நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, February 27, 2008

ஒரு நிமிஷத்திலே திருடனாயிட்டோமில்லெ!!

நமக்கு எப்போதுமே ஒற்றைப் பெட்டிதானுங்க...அது ஜெய்ப்பூரிலிருந்து சென்னையானாலும் சரி,சென்னையிலிருந்து கனடாவானாலும் ச்ரி.அதையும் ஸ்டையிலாகப் பிடித்துக் கொண்டு அந்த ஜெய்ப்பூர் டு சென்னை ரயிலில் ஏறி உட்கார்ந்ததுமே இரண்டு பேர் கொண்ட அந்தக் குடும்பம் 24 பெட்டியை வைத்துக் கொண்டு வேர்த்து விறு விறுத்த அந்தக் குடும்பத்துத் தலையும் மற்றும் அங்கிருந்த பெரியோரெல்லாம் என்னை விசித்திரமாகப் பார்த்ததில் எனக்குக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தது
அப்போதான் அவர்கள் வந்தார்கள்..ஒரு அழகான Made for each other ஜோடி.புது வாழ்வின் மினு மினுப்பு முகத்திலும்,சந்தோஷப் பூக்களின் மின்னல் கண்களிலும் தெரிந்தது.தேனிலவுப் பயணம் போல..இரண்டே இரண்டு பெட்டி..அந்தப் புதுப் பொண்ணைப் போலவே அந்தப் புதுப் பையனும் வெட்கப் பட்டான்.எனக்கு எதிரில் உள்ள சீட்டில் வந்து உட்கார்ந்தார்கள்.
செயின் போட்டுரலாமா என்று அவன் பொதுவாகச் சொல்லிவிட்டு ஒரு பெட்டியைத் திறக்க முயன்றான்.திறக்கவில்லை.அப்படியும் இப்படியுமாக திருகித் திருகிப் பார்த்தான்.ஒன்றும் நடக்கவில்லை.திருகித் திருகிக் கை சிவந்ததுதான் மிச்சம்.உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அந்தப் பெண்ணிடம் கொடுத்தான்.அவளும் அவளால் இயன்றவரை திருகித் திருகிப் பார்த்துவிட்டு... ப்ச்..ப்ச். என்றாள்.

"டிக்கெட்,மேற்கொண்டு பணம் எல்லாம் அதில்தான் இருக்கு" என்றான் மெதுவாக.
"இப்போ என்ன பண்றது?"என்றாள் அவள்.

நாம கொஞ்சம் இளகின மனசுங்க...ரொம்பப் பாவமாக இருந்தது."இப்பிடிக் கொடுங்க என்று உரிமையோடு பெட்டியை வாங்கிக் கொண்டேன்.சும்மா "கணேஷ் வசந்த்" ரேஞ்சுக்கு ஆராய்ந்தேன்.அப்படியும் இப்படியும் திருகிவிட்டு உதட்டைப் பிதுக்கினேன்.

அதற்குள் அங்கிருந்தோர் அத்தனை பேர் பார்வையும் என் மேல்..மனசுக்குள் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன்.இன்னமும் கொஞ்சம் சாகசம் செய்ய எண்ணி என் சாவிக் கொத்தையும் எடுத்து திருகித் திருகி அடிக்கடி அனைவரையும் பார்த்து ஒரு பெருமைப் புன்னகையும் செய்து கொண்டே என் வேலையில் கவனமாயிருந்தேன்..
இதை.... இதை...இதைத்தானே எதிர்பார்த்தேன் என்று மனது கூ...கூ..என்று கூக்குரலிட்டது. அட....க்ளிக் என பெட்டி திறந்து கொண்டது.ஒரு வீரப் புன்னகையுடன் ஏதோ அவார்ட் வாங்குபவனைப் போல ரொம்பப் பெருமையுடன் பளிச்சென்ற சிரிப்புடன் பெட்டியைத் திருப்பிக் கொடுத்தேன்.
என் பக்கத்தில் இருந்தவன் ஒருவிதக் கடுப்புடனேயே இருந்தான்.திரு திருவென்று அங்கும் இங்கும் பார்த்தான்.விருட்டென்று எழுந்து போனான்."வயிற்றெரிச்சல் பிடிச்ச பாவிங்க" என்று மனதுக்குள் கறுவினேன்.....
அட அவன் டி.டி.ஈ உடன் வந்தான்.அவர் என்னருகில் வந்து ......
"உங்க டிக்கெட்டைக் காட்டுங்க.."என்றார்.நான் ஒன்றும் புரியாமல் டிக்கேட்டை எடுத்துக் காட்டினேன்.
"எங்க வேலை பார்க்கிறீங்க?"
"ஐ.டி கார்ட் இருக்கா?"
"ஐ.டி.கார்ட் காட்டுங்க"
"எங்க போறீங்க?"
"என்ன விஷயமாகப் போறீங்க?"
"வேலை பார்க்கிற இடத்து அட்ரெஸ் சொல்லுங்க..
"போற இடத்துலே எங்க தங்குவீங்க?"
"அந்த அட்ரெஸ் கொடுங்க..."
"எந்தச் சாவி கொத்தால திறந்தீங்க..அதைக் காட்டுங்க..."
என்று சகட்டுமேனிக்கு கேட்ட கேள்வில நான் வேர்த்து விறு விறுக்க "அடப் பாவிகளா ....ஒரு பாவி வாய் திறக்கட்டுமே உதவிக்கு?அட அந்தப் பெட்டி கோஷ்டியாவது உதவிக்கு வரும்னு பார்த்தால்"அடச் சே!" நான் நொந்து நூடுல்ஸ் ஆகி மெல்ல எல்லோரையும் "பெட்டியைத் திறந்து கொடுத்தது தப்பாடா" என்று வடிவேல் ரேஞ்சுக்குப் பரிதாபமாக பார்க்கையில் அத்தனை பேர் கண்களிலும் "அட! ஒரு நிமிஷத்தில திருடனாயிட்டோமில்லே!!!

Tuesday, February 19, 2008

நீயும், நானும்,நம் கோபங்களும்.....

உன் கோபமும்
என் கோபமும்
யாரை என்ன செய்து விட முடியும்?
சரியாகப் போடாத சாலைகளுக்காக அரசாங்கம் மேல்
உன் கோபம்...
போட்ட சாலைகளை குப்பைக் கூடமாகிய மக்கள் மேல்
என் கோபம்..
மரம் நட்டு பராமரிக்காத அரசாங்கம் மேல்
உன் கோபம்...
மரம் வெட்டி வருமானம் பார்க்கும் மக்கள் மேல்
என் கோபம்..
தேவைக்குத் தண்ணீர் தராத அரசாங்கம் மேல்
உன் கோபம்...
சொட்டுப் போடும் குழாயை சரி செய்யாத மக்கள் மேல்
என் கோபம்..
சாதி,இனம்,மதம் இவற்றை முன் வைத்தே ஜெயிக்கும் அரசாங்கம் மேல்
உன் கோபம்...
சாதி,இனம் ,மதம் என்றே வாழ்ந்து வரும் மக்கள் மேல்
என் கோபம்..
சாலை விதிகளை மீறும் மக்கள் மேல்
உன் கோபம்..
சாலை விதிகளை மீறுபவனிடம் கையேந்தும் காவலன் மீது
என் கோபம்..
உன் கோபமும்
என் கோபமும்
யாரை என்ன செய்து விட முடியும்???

Tuesday, February 12, 2008

ஒரே நாளில் கதாநாயகியாயிட்டோமில்லே!!!

அருட்பெருங்கோவின் கால்குலேட்டரின் ரணகளம் படித்த பின் வந்த மலரும் நினைவுகள் இந்தப் பதிவு ...சம்பத்தப் பட்டவர்கள் படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பெயர் மாற்றம் செய்து போட்டிருக்கேனுங்கோ! அப்பிடியே படிச்சு ப்ழைய கால நினைவுகள் வந்தாலும் நான் செஞ்ச தப்பை மறந்து மன்னிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..என்னா பில்ட் அப் நல்லாருக்கா?

பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது.அது ஒரு கோ-எட் பள்ளிக் கூடம்.ஆனாலும் பெண்கள் எண்ணிக்கையில் மிகவும் கொஞ்சம்.36 பசங்க அனால் 11 பேரே பெண்கள்..அப்பப்பா பண்ற அலப்பறை இருக்கே!!

அதுல ஒரு பொண்ணு ஒரு டீச்சரோட பொண்ணு.என்ன ஆட்டம் போட்டாலும் அதோட பிட் அந்த டீச்சருக்குப் போயிரும்...அவ்வ்ளோ தான் அடுத்த நாள் வந்து காவடி எடுத்து ஆடிடும்..

விளையாட்டு மைதானத்தின் பின்னால ஒரு சின்ன வாசல் ..அது பெண்களின் அந்தப் புற திட்டி வாசல்.அதில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி..அதன் பக்கத்தில் ஒரு சின்னூண்டு சுவர்.அதுதான் பையன்களோட காதல் நோட்டீஸ் போர்ட்.தினம் ஒரு பொண்ணொட பெயர் யாராவது ஒரு பையனோட "I love you" மெசேஜோட அதில எந்த லூஸோ எழுதி வைச்சுட்டு அது பாட்டுக்கு போயிடும்.இங்க காலையில இருந்து ஒவ்வொருத்தரா வந்து கிழித்து பந்தல் போட்டு விடுவார்கள்.ஒரு தப்புமே செய்யாத அந்தப் பொண்ண எல்லோரும் ஒரு தினுசா திரும்பித் திரும்பிப் பார்த்துட்டு போவார்கள்.

அந்த டீச்சர் அம்மா கொஞ்சம் ஜாஸ்தி..."பொண்ணுங்க ஒழுங்கா இருந்தா யாரும் இப்பிடி எல்லாம் எழுத மாட்டாங்க..என் பொண்ணுக்கு எவனாவது எழுதுறானா? ஏன்னா என் பொண்ணை நான் வளர்த்த விதம் அப்பிடி இப்பிடின்னு ஆரம்பிச்சா இன்னிக்கி எல்லாம் ஒரு மெகா சீரியலா போடுற அளவுக்கு மேட்டர் வெளிய வந்து கொட்டும்.

இதை இப்பிடியே விடக் கூடாது...பொண்ணுங்க மனசோட சிந்திச்சா இதுக்கு வழி கிடைக்காதுன்னு ஒரு வில்லத்தனமா சிந்திக்கணும்னு ஒரு மாநாடு போட்டு கடைசியா குட்டியூண்டா இருந்த என்னைத் தேர்ந்தெடுத்து அந்த் வேலையை ஒப்படைத்தார்கள்...அது வேறொன்றுமில்லை...அந்த டீச்சர் பொண்ணோட பெயரை ஒரு பையனோட சேர்த்து அந்தக் காதல் நோட்டீஸ் போர்ட்லெ எழுதிப் போடற வேலைதாங்க அது.....கொஞ்சம் உதறல்தான் இருந்தாலும் அவ்வளோ பேர் இருக்கும் போது என்னைத் தேர்ந்தெடுத்ததனால நம்ம ஸ்டார் அந்தஸ்தைக் காப்பாற்ற வேண்டி ரொம்பத் தைரியமா இருக்கிற மாதிரி இளித்துக் கொண்டே சரி என்றேன்.

ஒவ்வொரு அடிக்கு ஒருத்தியாக நின்று எனக்கு சிக்னல் கொடுப்பதற்குத் தயாராக நின்று கொண்டார்கள்.எனக்கு வேர்த்து விறு விறுத்தது..கையில் பிடித்திருந்த சாக் பீஸ் ஈரமாகியது..கை நடுங்க 100 வயது கிழம் எழுதியது போல கிறுக்கி விட்டு ஓடியே வந்து விட்டேன்.

பெரிய சாதனை செய்தது போல ஒரு மகிழ்ச்சி இருந்தாலும், அடுத்த நாள் என்ன ஆகுமோ என்ற பயமும் இருந்தது.இரவெல்லாம் ஒரே கனவு..அந்த டீச்சர் என் கையெழுத்தையும் அந்த போர்ட்லெ உள்ள கையெழுத்தையும் ஒன்று என்று கண்டு பிடித்து விட்டதாகவும்,போலீஸ்காரங்க நாயெல்லாம் கூட்டிட்டு வந்து மோப்பம் பிடிக்க வைத்து என்னைக் கண்டு பிடித்து விட்டதாகவும்,என் நட்புகள் எல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜகா வாங்கியதாகவும்,என்னை போலீஸ் ஜீப்பில் ஏற்றும்போது என் அம்மா பின்னல் ஓடியே வருவதாகவும், எல்லா கனவுகளும் ஒரே நாளில் விட்டு விட்டு பட ட்ரெயிலர் போல பிட் பிட்டாக வந்தது.

இந்தக் கொடுமையில் காய்ச்சல் வேறு வந்து விட்டது.ஒரு மாதிரி மந்திரித்து விட்ட கோழி மாதிரிதான் ஸ்கூலுக்குக் கிளம்பினேன்.

அட ரொம்ப சூப்பரா எங்க ப்ளான் வொர்க் அவுட் ஆகியிருந்துதுங்க.!!அதே டீச்சர் தன் பொண்ணின் அழுகையை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தார்."பாருங்கம்மா எப்பிடி ஒழுக்கமா இருந்தாலும் இந்தப் பையனுங்க விடறதில்லெ! இந்தப் பையனுங்க பண்ற வேலையினாலே சேட்டையினாலே பொண்ணுங்களுக்கு எவ்வளோ கஷ்டம்?பாவம்......நீங்க என்னம்மா பண்ணுவீங்க?....என்று ஒரே பாச மழைதான் போங்க.!!

இதுல சந்தடி சாக்கில நடந்த இன்னொரு நல்லது..எந்தக் கூட்டம் அங்கே தொடர்ந்து எழுதுச்சோ அதுங்க மிரண்டு போய்அதுக்கப்புறம்எழுதவேயில்லை!!!.ஒரே நாளில் பெண்கள் கூட்டத்திலே ஒரு கதானாயகியாயிட்டோமில்லே!!!!!!!!

Thursday, February 7, 2008

எத்தனை நாளாச்சு!!!

உன் கண்களில் நட்சத்திரப் பூக்கள் பார்த்து
எத்தனை நாளாச்சு?

நட்சத்திர வானம் பார்த்தும்தான்
எத்தனை நாளாச்சு?

உன்னோடு சிரித்துப் பேசி
எத்தனை நாளாச்சு?

என் வீட்டு ஜன்னலில் நிலவு எட்டிப் பார்த்தும்தான்
எத்தனை நாளாச்சு?

உன் கையோடு கைகோர்த்து
எத்தனை நாளாச்சு?

மழையோடு வானவில் பார்த்தும்தான்
எத்தனை நாளாச்சு?

உன்னோடு சண்டை போட்டு
எத்தனை நாளாச்சு?

இடியோடு மின்னலும்தான் பார்த்து
எத்தனை நாளாச்சு?

Friday, February 1, 2008

இன்று முதல் அன்புடன் அருணா!

ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.என் ப்ளாக் பெயரை மாற்றி விடலாம் என்று ...இது இந்த மாற்றம் என்னைத் தவிர மற்றவர்களுக்காக....முதல் முதல் பெயரைச் சொன்னவுடனே "பெயரை மாத்து இல்லைன்னா உன் பேச்சு கா" என்று வாரிய சேகரனுக்காகவும்,

"ஏன் இந்தப் பெயரை வைத்தாய்" என்று தினம் என்னை வதைக்கும் அந்தோணி முத்துவுக்காகவும்,

ப்ளாக் பெயரை மாற்றுங்க என்று 4 முறை கமென்ட் பண்ணிய,//இந்த 'வலைப்பூ'வின் தலைப்பை படிக்கும் போது ஆமாய்யா போய்சேரத்தானே போறோம் என்னத்துக்கு அதை இதை செஞ்சிகிட்டு என்ற சலிப்பு மனோபாவம்தான் ஏற்படுகிறதே தவிர நீங்கள் சொலவது போல ஆணவத்தை ஒன்றும் அழிப்பதாக தோன்றவில்லை :(// என்று சலித்துக் கொண்ட மங்களூர் சிவாவுக்காகவும்,


//ஒரு எட்டு பாத்துட்டுப் போலாம்ன்னு வந்தாப் பதிவு தலைப்பே மிரட்டுதுங்களே// என்று மிரண்ட தேவ்-க்காகவும்,

அப்புறம் இந்த தலைப்பை மாத்தீடுங்களேன் ப்ளீஸ் என்று கெஞ்சிய நிலாவுக்காகவும்,

//எல்லோரும்தான் இறக்கப் போகிறோம்-ஒருநாள்,அதை நித்தமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன??????// என்று கேட்ட அறிவனுக்காகவும்,

//பலர் உங்களின் வலைப்பூவின் தலைப்பை மாற்ற வேண்டும் என்பதற்கு காரணம் அது உங்களின் உள்ளத்தை எல்லோரும் அறிந்திருப்பதாலும் நீங்கள் யாராக இருந்தாலும் அன்பு உள்ளம் கொண்ட நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற அன்பால் தான்.// //இறந்துகொண்டேயிருக்கிறேன் மீண்டும் பிறந்து கொண்டேயிருக்க//என்று புதுமையான விளக்கம் சொல்லும் என்சுரேஷ்க்காகவும்,


//அப்புறம் அருணா உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லறேன்..
எல்லாரும் தான் இறக்க போறோம்.. ஆனா பிறந்து இறக்கும்
அந்த இடை வெளி இருக்கு பாருங்க, அதுல வாழலாம் :)
நம்ம சந்தோஷமா இல்லன கூட அடுத்தவங்களை சந்தோஷ படுத்தின,
நம்ம மனசுக்கு நிம்மதியாசும் கிடைக்கும்..// என்று நல்ல ஐடியா கொடுத்த ட்ரீம்ஸ்க்காகவும்,


//என்ன மேடம் இப்படி ஒரு தலைப்பு குடுத்திருக்கீங்க. மாத்துங்க முதல்ல// என்று கட்டளையிட்ட ஸ்ரீக்காகவும்,


// (என்ன ஒரு பேருடா சாமி. பேரக் கேட்டாலே சும்மா அலறுவானுவ)//
//இந்த அருணா இருக்கே, பேருதான் அப்படியே தவிர, அதுக்கிட்டப் பழகிப் பாத்தா வாழணும்ங்கற ஆவல்தான் வரும். அது ரொம்ப, ந்ல்ல பிள்ளைப்பா, பேருக்கோசரம் அதை இப்படிப் போட்டு வார வேணாம் கண்ணுங்களா.//என்று எனக்கு சப்போர்ட் பண்ணும் சாம் தாத்தாவுக்காகவும்,


//ப்ளாக் பெயரை இப்படியா வைப்பது.... ஏனுங்க இந்தக் கோபம்?// என்று கேட்ட தமிழ் நெஞ்சத்திற்காகவும்,//


அடப்பாவமே... ஏனுங்க அருணா.. புதுசா இருக்கே உங்க பேருன்னு உங்க வலை வீட்டுக்கு வந்தாக்கா.. இப்பிடியா வெல்கம் போட்டு வச்சி பயம்புறுத்தறது..// என்று பயந்து கொண்ட ரசிகனுக்காகவும்,


//நான் குட்டிபாப்பாவா இருக்கலாம், இங்க இதுல நாந்தான் குரு,எனக்கு குருதட்சிணை வேணும் குருதட்சிணை என்ன தெரியுமா? உங்க ப்ளாக் தலைப்பை மாத்துனா அதுதான் எனக்கு குருதட்சிணை.மாத்துவீங்களா? இல்ல குட்டி பாப்பா பேச்செல்லாம் கேக்கறதான்னு விட்றுவீங்களா?// என்று குருதட்சிணை கேட்ட நிலாக் குட்டிக்காகவும்,

குருதட்சிணையாக பெயரை மாற்றி விடலாம் என்று நினைத்து இன்று முதல் ""நான் இறக்கப் போகிறேன் அருணா" "அன்புடன் அருணா"வாக பெயர் சூட்டப் படுகிறது.....பெயர் சூட்டும் விழாவுக்கு அனைவரும் வருக வருக என்று அன்புடன் அழைக்கிறேன்.....
அன்புடன் அருணா