நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, February 24, 2010

எது விரதம்?

"ராணி நாளைக்குச் சீக்கிரம் வந்துரு...அய்யாவும் நானும் விரதம்...என்னாலே ஒண்ணுமே பண்ண முடியாது. ரகு வெளிலே பார்த்துப்பான்."
"சரிங்கம்மா" என்ற ராணி அம்மா ஏதாவது தருவாங்கன்னு காத்துக் கொண்டு இருந்தாள். ரெண்டே கொய்யாப் பழத்தைக் கையில் கொடுத்துவிட்டு"நாளைக்கு விரதம்னு எல்லாம் கொஞ்சமா செய்ததுலே எதுவும் மிஞ்சலை ராணி.....இன்னிக்குப் பழம்தான்" என்று சொல்லி நகர்ந்தாள்.
                                         ராணிதான் வீட்டில் மூத்தவள்.மூன்று தங்கைகள்.அப்பா அம்மா இதெல்லாம் சினிமாவில், கதைகளில் வருபவர்கள் அவளைப் பொறுத்தவரை.எப்போயிருந்துன்னு நினைவே இல்லாத நாளிலிருந்து இப்படி வீட்டு வேலை பார்த்துதான் தங்கைகளைக் காப்பாற்றுகிறாள்.

                                                                                ராணி தங்கச்சிங்களுக்கான மிஞ்சிய சாப்பாட்டுக்காக பெருநம்பிக்கையுடன் காத்திருந்தவளுக்கு வீட்டில் இவள் வருகைக்காகக் காத்திருக்கும் மூன்று வயிறுகளும் நினைவுக்கு வந்து மனதை அழுத்தியது.வீட்டில் ஒருமணி அரிசியோ எதுவும் கிடையாது ....மாசக் கடைசி.ஏற்கெனவே அட்வான்ஸ்லேதான் ஓடிக் கொண்டிருக்கு.....அம்மாகிட்டேயும் எப்படிக் கேட்க என்று நடந்தாள்.வழியெல்லாம் ராத்திரிப் பொழுதை எப்பிடி ஓட்ட என்று ஒரே கவலை...கால் கிலோ அரிசி கடனாக செட்டியார் கடையில் வாங்கி தண்ணீர் நிறைய ஊற்றிக் கஞ்சி வடிக்காமல் பிள்ளைகளுக்குக் கொடுததாள்.கடைசியில் கிடந்த சோற்றுப் பருக்கைகளையும் கஞ்சியையும் தம்ளர் தம்ளராய்த் த்ண்ணீரையும் குடித்துப் படுத்தாள்.
                                                  விடிஞ்சதும் கருப்புக் கருப்பட்டிக் காபியைத் தொண்டையில் இறக்கிக் கொண்டையை முடிந்து கொண்டு "ஏய் சுமதி தங்கச்சிங்களைக் கிளப்பி நீயும் பள்ளிக்கூடம் போங்க....மதியம் சத்துணவு சாப்புட்டுக்கோங்க" என்றவாறே வேக வேகமாக நடையைப் போட்டாள்....ஏற்கெனவே நேரமாச்சு....அம்மா சத்தம் போடுவாங்க....அம்மாவுக்கும் அய்யாவுக்கும் விரதம் வேற..."என்று நினைத்தவாறே எட்டி நடையைப் போட்டாள்.


                                 முற்றம் தெளித்துக் கோலம் போட்டு ,வீட்டைக் கழுவி, முன்னால் பின்னால் பெருக்கி எல்லாப் பாத்திர பண்டங்களையும் கழுவி,குத்து விளக்கைத் தேய்த்துக் கழுவி,மாலை போட்டு நிமிர்ந்த போது அம்மாவும் அய்யாவும் குளித்துப் பூஜைக்கு ரெடியாகியிருந்தார்கள்.ஒரு பொழுது சாப்பாடு என்றால் அன்று விசேடமாகச் சமைக்கவேண்டும்...............அவசர அவசரமாக காய் வெட்டிச் சமையலை முடித்து விட்டுப் பூஜை முடிவதற்காய்க் காத்திருந்தாள். எப்படியும் இன்னும் அரை மணி நேரம் ஆகும்....

                                                                                        வயிறு காலியாக அமிலமாய் எரிந்தது.முந்தைய நாளும் சாப்பிடாததால் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது...அப்படியே பூஜையறை வாசலில் தூணைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.கீழே விழுந்து விடக் கூடாதென்று இன்னும் இறுக்கமாகத் தூணைப் பிடித்துக் கொண்டாள்.

                                          காயத்ரி மந்திரம் இப்போதுதான் ஆரம்பித்திருந்தார்கள்.அம்மா மந்திரம் சொல்லிக் கொண்டே சாமிக்கு இலை வைத்துப் பரிமாற ஆரம்பித்திருந்தாள்.பருப்பின் மேல் நெய் விட நெய்க் கிண்ணம் எடுக்க எழுந்தவள் கொஞ்சம் தடுமாறினாள்.

" ராணி அம்மா விரதம்னு தெரியாதா....காலைலேருந்து பல்லுலே தண்ணி கூடப் படாமெ, சாப்பிடாம  விரதம் இருக்காங்களே...நாமளே எடுத்துக் கொடுக்கலாம்னு தோணறதா?.... எல்லாம் சொல்லணுமா?....இப்புடி உக்கார்ந்து வேடிக்கை பார்க்குறியே??.....போ...அம்மா கேக்குறதெல்லாம் எடுத்துக் கொடு... விரதமும் அதுவுமா நீ ஏம்மா அடுப்படிக்கும் பூஜையறைக்குமாய் அலையுறே?நீ அலையாமெ ஒரு இடத்துலே உக்காரும்மா......எல்லாம் ராணி செய்வா" என்றார் அய்யா .
அம்மா சாமிக்கு இலையில் கரண்டி நிரம்பp பருப்பின் மேல் நெய் ஊற்றினாள்.
படத்தில் முருகன் அழகாகச் சிரித்துக் கொண்டான்.

Saturday, February 13, 2010

பறத்தல் எல்லோருக்கும் வசப்படுவதல்ல........

நாளை மட்டுமே
ஆயிரம் இதயங்கள் இடம் மாறலாம்
ஆயிரம் பொய்கள் பேசப் படலாம்
நாளை மட்டுமே
ஆயிரம் பூக்கள் மலரலாம்
ஆயிரம் காதலும் பூக்கலாம்
நாளை மட்டுமே
ஆயிரம் பரிசுகள் கொடுக்கப் படலாம்
ஆயிரம் பரிசுகள் வாங்கவும் படலாம்
இப்படி நாளை மட்டுமே
காதல் செய்ய என்று அளந்து வரும் காதலில்
காதல் எங்கே இருக்கப் போகிறது?
நாளை என்ற ஒருநாளுக்காக
காதலி/காதலன் இல்லை என ஏங்காதீர்கள்........
சரியான பாதையில் நீங்கள்!

புவியீர்ப்புக்கு எதிராக செயல்படுவதே பறத்தல்
பறத்தல் எல்லோருக்கும் வசப்படுவதல்ல........
ஈர்ப்பில் சிக்காமல் இறக்கை
விரித்துப் பறந்து பாருங்களேன்....
உணர்வீர்கள் அப்போது.....
வானம் எவ்வளவு பெரியதென்று .............

Wednesday, February 10, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!

 இது யூத்ஃபுல் விகடனில்.......
ஒரு வீட்டில்
ரோஜாத் தோட்டம்


ஒரு வீட்டில்
ஜன்னலில் பூமரம்


ஒரு வீட்டில்
ஒளிந்து கொள்ளும் கதவிடுக்கு


ஒரு வீட்டில்
மூன்று சக்கர சைக்கிள்


ஒரு வீட்டில்
பரணில் செப்பு


ஒரு வீட்டில்
கூடிப் பேசும் கல்முற்றம்


ஒரு வீட்டில்
செல்லச் சிட்டுக் குருவியின் கூடு


ஒரு வீட்டுச் சுவரில்
அப்பாவின் தலைமுடி எண்ணெய்


இப்படி இருப்பை உணர்த்துதலுக்கு
எதையேனும் விட்டுச் செல்ல வேண்டும் போல...


இப்படி விட்டுச் செல்வதை உணர்த்தவும்
எதையேனும் எடுத்துச் செல்ல வேண்டும் போல...


வீடுகள் மாறிக் கொண்டே
வீடுகளைச் சுமந்தேன்


மீண்டும் ஒரு தேடல்...
'வீடு வாடகைக்கு விடப்படும்'

மீண்டும் ஒரு மாற்றம்...

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!

Monday, February 8, 2010

நிமிடத்தில் கடவுளாகலாம்--2

"என்னப்பா...........நியு காலனியிலிருந்து ஹோலி க்ராஸ் போறதுக்கா 60 ரூபா....பார்த்துக் கேளுப்பா.."
புதுசா ரிக்க்ஷாலே போறீங்களாம்மா?...வழக்கமா கேக்கறதுதாம்மா...எதிர்காத்துலே அழுத்த வேண்டாமா????
இப்படி ரிக்க்ஷாலே ஏறும் போதெல்லாம்

"மனுஷன் மனுஷனை இழுத்துட்டுப் போற வண்டிலே ஏர்றது எனக்குப் பிடிக்கறதில்லை அதனாலே ரிக்க்ஷாலே ஏறாதீங்க" அப்படீன்னு அப்பா சொல்றதும்,

" அப்புறம் இதுதான்னு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கிட்ட அவங்க இப்பிடி எல்லாரும் நினைச்சா எப்பிடிப்பா சாப்பிட முடியும்னு" அவள் சொல்றதும் நினைவு விளிம்பில் எட்டிப் பார்க்காமல் போனதில்லை. கொஞ்சம் குற்ற உணர்வோடுதான் அவள் உட்கார்ந்து போவாள் .
"அரிசி பருப்பு எல்லாம் வெலையேறிப் போச்சும்மா.."
இவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்

"எல்லாரும் வண்டிலே மோட்டார் வச்சுக்கறாங்களே? நீயும் வச்சுக்க வேண்டியதுதானே"
ஆமாம்மா அதுக்குன்னு தனியா பணம் புரட்டணுமே.....தினம் கிடைக்கிறது வாயுக்கும் வயிற்றுக்கும்தான் பத்தறது..இதுலே எங்கிட்டு மோட்டார் வைக்கிறது?"
அநியாயமா பணம் கேக்குறதுக்கு நியாயம் சொல்வது போலவேயிருந்தது அவன் பேச்சு.
வீட்டு முனை வந்ததும், "இங்கே இறங்கிக்கோங்கம்மா......மேடாயிருக்கு"என்றான்
"60 ரூபா கேக்குறே....இப்பிடி பாதிலே இறக்கி விட்டா எப்பிடி? "
"ரெண்டு எட்டுதாம்மா....இறங்கிக்கோங்க..."
"வீட்டுக்குக் கொண்டு விட்டா 60 தரேன்...இங்கே இறங்கிக்கறதுன்னா 50தான் தருவேன்."
"அட என்னம்மா இப்பிடிப் பத்து ரூபாய்க்குப் பிரச்சினை பண்றே?"முணுமுணுத்தவாறே....வண்டியை நிறுத்தினான்........
"சொல்லச் சொல்ல இப்பிடி வம்பு பண்ணறே...பாதிலேயே இறக்கி விடறியே??? உங்களையெல்லாம் போலீஸ்லேதான் புடிச்சுக் கொடுக்கணும்..."என்றவாறு 50 ரூபயைக் கொடுத்து விட்டு விடு விடுவென்று நடந்தாள்..
"எம்மா கட்டுபடியாகாதும்மா...... "என்பதைக் காதில் வாங்காமல் நடந்து விட்டாள்...
கோபத்துடனே நடந்தாள்.

வீட்டு முன்னே ஒரே கூட்டம்...என்ன ஏதோ என்று பதறியபடி போனால்..........மகன் நடுவில் ஆஆஆஆன்னு அழுது கொண்டிருக்க பக்கத்து வீடு எதிர் வீடுன்னு எல்லாரும் அங்கேதான்.....
"அய்யோ எம்புள்ளைக்கு என்னாச்சு?"
என்னான்னே தெரிலை ரவியம்மா.....திடீர்னு கீழே விழுந்தான் வாயில் வேற நுரையாய் வருது...."
"அய்யோ...ரவீ, ரவீ என்னப்பா செய்யுது? கண்ணைத் தொறந்து பாருப்பா..."
"எதுனா பூச்சி பொட்டு கடிச்சுருச்சோ...?"
யாராவது தண்ணி கொண்டாங்க"
"யாராவது ஆட்டோ கொண்டாங்க"
ஆளுக்கொரு பக்கம் கத்தக் கத்த பதற்றம் அதிகமாகிக் கொண்டே போயிற்று.
"நகருங்க..நகருங்க...அய்யே கொஞ்சம் காற்று வரவிடும்மா.....தள்ளிக்க"
"அய்யே பாம்பு கடிச்சிருக்கும்மா...சீக்கிரம் இந்தா காலைப் பிடி...தூக்கு......தள்ளுங்க...நீ ஏறிக்கம்மா....எம்மா நீயும் துணைக்கு ஏறிக்கோம்மா........"என்றவாறே நொடியில் வண்டியில் ஏற்றி ஆஸ்பத்திரி.....டாக்டர்....மருந்து...மாத்திரை...ஊசி..........வாங்கி...........அவ்வளவு ஆர்ப்பாட்டமும் முடிந்து 5 நிமிடம் லேட்டாயிருந்தாக் கூடப் பிள்ளையைப் பார்த்திருக்க முடியாது"ன்னு டாக்டர் சொல்லி நிமிரும் போது கண்ணிலிருந்து அருவி கொட்டிக் கொண்டிருந்தது.......

கொஞ்சம் நிதானத்துக்கு வந்து நிமிர்ந்த போது.............அந்த ரிக்க்ஷாக்காரன் நின்று கொண்டிருந்தான்"இவன் என்ன பண்றான் இங்கே?"என்ற கேள்வியோடு பக்கத்து வீட்டம்மாவிடம் கேட்ட போது " அட இவனில்லைன்னா புள்ளை இல்லே இன்னிக்கு புள்ளையை அள்ளி வண்டியில் போட்டுச் சரியான நேரத்துக் கொண்டு வந்து சேர்த்தது இவந்தான்......... பணம் கொடுத்து அனுப்பு" என்றாள்.

கொஞ்சம் தயக்கத்தோட..."ரொம்ப நன்றிப்பா.இந்தா இதை வச்சுக்கோ" என்றாள்
"அடப் போம்மா பிள்ளை உயிருக்குப் பயமில்லையே..பொழைச்சுக்கிச்சா? அதான் முக்கியம்"என்றவாறு பளிச் சிரிப்புடன் வெளியேறினான்.........


Tuesday, February 2, 2010

இப்புடீஈஈஈ "ஙே"வா இருந்திருக்கோமேன்னு....

எனக்கு நல்லா நினைவிருக்கு......முன் பல் விழுந்தது .........வகுப்பறையில் தான்.வாயில் ரத்தம் வந்ததும் உயிர் போவது போல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதும்...."என்ன இதுக்குப் போய் அழுதுக்கிட்டு?"போ தோட்டத்தில் பல்லை மண்ணில் புதைத்துவிட்டு வாயைக் கழுவிட்டு வா"என அதட்டிய முத்தம்மா டீச்சர் கண்ணுக்குள்ளேயெ நிக்கிறாங்க.

மண்ணுக்குள் பல்லைப் புதைக்கும் போதே..." ரத்தம் வேற வருது.....ம்ம்ம் நாளைக்கு லீவ் போட்டுட வேண்டியதுதா"ன்னு மனசுக்குள்ளே நினைச்சேன்.

வீட்டுக்கு வந்ததும் அழுதுட்டே அம்மாகிட்டே சொன்னதும்......நாளைக்கு லீவ் போட விடணுமேனு கொஞ்சம் அதிகமாவே அழுதேன்
"பல்லை எங்கே போட்டே"ரெட்டை வால் அக்காங்கதான் கேட்டாங்க.....
"எங்க டீச்சர் மண்ணுக்குள்ளே புதைக்கச் சொன்னாங்க..."
"அச்சச்சோ...... புதைச்சுட்டியா?"
"ஆமா...என்ன இப்போ?"
உன் பல்லை வானம் பார்த்துச்சா?
"அப்படீன்னா"
"வானத்துக்குப் பல்லைக் காட்டினியா?"
நான் அப்படியொன்றும் பத்திரமாகக் கொண்டு போகாததால்
" ஆமா ஏன்?" அப்படீன்னேன்.
"சரி அவ்வ்ளோதான் !உ னக்குப் பல்லே முளைக்காது!"
"அய்யோ"
"ஆனா பரவாயில்லை நல்லவேளை மண்ணுலே புதைச்சிட்டே"
"ஏனாம்??"
"கொஞ்ச நாள்லே பல் மரம் முளைக்கும்...அதுலேருந்து பறிச்சு ஒட்ட வச்சுக்கோ!....அது வரைக்கும் ஓட்டைப் பல்லிதான்!" இப்படி ரெட்டை வாலுங்க என்னை ஓட்டறது தெரியாமே நானும் "அப்பிடியா" அப்பிடீன்னு முழிச்சுட்டு
தினமும் பள்ளியில் புதைத்த பல்லுக்குத் தண்ணி கூட ஊத்திருக்கேன்னா பாருங்க!

இதென்ன? சப்போட்டா பழம் சாப்பிட்டுக் கொட்டையை முழுங்கிட்டேனேன்னு அழுதப்போ ......இந்த ரெட்டை வாலுங்க
"ஹேஏஏஏஏஏஏ..... உம்மேல சப்போட்டா மரம் நாளைக்கு முளைக்கும் ...நாங்க ஜாலியா பழம் பறித்துச் சாப்பிடுவோமேன்னு கத்துச்சுங்க...."
மரம் முளைச்சுடுமோன்னு அன்னைக்கு முழுசும் தூங்காம இருந்திருக்கேன்னா பாருங்க!

என் பொண்ணு முன் பல் விழுந்தப்போ பல்லைப் பஞ்சில் சுத்தி அவ்வ்ளோ ஸ்மார்ட்டா "I've lost my front tooth.Shall I dispose this mom" அப்படீன்னு கேட்ட போது

அய்யோ நாம இப்புடீஈஈஈ "ஙே"வா இருந்திருக்கோமேன்னு வெக்க வெக்கமா வருது!