நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, November 26, 2008

இதுவும் கடந்து போகும்......

" நான்" எனும் பாதரசம் பூசிய
மாயக் கண்ணாடி மனம்.....

முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்
உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்?

மாயக் கண்ணாடி
அந்தப் பாதரசம் இழக்கத் தயாராயில்லை
உலகம் காட்டவும் தயாராயில்லை

தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........

தப்பியோட முடியாத பிம்பங்கள்
விட்டு விலகாத "நான்" பிம்பங்கள்
சுகமாய்த்தான் இருந்தது
அந்த அடைமழையில்
நனையும் வரை

அந்த அன்பெனும் அடைமழையில்
நனைந்தது மாயக் கண்ணாடி
உதிர்ந்து கரைந்தது பாதரசம்
"நான்" இழந்தது மாயக் கண்ணாடி

ஹா..............
அழகிய உலகம் தெரிந்தது முன்னாடி...!!!!

Friday, November 14, 2008

சிபி சார் எனக்கு வைத்த பரீட்சையும் அதற்கான பதில்களும்........




1.ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேர்வில் மதிப்பெண்கள் இடுகிறார்கள்!எப்பவாச்சும் ஆசிரியர்கள் எப்படின்னு மாணவர்களிடம் கேட்டிருக்கீங்களா?(கேட்டிருக்கீங்களா என்றால் நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் பள்ளி நிர்வாகத்தில் வேறு எவரேனும் கூட)

அச்சச்சோ எந்த உலகத்துலே இருக்கீங்க?
என் வேலையே இதுதான்......ஆசிரியர்கள் appoint செய்யும் முன் டெமோ வைத்து ஒரு வாரம் பாடம் நடத்தச் சொல்லி மாணவர்கள் புரியுதுன்னு ok சொன்ன பின்தான் வேலைக்கு ஆர்டர்...அதே போல எந்த ஆசிரியரையும் மாணவர்கள் நல்லா பாடம் நடத்தலைன்னு சொன்னா மாற்றவும் செய்கிறது மேனேஜ்மென்ட்.



2.குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களைக் கூப்பிட்டு கண்டிக்கும் அதே வேளையில் அவர்கள் அதிகபட்சமாய் மதிப்பெண்கள் எடுத்திருக்கும் பாடங்களைப் பற்றி அங்கே ஓரிரு வார்த்தைகள் என்கரேஜ் செய்யும் விதமாக பேசுவீர்களா?/பேஎசியதுண்டா? (ஏன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குற பசங்களை நிக்க வெச்சி கிளளப் பண்ணுவோம்னெல்லாம் சொல்லக் கூடாது)


இது தனித் தனி அணுகுமுறையைப் பொறுத்தது.....என் அணுகுமுறையே குறைவான மதிப்பெண்கள் வாங்கும் குழந்தைகளிடம் அவர்களின் மற்ற திறமைகளை சிலாகித்துப் பேசுவதுதான்.....

3. எப்பாவாவது எந்தப் பாடம் உங்களுக்கு பிடித்தது? எதெல்லாம் பிடிக்கலை? ஏன்? போன்ற கேள்விகளை மாணவர்களிடம் கேட்டறிந்ததுண்டா?


இதெல்லாம் ஆசிரியர் தினம்,குழந்தைகள் தினம் எப்போதும் நடக்கும் ஒரு மிகச் சாதாரணமான கேள்வி பதில் நிகழ்ச்சிகள்.

4. மாணவர்களிடம் இந்த மாதிரி கேட்பதற்கெல்லாம் அவர்களுக்கோ/உங்களுக்கோ நேரம் இருந்ததுண்டா?
கண்டிப்பாக இருக்கிறது.

5.பாடத்தைத் தவிர மாணவர்கள் வேற ஏதாவது பேச வகுப்பில் அனுமதிப்பதுண்டா? (தினசரி செய்தி/பொது அறிவு இப்படி அவர்கள் விருப்பம் போல்)


எங்க ஸ்கூலில் ஒவ்வொரு மீட்டிங்கிலும் இப்படித் தினமும் பேச வேண்டும் என்ற அன்புக் கட்டளையே உண்டு.

6. அது போல அவர்களாக முன்வந்து செய்கிறார்களா? (முதல் முறை மட்டும் நீங்கள் சொல்லி ஆரம்பித்த பிறகு) அல்லது தினமும்/வாரம் ஒரு மாணவன் என்று நீங்களாகவே தேர்ந்தெடுத்து செய்யச் சொல்வீர்களா?


இதெல்லாம் வகுப்பறைக் குழுக்கள் (மாணவர்கள்) கவனித்து வாராவாரம் பிரித்துக் கொண்டு செய்பவை.


7. வகுப்பறையில் எப்போதேனும் மாணவர்களுக்கு பாட்டுப் பாட அனுமதித்ததுண்டா? (ஹேப்பி பர்த்டே அல்ல)


பாடச் சொல்லி அடிக்கடி ரசித்ததுண்டு.பாடம் நடத்தும் போது இது சாத்தியமல்ல என்றாலும் ஒரு ஆசிரியை விடுப்பில் இருக்கும் போது....அந்த வகுப்பை இதற்குப் பயன்படுத்திக் கொள்வதுண்டு...

8. வகுப்பிற்குள் ஆசிரியர்கள் நுழைந்த பிறகுதான் மாணவர்கள் அமைதி காக்கிறார்களா? அல்லது அதற்கு முன்பே அமைதியாக இருக்கிறார்களா?

ஆசிரியர்கள் நுழைந்த பிறகுதான் மாணவர்கள் அமைதி காக்கிறார்கள்

9. எப்போதேனும் எந்த வகுப்பிலிருந்தேனும் கொல்லென்று அனைத்து மாணவர்களும் சிரிக்கும் சப்தம் கேட்டதுண்டா?

உண்டு...உண்டு...என் வகுப்பில் அடிக்கடி நடக்கும்

10. மாணவர்களின் பொழுது போக்குகள் என்னவென்று கேட்டறிந்ததுண்டா?


ஒவ்வொரு நீள் விடுப்புக்குப் பின்னும் முதல் நாட்கள் இப்படித்தான் போகின்றன.

11. மாணவர்கள் எவரேனும் கதை/கவிதை என்று எழுதுகிறார்களா என்று கவனித்ததுண்டா? (தமிழ் இரண்டாம் தாளில்) ஏதேனும் ஒரு வினாவிற்கு விடையளிக்கும் விதமாக அவர்களாகவே (உரையில் இல்லாத) கதை/கவிதை எழுதி இருந்தால் அது குறித்து அவர்களை ஊக்கப் படுத்தியதுண்டா? (படிச்சிப் பார்த்து திருத்தினாத்தானே என்கிறீர்கள் என்றால் இந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டாம் :))
சி.பி.எஸ்.இ கல்வி முறையில் முதல்,இரண்டாம் தாள் கிடையாது.....மேலும் நான் அறிவியல் ...இருந்தாலும் அறிவியலில் கூடக் கதை எழுதிக் கலக்கும் மாணவர்கள் கூட உண்டு....படித்து "இந்தத் திறமையை ஆங்கிலம் ஹிந்திப் பேப்பரில் காட்டலாமே" என்பதுண்டு.

12. என்.சி.சி/என்.எஸ்.எஸ் போன்ற மாணவர் அமைப்புகளில் 10,12 ம் வகுப்பு மாணவர்களை ஈடுபடுத்திக் கொள்வது உண்டா?
இல்லை. ஈடுபடுத்த பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை.
13. சினிமா/தொலைக்காட்சி/ பொதுநிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்க மாணவர்களை எப்போதேனும் அனுமதிப்பதுண்டா?
அவ்வப்போது என் வகுப்புகளில் உண்டு...அப்பப்பா அவர்கள் அதில் காட்டும் ஆர்வம் இருக்கே....முகமெல்லாம் பல்லாக....

14. பள்ளி வளாகத்திற்குள் குறிப்பிட்ட மொழியில்தான் மாணவர்கள் உரைடாடிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதேனும் உண்டா?உண்டு.....

15. மாணவர்களின் பொது அறிவு எந்த அளவில் உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்கிறீர்கள்?


க்விஸ் , மற்றும் அஸெம்ப்ளியில் கேள்வி நேரங்களின் போதும்....
என் பள்ளியில் நடப்பவை பற்றியும் என் வகுப்பைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன்...அது தவிர ஒவ்வொரு வகுப்பும் அந்த 40 நிமிடங்கள் அந்த ஆசிரியையின் கையில்.அதை எப்படி உபயோகபடுத்திக் கொள்வதென்பது ஒவ்வொரு ஆசிரியையின் ஆட்டிடியுட் (attitude ) பொறுத்தது.
ஒவ்வொரு வகுப்பிலும் ப்ளாஸ்மா டி. வி.....டிஜிட்டல் அனிமேட்டெட் படங்களுடன் படிப்பு.....எனக்குப் புரியாத பல நான் இந்த முறையில் பாடம் நடத்தும் போது புரிந்திருக்கிறது.இப்போ வகுப்பறை முன்பு போல வெறும் பாடம் நடத்தும் இடமல்ல சிபி சார்....இத்தனை கொடுத்தாலும் இத்தனை கொடுத்தாலும் புரிய மாட்டேங்குதுன்னு சொல்ற பசங்களும் இருக்காங்க என்பதுதான் உண்மை.......

Friday, November 7, 2008

குலாப்ஜாமுனும்,சாமியும்,ஒரு எறும்பும்.....




குலாப்ஜாமுனை ஜீராவுக்குள் மூழ்க வைத்து அதில் இருந்து 5 எடுத்துத் தனியாக மூடி வைத்தாள் .சின்னவள் அம்மு பக்கத்திலேயிருந்து கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"இதெதுக்கு தனியா வைக்கிறீங்க?"

"இது சாமிக்கு"

"சாமி சாப்பிடாதே..."

"ப்ச்...சாமிக்குப் படைக்கணும்."

குலாப்ஜாமுன் இருந்த பாத்திரத்தைத் தண்ணீர் நிரம்பிய பெரிய தட்டில் வைத்தாள்.

"ஏம்மா அந்தப் பாத்திரத்தைத் தண்ணீரில் வைக்கிறீங்க?"

"அப்போதான் எறும்பு வந்து இந்த ஜாமுனைச் சாப்பிடாது....."

" போங்கம்மா....உங்களுக்கு ஒண்ணுமே தெரில்லை...சாமி குலாப் ஜாமுன் சாப்பிடவே சாப்பிடாது.....அதுக்குப் போய் குலாப் ஜாமுன் சாப்பிடக் கொடுக்குறே.....எறும்புக்கு குலாப்ஜாமுன் ரொம்பப் பிடிக்கும் அதைப் போய் சாப்பிட விட மாட்டேங்குறியே?"

பளாரென்று அடி வாங்கியது போலிருந்தது அவளுக்கு....

Monday, November 3, 2008

சொசெசூ வைத்து வசமாக மாட்டிக் கொண்டேன்!!!


என்னை இந்தக் கொலைவெறித் தொடருக்கு(பெயர் உபயம்:பொடியன் சஞ்செய்) அழைத்த
சரவணகுமாருக்கும்,கார்த்திக்கும்,அழைக்க மறந்து பின் திடீர் நினைவு வந்து அழைத்த பொடியன் சஞ்செய்க்கும் நன்றி!நன்றி!நன்றி!!

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

அது எங்க அம்மாவைத்தான் கேட்கவேண்டும்....

1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

சரியாகத் தெரியவில்லை...அடிமைப் பெண் படமாக இருக்கலாம்.முதலில் பார்த்த படமான்னு நினைவில்லை.ஆனால் மனதில் முதல்ல பதிந்த படம் குழந்தைக்காக....அதில் வரும் குழந்தை நட்சத்திரம் என்னை மாதிரியே இருப்பதாக அம்மா சொல்ல, வளர்ந்த பிறகும் அந்தப் படத்தைப் பார்த்து மனதில் பதித்துக் கொண்ட படம்.


1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

என்னங்க அந்த சின்னூண்டு வயசிலெ என்னா உணர முடியும்?
எப்போடா இடைவேளை வரும்....இந்த இருட்டிலிருந்து விடுதலை கிடைக்கும்? அது தவிர கொறிக்க ஏதானும் கிடைக்குமே....

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சிவாஜி...அதிசயமாக ஜெய்ப்பூரில் இனாஃஸில் தமிழ் படம்...தெரிந்தவுடன் தெரிஞ்ச எல்லோருக்கும் தொலைபேசியில் சொல்லிவிட்டு போய்ப் பார்த்த படம்....ரொம்பவும் ரசித்துப் பார்த்தேன்...

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

குசேலன்....படம் அவ்வளவாக என்னை இம்ப்ரெஸ் செய்யாவிட்டாலும் நண்பனைப் பற்றி ரஜினி சொல்லும் காட்சிகளில் நெகிழ்ந்தேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மஹாநதி

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

சும்மா அரசியலே நமக்கு ஆகாது....இதிலே சினிமா அரசியல் வேறா??
போங்கப்பா...

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

இரட்டை வேடம், மூன்று வேடப் படங்கள்,அபூர்வ சகோதரர்கள்,அப்புறம் சூர்யா ஒரு படத்தில் கூன் முதுகோட வருவாரே.(பெயர் நினைவுக்கு வரவில்லை)அந்தப் படம் இவையெல்லாம் என்னை வியக்க வைத்தவை.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சுத்தமாக இல்லை.பயங்கர போர்.

7. தமிழ்ச்சினிமா இசை?

இசை என் சுவாசம்....என்ன கோபமாக இருந்தாலும் இசை கேட்டவுடன் மனது ஒரு உற்சாகத் துள்ளலுக்கு மாறிவிடும்.அதிகாலை அமைதியில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்ய ரொம்பப் பிடிக்கும்.எல்லாம் தமிழ்ச் சினிமா இசையும்,ஹிந்தி சினிமா இசையும்தான்.

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

மனதைப் பாதித்த, தொட்ட படங்கள் நிறைய....அதில் சில...நூல்வேலி,அவர்கள்,கன்னத்தில் முத்தமிட்டால்,சொல்லத்தான் நினைக்கிறேன்,ஹிந்தியில் Black,lamhe,இன்னும் நிறைய.....

8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

ஹிந்திப் படம் பார்ப்பேன் ....வேற வழி.??? ஆங்கிலப் படங்கள் ரொம்ப ஸ்பெஷலான படங்கள் பார்ப்பதுண்டு....

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

சினிமாத் தொடர்பு....ம்ம் என்னுடைய இந்தக் கவிதையைப் படித்துத் தான் குருவி படம் எடுத்ததாக "ஜி" அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.....

அட..நீங்க வேற...அப்பப்ப விசுவின் மக்கள் அரங்கம் பார்த்து ஒரு மெயில் அனுப்பி பதில் வாங்குறது ஒண்ணுதான் சினிமா தொடர்புடைய நபருடன் தொடர்பு.


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுக்கென்னங்க? நிறைய புதியவர்கள் புது உற்சாகத்தோடு புதுப் புது தொழ்ல் நுட்பத்தோடு வருகிறார்கள்.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் ஜெகஜோதியாகத்தான் தெரிகிறது.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய
சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ம்ம்ம்...
எனக்கு ஒண்ணுமே ஆகாது.

ஆனால் அதை நம்பியிருக்கும் ஆயிரக் கணக்கானவங்க வேலையில்லாமல் போய் விடுவார்கள் எனக் கவலையாய் இருக்கும்.

தமிழர்கள் இன்னும் முழுமூச்சாக மெகா சீரியலால் அழுவார்கள்..

வேறென்ன? மொபைல் போனில் படமெடுத்து வெளியிடும் தொழில்நுட்பத்தால் எல்லோர் வீட்டிலும் ஒரு மொபைல் போன் பட டைரக்டர் உருவாகிவிடுவார்கள்.

இந்தப் பதிவைத் தொடர யாரைக் கூப்பிடுவது???

"யான் பெற்ற துன்பம் இவ்வையகம் பெறவேண்டாம்" என நினைத்து யாரையுமே கூப்பிடாமல் விடுகிறேன்......( அட நீங்க வேற கூப்பிட்டாலும் யாரும் தொடரப் போவதில்லை...நம்ம வட்டம் அப்படிப் பட்டது....)