நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, November 21, 2011

பிட்ஸா ஹட்டில் ஒரு இரவு!

                 எதையும் ரசிப்பதற்கும் அதைப் பாராட்டுவதற்கும் ஒரு தனிப்பட்ட மனநிலை தேவையாக இருக்கிறது. அது இல்லாத பட்சத்தில் அதை எதிர் கொள்பவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு கண்டும் காணாமல் நகர முடிகிறது.
          
          இப்படித்தான் ஒரு முறை பிட்ஸா ஹட் போயிருந்த போது Hot 'n' Spicy Pepperoni, Fresh Tomato Margherita ,Tuscani Lasagne,Meatball Napolitana - என என்னென்னவொ வாயில் நுழையாத பெயரையெல்லாம் ஆர்டர் செய்து கொண்டிருந்தார்கள் பொண்ணுங்க.அவனும் விதவிதமான நிறங்களில் விதவிதமான குடுவைகளில் விதவிதமான வடிவங்களில் கொண்டு வந்து வைத்தான்.சிலவற்றை எப்படிச் சாப்பிடுவதென்றே தெரியவில்லை.சிலவற்றை தொட்டுச் சாப்பிடுவதா இல்லை குழைத்துச் சாப்பிடுவதா அல்லது ஸ்பூனால் அள்ளிச் சாப்பிடுவதா என்ற குழப்பம் கடைசி வரையில் இருந்தது.  எனக்கு இந்தக் குழப்பங்களெல்லாம் பிடிக்காததனால் எப்பவும் தோசை மாதிரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டு அமைதியாகி விடுவது வழக்கம்.

                  நாசுக்கான  ஆங்கிலத்துடன் நளினமான நடையுடன் பரிமாறுபவர்களாக இருந்தாலும் அழகாக மிடுக்கோடு நடந்தார்கள். எப்பவுமே அங்கே சாப்பிடப் போவதென்றால் 8 மணிக்குச் சாப்பாடு வேண்டுமென்றால் 6 மணிக்கெல்லாம் போய் உட்கார்ந்து விடவேண்டும்.ரெண்டு மணி நேரம் வாய் பார்த்துக் கொண்டிருந்தால் பசி போய் ஒரு விதமான யோகநிலைக்கு வந்திருப்போம் அப்போது பார்த்துச் சின்னச் சின்னக் கிண்ணியாகக் கொண்டு வந்து வைத்தால் அம்ருதம் போல் கொஞ்சமாகச் சாப்பிட்டு விட்டு (அவ்வளவுதான் இருக்கும்) வயிறு நிறைந்தது போல பாவ்லா செய்து கொண்டு கிளம்பி விடலாம். ஆனாலும் பில் என்னவோ ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வந்திருக்கும்.
               
              கொண்டு வைத்த White Sauce தீர்ந்து போனதால் இன்னும் கொஞ்சம் கேட்டால் "You have to order sir"அப்படீன்னான்.ம்ம்ம் இனி ஆர்டர் பண்ணி இன்னும் ரெண்டு மணிநேரம் காத்துக் கிடந்து....போதுண்டாப்பான்னு விட்டாச்சு.ம்ம் நம்மூரிலே சாம்பார் வாளியைப் பக்கத்திலேயே வச்சு தோசையை ஊறவச்ச காலம் நினைவுக்கு வந்துச்சு.! ரொம்ப சளிப் பிடிச்சு இருந்ததாலே கொஞ்சம் வெந்நீர் கொண்டு வாப்பான்னா "Yes Sir" அப்படீன்னு சொன்னவன் கிளம்பற வரைக்கும் கொண்டே வரல்லை. சரி இதுதான் போகட்டும்னு பார்த்தால் நாங்க சாப்பிடாத ஏதோ ஒரு "Deluxe Carbonara" அப்படீங்கற ஏதோ ஒரு ஜந்துவையும் நாங்க சாப்பிட்டதா பில்லிலே சேர்த்திருந்தான். இதை எப்படிப்பா கேக்குறதுன்னு முழி முழின்னு முழிச்சு "கம்"முனு இருந்தாச்சு.
             " Did you enjoy the food Mam?" எனக் கேட்டதற்கும் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு கண்டும் காணாமல் நகர முடிந்தது   

           சாப்பிட்டு முடிக்கிறவரைக்கும் கோவில் மணி போல ஒரு மணி அடிக்கிற சத்தம் கேட்டுட்டேயிருந்துச்சு. சாப்பிட்டு முடிச்சுட்டு போறவங்க சாப்பாடும் செர்வீஸும் நல்லாருந்தா அதை அங்கே வெலை செய்றவங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான் அந்த மணி தொங்க விட்டிருக்கும். பொண்ணுங்க ரெண்டும் நான் ரெண்டு தடவை, நான் மூணு த்டவை அடிக்கப் போறோம்னு கத்துச்சுங்க. வ்யித்துப் பசி அடங்காத கோபத்திலேயும் இவனுக பண்ணுன செர்வீஸுக்கு மணி அடிக்கிறதுதான் கொறைச்சல்னு இழுத்துக்கிட்டு வந்தேன்.
             
          வர்ற வழியெல்லாம் புலம்பிகிட்டே வந்தேன்.உருப்படியா நல்ல ரெஸ்டாரென்டுக்குப் போயிருக்கலாம்னு. வீட்டுக்கு வந்து சாவியை எடுக்க......."அய்ய்யய்யோ பர்ஸ் மொபைல் எல்லாத்தையும் "பிட்ஸா ஹட்லே" விட்டுட்டு வந்துட்டேனே" என்ன செய்றதுன்னு ஒரே பதட்டம். ஏற்கெனவே மணி பதினொண்ணு.அய்யோ பூட்டியிருப்பானோ. இப்போ என்ன பண்றதுன்னு எல்லார் மேலேயும் ஒரே கத்தல்.
      
     இவங்கதான் முதல்லே பொறுமையாயிருங்க...அப்படீன்னுட்டு என் நம்பருக்கு டையல் செய்தார்.வந்த பதில் .

 "No worries Sir , we are waiting for you ...your things are safe"அதே வெயிட்டர்
அடிச்சு பிடிச்சு ஓடிப் போனா அதே வெயிட்டர் புன்னகையுடன்

           "Here are the things Mam, please check"
ஓடிப் போய் யாருமேயில்லாத அந்த நேரத்தில் அந்தப் பாராட்டு மணியை மீண்டும் மீண்டும் சந்தோஷத்துடன் எல்லோருமாய் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டேயிருதோம்

Tuesday, November 8, 2011

உயிர் மீது வைக்கப்பட்ட "செக்"


உயிர் மீது வைக்கப்பட்ட
"செக்" போலச்
சிரித்துக் கொண்டு உடல்
நுழைந்தது நோய்......

எனககே தெரியாமல்
என் உயிரைப் பிடித்து
இழுத்துக் கொண்டு
யாருக்கும் தெரியாமல்

ஏழு கடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
ஏழு வானம் தாண்டி
ஏழு நிறம் கொண்ட

கண்ணாடிப் பேழையில்
வைத்துப் பூட்டிச் சாவியைத்
தொலைக்கும் கனவை
அடிக்கடிக் கண்டது மனம்......