நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, November 26, 2009

பசங்க எப்பவுமே இப்பிடித்தானா?

"ஜன்னலைக் கொஞ்சமாய்த் திறந்து கொஞ்சமாய் மேகம் பிய்த்துக் கொண்டு வந்து ஷோ கேசில் வைத்திருக்கிறேன்......ஜன்னல் திறக்கும் போது ஐஸ் மழைக்கட்டி உள்ளே வந்து விழுந்ததாக்கும்"அம்மா திட்டினாங்க இல்லாட்டி உனக்கும் கொஞ்சம் மேகம் கொண்டு வந்திருப்பேன்"

சின்ன வயதில் ஏரோப்ளேனில் முதல்முறையாய் பயணம் செய்த மூர்த்தி சொன்ன அண்டப் புளுகு கேட்டு வாய் பிளந்து நின்றிருக்கிறேன்........

"எங்க மாமா செத்துப் போனாங்க .......இன்னிக்குக் காலைலேதான் வயித்து வலியாலெ......... வயிறு வெடிச்சு....இன்னிக்குக் காலையில் சாப்ட தோசை கூடத் தெரிஞ்சுது தெரியுமா"

அப்பிடீன்னு கூடப் படித்த சிவா அரை நாள் லீவ் ஏண்டா எடுத்தேன்னு கேட்டப்பொ சொன்ன ஆகாசப் புளுகுக்குக் கூட வாய் பிளந்துதான் போனேன்....

அப்புறம்...........

நான் எது சொன்னாலும்.........
"ஜஸ்ட் நானும் அதேதான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க மேடம்"
அப்படீன்னு ரீல் விடும் கோ-ஆர்டினேடர் ஷர்மாவின் புளுகு மூட்டைகளைப் பார்த்து அப்பப்போ வாய் பிளந்து கொண்டிருந்தாலும்.........

இது டாப்பு!

"117 டிக்ரீ காய்ச்சல் மேடம் "
நேற்று ஏண்டா வரல்லைன்னு +2 படிக்கும் அபிஷேக்கைக் கேட்டதுக்கு சொன்ன அணுகுண்டுப் புளுகுக்கு நான் "ஙே" வாகாமல் என்னா பண்ண?
????

Sunday, November 22, 2009

சுய விலாசமிட்ட தபால் கார்டு...........


எப்போதுமே எப்பவுமே தபால்காரர்களிடம் ஒரு தனி ஈர்ப்பு உண்டு எனக்கு.......புது தகவல் கொண்டு வருவதனாலா...அல்லது எதுவென்று தெரியாது....தினமும் எனக்கு ஏதாவது கடிதம் வரவேண்டும் என எதிர்பார்ப்பவள் நான்...

ஆனால் அந்த வயதில் அத்தனை கடிதம் போடும் நட்புகள் அறிமுகம் இல்லாததால்.............புத்தகங்கள் பத்திரிக்கையில் ஏதாவதில் சுய விலாசமிட்ட தபால் கார்டு அனுப்புங்கள் என்றால் போதும் அனுப்புவதுதான் முதல் வேலை.....அது தோட்டக் கலை கற்றுத் தருவதாயிருந்தாலும் சரி....ட்ரான்சிஸ்டர் ரிப்பேர் செய்யக் கற்றுக் கொள்ளச் சொல்லித் தருவதாயிருந்தாலும் சரி சுய விலாசமிட்ட தபால் கார்டு அனுப்பி விட்டுத்தான் மறுவேலை......

இப்பிடி அனுப்புவதோடு மட்டுமல்லாமல்....தினமும் பதில் வந்துவிட்டதா....என்று காத்துக் கிடப்பதும் உண்டு.........12:35க்கு தபால்காரர் வருவார் .....வந்துட்டாரா...வந்துட்டாரா...ன்னு தெருமுனையை எட்டி எட்டிப் பார்த்தே காலும் தரையும் தேய்ஞ்சுருக்கும்....இதுக்காக அம்மாகிட்டே வாங்காத திட்டு இல்லை....அப்படி இப்ப்படீன்னு வந்தவைகளை அது என்ன குப்பையாக இருந்தாலும் ஒண்ணு விடாமல் படித்து முடிப்பதுமில்லாமல்.....அதைப் பற்றி அடுத்தவங்களுக்கு சொல்லி அறுப்பதிலும் மன்னி நான்......

திருமணமாகி ஆஹமதாபாத் வந்த பின் அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் வந்து சேர எட்டு நாட்கள் ஆகும்.....எட்டாவது நாள் கடிதம் வரல்லைன்னா அவ்வ்ளோதான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கொண்டாடீருவேன்.......
இப்போ தபால்காரரை தீபாவளி ஹோலிக்குப் பார்க்கிறதோட சரி..............

அதே தான்....அந்த எதிர்பார்ப்புதான்....இந்த வலைப்பூவை நான் விரும்புவதற்கு முக்கிய காரணமாகக் கூட இருக்கலாம்.........இப்பவும் அதே ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது......

இப்பவும் அதைத்தானங்க பண்றேன்....சுய விலாசமிட்ட தபால் கார்டு........பதிவு..... போட்டுட்டு உங்க கமென்ட் .....தபால்காரர் எப்போ வரும்னு காத்துக்கிட்டே இருக்கிறதுதானே வேலை!.......அப்படியும் இப்படியுமா 200 சுய விலாசமிட்ட தபால் கார்டு போட்டாச்சு ...போட்டாச்சு!!!!!!

Monday, November 16, 2009

காணும் காட்சியில் தெய்வம் கண்டேன்!

மழை ஊரை உருட்டித் தள்ளியது. பனி உடம்பை உருக்கியது. போயே ஆகவேண்டுமா? காலையிலிருந்து வேலை கையைக் காலை
அசத்தியது...அடாது மழை பெய்தாலும் போயே ஆகவேண்டும் மனம் அடம்
பிடித்தது. அப்படித்தான் போனேன்.
அது ஒரு கல்வியாளர்களுக்கான தனிப்பட்ட அழைப்பிதழ்.
Ability unlimited......differently abled. அப்படித்தான் சொல்லிக் கொண்டார்கள்..


ஷோ பார்த்து முடிந்ததும் ...........
நான் தூசியானேன்
இதயம் காலியானது.
சக்கர நாற்காலியில்
ராமாயணம்
மஹாபாரதம்
பரதநாட்டியம்
கதகளி,மார்ஷல் ஆர்ட்
யோகா சூஃபி ....என்று.........

அவர்கள் ஆடினார்கள்
அவர்கள் ஓடினார்கள்
அவர்கள் பாடினார்கள்
அவர்கள் சண்டையிட்டார்கள்
அவர்கள் நடித்தார்கள்
அந்த அரங்கம் அமைதியில்
அலறியது..................
அத்தனை விழிகளும்
குளித்திருந்தன..............
யாருக்கும் யாரிடமும்
பேச எதுவுமில்லை.........
தெரிந்தவர்களுடன் புன்னகை
கூட பாரமாகிப் போனது...

MAGICAL MOMENT!!

உணர்வுகளை எழுத்துக்கள்
விவரிக்க முடியாது என்பதை
முதன்முறையாக ஒத்துக் கொள்கிறேன் .........

இந்தக் கடவுளின் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்த
குரு சையது சலாலுதீன் பாஷாவுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்........
இந்த நிகழ்ச்சியின் வீடியோக்களைப் பார்க்க..............இங்கே

Thursday, November 12, 2009

சூரியன் குடிக்கலாம் வாங்க!

கொஞ்சம் சூரியன் குடிக்க
கைகளை நீட்டிக்
கையில் எடுக்கக்
கையிடுக்கில் நிற்காமல்
நழுவி ஓடியது சூரியன்.........

வெயில் மினு மினுக்கும்
ஆற்று நீரைச் சொன்னேன்!

Tuesday, November 10, 2009

மழை பொழிந்தது இங்கே!நவீன விருட்சம் அது
தலைகீழாய் முளைத்திருந்தது....
பூவும் இலைகளும் வானம் நோக்கி
உதிர்ந்து வீழ்ந்தது..........
பூக்களைப் பிடிக்கமாட்டேன்
என்று கைவிரித்தது வானம் ............
மழை பொழிந்தது இங்கே!

Friday, November 6, 2009

அமித்தம்மாவுக்கும் புதுகைத் தென்றலுக்கும் என்னா பிரச்னை?

அமித்தம்மாவுக்கும் புதுகைத் தென்றலுக்கும் என்னா பிரச்னை?அட நீங்க வேற.....ஒண்ணூம் பிரச்னையில்லே..... ஒரே நேரத்தில் என்னைத் தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌தைத் தவிர.......
அமித்தம்மாவுக்கும் புதுகைத் தென்றலுக்கும் ந‌ன்றி.
அரசியல் தலைவர்

பிடித்தவர்:???????
நடிகர்
பிடித்தவர்:எல்லோரிடமும் ஏதோ ஒன்று பிடித்துத்தான் இருக்கிறது....
சிரிப்பு நடிகர்:
பிடித்தவர்: விவேக்
இயக்குநர்
பிடித்தவர்: பாலசந்தர்
ந‌டிகை
பிடித்தவர்: நதியா
இசையமைப்பாளர்
பிடித்தவர்: அப்பப்போ ஏ.ஆர் .ரஹ்மான்,அடிக்கடி இளையராஜா,எப்பவும் எம்.எஸ்.விஸ்வநாதன்.
நடன இயக்குநர்

பிடித்தவர்: பிரபுதேவா
பாடலாசிரியர்
பிடித்தவர்: கண்ணதாசன்
கவிஞர்

பிடித்த‌வ‌ர்: வைரமுத்து
எழுத்தாள‌ர்
பிடித்தவர்: பாலகுமாரன்,சுஜாதா
விளையாட்டு வீரர்
பிடித்தவர்:ஸ்ரீகாந்த்

இந்தத் தொடரை, தொடர அழைப்பவர்கள் :
அடர் கருப்பு காமராஜ்,வானவில் வீதி கார்த்திக்,முத்துச்சரம் ராமலக்ஷ்மி,கலகலப்பிரியா,ஞானசேகரன்.......இவங்கதான் இன்னும் எழுதலைன்னு நினைக்கிறேன்.

டிஸ்கி1: என்னா பிடிச்சவங்க பற்றி மட்டும் எழுதிருக்கேன்னு பார்க்கிறீங்களா? படித்தது,பார்த்தது ,கேட்டது,ரசித்தது...இப்பிடி எல்லாவற்றிலும் அட...இது நல்லாருக்கேன்னு வாய் பிளந்ததுலே பிடிக்காதது பற்றி ஒரு தெளிவு இல்லை........யோசிச்சுட்டு இருக்கேன் பிடிக்காதது பற்றி.............