நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, December 29, 2007

எனக்குத் தெரிந்த அவர்களும் அவர்களுக்குத் தெரியாத நானும்........

இது என்னப்பா எனக்கு வந்த சோதனை?
உங்களை எல்லாம் எனக்குத் தெரிகிறது

மங்களூர் சிவாவுடைய அக்கறை , கொத்தனாரோட வீடு,இம்சை அரசியோட இம்சை,பிரியமுடன் கோபியோட பிரியம், அந்தோனி முத்துவோட கஷ்டம்,என் .சுரேஷோட உதவும் பண்பு, ஸ்ரிதரோட குளிர்,கார்த்திக்கோட தூறல்கள் ,தமிழ் நெஞ்சோட தவிப்பு , தேவ் , பிரியன் ,நவீன் பிரகாஷோட ,அருட்பெருங்கோவோட, ட்ரீம்சோட காதல், சர்வேசனோட அளப்பு,கோவி கண்ணனோட எண்ணங்களும், இளாவோட பைனரி யும், நக்கல், சாருவோட கவிதைகளும் , சேவியரோட அந்த நாள் ஞாபகமும் ,சனியன்சோட பல்பும், ஓசை செல்லாவின் தமிழ் ப்ரோஜெக்டும், மற்றும் ஜியும், எலியும்,சனியும்

எல்லோரையும் எனக்குத் தெரிகிறது ............என்னை யாருக்குமே தெரியலையே? உங்களுக்குத் தெரியாத நான் என்ன செய்ய? எப்பிடி முயன்றும் என்னைத் தேன்கூட்டில் இணைக்கவே முடியவில்லை............... கொஞ்சம் பின்னுட்டம் போட்டு சொல்லிக் கொடுங்கப்பா......... அருணா

Wednesday, December 26, 2007

பூக்கூடைக்காரர்களும் பூக்களும் நானும்

அதிகாலை பனிச் சோலை.....பஸ் பயணம்...உயிர் உள்ளே ஊடுருவும் குளிர்...கண் விழிக்கவே கஷ்டப்படும்....மனது.ஆனாலும் நிதம் குளித்து நீண்ட பயணம் செய்து அலுவலகம் ஓடும் பணியின் தேவைக்கேற்ப குளிர் கால அதிகாலைக் கண்விழிப்பும் தவிர்க்க முடியாதது...பனிப்பத்து தவிர்க்க முடியாத முகத்தில் க்ரீம் தடவிப் பள பளக்க வைத்து,எண்ணை வடிய வைத்து அழுகுண்ணி ஆட்டம் ஆடிய பெண்ணாய் ஸ்வெட்டர், ஷால், ஸ்கார்ப், மற்றும் இத்யாதிகளையும் சுற்றி கண்ணை மட்டும் வெழியே காட்டிக் கொண்டு ஜன்னல் வழியே பார்த்தால்....அட..வரிசையாக அழகு பூக்கூடைகளுடன்
சைக்கிளில் உல்லாசமாக விசிலடித்தபடி நகரும் பூக்கூடைக்காரர்கள்.....பூக்கூடைகளைப் பார்த்தவுடன் கூரை வீட்டில் தீப்பிடித்ததைப் போல சில்லென்று சந்தோஷம் வந்து மனதில் ஒட்டிக் கொண்டது......அதை அப்படியே மனதிலும் , முகத்திலும் ஒட்டி வைத்துக் கொண்டேன். நாள் முழுவதும் அந்த ஜில்லிப்பு என்னுடன் கூடவே ஒட்டிக் கொண்டு.......

மறு நாள், நாளை மறுநாளும், தினமும் பூக்கூடைக்காரர்களும் ,நானும், கூடைப் பூக்களும் பார்த்துக் கொண்டோம்.கூடைபூக்களின் சந்தோஷத்தை கடன் வாங்கிக் கொண்டு நாள் முழுதும் அதை கொஞ்சம் கொஞ்சமாக செலவளித்துக் கொண்டு இருந்தேன்.

தினமும் அதே நேரம் பூக்கூடைக்காரர்களையும்,பூக்கூடைகளையும் பார்க்காவிட்டால் நாள் நல்லபடியாக இருக்காது என்று எண்ணும் வரை போய் விட்டேன்.அந்தக் குளிரிலும் பூக்கூடைக்காரர்களின் சந்தோஷம் என்னை என்னவெல்லாமோ எண்ண வைத்தது....பேசாமல்இந்த வேலையை விட்டு விட்டு பூக்கூடை தூக்கப் போய் விடலாமா? என்று கூட எண்ண வைத்தது.சீ... சீ இப்படிஎல்லாமா ஒருத்திக்கு பூப் பைத்தியம் பிடிக்கும்?.......
பூவே கிடைக்காத இடத்தில்தான் இருக்கப் போகிறாய்....என்ற அம்மாவின் வார்த்தைகள் அவ்வபோது நினைவுக்கு வந்து மனதைக் கஷ்டப் படுத்தியது......
நாங்கள் நான்கு பெண்கள் எப்போ பூ வாங்கும் படலம் நடந்தாலும் அது என் அழுகையில்தான் முடியும்.எப்படி அளந்து கொடுத்தாலும் எனக்கு மட்டும் நீ கொஞ்சமா கொடுக்கிறே... என்று கண்ணீருடன்தான் முடியும்.
நான்கு நாட்களாக பூக்கூடைகளையும் ,பூக்காரர்களையும் புன்னகையையும் கூட காணவில்லை...எனக்கு நாளே சரியில்லை, எதுவும்,எல்லாமும் தப்புத் தப்பாக நடப்பதாகத் தெரிந்தது..காலையில் கடன் வாங்கும் சந்தோஷம் இல்லாததால் முகத்தை நீட்டி வைத்துக் கொண்டேன். மனம் முழுவதும் பூக்கூடைக்காரர்களின் நினைவுதான்..இன்று எப்படியும் வந்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டே கிளம்பினேன்.
காது பிய்த்துக் கொள்ளும் குளிரிலும் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு எட்டி எட்டிப் பார்த்தேன ்கைக்கடிகாரத்தை மறுபடியும் மறுபடியும் பார்த்தேன். டிரைவரை மெதுவாகப் போவதாக வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினேன்..தினமும் நானும் பூக்கூடைகளும் சந்திக்கும் இடம் புன்னகையும் பூக்களும் இல்லாமலே கடந்தது.இன்றும் வரவில்லையா?......எனக்குப் பட பட வென்று வந்தது...இனி? இன்று என்ன செய்வது?...இன்றும் எல்லாம் தப்புத் தப்பாக நடக்கும் என்று மனம் அலறியது..பேசாமல் இறங்கி வீட்டுக்குப் போய் விடலாம என நினைத்தேன். என் கூட வருபவளிடம் புலம்பித் தீர்த்தேன்.அவள் ஒரு லூஸ் .."என்னடி பூக்கூடை கலக்குதா?இல்லை பூக்கூடைக்காரனா கலங்க வைக்கிறது" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.ஏண்டி இப்பிடி உளறுகிறாய்?.....மொத்தம் நான்கு பூக்கூடைக்காரர்கள்....அத்தனை பேரையும் எப்படிக் காதலிப்பது?....என்று பாவமாகப் பார்த்தேன்.ஒரு முடிவுடன் பஸ்ஸிலிருந்து அவளையும் இழுத்துக் கொண்டு இறங்கினேன்...
"இன்னைக்கி லீவு போட முடியாதுடி" என்ற அவள் அலறல் என் காதில் விழவே இல்லை...."இங்கதாண்டி இந்த தெருவிலிருந்துதான் வருவாங்க வா போய் என்னன்னு ஒரு தடவைப் பார்த்து வந்துரலாம்" "எனக்கு அந்த சந்தோஷமும் அந்தப் பூக்களும் தினமும் வேண்டும்"
அவளின் முகம் எரிச்சலின் உச்சத்திற்குப் போனது. ஆனலும் கிண்டலோடு நீ ஒண்ணு பண்ணுடி பேசாமல் அதுல ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கோ...அதைத் தவிர வேற வழியேயில்லை உன் பையித்தியத்தைத் தீர்ப்பதற்கு "என்று புலம்பினாள். திடுமென்று அந்தச் சந்தின் முடிவு ஒரு வீட்டின் முன்னால் விட்டிருந்தது.அங்கிருந்து ...அட அந்தப் பூக்காரர்களேதான்.....என்னம்மா என்ன வேண்டும்?
நான்....அது நீங்க பூ ....வரல........என்று உளறிக் கொண்டு இருக்க என் தோழிதான் கை கொடுத்தாள்...இல்லைபா....பூ நாலு நாள் வரல்லையா....அதான் பூ வேண்டும்.... என்று சமாளித்தாள்.
இல்லம்மா.......எங்க நாலு பேருக்கும் நேற்று கல்யாணம்......என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே போச்சுரா....... ..நாங்க ரெண்டு பேரும் ஓவென்று விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருந்தோம்............

Thursday, December 6, 2007

சூரியனைச் சீண்டாதீர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!

சூரியனைச் சீண்டாதீர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!

சூரியனைச் சீண்டாதீர்கள்
சும்மா நிற்கும் சூரியனைச் சீண்டாதீர்கள்
சும்மா பார்த்துக் கொண்டு இருந்தாலே
சுட்டு விடுவேன் எனத் தெரிந்தே
நெருப்புக்குள் நீந்தலாமோ?
நிலம் பார்த்து நிற்கும் என்னை
நிமிர்ந்து பார்க்கும்
எல்லோரையும் எப்போதும் எதிர்ப்பதில்லை.
ஆணவம் மிக்க அதிகாரிகளை
அவ்வப்போது எதிர்ப்பதுண்டு
எங்கோ நேர்மையான சிலரைப் பார்க்கும்போது
என் புன்னகையை எடுத்துக் கொண்டு
அந்த உதடுகளில் ஒட்ட வைப்பது உண்டு.
நினைத்தால் உலகம் எரிக்கும்
மந்திரக் கம்பு உண்டு என்னிடம்
ஆனாலும் எரியட்டும் இந்த பூமியென்று
சும்மா இருந்து விடமுடியாது...
அதனால்தானே சுடும் வான்வெளியாய்
நீரை உறிந்து மழையாய் அவ்வப்போது
விழுந்து குளிர்விக்கிறேன்....
அன்பெனும் மந்திரத்தால்....
அவ்வப்போது வீழ்வேன்.....
வீழ்ந்தாலும் மழையாய்தான் வீழ்வேன்................

Posted by aruna at 1:19 AM 0 comments

Monday, December 3, 2007

மற்றொரு மழை நாளில்.......

மற்றொரு மழை நாளில்.......

எனக்கொரு மழையாய்
உனக்கொரு மழையாய்
பெய்யப் போவதில்லை....
பின் என்ன?.......
ஒரே மழையில் இருவரும்
சேர்ந்தே நனையலாம்.....
உனக்கொரு குடையும்
எனக்கொரு குடையுமாய்
எடுத்து வரப் போவதில்லை....
பின் என்ன?....
ஒரே குடையில் இருவரும்
சேர்ந்தே நடக்கலாம்.....
மற்றுமொரு மழை நாளில்
நீயும் நானும்...
மழையும் குடையுமாய்
இணைந்தோம்....

Posted by aruna at 3:49 AM 0 comments

மழை நாளின் ஒரு நாளில்...................

மழை நாளின் ஒரு நாளில்...................

மழை விழுந்து அழுதது
பனிப் புல் குளிர்ந்து சிரித்தது....
பூ மொட்டுக்கள் தங்கள் குடைகளை
விரித்து பூவாய் மலர்ந்தது....
பெண் சிட்டுக்கள் தங்கள் குடைகளை
விரித்ததும் பூப்போல்தான் தெரிந்தது....
மழைக் குடைகளின் நிழல்களில் நானுமாய்
மலர்க் குடைகளின் நிழல்களில் நினைவுமாய்....
மழை நாளின் ஒரு நாளில்
மழையும் நானும் சினேகிதமாய்.....
குடையை விரித்தும் பின் சரித்தும்
மழையைச் சேர்வதும் பிரிவதுமாய்
உன் நினைவைச் சேர்வதும் பிரிவதுமாயிருந்தேன்..........

Posted by aruna at 3:39 AM 0 comments

Saturday, December 1, 2007

நல்லதை நாலு பேருக்குச் சொல்வோம் 3

Saturday, December 1, 2007
நல்லதை நாலு பேருக்குச் சொல்வோம் 3

www.bharatbloodbank.com இந்த வெப்சைட்டில் எந்த வகையான ரத்த குரூப்பும் தேவைப்பட்டால் உடனே ஆயிரக்கணக்கான ரத்த தானம் செய்பவர்களின் முகவரிகள் கிடைக்கும். இந்த விஷயத்தை உடனடியாக தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லவும். எங்கேயோ எப்போதாவது யாருக்காவது இந்த செய்தியால் உங்களையறியாமலே உதவிக் கொண்டு இருப்பீர்கள்.............
aruna


Posted by aruna at 4:02 AM 0 comments

Friday, November 30, 2007

இதனால் அறியப் படுவது யாதெனில்........

Friday, November 30, 2007
இதனால் அறியப் படுவது யாதெனில்........

உண்மைகளை உரக்கச் சொல்லத் தேவையில்லை
ஆனாலும் உண்மைகளைச் சொல்லத் தெரிய வேண்டும்
பொய்களையும் உரக்கச் சொல்லத் தேவையில்லை
ஆனாலும் பொய்களைச் சொல்லப் பயப்பட வேண்டும்
கிராமத்து உண்மைகளை நகரத்துப் பொய்மைகள்
அலங்கரித்து அலங்கோலப் படுத்துவது தெரியாமலே
அழிந்து விடுகின்றன.....
நகரத்துப் பொய்மைகள் கிராமத்து உண்மைகளின்
மேலேறி நடந்து கிராமத்து நிஜங்களை நிர்மூலமாக்குகின்றன
கிராமத்து உண்மைகளை
நகரங்களின் பொய்மைகள்
------------ (நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்)
ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து
தன்னிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது..

இதனால் அறியப் படுவது யாதெனில்....

கிராமங்கள் நிற்கின்றன........
நகரங்கள் நகர்கின்றன.........

Posted by aruna at 6:02 AM 0 comments

நல்லதை நாலு பேருக்குச் சொல்வோம் 2

நல்லதை நாலு பேருக்குச் சொல்வோம் 2

எந்த விதமான இதய அறுவை சிகிச்சையும் இலவசமாக செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Sri Sathya Sai Institute Higher Medical Sciences, E.P.I.P. Area, WhiteField, Bangalore
Write to us
Sri Sathya Sai Institute of Higher Medical Sciences
EPIP Area, Whitefield,
Bangalore 560 066,
Karnataka , INDIA .

Call us
Telephone: +91- 080- 28411500
Fax +91 - 080- 28411502
Employment related +91- 080- 28411500 Ext. 415

Email us
General Queries: adminblr@sssihms.org.in

முகம் தெரியாத யாருக்கோ உதவலாமே இந்த செய்தி.
அருணா

Posted by aruna at 5:56 AM 0 comments

Wednesday, November 28, 2007

முளைத்து எழும் சிலுவைகள்

Wednesday, November 28, 2007
முளைத்து எழும் சிலுவைகள்

முளைத்து எழும் சிலுவைகள்

கடந்து போகும் சுடுகாட்டில்
புதைந்திருந்த சிலுவைகள் ........
அத்தனையும் எழுந்து நின்றன...
அத்தனையும் முளைத்து எழுந்தன....
ஒவ்வொரு உயிரின் புதையலுக்கு முன்
ஆயிரம் மனங்களின் துடிப்பு
அந்த ஒரு உயிரின் ஆயிரம்
ஆசைகளின் புதையல்......
மண்ணுக்குள் இருந்தாலும்....புதைந்தாலும்
இன்னுமொரு வாழ்வுக்கு கையேந்தும்
சிலுவைகளின் கைகள்....
ஆசைகள் அத்தனைக்கும் உயிர் கொடுக்கும்
இன்னுமொரு வாழ்வைத் தவிர வேறு என்ன
கையேந்திக் கேட்கப் போகின்றன புதிதாய்??

Posted by aruna at 9:20 AM 0 comments

Tuesday, November 27, 2007

முகமூடிக்குப் பின்னால் நான்...................

முகமூடிக்குப் பின்னால் நான்...................

கண்டதும் சிரித்து
முதுகுக்குப் பின்னால் முறைத்து
பிடித்ததற்கும் சிரித்து
பிடிக்காதற்கும் சிரித்து
அன்புக்கும் சிரித்து
ஆணவத்துக்கும் சிரித்து
தப்புக்கும் சிரித்து
தண்டனைக்கும் சிரித்து
புகழ்ந்தாலும் சிரித்து
இகழ்ந்தாலும் சிரித்து
முகத்தின் மீது ஒட்டிக் கொண்ட
முகமூடியைக் கழற்ற முடியாமல்
கலங்கும் போதும் பொய்யாய்
ஒட்டிக் கொண்ட புன்னகை ஒன்றே
மீதமாய் எனக்கு நானே
மாட்டிக் கொண்ட முகமூடியை
தூக்கியெறிய முயன்று.....
முடியாமல் குமுறியழ......
துளித் துளியாய் வழிந்த கண்ணீரில்
கரைந்தோடியது அந்த முகமூடி....

Posted by aruna at 9:26 AM 1 comments

Sunday, November 25, 2007

வலை என்னும் அலையில் அடித்துப் போகப் போகிறேனா?

Sunday, November 25, 2007
வலை என்னும் அலையில் அடித்துப் போகப் போகிறேனா?

வலை என்னும் அலையில்
ஒரு நொடியில் ஒராயிரம் மெயில் செக் செய்து
திருப்பித் திருப்பிப் பக்கம் பக்கமாக மேய்ந்து
கண் அசைவின்றி கணினியைப் பார்த்து
ஐந்தே ஐந்து நிமிடம் தான் என்ற மனக் கணக்கு
ஐந்து மணி நேரமாக நீளும் நிஜக் கணக்கு
என்று தணியும் இந்த வலை தாகம்?
என்றோ தணியும் இந்த வலை அலை?
தணியத்தான் போகிறதோ இல்லை இந்த
அலை வலை என்னை அடித்துத் தான்
கொண்டு செல்லப் போகிறதோ?
இது என்ன அறியத் துடிக்கும் வரமோ?
இல்லை எனக்கு நெடேரியாவா?

Posted by aruna at 9:14 AM 1 comments

Saturday, November 24, 2007

எனக்கு கடவுளாவதில் இஷ்டமில்லை

எனக்கு கடவுளாவதில் இஷ்டமில்லை

கடவுள் என்ன யோசிப்பார்?
எனது ரொம்ப நாளைய சிந்தனை.....கடவுள் கூட நம்மைப் போல சிந்திப்பாரா?சிந்தித்தால் யாரைப் பற்றி சிந்திப்பார்?எதைப் பற்றி சிந்திப்பார்?அவருக்கென்ன பிரச்னை?அவருக்கு கூட கவலைகள் உண்டா?அவருக்கே அவருக்கு என்று யார் இருக்கிறார்கள்? யாரைப் பற்றி அவர் கவலைப் பட வேண்டும்? இன்னும் பல சிந்தனைகள்...கடவுள் தனிமையானவரா?
நம் எல்லோருக்கும் அவர் இருக்க அவருக்கென்று யாருமே இல்லையா? அப்படியானால் கடவுள் ஆவதில் எனக்கு இஷ்டம் இல்லை.....தனிமை என்றால் எனக்கு அவ்வளவு பயம்........கொஞ்சம் ஓவரா தெரியுதோ?

Thursday, November 22, 2007

நட்சத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன......

Thursday, November 22, 2007
நட்சத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன......

நான் என்னும் என்னோடு
நீ என்னும் உன்னோடு
நாம் என்னும் நம்மோடு
நீங்கள் என்னும் அவர்கள்
பேசவில்லை என்றால்
ஒன்றும் பரவாயில்லை.....
அதுதான் நாம் பேசிக் கொள்ளும் போது
கோடி
நட்சத்திரகள் நம்மோடு பேசிக் கொள்கின்றனவே!!!!!!!!!!

Posted by aruna at 8:58 AM 0 comments

Wednesday, November 21, 2007

எது இல்லையென்றாலும் அது வேண்டும்....உனக்கும் எனக்கும்

Wednesday, November 21, 2007

எது இல்லையென்றாலும் அது வேண்டும்....உனக்கும் எனக்கும்

வீடில்லை என்றேன்........
விரிந்து கிடக்குது உலகம் என்றாய்!
உடுத்த உடையில்லைஎன்றேன்.....
உடுத்தியிருப்பது போதாதா என்றாய்!
உண்ண உணவில்லை என்றேன்.....
உணவேதான் வாழ்வா என்றாய்!
காலுக்கு செருப்பு இல்லையென்றேன்....
காலில்லையா என்றாய்!
பொன் நகை ஏதும் இல்லையென்றேன்.....
உன் புன்னகை போதுமே என்றாய்!
வேலை இல்லையென்றேன்.....
வேலை தேடுவதே வேலை என்றாய்!
நல்ல நட்பில்லையென்றேன்....
நானில்லையா உனக்கு? என்றாய்!
கனவுக் காதல் இல்லை என்றேன்....
காதல்தான் வாழ்வா என்றாய்!
வாழ்வே இல்லை என்றேன்....
வாழ்ந்தது போதாதா?என்றாய்!
கவிதையே இல்லை என்றேன்....
கலங்கிப் போய் நின்றாயே!!!!!!!!!!

Posted by aruna at 3:40 AM 0 comment

Tuesday, November 20, 2007

நானும் இயந்திரங்களும்

Tuesday, November 20, 2007
நானும் இயந்திரங்களும்

காலையில் காஃபி.......... காஃபி மேக்கரில்
சப்பாத்தி மாவு........... ஆட்டா நீடரில்
சப்பாத்தி.............. சப்பாத்தி மேக்கரில்
மைக்ரோ வேவ் அலறலில்....... பொறியல்.
வாட்டர் heater-ல் சுடு தண்ணீர் குளியல்.
வாஷிங்க் மெசினில் துணிகள் குளித்தன.
வேக்கும் க்ளீனரில் வீடு குளித்தது.
ஏர் கண்டிசனரில் வீடு குளிர்ந்தது.
எத்தனை பட்டன்கள்....எத்தனை வேலைகள்
அப்பாடா......
அத்தனை வேலையும் முடித்து
கொஞ்சம் கம்ப்யுட்டரில் கவிதை எழுத எண்ணி
கம்ப்யுட்டர் பட்டனைத் தட்டினால்......
ம்கூம்........ஒன்றும் தேறவில்லை....
மனக் கதவைத் திறக்க எந்த பட்டனைத் தட்டுவது?

Posted by aruna at 4:45 AM 0 comments

Monday, November 19, 2007

மனமெனும் மரம்

மனமெனும் மரம்

மனமெனும் மரம்.........
தனிமையான மரம்......
தனிமையா?.......மரத்துக்கா?.......மனதுக்கா?......
அதுதான் கிளைகளைப் பரப்பிக் கொண்டே போகும் நினைவுகள் இருக்கிறதே.....சில கிளைகள் பெரிதாகி,....பெரிதாகி மரத்தையே பயப்பட வைக்கும்.சில கிளைகள் இனிமையான பூக்களை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும்.எனக்குப் பயப்பட வைக்கும் நினைவுக் கிளைகளும் தேவை,உயிர்ப்பிக்கும் நினைவுப் பூக்களும் வேண்டும்.
அந்த மனமென்னும் மரத்தில் தான் எத்தனை எத்தனை அதிசயப் பறவைகள் இடம் பிடித்தன.சில இளைப்பாறின.சில கொத்திக் கொத்திக் களைப்படைந்தன.சில சிலிர்ப்பாக அன்பைப் பகிர்ந்து கொண்டன.சில ஊடலுடன் தலையைச் சிலுப்பிக் கொண்டன....இந்த மன மரம் சில பறவைகளுக்குக் கூடு கட்ட இடமும் கொடுத்தது.சில கூடு கட்டிக் களித்துக் கூட்டைக் கலைத்துக் கொண்ட கதைகளும் உண்டு.சில கூடு கட்டிக் குட்டிகளைப் பறக்க விட்டுத் தான் மட்டும் தங்கிய கதைகளும் உண்டு காய் கனிகளைக் கொத்திக் தின்று ருசித்துப் பறந்த குட்டிக் குருவிகளும் உண்டு.
எப்படியானால் என்ன?.....இந்த மன மரத்து நிழலில் உதிர்ந்த பூ நினைவில், கிளைகளின் நினைவுக் காட்டில் உலா வருவதனால் தான் இந்த மனமரம் வில்வ மரம் போல் நினைவுச் சாரலைத் தெளித்துக் கொண்டேயிருக்கிறது.இல்லையென்றால் என்றோ எங்கோ பட்டுப் போயிருக்கும்........

Posted by aruna at 4:21 AM 1 comments

Sunday, November 18, 2007

நல்லதை நாலு பேருக்கு சொல்வோம்

Sunday, November 18, 2007
நல்லதை நாலு பேருக்கு சொல்வோம்

தமிழில் எழுத நிறைய பேருக்கு எப்போதும் பிரச்னை?என்ன தீர்வு?ரொம்ப எளிது.....
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
இந்த சைட் போய் வேண்டிய font select பண்ணி டைப் பண்ணலாம்
Thanx to Suratha

Posted by aruna at 7:33 AM 1 comments

இறப்பதற்கு முன் செய்ய வேண்டிய நிறைய பெரிய சில வேலைகள்

இறப்பதற்கு முன் செய்ய வேண்டிய நிறைய பெரிய சில வேலைகள்

1.நிறைய படிக்கணும்

2.படிச்சதை பகிர வேண்டும்

3.நிறைய எழுதணும்

4.எழுதியதை எல்லோரும் படித்துப் பாராட்டணும்

5.குறைந்தது இரண்டு அனாதைக் குழந்தைகளையாவது தத்து எடுத்துப் படிக்க வைக்க வேண்டும்.

6.ஒரு கப்பல் பயணம்,

7.நிலவுக்கு ஒரு தடவை போய் வர ஆசை,

8.காணும் கனவுகளை புத்தகமாய் எழுத ஆசை,

9.என் இஷ்டப் படி ஒரு பள்ளிக் கூடம் நடத்த வேண்டும்.

9.தினசரி இந்தப் பதிவில் மேலும் மேலும் சேர்ப்பேன்...சரியா?

Posted by aruna at 3:58 AM 0 comments

நான் இறக்கப் போகிறேன்-அருணா

Saturday, November 17, 2007
நான் இறக்கப் போகிறேன்-அருணா

நான் இறக்கப் போகிறேன்.......
இன்றோ? நாளையோ?...........
யாருக்குத் தெரியும்?................
என்றோ இறப்பேன்................
அதற்கு முன்................
கொஞ்சம் எழுதுவேன்...............
நிறையவும் எழுதலாம்............
கொஞ்சம் பதியவும் செய்வேன்....
சில நேரங்களில் கைவிரல்களாக..........
பல நேரங்களில் கால்தடங்களாக................
ஆனால் நிச்சயம் உங்கள் மனதில் பதிவேன்........

Posted by aruna at 9:12 PM 2 comments