நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, September 21, 2011

இன்று சும்மாயிருக்கலாமெனத் திட்டம்!

இன்றைக்குச் சும்மாயிருக்கலாம்
என்று ஒரு சிந்தனை
வானொலிக்கும், தொலைபேசிக்கும்
தொல்லைக் காட்சிக்கும்
சும்மாயிருக்கக் கட்டளை.....

யாருமில்லாத
வீட்டினுள் வெயில்
ஜன்னல் வழியாக நகர்ந்து கொண்டே
நேர நகர்தலை உணர்த்தியது....

கொஞ்ச நேரம்
அரிசி தூக்கி நகரும்
எறும்பையும்
சுவரில் பூச்சி பிடிக்கும்
பல்லியையும்
ஜன்னல் திட்டில் அரிசி கொத்தும்
குருவியையும்
பார்த்துக் கொண்டிருந்தாயிற்று...

பூட்டிய கதவும்
அறையின் சுவர்களும்
ஜன்னலின் இடுக்குகளும்
என் சுவாசத்தைக் கடத்தாமல்
எனக்கு மூச்சு முட்டியது

யாராவது யாரையாவது கைபேசியில்
எதெதெற்கோ புதுப் புது பாடலால்
அழைத்துக்கொண்டே யிருந்தார்கள்...

எப்போதும் கூடவேயிருக்கும்
எதுவோ ஒன்று உலகத்தைத்
துண்டித்து விடாமல் என்னுடன்
இணைத்துக் கொண்டேயிருக்கிறது....

எப்படி ஒன்றும் செய்யாமல்
சும்மாயிருக்கத் தொடங்குவதென
ஒன்றும் செய்யாமல் இருக்கும்
முயற்சியில் மீண்டும் மீண்டும்
தோற்றுக் கொண்டேயிருந்தேன்...

Thursday, September 1, 2011

தனிமை போன்ற அற்புதமும்,கொடுமையும்!

தனிமை போன்ற அற்புதம் உலகில் வேறு எதுவுமில்லை.அதே நேரம் அதைப் போன்ற கொடுமையும் வேறொன்றுமில்லை.கசகசவென்று கூட்டங்களிடையே வேலை நேரம் முழுவதையும் கழிப்பவர்களுக்கு எப்போதோ கிடைக்கும் தனிமை ஒரு வரம்.தனிமையிலேயே வாழ்நாள் முழுவதும் கழிக்கும் பக்கத்து வீட்டு ஸ்டீபன் தாத்தாவிற்குக் கூட்டம் ஒரு வரமாகவும் தனிமை ஒரு சாபமாகவும் தெரிவதில் வியப்பொன்றுமில்லை.
                          
                           ஸ்டீபன் தாத்தாவை சின்னவயதிலிருந்து பார்த்திருக்கிறேன்.ஒரு ஈசிச் சேரில் கைகளிரண்டையும் தலைக்கும் மேல் தூக்கிக் கொண்டு போற வர்றவங்களைப் பார்த்துக் கொண்டே ரொம்ப வருடங்களைக் கடத்திவிட்டார்.அந்தக் காலத்து M.A.
                      
                                                    எப்போதும் ஆங்கில நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்.காலையில் பள்ளிக்குச் செல்ல குழந்தைகள் அந்தவழியாகக் கடக்கும் போது மரத்திலிருந்து உதிர்ந்த நெல்லிக்காய்களை உப்பில் ஊறப்போட்டுக் கிண்ணத்தில் வைத்து எல்லோருக்கும் கொடுப்பார்.இது அந்தக்க்காலத்தில் நடந்தது....அப்போலாம் வாங்க மறுக்கும் குழந்தைகளிடம் "தாத்தா பிரியமாத் தர்றாரில்லே வாங்கிக்கோ"என்று சொல்லும் அம்மாக்கள்தான் அதிகம். இப்போலாம் மாதிரி "யார் எது கொடுத்தாலும் வாங்கித் தின்னக் கூடாது"என்று சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் எதுவுமில்லை அப்போது.
                  
                                நான் அவரைக் கடக்கும் போதெல்லாம் தாத்தாவுக்கு ஏன் யாருமேயில்லை என நினைப்பதுண்டு.அப்புறம் பள்ளியிறுதி நாட்களின் போது வாழ்வியல் புரிந்த போதும் தாத்தா யாருடனாவது போய்ச் சேர்ந்து இருக்கலாமே என நினைப்பதுண்டு.
                         
                                     எப்பவாது சிலநேரம் ஸ்டீபன் தாத்தா பக்கத்தில் உட்கார்ந்து கதைபேசுவதைக் கேட்பதுண்டு.அப்பப்போ புதுசு புதுசாய் வந்த கார்களைப்பற்றிப் பேசுவார்.கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டார்.அந்தக்காலப் பொண்ணுங்களைப் பற்றியும் அவங்க ஆத்துக்குத் தண்ணீரெடுக்கப் போகும் அழகைப் பற்றியும் வர்ணிப்பார்.
               
                                  அப்புறம் மேல்படிப்பு, வேலை என்று ஊரெல்லாம் சுற்றும் போதும் அம்மாவிடம் ஸ்டீபன் தாத்தா பற்றி விசாரிப்பதுண்டு.அம்மாதான் சொல்வாள் பேச்சுத் துணைக்குக் கூட யாருமில்லாமல் தனியே அல்லாடிக் கொண்டிருப்பதாக.தாத்தாவை நம்ம வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விடுவோமாம்மா என்று சின்ன வயதில் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அதையே இப்போதும் நினைத்தேன்.இருந்தாலும் இந்த உலக நடைமுறைச் சிக்கல்களையும் நினைத்துக் கொண்டேன்.
                     
                                      அப்புறமாய் சிங்கப்பூரிலிருந்து ஒரு வார விடுப்பில் வந்த போது ஒருநாள் ஸ்டீபன் தாத்தாவைப் பார்க்கப் போன போது ரொம்ப மெலிந்து போயிருந்தார்.கையைப் பிடித்துக் கொண்டு சூடான வெது வெதுப்பான கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.ஒன்றுமே பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
      
                          "என் கூட சிங்கப்பூர் வந்துர்றீங்களா தாத்தா ?" என்றதற்கு
          "இப்போலாம் ஒத்தையிலே பயமாயிருக்குடா....யாராவது கூடவேயிருக்கணும்னு தோணுதுடா...யார்கூடவாது பேசிக் கொண்டேயிருக்கணும் போலிருக்குடா..நீ கூப்பிடறப்போ உடனே வரணும்னுதான் இருக்கு....ஹூம்...அதெல்லாம் முடியாதுடா."என்றார்.

அதுக்கப்புறம் ஒரே ஸ்டீபன் தாத்தா நினைப்புதான்.என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்ததுலே திடீர்னு ஒரு பல்ப்!
                               
ம்ம்ம் இப்போலாம் ஸ்டீபன் தாத்தா ஒரே பிஸி.ஒரே சந்தோஷம்.... எப்பவும் யாருடனாவது அரட்டையில்தான்.

என்ன செஞ்சேனா??? ஜஸ்ட் ஒரு லாப்டாப் வாங்கிக் கொடுத்து ஒரு ஃபேஸ் புக் அக்கவுண்ட் ஓபன் செஞ்சு கொடுத்தேன் அவ்வ்ளோதான்.....தாத்தா லைஃப் ஸ்டைலே மாறிடுச்சுன்னா பார்த்துக்கோங்க!!!