நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, January 29, 2008

"என்னடா செல்லம்?"

நான் சுக்கு நூறாய் உடைந்தேன்.என் கண்ணிலிருந்து கண்ணீர் என்னையறியாமலே வழிந்தது..நான் உனக்காக அழுதேனா?எனக்காக அழுதேனா?எனக்கே புரியவில்லை.நீ சொன்னதெல்லாம் மீண்டும் மீண்டும் மனதில் மின்னலடித்தது..மனது திடீரென்று "கனவிலிருந்து விழித்துக் கொள்ள மாட்டேனா" என்று அநியாயத்துக்கு ஆசைப் பட்டது.
எனக்கு உன் மேல் கோபம் வரவில்லை...கோபத்தைதான் உன்னைப் பார்த்த நாளிலே தொலைத்து விட்டேனே....என் மேலேயேதான் கோபம் கோபமாக வந்தது...அவ்வளவுதான் வாழ்ந்தது போதும் என்று நினைத்தேன்.தொண்டை அடைத்துக் கொண்டது...கால் போன போக்கில் வேக வேகமாக நடந்தேன்.மழைக்காக வானம் கருப்புக் கொடி காட்டியது....அந்த முதல் மழைத் துளி என் கைக்ளில் பட்டுத் தெறித்தது.எப்போதும் மழைத் துளி என்னில் கொண்டு வரும் சந்தோஷச் சில்லிப்பு வரவேயில்லை.மண்வாசனை என் மூளைக்குள் பதிய மறுத்தது...வழியெங்கும் உள்ள பூக்களையெல்லாம் கூட மனதிற்குள் சீ... போ...என்று கோபித்துக் கொண்டேன்..கால்கள் தன்னையறியாமல் அந்தப் புல்வெளியில் கொண்டு சேர்த்திருந்தது...வேக வேகமாக நடந்ததில் அந்த மழையிலும் கூட வேர்த்திருந்தது."இனி நான் உன்னிடம் பேசப் போவதில்லை...இன்று மட்டுமில்லை வாழ்நாள் முழுவதும்தான் உன்னிடம் பேசப் போவதில்லை...."இன்றோடு வாழ்க்கையை முடித்துக் கொண்டால் என்ன........ என்று மனதில் நினைத்தவாறு ஆயாசத்துடன் புல்தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு கண்களை மூடினேன்..கண் ஓரங்களில் எனக்கென்ன என்று கண்ணீர் கோடு போட்டது.என்மேல் நானே இரக்கப் பட்டேன்.இனி கவிதாவைக் கண்டால் யாரோ எவளோ என்பது போல கண்டுக்காமல் இருக்க வேண்டியதுதான் என்று வைராக்கியதுடன் அழுகையை நிறுத்தினேன்.....அருகில் எதோ சலனம்...கண்திறக்காமல் இருந்தேன்.முன் நெற்றியின் முடிக் கற்றையை யாரோ ஒதுக்கி விடுவது போல ஒரு உணர்வு...நம்பிக்கையில்லாமல் கண்திறந்தேன்...ஐயோ...."கவிதா" வாழ்நாள் முழுவதும் பேசவே மாட்டேன் என்ற அத்தனை வைராக்கியமும் தூள் தூளாகி "என்னடா செல்லம்?" என்று பளீரென்று சிரித்து 178-வது முறையாக மீண்டும் வாழும் ஆசையுடன் எழுந்து உட்கார்ந்தேன்....

Sunday, January 27, 2008

மண்ணுக்குள் புதைந்தும் புதைத்தும் விடாதே...

பனிக்கும் புயலுக்கும்
நெருப்புக்கும் மழைக்கும்
தப்பிய பூவே
பூஜைக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை...
மண்ணுக்குள் புதைந்து விடாதே....

சூரியனுக்குத் தப்பிய
நிலவே!
இருட்டுக்குத் தப்பிய
நட்சதிரமே!
வானத்தில் ஒரு இடம் இல்லையென்றாலும் பரவாயில்லை..
மண்ணுக்குள் புதைந்து விடாதே....

கண்ணுக்குத் தப்பிய
கனவே!
கனவுக்குத் தப்பிய
காதலே!
மனதில் இடமில்லையென்றாலும் பரவாயில்லை..
என்னை மண்ணுக்குள் புதைத்து விடாதே....

Thursday, January 24, 2008

என் வீட்டுக் கதை இது.....

என் வீட்டுக் கதை இது.....
நாங்கள் எனக்கு விபரம் தெரிந்த போது டைடஸ் வீட்டில் இருந்தோம்..சுற்றிலும் மாந்தோப்பு...கொய்யா மரங்கள்,பலா,சீதாப் பழ மரங்கள்...நினைத்த போது நினைத்த பழம்...எனக்கு நினைவு தெரிந்து நாங்கள் பழம் விலைக்கு வாங்கியதில்லை...பலாப்பழம் வேர்ப்பலா..மரத்திலிருக்கும்போதே மரத்தின் பாதத்திலேயே உட்கார்ந்து பலாச் சுளையை எடுத்துச் சாப்பிட்டிருக்கிறோம்.

அப்புறம் மாடி வீடு..அது ஏனோ அவ்வளவாக ராசி இல்லாத வீடாகவே எல்லோராலும் நினைக்கப் பட்டது.அதனால் சீக்கிரமாகவே மாற்றி விட்டோம்.அடுத்தது பங்களா வீடு..அந்த வீட்டில் ஒரே ஒரு நாள் தான் இருந்தோம்...முதல் நாள் இரவே அம்மாவுக்கு அடுப்பு உடைவது போல கனவு...அது கெட்ட சகுனம் என்று அடுத்த நாளே வேறு வீடு மாறி விட்டோம்.ஆனால் எனக்கு ரொம்பவும் பிடித்த வீடு அதுதான்..வீட்டைச் சுற்றி லில்லி செடிகள்...சின்ன நெல்லிக்காய் மரம்,பார்க் போன்ற வடிவில் ஒரு தோட்டம்..ஆளாளுக்கு ஒரு அறை என்று நாங்கள் பங்கு போட்டுக் கொள்ளும் முன்னரே வீடு பறி போயிற்று..

அடுத்தது புலி வீடு...அதுதான் நாங்கள் அந்த வீட்டிற்கு வைத்த பெயர்...காரணம் வீட்டிற்குச் சொந்தகாரர்...புலி போலவேதான் இருப்பார்..முன் மண்டையிலும்,காதோரங்களிலும்,காது மடலிலும்,மட்டும் முடி..எப்போதும் ஒரே உறுமல்தான்...அடுத்ததுதான் கொக்கு வீடு...இது எனக்குப் பிடித்த ரெண்டாவது வீடு.இந்த வீட்டுக்காரருக்கு கொக்கு மாதிரி ஒரு கழுத்து....இது ஒன்றேதான் இந்தப் பெயருக்கான காரணம்...பன்னிரெண்டு அறைகள்..ஆளுக்கு ரெண்டு அறையாகப் பிரித்துதான் பெருக்க முடியும்...கடைசியாக ஒரு கிணறு...அதற்குள்தான் என்னிடம் சண்டை போட்ட என் தம்பி என்னிடமிருந்த குட்டி குட்டி பினாகா பொம்மைகளையெல்லாம் வீசியெறிந்தான்.அந்த வீடு மாறும் போது என் உயிரே போனது போல ஒரு வலி...இப்போதும் கிணறுகள் என் குட்டி குட்டிப் பொம்மைகளைத்தான் நினைவு படுத்துகிறது.

அதற்கப்புறமும் ஓனாய் வீடு,நரி வீடு,குண்டு வீடு என எத்தனை வீடு மாறிய போதும் கலாம்மா வீடு எப்போதும் வலி கொடுக்கும் வீடாக மாறிப் போனது....அப்பாவை விழுங்கிய வீடு....அந்த வீடு மாறும் போது மறுபடி ஒருமுறை அப்பாவை இழந்தது போல ஒரு உணர்வு.அப்பா வழக்கம் போல ஈஸி சேரில் சாய்ந்து படுக்குமிடத்தில் தலைமுடியின் எண்ணை பட்டுப் பட்டு உண்டான எண்ணைக் கறையை அம்மா தடவிக் கொண்டு அங்கேயே நிற்கும் போது..
"அம்மா கவலைப் படாதேம்மா ...இதே வீட்டை நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்" என்று பெரிய மனுஷியாட்டம் சொல்லி விட்டேன்....

பின்பொருமுறை கலாம்மாவைப் பார்க்கப் போகும் சாக்கில் அப்பாவின் எண்ணைக்கறையைப் பார்க்க நினைத்துப் போனேன்...சுவரெல்லாம் நீலக் கலர் டிஸ்டம்பரில் பள பளத்தது...நானும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்க்க நினைத்தும் முடியாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டே கண்ணீரை உள்வாங்கினோம்.....மீண்டும் ஒரு முறை அப்பாவை இழந்தோம்.....

Wednesday, January 23, 2008

மழையுடன் ஒரு ஊடல்........

மழையுடன் ஒரு ஊடல்........
அன்று நான்
மழையுடன் பேசவில்லை
மழைக்குத் தெரியும்
ஏன் என்று?
மழைக்கு இதுவும் தெரியும்
நஷ்டம் எனக்குத்தான் என்று!
தான் வருவதைத்தான் என்னிடம் சொல்லவில்லை...
அவள் வருவதையும் கூடவா என்னிடம் சொல்லக் கூடாது?
மழையும் நானும் செல்லமாகச் சண்டை போட்டுக்
கொண்டிருக்கும் போதே........
அவள் புன்சிரிப்புடன் கடந்து விட்டாள்!!!
மீண்டும் மழையுடன் ஒரு சண்டைக்குத் தயாராகினேன் நான்!!!!

Saturday, January 19, 2008

மூடிய புத்தக மயிலிறகாய்.......அருணா

மூடிய புத்தக மயிலிறகாய்.......
புதுப் புத்தக வாசனை...அந்தப் புத்தகத்தை திறந்து மூடினேன்..முகத்தோடு வைத்துத் தேய்த்தேன்....அந்தப் பள பள அட்டை என் வேர்வைத் துளிகளில் ஒட்டிக் கொண்டுவிடமாட்டேன் என்றது...எனக்கு புத்தகம் படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை.... எல்லாம் இப்போ......புதுசாய் ஆரம்பித்ததுதான்......அது அவள் எனக்கே எனக்காய் கொடுத்த புத்தகம்.

ஒரு துளி மழைத் துளி என் கன்னத்தில் பட்டுத் தெறித்தது.... மழையின் முதல் துளி ...அப்படியே பதறிப் போய் புத்தகத்தை சட்டைக்குள் நுழைத்து பத்திரப் படுத்தினேன்....சட சடவென்று மழைத் துளி என் சட்டையையும் கூட நனைத்தது....எப்போதும் மழைத் துளியில் மகிழ்ந்து நனையும் நான்...புத்தகத்தைப் பாதுகாப்பதற்காக ஓடிப் போய் அந்தக் கடைக்குள் நின்றேன்..கும்மென்று மண் வாசனை ஆளை அசரடித்தது..

இந்தப் புத்தக வாசனை, மழையின் மண்வாசனை இவையெல்லாம் மனதின் சந்தோஷச் சாரல்களையெல்லாம்எப்படித்தான் நினைவுபடுத்துகிறதோஎனக்கு....ஓடிப் போய் மழைத் தூறலின் சாலையின் நடுவே போய் நின்று சினிமாக் கதாநாயகன் போலக் கை விரித்து நின்று சத்தமாகப் பாட வேண்டும் போலத் தோன்றியது ......

"என்னடா கார்த்திக் இங்க நிற்கிறே?" என்றபடி வந்தான் ரவி.அவ்வளவுதான் இந்தத் தனிமை, இனிமை எல்லாவற்றையும் ஒரெயடியாக அடித்துக் கொண்டு போகும் சுனாமி.....பேய் மழை பெய்தால் கூட அவன் அரட்டையில் அடங்கி விடும்..."சும்மாதான்" என்று சிரித்து வைத்தேன்...என் சட்டையை உற்று உற்றுப் பார்த்தான்.. .என் கை என்ன என்னையறியாமல் புத்தகத்தின் மேல் சென்றது...

"என்னடா கார்த்திக் அதுக்குள்ளே தொப்பையா ?இன்னும் கல்யாணம் கூட ஆகலை? என்றவாறு வயிற்றில் ஓங்கிக்குத்தினான்...."
என்னமோஇருக்கு"என்றான்."ஒண்ணுமில்லைடா புத்தகம்" என்றவாறு சட்டயினுள் கையை விட்டு எடுத்தேன்....இழுத்துப்பறித்தான்...உள்ளே திறந்து பார்த்தான்....
"கிருத்திகா கொடுத்தாளா?"என்றான். ஐயையோ....இவனுக்கு எப்படித் தெரியும்?...என்று நினைக்கும் போதே சொன்னான்...

"அவங்க அப்பா அப்பா ஒரு காலத்தில் நிறைய எழுதுவார்..அவரே புத்தகம் வெளியிட்டார்...ஒன்றும் சரியாப் போகலைடா..இந்தக் கிருத்திகாப் பொண்ணு பார்க்கிறவங்க பழகினவங்க எல்லோருக்கும் அன்புடன் கிருத்திகா என்று எழுதிக் கொடுத்துட்டு இருக்கா....நான் மெல்லத் திறந்து பார்த்தேன்

"அன்புடன் கிருத்திகா" என்று இருந்தது."எனக்குக் கூட ரெண்டு கொடுத்திருக்காடா "என்றான்.நான் உணர்ச்சிகளை எதுவும் வெளிக் காட்டாமல் வானம் வெறித்து விட்டதா என்பத் போல மேலே வானத்தைப்
பார்த்தேன்..மழைதான் எவ்வளவு ஆறுதல்..அதுவும் என்னுடன் சேர்ந்து அழுவது
போல் இருந்தது.....
"நான் கிளம்புறேன்டா"...என்று வந்த வேலை முடிந்தது போல ரவி கிளம்பி
விட்டான் என் மனதில் ஒரு சுனாமியை உருவாக்கி விட்டு...... அந்தப் புத்தகம் இப்போ சுமக்கவே முடியாத பாரமாகிப் போனது.அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது "சே சே...இந்த ஆம்பிள்ளைங்களே ரொம்ப மோசம்" என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் ரகசியம் போல உலகத்துகே கேட்கும் படி சொல்லிக் கொண்டு போனாள்.."நாங்களாடி மோசம்" என்று மனதிற்குள் கறுவினேன்.....

கொஞ்ச தூரத்தில் ரவி ஒரு கனவைக் கலைத்ததற்காகவோ அல்லது ஒரு உண்மையை நண்பனுக்கு சொல்லிவிட்டதற்காகவோ விசிலடித்துக் கொண்டே ரொம்ப சந்தோஷமாக மழையில் நனைந்தான்........

Monday, January 14, 2008

பாவம்.... அந்தப் பறவைகளுக்கொரு மின்னஞ்சல்......

பாவம்.... அந்தப் பறவைகளுக்கொரு மின்னஞ்சல்

பட்டத் திருவிழா....
மாஞ்சா நூலின் நுனியில் கட்டிப் பறக்கும் பட்டம்....
என் கையின் இழுப்பில் மேலும்,கீழும் அங்கும் ,இங்கும்
முடிவே இல்லாத தேடலில் .....
வான் வெளியின் எந்த காற்றைத் தேடி
இந்தப் பயணம்?

உனக்கெங்கே தெரிய போகிறது?
உன் பயணத்தின் பாதையில்
பாவம் அந்தப் பறவைகளின்
இறகுகளிலோ,சிறகுகளிலோ,
கால்களிலோ,கழுத்தினிலோ
சிக்கி சின்னா பின்னமாகப்போகிறதென்று?

நிலத்தையும்,நீரையும்
சூறையாடிய மனிதர்களுக்கு
வானமென்ன பெரிய விஷயமா?
குட்டிப் பறவையே.....
"இன்று மட்டும் வெளியே வராதே....
நாளையிலிருந்து நீ உன்
செல்லச் சிறகுகளை விரித்துப் பறக்கலாம்"
என்று உனக்கொரு மின்னஞ்சல்.....
அனுப்பிப் பின் தூங்கினேன்

Sunday, January 13, 2008

பட்டத் திருவிழா

பட்டத் திருவிழா
தமிழ் நாட்டில் பொங்கல் திருவிழா வட நாட்டில் சங்க்ராந்தி பட்டத் திருவிழா.பட்டம் நிறைந்த வானத்தை பார்க்கும் போது தொன்றியதை பதிவாக்கி விட்டேன்
அளக்க முடியாத வானத்தை என் ஒற்றைப் பட்டத்தால் அடைத்து விட முடியாது தான்...இருந்தாலும் அந்த ஆசையால் ஒரு பட்டத்தைப் பறக்க விட்டேன்.ஆயிரக் கணக்கான பட்டங்களின் நடுவே என் பட்டமும் ஒரு புள்ளியாய்.....அப்பாடி எத்தனை வகை,நிறம்.வானம் பட்டப் பட்டாடை உடுத்தியது.திடும்மென்று காற்று என் பட்டத்தை கீழ் நோக்கி இழுத்தது......அதே காற்று திடீரென்று மேலே ஏற வைத்தது. இந்தப் பட்டங்கள் போல்தான் என் வாழ்விலும்தான் எத்தனை நிற வகை மனிதர்கள் என் நட்பில்...நான் நூல் ,நீ பட்டம் என்று மகிழும் ஒரு நட்பு....இன்றோ நாளையோ உன்னை விட்டுப் போய் விடுவேன் என்று அறுந்து போகத் துடிக்கும் பட்டம் போல பயமுறுத்தும் ஒரு நட்பு....உன்னை விட நான் சிறப்பு என்று ஒய்யாரம் காட்டும் பட்டம் போல ஒரு பளப் பள நட்பு.பட படவென்று சிறகடிக்கும் பட்டம் போலப் பொறிந்து கொட்டும் ஒரு நட்பு.பறக்கும் பல நிறப் பட்டங்கள் போல நட்புக்குத்தான் எத்தனை நிறங்கள்
நிமிர்ந்து பார்த்தால் அத்தனை பட்டமும் என்னைப் பார்த்துக் கொண்டு...அத்தனை பட்டங்களின் நூல் மட்டும் என் கையில்.....என் அன்பெனும் நூலில் பறக்கும் அவை அறுந்து விடக் கூடாதென்று அத்தனை அக்கறையையும் காட்டிக் கையால் இழுத்துப் பிடித்து கொஞ்சம் விட்டு ,கொஞ்சம் டீல் விட்டு,கொஞ்சம் சுண்டி அத்தனை சாகசமும் செய்தும் சில மட்டும் எப்போதும் அறுந்து விடும் துடிப்புடன் பட பட பட படவென............இப்போது அறுந்து விடப் போகிறேன் எனப் பயம் காட்டிக் கொண்டே........ம்ம்ம்ம்ம்ம்ம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை.....

Thursday, January 10, 2008

தொலைத்ததும் நானே!!!!!தொலைந்ததும் நானே..!!!..

நீ பார்க்கும்போது
நீ சிரிக்கும்போது
நீ கோபிக்கும்போது
என்று தினம் ஒன்றாகச் சேகரித்த இறகுகள்
படக்கென்று விரிந்து காதல் சிறகாயிற்று...
பறப்பது இவ்வளவு இன்பமா?
மேலும்,மேலும் உயர உயரப் பறந்தேன்..
மேகம் தொடும் தாகத்துடன் பறந்தேன்..
நீயே எறிந்த கற்களினால்
என் சிறகின் இறகுகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தன..
இறகுகளின் உதிர்தலால் உன்னைத் தொலைத்தேன்...
உன்னைத் தொலைத்ததனால் நானும் தொலைந்தேன்..
என்ன செய்வதடி?இங்கே
தொலைத்ததும் நானே.!!!...
தொலைந்ததும் நானே..!!!..

Tuesday, January 8, 2008

மற்றுமொரு 5 நிமிடக் காதல்

மற்றுமொரு 5 நிமிடக் காதல்

முதல் நிமிடம்
ஊர்,வயது, ஆணா பெண்ணா?
இரண்டாவது நிமிடம்
நீ என் சினேகிதியாகிறயா?
மூன்றாவது நிமிடம்
புகைப்படம் அனுப்பேன்???
நான்காவது நிமிடம்.....
நான் உன்னைக் காதலிக்கிறேன்...
ஐந்தாவது நிமிடம்
உன் மொபைல் நம்பர் கொடேன்???
ஆறாவது நிமிடத்திலிருந்து
பாவம் அந்த மொபைல்
தடங்கலில்லாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது....
ஆறாவது நாளில்
"என்னப்பா போன் பண்ணவேயில்லை"....
"என்னன்னே தெரியலை நெட் வொர்க் பிரச்சினை"
மின்னஞ்சல் கூட இல்லை...
"என்னன்னே தெரியலை நெட்
கனெக்ட் ஆக மாட்டேங்குது"
அவளுக்கெப்படித் தெரியும்?
மற்றுமொரு முதல் நிமிடத்தில்....
ஊர்,வயது, ஆணா பெண்ணா? என்று
மற்றுமொரு 5 நிமிடக் காதல் உருவாகி விட்டதென்று....

Saturday, January 5, 2008

நீயும்,நானும் தான் பூவை வேறு வேறாய்ப் பார்த்தோம்...

பூக்கள் மலர்ந்தன.....
இதழ்களில் பனித்துளி......
சிரித்துக் கொண்டே அழ பூவால் மட்டுமே முடியும் என்றாள் அவள்..
கண்ணில் நீர் வரச் சிரிக்க பூவால் மட்டுமே முடியும் என்றேன் நான்...
பூவும்,இதழும்,பனியும் ஒன்றுதான்
நீயும்,நானும் தான் பூவை வேறு வேறாய்ப் பார்த்தோம்...
பூ மரிக்கவுமில்லை....
பூ சிரிக்கவுமில்லை...
பூ வாழத் துடிக்கிறது...
இன்னும் ஒரு நாள் நான் செடியிலிருப்பேன் என்றால்?
ஒட்ட வைத்துக் கொள்ளுமா செடி?
நாம் தான் விட்டு வைத்து விடுவோமா?