நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, August 27, 2011

அந்த ஒருமணி நேர சொர்க்கம்!

மனம் மயக்கும் சாயங்காலமும், ரம்யமான நட்சத்திர இரவுக்காகவும் மனதைச் சிலிர்க்கவைக்கும் அதிகாலைக்காகவும் ஏங்கிக் கிடக்கும் .வேலை முடிந்த அலுப்பில் சாயங்காலம் படுக்கையிலும் அல்லது கணினி முன்னாலுமாய்க் கழிந்து விடும்.அதிகாலை அநேகமாக அடுப்படிக்குள் முழுகி விடும்.ம்ம்ம் நட்சத்திர இரவு சாப்பாட்டுக் கடையின் சலசலப்பிலுமாய் அடங்கிக் கொண்டிருக்கிறது.சே! என்னடா இது வாழ்க்கை என அலுத்துக் கொண்டே நாளும் பொழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
                  குட்டி ஒரு சின்ன புறாவின் இறகைப் புத்தக இடுக்கில் வைத்துத் திறந்து காட்டிப் பொத்திக் கொண்டாள். அடுத்த பக்கத்தில் மயிலிறகிற்கு அரிசி வைத்துக் கொண்டிருந்தாள். ரொம்ப நாளாய் ஒரு கேள்வியுண்டு....ஏன் மயிலிறகுக்கு மட்டும் அரிசி வைக்கிறாள் என்று? சின்னவள் கொஞ்சம் மினுமினுப்பாய் ஏதோ ஒன்றைக் காக்காப் பொன் என்றாள். இவையெல்லாம் என் வாழ்விலும் இடம் பெற்றிருந்தன. எப்போதிருந்து இவை என் புத்தக அடுக்கிலிருந்து விடை பெற்றன என்பது எனக்கே புரியாத புதிராக இருந்தது. தேடித் தேடிச் சேகரித்தத் தீப்பெட்டிப் படங்களைத் திடீரென ஒருநாள் எளிதாகத் தூக்கிக் கொடுத்துவிட முடிகிறது.
                            மழையில் நனைய அடம்பிடித்த வயதில் காய்ச்சல் வருமென்று தடுத்த அம்மாவும் அம்மம்மாவும் வில்லிகளாகத் தெரிந்தார்கள். நனையக் கிடைத்த சுதந்திரத்தின் போது ஈர உடையுடனா காலேஜ் போவது என்று நனையாமல் நிற்கப் பழகிய பக்குவம் என்னிடமே அதிசயம்தான்! அப்புறமாய் எந்த விசேஷ நினைவுகளுக்காய் அன்றி மழையில் நனைவது சுகம் என்பதே மறந்து போனது வேலையின் ஓட்டத்தில்.

              இப்போவெல்லாம் டப்...டப்பென்று பெரிதாக மழைத் துளி விழுந்தால், கம கமவென மண் வாசனையை ....ரசிக்கக் கூட முடியாமல் துணிமணிகள் நனைந்து விடுமேவென ஓடி ஓடி எடுத்து வரத்தான் ஓட வேண்டியதிருக்கிறது.அப்படியிருக்கும் போதுதான் இந்த ஒருமணி நேர சொர்க்கம் திட்டம் அமுலுக்கு வந்தது. இரவு ஏழிலிருந்து எட்டு மணி வரைக்கும் கரன்ட் கட்!

                    அந்த ஒரு மணிநேர சொர்க்கம் கலகலன்னு போக ஆரம்பிச்சிருக்கு.உங்க ஸ்கூலில் என்ன் நடந்தது...உங்க காலேஜில் என்ன்ன நடந்தது? அப்படி ஆரம்பிச்சு.....மொட்டை மாடி அரட்டை.....நிலாச் சோறு, பாட்டுக்குப் பாட்டு, அரசியல் அரங்கம், அன்னா ஹசாரே ஜெ.அம்மா, கனிமொழி, ராஜா எல்லோரும் பேச்சில் கலந்து கொள்கிறார்கள்.சில நேரம் ஒரு மணி நேரம் ரெண்டுமணி நேரமாக நீளும் போதும் அலுப்பில்லாமல் கலகலப்பில் வீடு அதிர்ந்து கொண்டிருந்தது. இப்போலாம் அந்த ஒரு மணி நேர சொர்க்கத்தில் என்ன பண்ணலாம்னு ப்ளான் செய்யற அளவுக்கு   எந்தவித வேலை நிர்ப்பந்தமும் டி.வி நிகழ்ச்சிகளின் ஆக்கிரமிப்புமின்றி இயல்பான குடும்பத்தினுள்தான் நேரம் எவ்வளவு அருமையாய்க் கரைகிறது....முதல் முறையாய் இரவு நேர நட்சத்திரங்கள் என்னைக் கவராமல் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.
                    
                       தீப்பெட்டிக்குள் இப்போதும் கூட்டுப் புழுவைப் பத்திரப்படுத்தினால் அது பட்டுப்பூச்சியாகத்தான் வெளிவருகிற்து. அந்த வித்தையைத்தான் நாம் மறந்து ரொம்ப நாட்கள் ஆகின்றது.இனி வரும் நாட்களில் கரன்ட் கட் இல்லைன்னாலும் கூட மெயின் ஸ்விட்சை ஒருமணி நேரம் ஆஃப் செய்து விடலாம்னு ஒரு ப்ளான் இருக்கு!     

21 comments:

KParthasarathi said...

கரண்ட்டு இல்லாமையில் இவ்வளவு சுகமா?எல்லோரும் இதை அனுபவிக்கறான்களா என்று தெரியவில்லை.ஆனால் குடும்பத்தோடு கூடி பேசி பழகுவது குறைந்து கொண்டே போகிறது.வானத்து நக்ஷத்திரங்களையோ ,மனம் மயக்கும் சாயங்காலங்களையும் விடுங்கள் ,பக்கத்தில் உள்ள மனைவி மக்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா என்பது தான் முக்கியம்.
நன்றாக அழுத்தம் திருத்தமுமாக சொல்லிவிட்டீர்கள்..ரொம்ப திருப்தி.

கோபிநாத் said...

அருமையான பகிர்வு ;-)

Rathnavel Natarajan said...

இனி வரும் நாட்களில் கரன்ட் கட் இல்லைன்னாலும் கூட மெயின் ஸ்விட்சை ஒருமணி நேரம் ஆஃப் செய்து விடலாம்னு ஒரு ப்ளான் இருக்கு!
அருமையான பதிவு.
தொலைகாட்சி எல்லா நிம்மதிகளையும் தொலைக்கிறது.

CS. Mohan Kumar said...

ம்ம் Inverter வேறு இருப்பதால் இது சாத்தியம் இல்லை. :((

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பகிர்வு...

இப்பொதெல்லாம் தொலைக்காட்சியும் கணினியும் எத்தனை நேரத்தினை எடுத்துக் கொள்கிறது என்பதற்கு கணக்கே இல்லை....

ஒரு மணி நேரம் மெயின் ஸ்விட்ச் அணைத்து விடும் யோசனை கூட நன்றாகத் தான் இருக்கிறது... மின்பொருளும் மிச்சமாகுமே.... “Save Earth Hour" தினமும் இருந்தால் நல்லது தானே...

மகேந்திரன் said...

அட.....
சோகத்தையும் சுகமாக
எடுத்துக்கொள்ளும் பாங்கு
நல்லா இருக்கே...

சாந்தி மாரியப்பன் said...

ஒரு மணி நேரம், குறைஞ்ச பட்சம் தொ(ல்)லைக்காட்சிப் பெட்டியின் மின்னிணைப்பை துண்டித்து விட்டாலே போறுமே :-))

இரசிகை said...

nalla pakirvu...aruna mam!

ரிஷபன் said...

இப்போலாம் அந்த ஒரு மணி நேர சொர்க்கத்தில் என்ன பண்ணலாம்னு ப்ளான் செய்யற அளவுக்கு எந்தவித வேலை நிர்ப்பந்தமும் டி.வி நிகழ்ச்சிகளின் ஆக்கிரமிப்புமின்றி இயல்பான குடும்பத்தினுள்தான் நேரம் எவ்வளவு அருமையாய்க் கரைகிறது...

உண்மைதான். நாம் நமக்காகவென்று நேரம் கண்டு பிடிக்க இம்மாதிரி பவர்கட் உதவுகின்றன.. அதன் சுகம் புரிந்ததும்தான் தெரிகிறது.. எப்படியெல்லாம் நம்மை நாமே அடிமைப்படுத்தி வாழ்கிறோம் என்று.

KSGOA said...

உண்மைதான்.தொலைகாட்சிபெட்டியும் கணிணியும் என்
படிக்கும் நேரத்தை விழுங்கிவிட்டன.

Anonymous said...

அமெரிக்காவில் இருக்கும் என் உறவினர் குடும்பத்தில் நான் கண்ட காட்சி என்னை நீண்ட நேரம் பாதித்தது. ஒரு மகன் (16 வயது), ஒரு மகள் (21 வயது) தாய் தந்தை கொண்ட குடும்பத்தில் பிள்ளைகளுடன் பேசக்கூட அவர்கள் லேப்டாப்பில் மெசேஜ் விட்டு , அவர்கள் பதில் மெசேஜ் விடுவதை படித்து அறிந்து கொள்ளுவதையும் பார்க்க மனம் புழுங்கியது. மின் இணைப்பு சற்று நேரம் இல்லாமல் இருக்க கூடாதா என்று கூட தோன்றியது.

ஷர்புதீன் said...

//ஒருமணி நேரம் ஆஃப் செய்து விடலாம்னு ஒரு ப்ளான் இருக்கு//

இங்கே எப்பவுமே ரண்டு மணி நேரம் பவர் கட்டு உண்டு! நட்சத்திரங்களும், சொந்தங்களும்தான் இல்லை!

isakki said...

simply superb!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

நல்ல விசயம்..சொர்க்கம் தான், என்னல்லாம் செய்தீங்களோ பேசினீங்களோ அதுல சுவாரசியமானதை ஒருநாள் எங்களுக்கும் சொல்லுவீங்க.. :)

அன்புடன் அருணா said...

ரொம்ப சரிKParthasarathi சார்
நன்றி கோபிநாத்!
Rathnavel said....
/தொலைகாட்சி எல்லா நிம்மதிகளையும் தொலைக்கிறது./
ரொம்ப சரி ரத்னவேல் சார்
மோகன் குமார் said...
/ம்ம் Inverter வேறு இருப்பதால் இது சாத்தியம் இல்லை. :((/
கொஞ்ச நேரம் இன்வெர்ட்டெரையும் ஆஃப் செய்யுங்க மோஹன்குமார்!

துளசி கோபால் said...

அருமை.

கரண்ட் நின்னுபோனதும் ஒரு அமைதி வரும் பாருங்க....நம்மைச் சுத்தி இருக்கும் இத்தனை சத்தங்களும் போடறது இந்த கரண்டுதானா?ன்னு தோணும்.

இப்பெல்லாம் கரண்ட் ராத்திரியில் நின்னால்தான் அக்கம்பக்கத்து ஆட்களையே (மொட்டை மாடியில்) பார்க்க முடியுது!

Anonymous said...

அட எப்படிங்க இது பவர்கட்டைக்கூட பாசத்துடன் வரவேற்கும் மனசு எனக்கு இல்லவே இல்லீங்க, நல்ல மனசு , வாழ்க

காமராஜ் said...

Anonymous said...
அமெரிக்காவில் இருக்கும் என் உறவினர் குடும்பத்தில் நான் கண்ட காட்சி என்னை நீண்ட நேரம் பாதித்தது. ஒரு மகன் (16 வயது), ஒரு மகள் (21 வயது) தாய் தந்தை கொண்ட குடும்பத்தில் பிள்ளைகளுடன் பேசக்கூட அவர்கள் லேப்டாப்பில் மெசேஜ் விட்டு , அவர்கள் பதில் மெசேஜ் விடுவதை படித்து அறிந்து கொள்ளுவதையும் பார்க்க மனம் புழுங்கியது. மின் இணைப்பு சற்று நேரம் இல்லாமல் இருக்க கூடாதா என்று கூட தோன்றியது.//

முதலில் இந்தத்தகவல் பயங்கரமாக இருக்கிறது.பிறகு கைவாய் மூக்கு செவியெதற்கு என்கிற பயம் கலந்த கேள்வி எழுகிறது.

அப்புறம் மேடம் அழகிய பதிவு.
அருணா மேடத்தின் அக்மார்க் முத்திரை அழுத்தமாகத்தெரிகிறது.ஒரு கதைசொல்லியின் லாவகத்தில் மின்தடை மண்வாசனையைக்கிளறுகிறது.

அன்புடன் அருணா said...

வெங்கட் நாகராஜ் said...
/ “Save Earth Hour" தினமும் இருந்தால் நல்லது தானே.../
அதானே!
மகேந்திரன் said...
அட.....
சோகத்தையும் சுகமாக
எடுத்துக்கொள்ளும் பாங்கு
நல்லா இருக்கே.../
நன்றி மகேந்திரன்
அமைதிச்சாரல் said...
/ஒரு மணி நேரம், குறைஞ்ச பட்சம் தொ(ல்)லைக்காட்சிப் பெட்டியின் மின்னிணைப்பை துண்டித்து விட்டாலே போறுமே :-))/
இது ஐயோ ஐயோ என்று அலறலில்லாமல் கிடைக்குதே!
நன்றி இரசிகை !
நன்றி ரிஷபன் !
KSGOA said...
/ உண்மைதான்.தொலைகாட்சிபெட்டியும் கணிணியும் என் படிக்கும் நேரத்தை விழுங்கிவிட்டன./
அட!ஸ்ட்ரிக்டா படிக்க டைம் ஒதுக்குங்க!

அன்புடன் அருணா said...

Anonymous said...
/ மின் இணைப்பு சற்று நேரம் இல்லாமல் இருக்க கூடாதா என்று கூட தோன்றியது./
அதே ஆதங்கம்தாங்க!
ஷர்புதீன் said...
/இங்கே எப்பவுமே ரண்டு மணி நேரம் பவர் கட்டு உண்டு! நட்சத்திரங்களும், சொந்தங்களும்தான் இல்லை!/
அடடா :(
isakki நன்றி !
முத்துலெட்சுமி/muthuletchumi said...
/ நல்ல விசயம்..சொர்க்கம் தான், என்னல்லாம் செய்தீங்களோ பேசினீங்களோ அதுல சுவாரசியமானதை ஒருநாள் எங்களுக்கும் சொல்லுவீங்க.. :)/
உங்கள்கிட்டே சொல்லாமெ யாரிட்டே சொல்லப் போறேன்
துளசி கோபால் said...
/ கரண்ட் நின்னுபோனதும் ஒரு அமைதி வரும் பாருங்க....நம்மைச் சுத்தி இருக்கும் இத்தனை சத்தங்களும் போடறது இந்த கரண்டுதானா?ன்னு தோணும்./
ரொம்ப சரி துளசி மேடம்!
Anonymous said...
/அட எப்படிங்க இது பவர்கட்டைக்கூட பாசத்துடன் வரவேற்கும் மனசு எனக்கு இல்லவே இல்லீங்க, நல்ல மனசு , வாழ்க/
ஹிஹி வேற வழி???

சாகம்பரி said...

நல்ல பகிர்வு. பகலில் கூட மின்தடை ஏற்படும் வேளையில் நிறைய வேலைகளை செய்ய முடிகிறது. இதற்காகவே நான் இன்வெர்டெரை மறுத்து விட்டேன்.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா