேனாவால் எழுதியிருந்தாள்....


அப்பா ஓவென்று சிரித்து
"காப்பியடித்த எழுத்தாளர் அருணாவா நீ? என்றதும்
நான் "ஙே" என்று விழித்தேன்....

இப்பிடித்தான் நான் எழுத்தாளராகினேன்!!!!!!

Wednesday, May 14, 2008

ஜெய்ப்பூரில் தீவிரவாதமும், மனிதத்துவமும், நானும்

ஏன் அப்படிசொன்னேன் தெரியாது....
என் நட்பிடம் மே 13
அதிர்ஷ்டம் கெட்ட நாள் என்று....
அதிர்ஷ்டம் கெட்டுத்தான் போய் விட்டது..

காற்றில் வெடிகுண்டுத் துகள்கள்...
கலவரத்தில் ஓடும் கால்கள்...
ரத்தத்தின் சிகப்பு வாசனை..
காமெராவும் கையுமாய் பத்திரிக்கையாளன்....

இமைகள் விழியைக் காட்டப் பயந்து
இறுக்கமாய் மூடிக் கொள்ள
மூச்சு விட மறந்து திசை தெரியாத
பயணமானாலும் வீடு சேர்ந்தது கால்கள்.

தொலைக் காட்சிப் பெட்டி நிமிடத்திற்குப்
பத்து என்று இறந்தவர்களின்
எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போனது..
மரணத்தின் நிழல் பட்டு விலகியது என்மேல்தானா??

அடப்பாவி, வெடிகுண்டு வைத்து விட்டுத் தூரம் போய்
யாரை அழைத்தாய் தொலைபேசியில்?
அம்மா நீயும் என் குழந்தையும் நலமா என்றா?
பத்திரமாய் கவனமாய் இருங்கள் என்று சொல்லவா?

திடீரென்று தொலை பேசி அழைத்தது...
அம்மாதான்....
மகளே நீ நலமா?குழந்தைகள்?
அவர் வீட்டிலே இருக்கிறாரா? நலமா?
கவனம் வெளியே செல்ல வேண்டாம்....

அவ்வளவுதான்....நாம்...
நாமும், நம் கூடும் நலமென்றால்
சந்தோஷமே!!
அங்கே உயிரிழந்த நூறு பேரைப்
பற்றிக் கவலைப் படத்தான்
அவர்கள் அம்மா, அப்பா, மனைவி,
கணவன்,குழந்தைகள் உள்ளனரே

தீவிரவாதமும் மனிதத்துவமும்
ஒன்றையொன்று அடித்துப்
போட்டுக் கொண்டு அந்த மனித உடல்கள் மேல்
நடந்து போய்க் கொண்டே இருந்தன.....

Tuesday, May 13, 2008

இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே!!!


தென்றல் புயல் எனத் திமிறும்
காற்றின் திமிர்.....

பூமியைத் துளைக்கும்
விதை வித்தை....

கோள்களை நெருங்க விடாத
சூரியனின் தகிப்பு....

மனதைக் குளிர்விக்கும்
மழையின் இனிமை...

காற்றுக்கே தலையசைக்கும்
மலரின் மென்மை.....

விரிந்து கிடக்கும்
வான் போல் மனது....

மீண்டும் மீண்டும் கரையுடன்
சேரும் கடலலை போல் உழைப்பு....

என்றேனும் எதுவேனும் எனக்குத்
தர வேண்டும் என்றால் இறையே.....
இவையத்தனையும் தா....

அல்லெங்கில்
ஒன்றும் வேண்டிலன்....
இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே!!!

Wednesday, May 7, 2008

இரு கொஞ்சம் செத்துவிட்டு வருகிறேன்.........

இரு கொஞ்சம் செத்துவிட்டு வருகிறேன்.........

ஒரு கவிதை எழுதும் முன்......
ஒரு பெண்ணைப் புரியும் முன்.....
ஒரு ஆணைத் திருத்தும் முன்....
ஒரு தவறைச் செய்யும் முன்.....
ஒரு தப்பைத் திருத்தும் முன்....

இரு கொஞ்சம் செத்துவிட்டு வருகிறேன்.........

ஒரு மலரைப் பறிக்கும் முன்....
ஒரு மழைக்கு ஒதுங்கும் முன்....
ஒரு மெழுகுவர்த்தியை அணைக்கும் முன்....
ஒரு காதல் கடிதம் எழுதும் முன்...
ஒரு காதலைச் சொல்லும் முன்....

இரு கொஞ்சம் செத்து விட்டு வருகிறேன்.....

Thursday, May 1, 2008

நிலாச் சாரலில் நான் .........



ஒரு தெய்வக் குழந்தையைப் பற்றிய எனது ஒரு படைப்பு நிலாச்சாரல் இணையப் பத்திரிகையில் வெளி வந்துள்ளது.....படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்!!!!!

"சொர்க்கத்தின் விலாசம் கேட்டேன்
இரங்கும் குணம்,
உதவும் மனம்,
உள்ள இதயம்
என்று சொன்னார் கடவுள்!!
இவ்வளவுதானா என்று வியந்தேன்?

மேலும் அறிய....

படித்துவிட்டு....
பிடித்திருந்தால்...
அங்கேயே உங்கள் பின்னூட்டங்களை பதிவு செய்யுங்களேன்....!