நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, June 28, 2010

கை விரித்துச் சிரித்தது மரம்!!

கீழே விழுந்த பந்து
எம்பி எழுந்து வந்ததைப்
பார்த்து இறகை உதிர்த்து
விட்டுக் காத்திருக்கிறது
ஏமாறப் போகும் பறவை!

தானே கீழே விழுந்த மழை
இனி எப்போ மேலே
போவோமெனச் சூரியனைப்
பார்த்துச் சிரித்துக் கிடந்தது
குளத்தில்....

அடித்து வீசும் காற்றில்
கொஞ்சம் இலைகளையும்
நிறைய மலர்களையும்
உதிர்த்து பதிலுக்கு
எதுவும் வேண்டாமல்
கை விரித்துச் சிரித்தது மரம்!!

ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !
எனச் சொல்லாமல்
சொல்லிப் போயிற்று
கன்னம் தொட்டு
வண்ணம் விட்டுப் பறந்த
வண்ணத்துப் பூச்சி!!

Tuesday, June 22, 2010

"எங்கே இருக்கிறாரோ அங்கே"

காந்தியின் சாபர்மதி ஆசிரமம் போயிருந்தோம்.காந்திஜிக்கு வந்திருந்த கடிதங்களின் தொகுப்பும் அவரை அடையாளப் படுத்தும்
அவருக்கான முகவரிகளும்
உங்களுக்காக.......
The King of India
The great ahimsa noble of India
The supreme President of the National Congress
A La Excellence Monseiui le President Gandhi
Mohandas K.Gandhi, Leader in Indian National Congress
The Dictator of the Government of India
The head of Congress Committee
Mahatma Gandhi Where ever he is
Mahatma Gandhiji "Farmer and Weaver"
Devotee of the world Shri Mahatma Gandhi
His highness Mahatma Gandhi

மிகவும் ஆச்சரியப் பட வைத்த முகவரி......
" Mahatma Gandhi Where ever he is"
"மகாத்மா காந்தி எங்கே இருக்கிறாரோ அங்கே"

நாம் இருக்கும் இடமெல்லாம் நம் முகவரியல்ல......
நாம் வாழும் முறையே நம் முகவரி...........................









Saturday, June 19, 2010

விட்டுக்கொடுத்தலும், ஏமாளித்தனமும்..!

வாழ்வு எல்லோருக்குள்ளும் எப்படி எப்படியெல்லாமோ புகுந்து வெளி வருகிறது.காலை அவசரமும் ஓட்டமும் வாழ்வின் புன்னகைக் காலங்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து விடுகிறது.பின்னாளில் புன்னகைக்க நினைக்கும் போது அதை வெளிக்காட்டும் பல் போய் பொக்கைவாயாகி விடுகிறது.

காலையிலேயே "எம்மாம்மா நேற்றிலிருந்து சாப்பிடல்லைம்மா ஏதாவது கொடும்மா" எனத் தொடரும் பிச்சைக்காரர்களின் கத்தல் எரிச்சலைக் கொடுத்தது.எப்போதோ போகும் வழியென்றால் காசு போட்டு விட்டுப் போகலாம்.இது தினமும் போய் வரும் வழி ..தினமும் ஒரு ரூபாய் போட்டாலும் முப்பது ரூபாய் தண்டம் ....வீட்டு பட்ஜெட் நினைவு வந்து தொலைத்தது. ஒரு குட்டிப் பையன் அவசர அவசரமாக "எம்மா ஏதாவது கொடும்மா"என்று கையைப் பிடித்தும் உதறியவுடன் திடீரென காலில் விழுந்து "எம்மா ஏதாவது கொடும்மா"என்றும் பின்னாலேயே வந்தான்.இது என்னால் தாங்க முடியாத ஒன்று...குழந்தைகள் இப்படிக் கேட்டால் சட்டென ஏதாவது கொடுத்து அனுப்பிவிடுவேன்..கைப்பையைப் பார்த்தால் சில்லறையாக இல்லை..ஐந்து ரூபாய்தான் இருந்தது.ஐந்து ரூபாயைப் போடவும் மனசில்லை."
சின்ன மாமியார் வீட்டு விசேஷத்துக்குப் போவதால் பூ வாங்கலாம் என்று நின்றேன்.
"பூ முழம் எவ்வ்ளோம்மா? "
"பத்து ரூபா
"
"அட எட்டு ரூபாய்தான் தருவேன்"

"கட்டுபடியாகாதும்மா..
"
"அதெல்லாம் ஆகும் ஆகும்..."

ரெண்டு ரூபாய் குறைத்து வாங்கிய சந்தோஷத்தில் மல்லிப்பூ அதிகமாக மணந்தது போலிருந்தது.

பஸ்ஸில் ஏறி டிக்கெட் வாங்க நடத்துனரிடம் 74 ரூபாய் டிக்கெட்டிற்கு 80 ரூபாய் பயந்து கொண்டே கொடுத்தேன்.சில்லறைக்காகக் கத்துவாரோ என்று...ஒன்றும் சொல்லாமல் டிக்கெட்டின் பின்னால் 6 ரூபாய் எனக் கிறுக்கிக் கொடுத்தார்.

ஓஹோ இவர் அந்த வகையோ என்று நினைத்துக் கொண்டேன்.நடத்துனர்கள் ரெண்டு வகை...ஒன்று சில்லறை இல்லைன்னா இறங்குன்னு கத்துகிற ரகம்.இன்னொன்று இப்படி டிக்கெட்டின் பின்னால் அமைதியாகக் கிறுக்கி விட்டு இறங்கும் வரை நம் கவனம் அவர் மேலேயே இருக்கும் படிப் பார்த்துக் கொண்டு கடைசியில் தராமலேயே ஏப்பம் விட்டு விடும் ரகம்.

எப்படியும் கேட்டு வாங்கி விட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டு அவர் அங்குமிங்கும் நகரும் போது அவர் மீது "ஏய் நீ எனக்குக் காசு கொடுக்கணும் " அப்படீங்கிற பார்வையை வைத்துக் கொண்டிருந்தேன்.


அவரையே கொடுக்க வைத்துவிட வேண்டும் .அப்படியில்லையெனில் கேட்டாவது வாங்கிவிடவேண்டியதுதான்.நகரத்தின் நாகரீகங்களுள் இதுவும் ஒன்று. நம் பணத்தையே கூடக் கேட்டு வாங்க கூச்சமாய் இருக்கும்.அவருக்கு அடுத்தவங்க பணத்தை எடுத்துக் கொள்ள இல்லாத கூச்சம் நமக்கெதற்கு????.ஆனால் நானும் இப்படி அநேக நாட்கள் இப்படி காசு விட்டதுண்டு.


இன்னும் ரெண்டு ஸ்டாப்தான் .அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும்.ஆறு ரூபாயைக் கொடுப்பாரா...கேட்கத்தான் செய்யணுமா??என்று இரண்டு மணிநேரமாகக் குழம்பிக் கொண்டிருக்கிறேன் வேலையற்றுப் போய்...


ஷாலு ஏறினாள் அந்த ஸ்டாப்பில்.
"ஹாய் என்ன சுதா? எங்கே இன்னிக்கு ஆஃபீஸ் போகலையா? இந்தப் பக்கம் எங்கே ?"
அட....ஷாலு...இன்னிக்கு லீவு போட்டுட்டேன்.எங்க சின்ன மாமியார் வீட்டுலே ஒரு விசேஷம் அதுக்குத்தான் போயிட்டிருக்கேன்.நீ என்ன இப்பிடி.?

"எனக்குத்தான் ஓடுறெ வேலைதானே....அங்கேயும் இங்கேயும் ஷன்டிங் அடிச்சுட்டிருக்கேன்..."


ஷாலு எங்க ஆஃபீசுக்குத் தொடர்புடைய பெண். அடிக்கடி வந்து போவாள்.ஆனால் ரொம்ப லொட லொட....எல்லாரைப் பற்றியும் வம்பு பேசுவதில் ரொம்ப ஆர்வம்.
மனசுக்குள் இவள் ஏன் இப்போ வந்தாள் என்று நினைத்துக் கொண்டேன். இப்போ இவள் முன்னால் எப்படி மீதிக் காசைக் கேட்பதுன்னு யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

ஆறு ரூபாய்தானே விட்டு விடவேண்டியதுதான்.இவள் முன்னால் கேட்டு அசிங்கப்பட்டால் அவ்வ்ளோதான் அறுநூறு பேர் வேலைபார்க்கும் ஆஃபீஸில் அசிங்கப் படுத்தி விடுவாள்.
இருந்தாலும் அவ்ரே தந்துவிட மாட்டாரா என்ற நப்பாசையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"என்னாம்மா....பார்த்துக்கிட்டே நிக்கிறே...இறங்கலியா?" என்று கத்தினார்.நான் மீதிக் காசைக் கேட்டு விடுவேனோ என்ற பயத்தில்.
இந்த வாழ்வில் இவ்வகையான விட்டுக் கொடுத்தலும் விரும்பாமலே வேண்டித்தானிருக்கின்றன. யாருக்கும் தெரியாமல் மனதுக்குள் கொஞ்சமாக இப்படியிருப்பதற்கு என்னை நானே திட்டிக் கொண்டேன்.ஒவ்வொருமுறை இப்படி அடிபடும் போதும் இனி அடிக்க விடக் கூடாது என்று நினைக்கிறதோடு சரி. அப்புறமாய்..."ம்ம்ம்ம்ம் ...சரி நடத்துனருக்கு என்ன பணக்கஷ்டமோ ...இப்படியெல்லாம் காசு சேர்க்கவேண்டியிருக்கு"என்று அலுத்துக் கொண்டு என் ஏமாளித்தனத்தைக் கொஞ்ச நேரம் மறக்க முயன்றேன்.

Thursday, June 17, 2010

வீழ்ந்து கிடக்கும் நிழல்கள்!

இரவில்
விளக்கின் காலடியிலும்

பகலில்
சூரியனின் காலடியிலும்

நிழல்கள் எப்போதும் போல
விழுந்து கிடந்தன....

உச்சி வெயிலில்
என் காலடியில்
நசுங்கிக் கிடந்ததுவும்
அதுவேதான்..

வெளிச்சத்தை எதிர்த்துப்
பழக்கமில்லா நிழல்கள்
எப்போதும் வீழ்ந்து
கிடந்தாலும்...

மெழுகுவர்த்தியின்
வெளிச்சத்துக்கு
மட்டும் சுவற்றில்
எழுந்தாடும்
என் நிழல்
என்னிடம் கேட்டது ....

முகமில்லா என்னைப்
பிடித்திருக்கிறதாவென்று?

விட்டுப் போய்விடுமோவென்று
சுவற்றோடு போய் ஒட்டிக் கொண்டேன்....
சட்டெனக் காணாமல் ஓடி மறைந்தது
எப்போதும் வீழ்ந்து கிடக்கும் அது!
நன்றி யூத்ஃபுல் விகடன்!

Saturday, June 12, 2010

கறிச் சோறாக்கின கதை!

கோழி இறகு முற்றத்தில் பறந்து கிடக்க
கோழியின் முடிவு குறித்தான
கவலையுடன் விசாரிக்க

தனக்கு உடல் நலமில்லையென்று
போனவாரமும்
கோழிக்கு உடல் நலமில்லையென்று
இந்த வாரமும்
கறிச் சோறாக்கின கதை கேட்டு...

கூண்டுக் கதவைத் திறந்து கிளியைப்
பூனைக்கு விருந்தாகப் போ என்று
வெளியேற்றிப் பூனைவரச்
சன்னலைத் திறந்து...


கட்டிலில் காத்திருக்கும் மருந்து
சீசாக்களைக் கவிழ்த்து
கடல் குடித்து முடிக்கும் தாகத்துடன்

வாழ்வின் குரூரங்களைக்

குடித்து முடித்தான்...

காய்ச்சக்காரப் பய....

காலிக் கூண்டைப் பார்த்து
எந்தக் கோட்டிக்காரன்
கூண்டைத் திறந்து போட்டதுன்னு
அலறிக் கொண்டிருந்தாள் கிழவி...

Tuesday, June 8, 2010

கடவுளாசை யாரை விட்டது?

மழைக் காலத்தில் குருவியையும்
குருவிக் கூட்டையும் காப்பாற்ற
முடியாவிட்டாலும் முனை திரும்பும
பேருந்துகளைக் காப்பாற்றி விடுகிறேனாம்...

தலை பின்னே ஒளிவட்டமுமில்லை
காலடியில் தாமரையுமில்லை
கையிலிருந்து பொற்காசுகள்
கொட்டவுமில்லை...
இருந்தாலும் விளக்கேற்றிக்
கடவுளாக்கி விட்டார்கள்...
புலம்பியது சாலையோரப
புளியமரம்...

கடந்து செல்லும் ஒவ்வொரு
பேருந்தும் சாலை முனை விபத்திலிருந்து
தப்பித்துக் கொள்ளத் தன் கடவுளிடம்
வேண்டிக் கொண்டது புளியமரம்...

கடவுளாசை யாரை விட்டது?

நன்றி யூத்ஃபுல் விகடன்!