நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, July 28, 2008

அந்தக் காம்பில்லாத பூக்கள்......


அந்தப் பூக்கடைக்காரர் மிகக் கவனமாகப் பூக்களை அடுக்கி பூங்கொத்து தயாரித்துக் கொண்டிருந்தார்.....

ராஷி அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.அவர் எல்லாக் காம்பு உடைந்த பூக்களையும் தனியே பிரித்து வைத்து விட்டு மற்ற பூக்களை அடுக்கிக் கொண்டேயிருந்தார்.

மெதுவாக அவர் அருகில் சென்ற ராஷி...."அந்தக் காம்பில்லாத பூக்களை ஏன் உபயோகப் படுத்தவில்லை" எனக் கேட்டாள்....

அதற்கு அவர்.."அவைகள் காம்பு இல்லாதவை...ஒன்றிற்கும் பிரயோசனமில்லை...."என்றார்.

"அந்தக் காம்பில்லாத மலர்களை எனக்குத் தருவீங்களா" என்றாள் ராஷி

ஓ இந்தா வைத்துக் கொள்...என்றார் பூக்காரர்
.திடீரென்று நினைவு வந்தவராக "ஆமாம் அந்தப் பூக்களை வைத்து என்ன செய்யப் போகிறாய்?"என்றார் பூக்காரர்.

உடனே ராஷி"அவைகளை இறைவனின் பாதத்தில் வைக்கலாமே?....நான் கூட ஒரு காம்பில்லாத பூதானே????எனக்கும் கால்கள் இல்லை...."
என்றவாறு கட்டைகளை ஊன்றியவாறு செல்வதை நீர் நிரம்பிய விழிகளோடு பார்த்துக் கொண்டேயிருந்தார் பூக்கடைக்காரர்...

Wednesday, July 23, 2008

இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது...


இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது...

கரடு முரடான மலைகள்....
மென்மையான மணல்துகள்...
உடலை உலுக்கும் சரிவுகள்
மனதை அமைதியாக்கும் சமவெளிகள்.....

சில நேரம் பூக்களை உடுத்தி....
சில நேரம் உதிர்ந்த இலைகளைப் போர்த்தி...
சில நேரம் இரவு நிலவைச் சுமந்து....
சில நேரம் பிணங்களைச் சுமந்து...
பல நேரம் மழையைச் சுமந்து.....

சற்றே திரும்பிப் பார்க்கும் இந்த நதி
எதற்காகக் கவலைப் படப் போகிறது?

எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும்
சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?

உயிர்வலிப் பயணமாக இருந்தாலும்....
நினைவுச் சுவடுகளை கூடவே எடுத்துச் செல்வதை நினைத்தா?

அடித்துப் புரண்டு சேருமிடம்
கடலைப் பார்த்து மிரளப் போகிறதா?

பூ,இலை,நிலவு,பிணம்,மழை இன்னும் பல
சுமக்கும் என் சுயம் எங்கே?என்று தேடித் தேடியா???....

இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது...
இந்த நதி திரும்பிப் பார்த்து அழுதால் கூட
யாருக்குத் தெரியப் போகிறது?????

Sunday, July 13, 2008

புரிகிறதா உனக்கு..?

Click here to enlarge pic.

வேர்க்கிறதா உனக்கு...
வண்ணத்துப் பூச்சிகள்
அனுப்புகிறேன்.....
அந்த இறகுகளால்
விசிறிக் கொள் ....

குளிர்கிறதா உனக்கு
சூரியனை அனுப்புகிறேன்
இஷ்டப் படிக்
குளிர் காய்ந்து கொள்...

வலிக்கிறதா உனக்கு?
மயிலிறகுகளை உனக்குக்
கடன் தரும் மயில்களை
அனுப்புகிறேன்

அழுகை வருகிறதா உனக்கு?
வானம் மடித்து அனுப்புகிறேன்...
கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டையாய்
பயன் படுத்திக் கொள்......

தனிமை வாட்டுகிறதா உன்னை?
நட்சத்திரக் கூட்டம் அனுப்புகிறேன்...
இரவு முழுவதும் பேசிக் காலை
அனுப்பி விடு


கசக்கிப் பிழியும் துக்கத்தின்
வேதனையாஉனக்கு?
தயவு செய்து அது அத்தனையயும்...
என்னிடம் கொடுத்துவிட்டு...
பதிலுக்கு என் சந்தோஷத்தை
எடுத்துக்கொள்..!

மரண பயமா உனக்கு?
நான் எதுவும் செய்ய முடியாது..!
அந்த பயம் எனக்கும் உண்டு..!
ஏனென்றால் மரணத்தில்...
உன்னைப் பிரியும் அபாயம் உண்டு..!

Tuesday, July 8, 2008

திண்ணையில் பூத்த மலர்கள்!!



திண்ணைக்கு ஸ்ரீ கூப்பிட்டிருக்கார்.

எனக்கு நினைவு தெரிந்து நாங்கள் எந்தத் திண்ணை வைத்த வீட்டிலும் இருக்கவில்லை.

புகை மூட்டம் போல எங்கள் மாம்மை (அம்மா வழிப் பாட்டி)இருந்த ஏதோ ஒரு வீட்டில் சின்னத் திண்ணை இருந்ததாக நியாபகம்.

அந்தத் திண்ணை எங்களின் விளையாட்டுக் களமாக இருந்ததால் தான் அதைப் பற்றி நினைவு இருக்கிறதோ என்னவோ?.கல்லா மண்ணா,தாயம்,சுட்டிக் கல்...சீட்டுக் கட்டு.....பல்லாங்குழி .....இன்னும் எல்லாமே அந்தத் திண்ணையில்தான்..என் திண்ணை பற்றி இவ்வ்ளோதான் மலரும் நினைவுகள்..

ஆனால் எங்க மாம்மை வீட்டுக்குப் பக்கத்து வீட்டுத் திண்ணையும் அதையொட்டிய கதவும்(பெரிய ராஜா காலத்துக் கதவு பெரிய குமிழ் வைத்து, ஓரத் திண்டு வைத்து)அந்த ஓரத் திண்டில் கால் வைத்து செய்யும் ஒற்றைக் கால் சவாரியும் எனக்கு மட்டுமல்ல எங்க கூட்டத்துக்கே ரொம்பவும் பிடித்த விஷயம் ...ஆனால் அந்தப் பக்கத்து வீட்டுப் பாட்டிக்குப் பிடிக்காத விஷயம்..]

எப்போதும் அந்தப் பாட்டி அந்தத் திண்ணையில்தான் படுத்திருக்கும்.

நாங்கள் அது கண்ணயரும் நேரமாப் பார்த்து அந்தக் கதவில் ஏறி விர்ரென்று ஒரு சவாரி செய்வதுண்டு...

அந்தக் கதவு போடும் கிறீச் என்ற சத்தத்திற்கு...
பாட்டி கண் விழித்து காட்டுக் கத்தல் கத்த ஆரம்பித்து விடுவாள்.

வெள்ளைப் புடவையும் வெள்ளைச் சுருள் முடியுமாய் ஒல்லி உடம்புமாய் பாட்டி ஒரு வெண் பேயாய்தான் காட்சியளிப்பாள்.

அவளைச் சீண்டிப் பார்ப்பதில்தான் எவ்வ்ளோ சந்தோஷமோ?

அந்தப் பெர்ரீய கதவுக்குத் தொலையவே முடியாத ஒரு சாவி...

ஆனாலும் எப்போதும் அதை முந்தானையில் முடிந்து கொண்டு அந்தத் திண்ணையில் படுத்திருப்பாள்.

மெல்ல அதை எடுத்து ஒளித்து வைத்து அவளை அலைய வைப்போம்.

அந்த வயசிலும் கண் பக்கத்திலே வைத்துக் கொண்டு திண்ணைத் தூணில் சாய்ந்து உட்கார்ந்து ஆனந்த விகடன் படிப்பாள்...

அப்போ பின்னாலிருந்து வேப்பங்கொட்டை அடிப்போம்...

அவள் முற்றம் கூட்டிப் பெருக்கும் போது எங்க வீட்டு மாடிலேருந்து புஸ் புஸ் பாட்டிலிலிருந்து தண்ணீரடித்துக் கலாய்ப்போம்.

இரவானால் அவள் வீட்டிற்கு மட்டும் லைட் கிடையாது.

அந்தத் திண்ணையின் சுவரில் ஒரு விளக்குப் பிறை...

அதில் ஒரு மண்ணெண்ணை விளக்கு எரியும்.

அந்தப் பின்னொளியில் வெண் பாட்டி வெண் பேய் போலவே இருப்பாள்..

அப்புறம் ஒரு விடுமுறைக்குப் போயிருக்கும் போது அந்த வீடும் திண்ணையும் காலியாக இருந்தது.

மாம்மையிடம் பாட்டியைப் பற்றிக் கேட்டதற்கு செத்துப் போச்சு என்றார்கள்.அந்தப் பெர்ரீய கதவு திறந்துதான் கிடந்தது....

எனக்கு ஒற்றைக் கால் சவாரி மறந்தே போய் விட்டது.திடீரென்று மாம்மை வீடு பிடிக்காமல் போய் விட்டது.

இப்பவும் திண்ணை என்றால் வெள்ளைப் பாட்டிதான் நினைவுக்கு வருகிறது.பாவம் பாட்டி ..ரொம்பத்தான் பாடாய்ப் படுத்தியிருக்கிறோம்...

ரெண்டு பேரைத் திண்ணை மலரும் நினைவுக்குக் கூப்பிடணுமாமே???நான் நினைவுகளை மலர வைக்க அழைப்பது........

1.வினையூக்கி
2.அந்தோணிமுத்து...

வருவீங்கதானே???