நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, July 29, 2010

இவை தேவதைகளின் காலம்!

முன்னால் கடந்து போகும் பேருந்தின் ஜன்னலின் வழி
கைவிரல்களை கூட சரியாக விரிக்காத குழந்தை ஒன்றின் கை தெரிந்து மறையும் நேரம் ......

தூண் மறைவிலிருந்து மெல்ல குண்டுக் கண்களும் பிஞ்சு விரல்களும்
வெளிப்படும் தருணம்....

பயணம் முழுக்க கவனம் சிதறிவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்
யாரென அறியாமலேயே முகம் பார்த்துச் சிரித்தும் முகம் மறைத்தும் அம்மாவின் தோளிலிருந்து எட்டிப் பார்த்துச் சிரிக்கும் நிமிடம்.....

தேம்பி அழுது கண்ணீருடன் இருக்கும் போது "பிடிச்சோ" என்றால் அணில் பல் காட்டிச் சிரிக்கும் நேரம்....

தயிர்க் கிண்ணத்துடன் முகம் முழுவதும் தயிர் அப்பிக் கொண்டு திரு திருவென முழிக்கும் நொடி........

குடித்த பால் வரைந்த மீசையுடன் சிரிக்கும் தருணம்.....
பொம்மையைக் கட்டிப் பிடித்துத் தூங்கும் நிமிடம்......
தனக்குத் தானே பேசிக் கொண்டு தர்பார் நடத்தும் காலம்......

இப்படி அது வேறோர் தனி உலகம்.இந்த தேவதைகளுக்கான உலகமும் தருணமும் தவறிப் போனால் திரும்பக் கிட்டாது.கொஞ்ச‌கால‌ம் தேவ‌தையாய் வாழ‌ வ‌ர‌ம் பெற்ற‌வ‌ர்கள்.....நமக்கான தேவதைக் காலங்களை வரமாகத் தந்தவர்கள்...சிறகு உதிர்ந்து மனிதர்களாகும் முன் பத்திரப் படுத்த வேண்டும் இந்த தேவதைத் தருணங்களை!!

Saturday, July 24, 2010

மழையும் மழைசார்ந்த நிகழ்வுகளும்--1

முதல் தடவையா அந்தத் தப்பு பண்ணப் போகிறாள்..டேட்டிங்க்!
அம்மாவுக்குத் தெரியாமல் செய்யும் முதல் தப்பு.நேற்று அம்மா அப்பாவோடு வந்து பெண் பார்த்துவிட்டுப் பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டுப் போனவரிடமிருந்து ஒரு போன் வந்ததும் நேரில் தனியாகச் சந்திக்கலாமா? எனக் கேட்டதும் கனவு போலிருந்தது.அவளையறியாமலே வருகிறேன் என்றாயிற்று.என்னவெல்லாம் பேச வேண்டும்,அவர்க்குப் பிடித்தவையெல்லாம் எனக்குப் பிடிக்குமா?எனக்குப் பிடித்ததெல்லாம் அவருக்குப் பிடிக்குமா?முக்கியமா மழையை.என் வாழ்வில் மழைக்குத் தனியிடம் உண்டென்பதையும் சொல்லவேண்டும்....இன்னும்...இன்னும்
"அம்மா மீனா வீட்டுக்குப் போயிட்டு வரேன்."
வெளியே வந்து பார்த்தாள். மழைமேகம் இருண்டிருந்தது.
"இருட்டுவதற்குள் வந்து விடு.மழை பெய்யும் போலிருக்கு.குடை எடுத்துட்டுப் போ"
அவசரமாய் குடையைத் துணிகளுக்கிடையில் ஒளித்து வைத்து விட்டு அம்மா பார்ப்பதற்குள் வெளியேறினாள்.
முதல் துளி கண்ணின் இமை முடிகளின் மேல் விழுந்தது.கண்களைச் சுருக்கி வானம் பார்தது மழையை அப்படியே குடித்து விடுபவள் போல மயக்கத்துடன் பார்த்தாள்.அப்படியே சட சடவென்று அடித்துப் பெய்ய ஆரம்பித்தது.மனம் முழுவதும் சொல்ல முடியாத ஆனந்தம் பரவியது.தன் வாழ்வை இணைத்து ஆரம்பிக்கப் போகும் இனியவரைப் பார்க்கப் போகும் போது மழையும் துணைக்கு வந்தது ரொம்பப் பிடித்திருந்தது.
மழை ராஜ்யத்தின் மஹாராணியைப் போலக் கை வீசி நடந்தாள்.தலையில் மழைக் கிரீடமும்,காதோரம் மழைப் பூவையும் சூடி அழகு படுத்திக் கொண்டாள். நனைவதைப் பற்றிக் கவலைப் படாமல்,கூந்தல் கலைவதில் கவனம் இல்லாமல் மழைத் தோழியுடன் ஒன்றியவாறு, நனைந்த மரங்களின் இலைகள்"மழை பெய்ததே" என்று கை தட்டிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி "இங்கேதானே வரச் சொன்னார்".....அந்த பார்க் வாசலில் நின்றவாறு அவரை எங்கே காணோமென்று தேடினாள்.
ஊஹும்...காணோம்.
அங்கேயும் இங்கேயுமாய் பர பரவென்று கண்களை ஓடவிட்டதில் அகப்பட்டார்.....
ஹ்ம்ம்ம்...முழுவதுமாய் உடல் மறைத்த ஒரு ரெயின் கோட் அணிந்து தலையில் ஒரு துளி விழுந்து விடாமல் தொப்பி வைத்து ஒரு கடையின் கூட்டத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவன் போல நின்றிருந்தான்.
"என்னம்மா...மழைலே இப்பிடி நனைஞ்சுட்டு வந்துருக்கே...மழைக்கு ஒரு குடை கூடவா கிடைக்கலை.என்னைப் பார்த்தியா ஒரு சொட்டு மழை விழலை என்மேல....எப்புடி?" எனப் பெருமையா பார்த்தார்.
முதல் அத்தியாயத்திலேயே அவள் கதாநாயகன் மரித்துப் போனான்.

Monday, July 19, 2010

1 for sorrow, 2 for joy!!!

1 for sorrow, 2 for joy, 3 for a girl, 4 for a boy, 5 for silver, 6 for gold,7 for secret never to be told,8 is a wish and 9 for a letter 10 is a bird you must not miss.....
                                                             குட்டி மைனா பார்த்திருப்பீங்களே. மஞ்சள் கண்களோடு..........அதை வைத்துத்தான் இந்தப் பாட்டு. பள்ளிப் பருவத்தில் பள்ளிக்குப் போகும் போது பார்க்கும் மைனாக்களின் எண்ணிக்கையை வைத்து ஆருடம் சொல்லும் பாடல்.அநேகமாக இரண்டு மைனாக்கள் சேர்ந்து பார்த்து விடமுடியும்....எப்போ பார்த்தாலும் ஹையா 2 for joy! அப்படீன்னு குதித்துக் கொண்டு போவதுண்டு!அது எப்படி இப்போ வரைக்கும் தொடருதுன்னு தெரியாது.இப்போ மைனா பார்க்க முடிவதில்லையென்பதுதான் வருத்தம்.
                        எங்கே போச்சுதுங்க இந்த குருவி மைனாக்களெல்லாம்?கூடு விட்டு விட்டுப் போகும் போதும்,நாடு விட்டுப் போகும் போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காய் எதை எடுத்துச் சென்றிருக்கும்?இது என் கூடு என்பதற்காய் கூட்டில் எதை விட்டுச் சென்றிருக்கும்???அவைகளுக்கும் தாய் நாடு என்ற உணர்வெல்லாம் இருக்குமோ??வேற்றிடம் போய்க் கூடுகட்ட அவைகளும் கஷ்டப் பட்டிருக்குமோ?அல்லது கூடுகளில் இல்லாமல் கூட்டமாக எங்கேனும் அடைந்து கிடக்கின்றனவோ??அவைகளைக் கூடு கட்டி வாழ விடாமல் ஓட ஓடப் பறக்கத் துரத்தி அடித்து நம் வீட்டைக் கட்டிக் கொள்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி இல்லையே???ஏன்?
              தானியம் போட்ட ஜன்னல் வெளி இப்போதெல்லாம் தானியங்களும் தண்ணீர்க் கிண்ணங்களும் தொடப் படாமல்இருப்பதன் காரணம் புரிந்தாலும் கண்டு கொள்ளாமல் தானே இருக்கிறோம்.இந்தப் பூமியின் பறவை தேசம் இதுவென்று கொஞ்சத்தையாவது வரையறுத்துக் கொடுத்து வாழ விடுவோம்.மின்சாரக்கம்பிகளும்,ட்ரன்ஸ்ஃபார்ம்களும்,மின்விசிறிகளும்,கைத் தொலைபேசிகளும் இல்லாத உலகம் ஒன்றைச் சிருஷ்டித்துக் கொடுத்து விடலாமே!பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் அவைகள் சிறகடித்து ஆனந்தமாகப் பறக்க விட்டு  விடுவோமே.                            

                           காலையில் என் அறைக்குள் மின்சாரவிசிறியில்  அடிபட்டு விழுந்து கிடந்த ஒற்றைக்குருவி நொண்டி நொண்டி நடந்து கேட்டது.one for sorrow தானே ....???

Thursday, July 15, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்....6

 எதிர்பாரா மழைக்கு
அடுப்படியில் ஒன்றும
முன்னறையில் ஒன்றுமாய்
பாத்திரம் வைத்துப்
பத்திரப் படுத்தியாயிற்று மழையை....

அதிசயிக்கும் மழையைச்
சபித்துக் கொண்டே
பின்கட்டுக்கு ஒரு சாக்கும்
முன் வாசலில் ஒரு சாக்கும்
போட்டு  மழைத் தண்ணியைத்
தடுத்தாயிற்று

இன்னும் மழையிலிருந்து தப்பிக்க
புத்தகப் பைகளும்
துணிமூட்டைகளும்
சோற்றுப் பாத்திரமும்
இடம் மாறிக் கொண்டேயிருந்தன.....

மழை கொஞ்சம் அடித்துப் பெய்ய...
கையில் கிடைத்த அண்டா குண்டா
எடுத்து ஓடி ஓடி இடம் மாற்றி
பூனைக் குட்டிக்கொரு
ஈரமில்லாஇடம் தேடி.....

 ரசிக்க முடியாத
மண்வாசனையுடன்....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்....

Monday, July 12, 2010

தொலைதலும் கிடைத்தலும்....

எப்போதிருந்து தொலைந்து போக ஆரம்பித்தேன் என நினைத்துப் பார்த்தால் அது முதல் முதலா மூன்றாம் வகுப்பு படிக்கும் போது சென்னைக்கு ஏதோ ஒரு விசேஷமா அல்லது சுற்றிப் பார்க்கவோ போயிருந்த போது எல்லோரும் இறங்கியபின் தூங்கிக் கொண்டிருந்த நான் டாக்ஸியோடு போய்த் தொலைந்திருக்க வேண்டியது. ....ம்ம்ம் தப்பிச்சுட்டேன்.

தொலைதலும் கிடைத்தலும் தொடர் விளையாட்டுப் போல...ஒன்றையொன்று துரத்திக் கொண்டேயிருக்கும்.சீப்பைத் தேடினால் எப்போவோ தேடிய பேனா கிடைக்கும்.பேனாவைத் தேடினால் தொலைந்த மோதிரம் கிடைக்கும்.தேடியதே கிடைத்து விட்டால் கொண்டாட்டம்தான்.தொலையாமல் பத்திரப் படுத்தும் வித்தை தெரியும்தான்...ம்ம் எடுத்த இடத்திலேயே வைக்கவேண்டும்தான்...ஆனால் எப்போதும் முடிவதில்லையே......


அப்புறமாய் உறவினர் கூடும் கூட்டங்களிலிருந்து தொலைந்து போயிருக்கிறேன் "இன்னும் பார்க்க ஆரம்பிக்கலியா" என்னும் அநியாயமான கேள்விகளுக்குப் பயந்து போய்..... உங்க சம்பளம் எவ்வளவு எனக் கேட்கும் கூட்டத்திலிருந்தும் அடிக்கடி..சமரசம் செய்ய முடியாத மனிதர்களிடமிருந்தும்,வலிகளைப் பிரதியெடுக்க விருப்பமில்லாத
நிகழ்விலிருந்தும் பயணிக்கும் போது தொலையும் மைல்கல்லைப் போல ஓடி ஓடித் தொலைந்து கொண்டேதானிருக்கிறேன்.

மொட்டை மாடியில் இருட்டுக்குள் தொலைந்து போவதில் இருக்கும் சவுகரியம் ரொம்பவும் பிடித்தது.தொலைபேசியைக் கீழேயே வைத்து விட்டுத் தொலைந்து விடலாம்.மடிக் கணினியையும் மறந்து வைத்து விட்டுத் தொலைந்து விடலாம்.அழும் போது மழைக்குள் தொலைதலும் இருட்டுக்குள் தொலைதலும் ரொம்ப சவுகரியம்.

எழுதுவதிலிருந்தும் கூட அவ்வப்போது தொலைந்து கொண்டுதானிருக்கிறேன்.தொலைவதனால் ஏற்படும் இழப்பின் அடர்த்தியை உணர்ந்தேயிருக்கிறேன்.இந்த அவசர உலகத்தில் ஓடும் ஓட்டத்தினை நிறுத்தி மூச்சு வாங்கக் கூட நேரமில்லாமல் இருக்கும் போது அவ்வப்போது இந்த தொலைந்து போதல் தேவையாய்த்தானிருக்கிறது.இணையம் வா என்னில் தொலைந்து போ என்னும் போதும் தொலைபேசி இசையால் தொலைந்து போ என அழைக்கும் போதும் ஓடிப் போய் ஒளிந்து கொள்ளத் தொலைதல் தேவையாயிருக்கிறது.

ஒவ்வொரு தடவையும் தொலைந்த என்னை மீட்டெடுப்பது இசையும் இதே மூச்சு விடமுடியாதவேலையும்தான்....தொலைந்து போகிறேன் விரும்பியேதான்....... ஒவ்வொரு தடவையும் மீண்டும் கிடைத்து விடுவேன் என்னும் உத்தரவாதம் இருக்கும் வரை அடிக்கடி தொலைந்து போகலாம்.....