நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, November 18, 2010

வழக்கத்திற்கு மாறாக.....

வழக்கத்திற்கு மாறாக அன்று
கடல் வேறு வேலையில்லாமல்
என் காலடியில் சிப்பிகளை இழுத்து
வந்து கொட்டிக் கொண்டிருந்தது......

கடலுக்குள் இது உனது
இது எனது என்று பாகம்
பிரித்துக் கொண்ட கதை போல
சிப்பிகளைக் கடலும் நானும்
பங்கிட்டுக் கொண்டோம்.....

என் பங்குச் சிப்பிகளை
யாரும் பார்க்காத போது
வானத்தில் எறிந்துவிட்டேன்.....
வானம் அமைதியாக எடுத்துத்
திருப்பிக் கொடுத்தது விண்மீனாக


வழக்கத்திற்கு மாறாக அன்று
மௌனமாக கடல் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்தது.......

Tuesday, November 9, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்......7

பவுடர் பூசிக் கொண்டன சுவர்கள்
மாலையிட்டுக் கொண்டன வாசல்கள்...
பொட்டு வைத்துக் கொண்டன கதவுகள்...
புதுச் சட்டை மாட்டிக் கொண்டன இருக்கைகள்...
அலமாரிகள் பழைய சேலை உடுத்திக் கொண்டன.....

பரணிலிருந்து குத்து விளக்குகளும்
பித்தளை அண்டாக்களும் தரை இறங்கின....
கோல நோட்டுக்கள் தேடப்பட்டன!
கலர்ப் பொடிகள் கிண்ணங்களுக்குள்
குடி புகுந்தன......

ஒட்டடைக் கம்புகள் சுறு சுறுப்பாகின....
கொஞ்சம் தூசியையும் நிறைய
சிலந்திகளையும் வீட்டை விட்டுத் துரத்தின...
கரப்பான் பூச்சிகள் வீடில்லாமல் அங்குமிங்கும் ஓடின....

தீபாவளிக் கலாட்டாவுக்காகக்
கலைத்துத் தூக்கியெறியப் பட்டவைகளுள்
ஒரு குருவிக்கூடும் சில முட்டைகளும் அடக்கம்......
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்......

Wednesday, November 3, 2010

இதுலெ இருநூறு அதுலெ முன்னூறு!!!

இதுலெ இருநூறு அதுலெ முன்னூறு....
150 வரைக்கும் இதுலெ நூறுன்னா அதுலேயும் நூறுன்னும் ,இதுலே நூற்றியம்பதுன்னா அதுலேயும் நூற்றியம்பதுன்னும் இருந்தது.திடீர்னு இந்த ரேஷியோ மாறிப் போச்சு!.
                       பதிவு எண்ணிக்கையையும்,பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையையும் சொல்றேன்.இப்போ 200 பதிவுக்கு முன்நூறு பின் தொடர்பவர்கள்!சரி நம்ம எழுதறதைக் கொறைச்சுட்டோம்!!! நம்மளைப் படிக்கிறவங்க கூடிட்டாங்க போல!!!!
முன்னூறு பேருக்கும் நன்றி!!!!
இன்னும் கொஞ்சம் எழுதறதைக் குறைச்சா இன்னும் நிறையப் பேர் பின் தொடர்வாங்களா???

Tuesday, November 2, 2010

என் நேரக் கணக்கு.....

என் நாட்குறிப்பில்
பத்திரப் படுத்தும் நொடிகளுக்கும்
களவு போகும் நொடிகளுக்கும்
கணக்கு சரியாகவில்லை.....

எப்போதும் போல
இருபத்தி நாலு மணி
நேரத்திற்குப் பதிலாக
இருபத்தியொரு மணியாகக்
குறைந்திருந்தது....

கணக்கில் வராத
மணித்தியாலங்களைத்
தேடித் தேடிக் கிடைக்காமல்.....

கடிகார முள்ளை
மூன்று மணி நேரம்
திருப்பி வைத்து விட்டுத்
தூங்கியெழுந்தால்

அன்றைய கணக்குக்கு
இருபத்தியேழு மணி
நேரம் கிடைத்தது!!!!

ம்ம்ம்...இன்றும்
பத்திரப் படுத்தும் நொடிகளுக்கும்
களவு போகும் நொடிகளுக்கும்
கணக்கு சரி வரப் போவதில்லை!!!