நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, July 25, 2014

மீண்டும் மழையுடன் நான்!.....


இரவு  கொட்டும் மழையில்
உதிர்ந்திருக்கக் கூடுமோ
என மழை நீரில் கைகளால் அளைந்து தேடிக்
கொண்டிருந்தேன்  நடசத்திரங்களை....

கொஞ்சம் தள்ளி சல்லடை வைத்து
மழைநீரில் நட்சத்திரங்களை  வடிகட்டிக்
கொண்டிருந்தாள் மகள்....

மழை இழுத்துக் கொண்டு வந்த
தற்காலிக நதிகளின் சங்கமத்தில்
திடீரென முளைத்த கால்களுடன்
ஓடும் உதிர் இலை மலர்க் கூட்டத்துடன்
கூட்டமாக நானும் இழுபடுவது தெரியாமலேயே
இழுபட்டுக் கொண்டிருந்தேன்....

எப்போதும் போல் மழை அது பாட்டுக்குப்
பெய்து கொண்டிருந்தது....
இழுபடும் மலர்க்கூட்டம் அது பாட்டுக்கு
இழுபட்டுக் கொண்டிருந்தது....
இழுபட்டுக் கொண்டிருக்கும் நான் மட்டும்
ரொம்ப நாளைக்கு அப்புறமாய் இங்கே
எட்டிப் பார்த்துக் கொண்டு!!.....
மழையுடன் நான்.....!!!