நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, April 29, 2008

என் வேர்கள் என்னை அழைக்கின்றன


திடீரென ஒரு நாள்
என்னைப் பிரித்தெடுத்து
எங்கோ ஒரு ஈரமண்ணில்
என்னைப் புதைத்து

இலையாய் மலராய்
உயிராய் உணர்வாய்
பூத்துக் குலுங்க வைத்து
புன்னகை பூக்க வைத்து

வெயில் மழையில் நனைய வைத்து
இரவு நட்சத்திரங்களுடன் பேச வைத்து
என்னைப் பற்றி மறக்க வைத்து
பறவை பல கூட வைத்து
அன்பு நிழல் குடை விரித்து

சட்டென்று திரும்பிப் பார்க்க
அட வாழ்வுப் பாதையில் எங்கோ
ஒரு மைல் கல் முன் நான்.....
திடீரென்று கண்ணீர் துளிர்க்க

என் வேர்களை நினைத்துக் கொள்கிறேன்
அம்மா........
ஆமாம் என் வேர்கள் என்னை அழைக்கின்றன...
அம்மா உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.....

Tuesday, April 15, 2008

நாங்க அழகிக்கு மாறிட்டோமில்லே!!!!!


யாரந்த அழகி...?

ஏனிந்த அழகி...?

ஏன் இப்படி ஈர்க்கிறாள்?

மற்றவரிடம் இல்லாத என்ன விசேஷம் அவளிடம்?

அவள் மட்டும் அப்பிடி என்ன உசத்தி?

எளிமையான சிநேகிதியாக இருப்பதாலா?

சொல்ல நினைப்பவற்றைச் சுலபமாய்ச் சொல்ல உதவுவதாலா?

மற்றவைகளிடமிருந்து தனித்துத் தோன்றுவதனாலா?

எல்லோரையும் கட்டிப் போட வைக்கும் சிறப்புகளோடு இருப்பதனாலா?

மயங்க வைக்கும் சிறப்பம்சங்களோடு இருப்பதாலா?

இப்பிடி எல்லா விததிலும் பாடாய்ப் படுத்தும் போது
நாங்க அழகிக்கு மாறாமல் எப்பிடி இருப்பது????

அதனால் நாங்க அழகிக்கு மாறிட்டோமில்லே!!!!!

யாரந்த அழகி...?

Wednesday, April 9, 2008

மீண்டும் ஒரு மழைநாளில்.....


இது கதையுமில்லாமல், நிகழ்வுமில்லாமல், மொக்கையுமில்லமல் ஒரு பதிவு ...ஆனாலும் எனக்குப் பிடித்த ஒரு பதிவு.......

அன்று அதிகாலயில் ஆரம்பித்த மழை காலைக் கோலத்தைப் புள்ளியாக புள்ளியாக அழித்தது.....சட்டென்று இமைகளின் மேல் ஒரு மழைத் துளி
கன்னங்களின் மேலொரு மழைத் துளி
குட்டி நகங்களின் மேலொரு மழைத் துளி
இப்படித்தான் ஆரம்பிக்கும் ஆரவாரமில்லாமல்.
ஆனாலும் அடித்துக் கொண்டு ஓடிவிடும் மனதை.......

மழையில் நனையும் மலரழகு...மலரை நனைக்கும் மழையும் அழகு.....9 மணிக்கெல்லாம் தெருவெங்கும் குடை மலர்கள்...நிறைய கறுப்பு மலர்கள்...குடையைக் கண்டு பிடித்தவனை மனதுக்குள் கண்டித்தேன்.மெல்ல வெழியே வந்து ...வானத்தை விரும்பிப் பார்த்தேன்.
"குடை எடுத்துப் போடா" என்ற அம்மாவை கோபமாகப் பார்த்து விட்டுத் தெருவில் நடந்தேன்....

பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் இடம் கிடைத்தவுடன் ஆனந்தமாக அமர்ந்தேன்....சில்லென்று சீறிய துளிகளை கண்ணை மூடி ரசிப்பதற்குள் "ஜன்னலை மூடுங்க தண்ணீர் தெறிக்குதுல்லே" என்று ஒரே காட்டுக் கத்தல்..."அட ரசனை கெட்ட ஜென்மங்களா" என்றவாறு மூடினேன்...

வேலையே ஓடவில்லை....ஜன்னல் வழியே மழையில் நனையும் குருவி,மழையில் நனையும் வெயில்,நனைய மறுத்து ஓடும் மனிதர்கள் என்று மனம் பறந்து கொண்டே இருந்தது...மழையில் விரும்பி நனையும் அனைவரும் மனதில் நச்சென்று ஒட்டிக் கொண்டார்கள்.

சாயங்கால வேளை மழை சந்தோஷப் படுத்த, உடனே கடற்கரைக்கு ஓடினேன்.மழையும் கடலும் ஓவென்று இரைச்சலுடன் என்னை வரவேற்றது.......மழையும் கடலும் என்ன பேசியிருக்கும்? கடலில் பாதம் நனைய...உடம்பு முழுவதும் மழையில் நனைய மனம் ஆனந்தக் கும்மியடித்தது...

இன்னும் மழை விடவில்லை.இருட்டு மழை இரகசியமாக மனதைச் சிலிர்க்கச் செய்தது.மொட்டை மாடிக்குப் போய் மேலே நிமிர்ந்து பார்த்தால் நட்சத்திரங்களுடன் மழை...இதயம் சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது.
கரண்ட் கட் ஆகி விட்டது..அம்மா மேலே வந்தாங்க ....கவனமாக நனைந்து விடாமல் எட்டிப் பார்த்து "என்னடா பண்றே மழையிலே? உள்ளே வாடா..." என்றார்கள்.இப்பிடித்தான் மழையில் நனையத் தெரியாதவர்களைப் பற்றியும், வாழத் தெரியாதவர்களைப் பற்றியும் கவலைப் படாமல்....நனையவும் ,வாழவும் தெரிந்தவர்கள் மேல் இஷ்டப் பட்டுப் பெய்து கொண்டே இருந்தது மழை!! .