நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, January 30, 2009

தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் .........



ஒரு நாளின் நடுநிசியில் தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் தூக்கியெறியப் படப் போகிறான் அவன்.....மரணம் அவனைக் காதலிக்கத் தொடங்கி விட்டது....இந்த விஷயம் தெரிந்த மறுநிமிடம் உடலும் மனமும் பர பரத்தது.அவன் உயிர் அதன் கூட்டுக்குள் சிறகை விரித்துச் சோம்பல் முறித்துக் கொண்டது.

இத்தனை நாள் வாழ்ந்த நாட்குறிப்பைத் திருப்பிப் பார்த்துக் கொண்டான்.குறிப்பிட்டுச் சொல்லும்படியான மைல்கற்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.சேகரித்த நட்புக்களும் உறவுகளும் எண்ணிக்கையில் ரொம்பவும் குறைவாகவே இருந்தது.பணக் கற்றைகள் அதனினும் குறைவாகவே இருந்தது.

இனி? அவனுக்கான மணித்துளிகள் இவை எவற்றைப் பற்றியும் கவலைப் படாமல் கரைந்து கொண்டே இருந்தன... 30 வருடங்களை இப்படி ஒன்றுமேயில்லாமலா கரைத்துவிட்டேன் என்று அவன் மனம் குற்றம் சாட்டியது...திடீரென்று முதல் வகுப்பு டீச்சர்,எப்பவும் சண்டை போடும் அருள்மதி,அழகாகச் சிரித்துப் பேசும் ஹெலென்,நண்பர்கள் கூட்டமாக நனைந்த மழை,12-ம் வகுப்பு பிரிவு விழா,முதல் இன்டர்வியு, முதல் காதல் இப்படியாக வாழ்வின் எல்லா முதலும் நினைவுக்கு வர..... இரண்டாவது எதுவுமே நினைவுகளின் விளிம்புகளில் எப்படி ஒன்றுமில்லாமல் கரைந்து போயின?இப்படி சம்பந்தமில்லாமல் மனம் தாவிக் கொண்டேயிருந்தது......

மனம்...... உடனடியாகச் சுவடுகளைப் பூமியில் பதிக்க குறுகிய காலத் திட்டம் போட்டது. முதல் வேலை மனம் சேகரிப்பா? பணம் சேகரிப்பா?உறைந்திருந்த உயிர் திடீரென்று விழித்துக் கொண்டது.
அதுவா? இதுவா?எல்லாமேவா?
நாளை முதலில் எதைச் செய்வது?
அப்பா அம்மாவைப் பார்த்து எத்தனை நாளாகிறது? ஒரு நடை ஊருக்குப் போய் விட்டு வரவேண்டும் .....என் கண்ணே....உன்னைத் தூக்கி முத்தமிட்டு எத்தனை நாளாகிறது?எங்கே என் மகன்??? கண்விழிக்கட்டும் உன்னைக் கன்னத்தோடு உரசி இறுக்கிக் கொள்கிறேன்....வாழ்க்கைத் துணை .....சரண்யா...உன்னைப் பெயர் சொல்லி அழைத்துத்தான் எத்தனை நாளாகிறது??? நாளை பார்....உன்மேல் அன்பு மழை கொட்டப் போகிறேன்....என நினைத்துக் கொண்டான்

சில மணித்துளிகளுக்கான இந்த இரவல் உயிரைக் காலன் திருப்பிக் கேட்டுக் காவல் காக்கிறானே????ஏன் எல்லோரும் தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்??? காலத்தின் அருமை புரியவில்லையா?...உங்கள் தூக்கத்தினால் கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியிருக்கும் என் மணித்துளிகள் விரயமாகிறதே????எனக் கவலைப் பட்டான்.

இந்த சுவாசம் இன்றே கடைசியோ??ஏன் இப்படி மூச்சு வாங்குகிறது?கண்கள் ஏன் இப்படிக் கொட்டுகின்றன? கடவுளே இன்னும் ஒரே ஒரு நாள் கொடு...தொலைத்த நொடிகளையெல்லாம் அந்த ஒரு நாளில் வாழ்ந்து முடித்துவிடுகிறேன்.....என வேண்டிக் கொண்டான்....அந்த மௌனத்தின் இருட்டுக்குள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் வீழ்ந்து கிடந்தான்.....

யார்மேலும் ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி இன்னும் ஒரே ஒரு நாள் அதிகம் கொடுக்காத கடவுளிடம் மட்டும் கோபித்துக் கொண்டே அந்த உயிர்ப் பறவை தன் சிறகுகளை உதிர்த்துவிட்டு தன் மரணக் குறிப்புகளைப் பிரதியெடுக்கக் கூட நேரமில்லாமல் நட்சத்திரக் கூட்டங்களை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது......

இன்னும் ஒரே ஒரு நாள் இவனுக்குக் கொடுத்திருந்தால் தன் சுவடுகளை அழுத்தமாகப் பூமியில் பதித்திருப்பானோ எனக் கடவுள் யோசிக்க ஆரம்பித்திருந்தார்....

நம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு????நான் யோசிக்க ஆரம்பித்தேன்....

Sunday, January 18, 2009

"ஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே?


அவன் வேக வேகமாக வந்தான்..சைக்கிளை விட்டு இறங்கினான்...அந்த போஸ்டரை எடுத்து கவனமாகப் பசை தடவி ஒட்டினான்..போய்க் கொண்டே இருந்தான்.

அந்தப் பெரியவர் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.அவன் சாயங்காலமாக அதே வழியில் போகும்போது அந்தப் போஸ்டர் கிழிபட்டிருப்பதைப் பார்த்தான்..மறுபடியும் ஒரு போஸ்டரை உருவி மறுபடியும் கவனமாகப் பசை தடவி ஒட்டினான்.அந்தப் பெரியவர் அவன் போனதும் மறுபடியும் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.

காலையில் அந்தப் பேர்ப்பலகையப் பார்த்த அவனுக்கு வெறி தலைக்கேறியது...""யார்டா அது தலைவன் போஸ்டரக் கிழிக்கிறது?"" எதிர்க் கட்சிக்காரங்க வேலையாத்தான் இருக்கும்.......இருடா இன்னிக்கு ரெண்டுலே ஒண்ணு பார்த்துரலாம்னு மனசுலெ கறுவிக் கொண்டு போய் ஆளுங்களைக் கூட்டிக் கொண்டு வந்து மறுபடியும் போஸ்டரை ஒட்டிவிட்டு மறைவில் காத்திருந்தார்கள்..

அந்தப் பெரியவர் மறுபடியும் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.

டாய் என்றலறியவாறு கூட்டம் ஓடிவந்து பெரியவரைப் போட்டு அடித்து நொறுக்கியது...."ஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே? எவண்டா அனுப்புனது உன்னைய ?" என்று காட்டுக் கத்தல் கத்தியது.அடித்துத் துவைத்தது...

பெரியவர் அசையாமல் இருப்பதைப் பார்த்ததும் "விடுங்கடா செத்துடப் போறான்....ஒட்டுடா மறுபடியும்...இனி எவன் வருவான் கிழிக்கன்னு பார்த்துரலாம்" என்றபடி மறுபடி ஒட்டிவிட்டுப் போனார்கள்....

பெரியவர் மீண்டும் மெல்ல எழுந்து அவர்கள் போனவுடன் மறுபடியும் கிழிக்க ஆரம்பித்தார்.....அங்கிருந்த பெட்டிக் கடைக்காரன் கூவினான் "ஏன் பெரிசு உசுரோட இருக்கவேண்டாமா ? எதுக்குய்யா அதைக் கிழித்து வம்பை விலைக்கு வாங்குறே??.......பெரியவர் அதைக் கிழித்து முடித்துவிட்டு அந்தப் பேர்ப்பலகையில் எழுதியிருந்த பெயரை வாஞ்சையுடன் தடவினார்....கார்கில் போரில் உயிரிழந்த தியாகிகளுக்காகக் கட்டப் பட்டது.........என எழுதியிருந்ததை கடைக்காரன் சத்தமாக வாசித்தான்......

அதில் ஆனந்த் என்ற பெயரைத் தடவிக் கொண்டே......
ம்ம்ம் என் பையன்...என்று முனகினார் பெரியவர் உதட்டில் வழிந்திருந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே.

Wednesday, January 7, 2009

பட்டாம்பூச்சி வாழ்த்துக்கள்.......


வருடத்தின் ஆரம்பத்திலேயே ஒரு அவார்ட் ......ரொம்ப சந்தோஷமாக இருந்தது...அதை விட சந்தோஷம் அதை இன்னும் ஏழு பேருக்குக் கொடுக்க வேண்டும்.....இந்தப் பொறுப்பை எனக்குக் கொடுத்தது வானவில் வீதி கார்த்திக். நன்றி கார்த்திக்!!!...

நான் பட்டாம்பூச்சி கொடுப்பது.....

1.மிஸஸ் டவுட் என்ன எழுதினாலும் ஒரு பாச உணர்வை வெளிப்படுத்துவதற்காக....

2."டொன்"லீ எதையும் ஒரு காமெடி டச்சோட எழுதுவதற்காக
...
3.Mசரவணகுமார் கவிதை மழைக்காக.....

4.அதிதி ஒரு செல்லம் கொஞ்சலுடன் எழுதுவதற்காக.....

5.தாரணிப் பிரியா பல வகை விஷயங்களையும் கலந்து கட்டி எழுதுவதற்காக...

6.கார்க்கி சரியான விகிதத்தில் விஷயங்களைக் கலந்து காக்டெயில் தருவதற்காக......

7.தாமிரா மிகச் சாதரணமான வீட்டில் நடக்கும் விஷயங்களையும் ரொம்ப நகைச்சுவையாகக் கலக்குவதற்காக......

இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)-----போட்டாச்சு!!!!

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)----கொடுத்தாச்சு!!!!

3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)-----செய்தாச்சு!!!!

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)------தந்தாச்சு!!!!

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)------தெரிவித்தாயிற்று!!!

விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும் இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.---அட போங்கப்பா இதிலென்ன கஞ்சத்தனம்????? ----ஏழு பேருக்குமே கொடுத்தாச்சு!!!