நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, December 31, 2009

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே!


தினம் பூக்கும்
பூக்கள் அதிசயமல்ல......
தினம் உதிக்கும்
சூரியன் அதிசயமல்ல......
அவ்வப்போது பொழியும்
மழையும் அதிசயமல்ல......
புது வருடம் மட்டும்
ஏனிந்த அதிசயம்? ஆனந்தம்.....
காலங்கள் கடந்ததைத் திரும்பிப் பார்க்கும் ஆனந்தமா?
பழைய போட்டோ ஆல்பம் புரட்டும் ஆனந்தமா?
சாதித்ததைப் பகிரும் ஆனந்தமா?
இன்னும் சாதிக்க எல்லை விரிக்கும் ஆனந்தமா?
பதித்த சுவடுகளில் மீண்டும் கால் வைத்துப் பார்க்கும் ஆனந்தமா?
வாழ்வைக் கொண்டாட ஒரு நாள் கிடைத்த ஆனந்தமா?
எதுவாயிருந்தாலும் இன்று போல் என்றும் ஆனந்தமாயிருக்க
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Tuesday, December 29, 2009

படிக்கும் இயந்திரங்கள்

அது ஒரு மூன்று பேர் அமரும் இருக்கை.அவர்கள் அங்கே வந்து உட்கார்ந்த நேரத்திலிருந்து அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்..........அம்மா,அப்பா,ஒரு சின்ன தேவதை.கடந்து போன ஒரு பழ வியாபாரியிலிருந்து, பேருந்தில் எழுதியிருக்கும் திருக்குறள் வரைக்கும் அவ்வ்ளோ அழகாக குழந்தைக்கு எடுத்துச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே வந்தார்கள்....கவனித்துக் கொண்டே வருவது சுகமாக இருந்தது.

பஸ் ஆற்றைக் கடந்த போது ஆற்றின் வரலாறு.............பாலத்தைக் கடக்கும் போது...........பாலம் கட்டும் வித்தை, மரம்,மலை,குகை பற்றி ........இப்படி பஸ் பயணம் ஒரு வகுப்பறையாக மாறிப் போயிருந்தது.அந்தக் குட்டி தேவதையும் அலுக்காமல் சலிக்காமல் கற்றுக் கொண்டே வந்தது. நானும் என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களும் இப்படி இருந்தால் எவ்வ்ளோ நல்லாருக்கும் என்று கனவுலகத்தில் மிதந்து கொண்டே அந்தக் குடும்பத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்.......எனக்கும் அந்த பஸ் வகுப்பறையில் படிப்பது பிடித்தேயிருந்தது.....

தடைப் பட்டது பாடம்....ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றது............நிறைய பேர் ஏறினார்கள். அம்மாவும் அப்பாவும் அவசரமாகச் சொன்னார்கள்..........
"செல்லம் நல்லா நகர்ந்து உட்கார்ந்துக்கோ ... வேற யாராவது வந்து உட்கார்ந்துரப் போறாங்க........"

படிக்கும் பாடங்கள் குழந்தைகளை மனிதனாக்கவேண்டுமேயன்றி
படிக்கும் இயந்திரங்களாக்கி விடக்கூடாதென்பதில் பிடிவாதமாயிருக்கும் எனக்கு ஒரு பயம் கலந்த கவலை வந்தது

கால்கள் இருக்கும் பிரக்ஞையில்லாமல் இன்னும் தவழச் சொல்லிக் கொடுப்பதுதானே நாம் கற்றுக் கொண்டது என்னும் பெருமூச்சுடன் கண்களை மூடிக் கொண்டேன் ........மனது வலித்தது.......

Saturday, December 26, 2009

பிரத்தியேகமாய் மழையும் பெய்யட்டும்!

வருடம் முழுவதும் போட்ட சண்டைகளுக்காய்
சமரசம் பேசுவதாய்க் கூறிக்கொண்டு
மீண்டும் மீண்டும் வலிகளைப்
பிரதியெடுக்காமல் மௌனித்திருந்தேன்....

வருட இறுதியில்
என்னால் பறக்க முடிந்த
உயரம் இவ்வளவு தான் என்பதை ஏற்காமல்...........
அடுத்தகட்ட நடவடிக்கையாய்
சிறகுகளை நீவி விட்டுக் கொண்டு
இன்னும் பறக்க உயரம் தீர்மானித்தேன்......

வருட இறுதியின் உழைப்பிலிருந்து சற்றே
இளைப்பாற ஈரமாய் மென்காற்று வீசட்டும்
மழை பிடிப்பவர்களுக்காய் தனியே
பிரத்தியேகமாய் மழையும் பெய்யட்டும்!

சம்பிரதாய வார்த்தைகளை விட்டொழித்து...........
இப்படியும் புது வருட வாழ்த்துச் சொல்லலாம்தானே!!

Monday, December 21, 2009

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-2

அந்த மழைக்கால இரவில்
திடீர் உறவின் வருகைக்கு
வீடு புரண்டு படுத்துக் கொண்டது..........

யாருக்கும் நிற்காத மனிதர்கள்

எதற்கும் கவலையில்லாமல் அள்ளித் தெளிக்கும்
வார்த்தை அலங்காரங்களைச் சீரணித்தும்
மாய உலகில் வாழ்ந்து கொண்டும்
இரண்டு நாள் வீடு ரெண்டு பட்டது.... ........

இல்லாமற் போய்விடும் கவலையில்

கடந்து போன நொடிகளையெல்லாம்
நொடிநொடியாய் பிரதியெடுக்க
முயற்சிக்கும் கவன ஈர்ப்புச் செய்கையாக

புகைப்படமெடுத்துக் கொண்டது வீடு!

கண் கலங்கியபடி விடை பெற்றுச்

சென்ற சில நிமிடங்களில்
உச்சக்கட்ட சுதந்திரம் இதுதான்
என்று மௌனமாகப் பயணிக்கின்றது வீடு.............

சமயங்களில் பிரிவு கூட

விடுதலையாக அர்த்தம்
செய்து கொள்ளப் படுகின்றன!

Monday, December 14, 2009

ரெண்டாவதாக.....

இரண்டாவது என்பது எவ்வ்ளொ வலி தரக் கூடியதுன்னு அனுபவிச்சாதான் புரியும்.
இந்தா....... அக்காவின் சட்டை பாவாடையில் ஆரம்பித்து ஸ்லேட்,பேனா, ஷூ,தொப்பி,சைக்கிள்,புத்தகம்....இப்பிடி இரண்டாவதாக அவளிடம் தஞ்சம் கொண்டிருந்த பொருட்கள் அதிகம்.அவை மேல் அவளுக்கு எப்போதும் இது தன்னுடையது என்னும் உணர்வு வந்ததேயில்லை.அந்தப் பொருட்களில் அக்காவின் நிழல் விழுந்து விடுகிறது.அக்காவின் வாசம் அந்தப் பொருட்களில் நிறைந்திருக்கும்.

முதல் என்பதற்கு மட்டும் ஏன் அப்படி ஒரு வசீகரம்?
முதல் டீச்சர்,முதல் பேனா,முதல் கடிகாரம்,முதல் புடவை, முதல் கடிதம்,முதல் பரிசு,முதல் மழை,முதல் காதல்,...இப்படி நிறைய முதல்கள் நினைவுப் பெட்டகங்களூடே தங்கிவிட.......இரண்டாவது டீச்சர், இரண்டாவது பேனா,இரண்டாவது கடிகாரம்,இரண்டாவது புடவை,இரண்டாவது கடிதம்,இரண்டாவது பரிசு,இரண்டாவது மழை,இரண்டாவது காதல்.....இப்படி ரெண்டாவதை நினைவடுக்குகளில் தேடித்தான் பாருங்களேன் ஒன்றும் அகப்படாது....

"ம்ம்ம்....ரெண்டாவதும் பெண்ணா?"
அப்படிப் பிறந்தவள்தான் அவள்.....முதல் எல்லாமே அவளுக்கு ஞாபகம் இருப்பதில்லை...........ஞாபகத்தில் வைத்துக் கொள்வதுமில்லை வைத்துக் கொள்ளப் பிடிப்பதுவுமில்லை...வலுக்கட்டாயமாக மறக்க நினைப்பவைகள்தான் மனதில் பிடிவாதமாக நினைவில் தங்கிவிடும் போல.......

அவள் மட்டும் தன்னுடைய முதல்களை மறந்து ,ரெண்டாவதுகளைப் பத்திரப் படுத்தத் தொடங்கினாள்.


"அப்பாடா......முதல் மனைவியாகத்தான் போகிறேன்......இருந்தாலும் அந்த வீட்டின் ரெண்டாவது மருமகளாகத்தான்.........ஹ்ம்ம்"........என நினைத்துக் கொண்டே அம்மாவிடம் அவள் தன் உறுத்தலைச் சொன்னாள்...............

அம்மா..........அவள் தலையை வருடிக் கொண்டே ..........."நான் அஞ்சாவது பொண்ணு.....உங்கப்பாவுக்கு மூணாவது தாரம்........."....
அவள் கண்ணில் குபுக்கெனக் கண்ணீர்..............

Wednesday, December 9, 2009

நான் ஙே வாகியதும்.....ஙே வாக்கியதும்.1

வண்டி வாங்கிய புதிது.எப்போதும் அவங்கதான் பெட்ரோல் டாங்க் நிரப்பி விட்டு வருவார்கள்.அன்று அவங்க வீட்டிலில்லாத நேரம்...வேற வழியில்லாமல் நானே பெட்ரோல் போடப் போனேன்.

வேர்த்து வழிந்தது..எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது.
"என்னடா இது ஏன் பெட்ரோல் போடுபவன் என் வண்டிப் பக்கம் வரவேயில்லை?"என யோசனையாயிருந்தது...

நான் நின்ற இடத்தில் வண்டிகளும் வந்து நிக்கவில்லை காலியாகத்தானிருந்தது.
எனக்குப் பின்னால் வந்தவர்களெல்லாம் பெட்ரோல் நிரப்பிவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.
கோபத்துடன்.."இங்கே வாப்பா"என்று கத்தினேன்.
"என்னம்மா ஸ்கூட்டிக்கு டீசல் போடப் போறீங்களான்னான்?"
நான் ஙே!
டீசல் போடுமிடத்தில் நின்றுகொண்டிருந்திருக்கிறேன்!

Monday, December 7, 2009

என்றேனும் பசுமையாய் இருந்திருப்பேன்...


என் கிளைகளில்
என்றேனும் பூக்க்கள் ஊஞ்சலாடியிருக்கும்...
என் வேர்களில் ஈரம் இணைந்திருந்திருக்கும்
என் மடியில் கவிழ்பூக்கள் நூறு முத்தமிட்டிருக்கலாம்.....
என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....

இலைகளையும் பூக்களையும் உதிரவிடாமல்
காவல் காக்கவுமில்லை
நான் பசுமையாய் இருந்த
நிமிடங்களைச் சேகரிக்கவும் இல்லை.....

இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது.............

என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்.......

Wednesday, December 2, 2009

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள் -1


படித்துத் தூக்கியெறியும் பத்திரிக்கையும்..........
ஜோடி பிரிந்திருக்கும் செருப்பும்....
கொடிச் சேலையும்,திரைச்சீலையும்,
ஆங்காங்கே கிடக்கும் தலையணையுமாய்,
திறந்திருக்கும் ஜன்னல் கொண்டு வந்தசருகும் ........
கூடு கட்டப் பறக்கும் குருவி உதிர்த்த
சிறகுமாய் ....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்.................

ஓடி ஓடிப் போட்டுக் கொள்ளும் பவுடரும் லிப்ஸ்டிக்குமாய்...........
இடம் மாறிக் கொள்ளும் இருக்கைகளும்,திரைச்சீலைகளும்.............
இடுக்குகளுக்குள் ஒளிந்து கொள்ளும் பத்திரிக்கைகளும்.....
கொடிகளுக்கு விடுதலையளிக்கும் சேலைகளும்....
அலமாரிகளுக்குள் முடக்கப்படும்
எண்ணெய் சீசாக்களும்,சீப்புக்களும்......
உடைமாற்றிக் கொள்ளும் கட்டில்களும்
தலயணை உறைகளும்....................
உதறி விரிக்கப்படும் மிதியடிகளும்,
ஜோடி சேர்க்கப் படும் செருப்புகளும்
நேர்ப்படுத்திக் கொண்டேயிருக்கும் வீடுகள்.............

கலைவதும் நேர்ப்படுத்துவதுமான தினசரி
இயக்கங்களைச் சுமந்தபடி
அசையாமல் நின்றது வீடு.................
ம்ம்ம்.........வீட்டிலிருப்பது போரடிக்கிறது!