நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, August 27, 2011

அந்த ஒருமணி நேர சொர்க்கம்!

மனம் மயக்கும் சாயங்காலமும், ரம்யமான நட்சத்திர இரவுக்காகவும் மனதைச் சிலிர்க்கவைக்கும் அதிகாலைக்காகவும் ஏங்கிக் கிடக்கும் .வேலை முடிந்த அலுப்பில் சாயங்காலம் படுக்கையிலும் அல்லது கணினி முன்னாலுமாய்க் கழிந்து விடும்.அதிகாலை அநேகமாக அடுப்படிக்குள் முழுகி விடும்.ம்ம்ம் நட்சத்திர இரவு சாப்பாட்டுக் கடையின் சலசலப்பிலுமாய் அடங்கிக் கொண்டிருக்கிறது.சே! என்னடா இது வாழ்க்கை என அலுத்துக் கொண்டே நாளும் பொழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
                  குட்டி ஒரு சின்ன புறாவின் இறகைப் புத்தக இடுக்கில் வைத்துத் திறந்து காட்டிப் பொத்திக் கொண்டாள். அடுத்த பக்கத்தில் மயிலிறகிற்கு அரிசி வைத்துக் கொண்டிருந்தாள். ரொம்ப நாளாய் ஒரு கேள்வியுண்டு....ஏன் மயிலிறகுக்கு மட்டும் அரிசி வைக்கிறாள் என்று? சின்னவள் கொஞ்சம் மினுமினுப்பாய் ஏதோ ஒன்றைக் காக்காப் பொன் என்றாள். இவையெல்லாம் என் வாழ்விலும் இடம் பெற்றிருந்தன. எப்போதிருந்து இவை என் புத்தக அடுக்கிலிருந்து விடை பெற்றன என்பது எனக்கே புரியாத புதிராக இருந்தது. தேடித் தேடிச் சேகரித்தத் தீப்பெட்டிப் படங்களைத் திடீரென ஒருநாள் எளிதாகத் தூக்கிக் கொடுத்துவிட முடிகிறது.
                            மழையில் நனைய அடம்பிடித்த வயதில் காய்ச்சல் வருமென்று தடுத்த அம்மாவும் அம்மம்மாவும் வில்லிகளாகத் தெரிந்தார்கள். நனையக் கிடைத்த சுதந்திரத்தின் போது ஈர உடையுடனா காலேஜ் போவது என்று நனையாமல் நிற்கப் பழகிய பக்குவம் என்னிடமே அதிசயம்தான்! அப்புறமாய் எந்த விசேஷ நினைவுகளுக்காய் அன்றி மழையில் நனைவது சுகம் என்பதே மறந்து போனது வேலையின் ஓட்டத்தில்.

              இப்போவெல்லாம் டப்...டப்பென்று பெரிதாக மழைத் துளி விழுந்தால், கம கமவென மண் வாசனையை ....ரசிக்கக் கூட முடியாமல் துணிமணிகள் நனைந்து விடுமேவென ஓடி ஓடி எடுத்து வரத்தான் ஓட வேண்டியதிருக்கிறது.அப்படியிருக்கும் போதுதான் இந்த ஒருமணி நேர சொர்க்கம் திட்டம் அமுலுக்கு வந்தது. இரவு ஏழிலிருந்து எட்டு மணி வரைக்கும் கரன்ட் கட்!

                    அந்த ஒரு மணிநேர சொர்க்கம் கலகலன்னு போக ஆரம்பிச்சிருக்கு.உங்க ஸ்கூலில் என்ன் நடந்தது...உங்க காலேஜில் என்ன்ன நடந்தது? அப்படி ஆரம்பிச்சு.....மொட்டை மாடி அரட்டை.....நிலாச் சோறு, பாட்டுக்குப் பாட்டு, அரசியல் அரங்கம், அன்னா ஹசாரே ஜெ.அம்மா, கனிமொழி, ராஜா எல்லோரும் பேச்சில் கலந்து கொள்கிறார்கள்.சில நேரம் ஒரு மணி நேரம் ரெண்டுமணி நேரமாக நீளும் போதும் அலுப்பில்லாமல் கலகலப்பில் வீடு அதிர்ந்து கொண்டிருந்தது. இப்போலாம் அந்த ஒரு மணி நேர சொர்க்கத்தில் என்ன பண்ணலாம்னு ப்ளான் செய்யற அளவுக்கு   எந்தவித வேலை நிர்ப்பந்தமும் டி.வி நிகழ்ச்சிகளின் ஆக்கிரமிப்புமின்றி இயல்பான குடும்பத்தினுள்தான் நேரம் எவ்வளவு அருமையாய்க் கரைகிறது....முதல் முறையாய் இரவு நேர நட்சத்திரங்கள் என்னைக் கவராமல் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.
                    
                       தீப்பெட்டிக்குள் இப்போதும் கூட்டுப் புழுவைப் பத்திரப்படுத்தினால் அது பட்டுப்பூச்சியாகத்தான் வெளிவருகிற்து. அந்த வித்தையைத்தான் நாம் மறந்து ரொம்ப நாட்கள் ஆகின்றது.இனி வரும் நாட்களில் கரன்ட் கட் இல்லைன்னாலும் கூட மெயின் ஸ்விட்சை ஒருமணி நேரம் ஆஃப் செய்து விடலாம்னு ஒரு ப்ளான் இருக்கு!     

Thursday, August 18, 2011

கூடிப்பேசும் கல்முற்றம் !

யாருமற்ற
வீட்டுக் கல்முற்றத்தில்
சுவரிடுக்கில் முளை விட்ட
செடி நுனியும்
குருவி கொத்தக் கொட்டிய
அரிசியும்
காய் நகர்த்திக் கலைந்த
தாயக்கட்டமும்
மௌனமாகப் பிரியங்களின்
அதிர்வை நினைவுறுத்துகின்றன

உலகம் வளர, வளர
வீடு விரிய,விரிய
கூடிப்பேசும் கல்முற்றம் 
வெயில் மழையுடன் 
தனிமைப் பட்டுக்கிடந்தது  ....

கொஞ்சம் எறும்புகளின் வரிசையும்
எலிகளின் கொண்டாட்டமும்
முடிவற்ற மௌனமும்
நினைவுபடுத்திப் பார்ப்பதற்குரிய
பிரியங்கள் என்றேனும் மீளும்
என்ற நம்பிக்கையுடன்.....
கல்முற்றத்தில்
அம்மம்மாக்களும் தாத்தாக்களும்....