நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, October 30, 2009

தலையெழுத்தும் சரியில்லைதான்..



சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்தார்கள்....
பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்....
போராட்டங்களைத் தொடங்கி வைத்தார்கள்......
உண்ணாவிரதங்களை முடித்து வைத்தார்கள்......
மைக் பிடித்து நிறைய முழங்கினார்கள்...........
காகிதங்கள் பல கையெழுத்திட்டார்கள்....

இதில் கேசம் சரியில்லை
இதில் முகம் தெரியவில்லை
இதில் ஒளி சரியில்லையென
புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு
வலைப் பூக்களில் வலையேற்றப்பட்டன...............

ஈழத்தமிழர்களின் தலையெழுத்தும்
சரியில்லைதான்............

Wednesday, October 28, 2009

நானூறு ரூபாய் செருப்புககு ஐநூறு ரூபாய் தண்டம்........

"குட்டிம்மா...பார்த்து ஏறு"
"அம்மா....இதைப் பிடிங்க"
"ஏங்க இதைக் கொஞ்சம் பிடிங்க நான் குட்டிம்மாவை ஏற்றி விடுகிறேன்.."
மூவருமாய் ரயிலில் தங்கள் இடம் தேடி அமர்ந்து கொண்டனர்.
குட்டிம்மாவுக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம்.. துரு துருவென்றிருந்தது.
கண்கள் நிலவு போல பளபளத்தது.அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே மனதுக்குள் மழையடிப்பது போலிருந்தது.
குட்டிம்மா "தண்ணீ" தண்ணீ " என்று கத்தியது.
"என்னங்க தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வர்றீங்களா?"
"இல்லம்மா சிக்னல் போட்டாச்சு.....கொஞ்ச நேரத்திலே ட்ரெயினிலேயே கொண்டு வருவான் வாங்கிடலாம்."
"தண்ணீ தண்ணீ ...".குட்டிம்மா கத்த ஆரம்பித்தது........

"இரும்மா....அப்பா....."ஏன ஏதேதோ சொல்லி அதைச் சமாதானப் படுத்திக்கொண்டிருந்தாள் அம்மா.. ரயில் நகர ஆரம்பித்தது....
குட்டிம்மா அழுது கொண்டே திடீரென தன் கால் ஷூ வைக் கழற்றி வெளியே ப்ளாட்ஃபார்மில் வீசியெறிந்தது..இதை எதிர்பார்க்காத அம்மா சுளீரென்று முதுகில் வைத்தாள்...

"நானூறு ரூபாய்..........போச்சு...இப்போ என்ன பண்றது?"
"ஏங்க இறங்கிப் போய் எடுத்துட்டு வர்றீங்களா.."
"ட்ரெயின் மூவ் ஆயிடுச்சேமமா....நேற்றுதான் வாங்கினது...."
"ட்ரெயின் மெதுவாதான் போகுதுங்க....எடுத்துட்டு அடுத்த கோச்லே ஏறிடுங்க..."
"செயினைப் பிடித்து இழுக்கலாமா?"
"அட நீங்க வேற நானூறு ரூபாய் செருப்புககு ஐநூறு ரூபாய் தண்டம் அழப் போறீங்க...."
இப்பிடி ஆளாளுக்கு செருப்பைத் திரும்ப எடுக்க ஐடியா இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்
"யாருக்காவது கிடைக்கட்டும்மா" என்றவாறு தன் இன்னொரு ஷூவையும் கழற்றி அநத ஷூவுக்குப் பக்கததில் தூககி எறிந்தாள் குட்டிம்மா.

Wednesday, October 21, 2009

இந்தியா எப்படி உருப்படும்???? [சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டிக்கு]

"ஏங்க உங்க பிங்க் டீ ஷர்ட் எடுத்து வைங்க.அது நீங்க போடறதே இல்லை"

"குட்டிம்மாவோட பட்டுப் பாவாடையை எடுத்து வைங்க...சின்னதாப் போச்சு"

"கிழிஞ்சுருக்கும்மா...இது வேண்டாம்"
"அட...பட்டுப் பாவாடைங்க..தைத்துப் போட்டுக் கொள்வார்கள்....சும்மா வைங்க"

"இந்தாங்க இந்த பொம்மையெல்லாம் எடுத்து வைங்க.........."
"இதெல்லாம் வேண்டாம்மா........இங்கே பாரு உடைஞ்சுருக்கு"

"அட...நீங்க வேற...இதுமாதிரி பொம்மையெல்லாம் அந்தக் குழந்தைங்க பார்த்திருக்கக் கூட மாட்டாங்க...........லேசாதானே உடைஞ்சுருக்கு... கொடுக்கலாம்"

"ஹலோ சுதா...இன்னிக்கு எங்க கல்யாண நாள்..ஊஹும்...கொண்டாட்டம் எல்லாம் ஒண்ணும் இல்லை......எப்பவும் போல அனாதை இல்லம் போய் ட்ரெஸ் கொடுத்துட்டு சாப்பாடு போட்டுட்டு வரப் போறோம்...அதுதான் ப்ரோக்ராம்."

"மீனாம்மா...அனாதை இல்லம் போய் ட்ரெஸ் கொடுத்துட்டு சாப்பாடு போட்டுட்டு வரப் போறோம்......வீட்டைப் பார்த்துக்கோங்க......"

"ரெஜிம்மா....நீங்க எங்களுக்கும் சேர்த்து பால் வாங்கி வைச்சுருங்க....அனாதை இல்லம் போய் ட்ரெஸ் கொடுத்துட்டு சாப்பாடு போட்டுட்டு வரப் போறோம்"

அப்பாடா...ஏந்தான் இப்படி தம்பட்டம் அடிக்கிறளோ???....ஒருவழியா காரில் ஏறியாகி விட்டாயிற்று.......
சிக்னலில் கார் நின்றது ..........."அம்மா...பசிக்குது.......சாப்பிட்டு ரெண்டு நாள் ஆவுதும்மா.........ஒரு ரூபாய் கொடும்மா" ஒரு சிறுவன் கிழிந்த ஆடைகளுடன்...............பார்க்கவே பரிதாபமாய்.......கையில் ஒரு குழந்தையுடன்................

"ம்ம்ம்...இந்தப் ப்ரச்னை எப்போதான் தீருமோ??? இப்படிச் சோம்பேறியாய் உழைக்காமல் திரிந்தால் இந்தியா எப்படி உருப்படும்............போடா அந்தப் பக்கம்" எனறபடி கார் கண்ணாடியை ஏற்றி விட்டாள்.....
துணிப் பைகளைப் போலவே மனமும் கனத்தது..........

Friday, October 16, 2009

பத்தே நிமிடத்தில் தீபாவளி ஷாப்பிங்!

இன்னுமா முடியலை? சீக்கிரம்மா........" கொஞ்சம் அன்பைக் குழைத்துச் சொன்னாலாவது கேட்பாள் என்று...........ம்ம்மா என்று சொன்னேன்..
ஊஹும்....அவள் அசையக் காணோம்.

காலையில் 11 மணிக்கு ஆரம்பித்த ஷாப்பிங்........மணி 5 இன்னும் முடியலை.அலைஞ்சு பார்த்தாதாங்க புரியும்.
இது பத்தாவது கடை.

"ஏங்க மூணாவது கடையில் பார்த்தோமே அந்தக் கலர் நல்லாருக்கா? இல்லே ஏழாவது கடையிலே பார்த்தோமே அந்த பச்சையா...இல்லே இது எடுத்துக்கவா??"

ஐயோ இன்னொரு தடவை மூணாவது கடைக்கும் ஏழாவது கடைக்குமா?
தாங்காதுப்பா.......அனிச்சையாய் "இது ரொம்ம்ப நல்லாருக்குமா" என்றேன்.

சந்தேகத்துடன் என்னைப் பார்த்தாள்.
"ஏதுக்கும் மூணாவது கடைலே இன்னொரு தடவை பார்த்துடலாம்"என் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தாள்...

மூணாவது கடையிலும் என்னைச் சந்தேகமாவே பார்த்துவிட்டு ஏழாவது கடையில் ஒரு வழியாக அந்தப் பச்சைச் சேலையை எடுத்தாள்.........இன்னும் அந்தப் பச்சைக்கு மேச்சிங்காக இன்னும் பல ஐட்டம்களைத் தேர்ந்தெடுத்து முடிக்க மணி 9.

அப்பாடா ஒரு வழியாக முடிததாள்...
சாப்பிட்டுட்டே போயிடலாங்க ................ ரொம்ப டையர்டா இருக்கு........ " வேண்டாமென்றால் விடவா போகிறாள்.

"சரி வா....சாப்பிடப் போகலாம்"
"உங்களுக்கு இன்னும் ட்ரெஸ் எடுக்கலியே........."
ம்ம்ம்ம்....அந்த நினவாவது இருக்கேன்னு சந்தோஷப் படறதுக்குள்ளே

"அதை 10 நிமிஷத்துலே எடுத்துடுங்க...........அப்புறம் சாப்பிடப் போகலாம்...பசி உயிர் போகிறது." என்று முடித்து என்னை "ஙே" வாக்கினாள்!!

அனைருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!!

Thursday, October 15, 2009

கடவுளைக் கூட சேர்த்துக்க மாட்டோம்...



வாணி அந்தப் பிள்ளையாரையே பார்த்துக் கொண்டிருந்தாள்......மெல்ல எழுந்து அந்தச் சிலைக்குப் பக்கத்தில் போய் அதைத் தடவினாள்.....ஆயுதம் பிடித்துக் கொண்டிருந்தக் கைகளில் சிறியதாய் ஒரு கீறல்.கிட்டே போய் பார்த்தால் மட்டுமே தெரியக் கூடிய சின்னக் கீறல்..மனது கொஞ்சமாய் வலித்தது.....

எவ்வளவு பிடித்து வாங்கிய சிலை..இப்படிக் கீறல் விழுந்துடுச்சேன்னு வருத்தமாய் இருந்தது.அம்மா சொல்வாங்களே.....உடைந்த சிலையை வீட்டில் வைக்கக் கூடாதுன்னு.....பரவாயில்லை ...இருந்துவிட்டுப் போகட்டும் என வீட்டின் பின்கட்டில் தட்டுமுட்டுச் சாமான்களுடன் அந்த அழகுப் பிள்ளையாரைக் கொண்டு வைத்தாள்.

சாயங்காலமாய் வந்த தோழியிடம் இதைப் பற்றி சொல்லி வருத்தப் பட்டாள்...."ஆமாமா...எங்க அம்மா கூட சொல்வாங்க ...வீட்டில் வைக்கக் கூடாதுன்னு.."

"இப்போ இதை எங்கே வைப்பது..?அதான் பின்கட்டில் தூக்கிப் போட்டு விட்டேன்.."என்றாள் வாணி.

"வீட்டிலேயே இருக்கக் கூடாது வாணி..இதிலே பின்கட்டிலே என்ன? முன்கட்டிலே என்ன? "

"சாமி சிலையாச்சே? வெளியில் போட முடியுமா?...ஆனாலும் மனசு உறுத்திகிட்டே இருக்கு...இதை வீட்டில் வைத்தால் என்னாகுமோ ஏதாகுமோன்னு"

ஒண்ணு செய்யலாமா?.....பேசாமல் இதை நம்ம தெருமுனையிலே இருக்குற பார்க்குக்குப் பக்கதில் இருக்கும் மண்மேட்டில் வைத்துவிட்டு வந்துரலாம்"

"அப்படி வைக்கலாமா " என்றாள் பரிதாபமாய்.

"இதிலென்ன இருக்கு சிலைதானே? வாணி."

இருவருமாய் ஒருமாதிரி விழித்துக் கொண்டே சிலையைக் கொண்டு போய்...ஏதோ திருடப் போவது போல அரையிருட்டாய் ஆனவுடன் அந்த மணல் மேட்டில் வைத்துவிட்டு ஏதோ சாதனை செய்தது போல வீட்டிற்கு வந்தார்கள்...........

வாசலிலேயே வருண் "என்னையும் எங்கேயாவது கொண்டு வைச்சுடுவீங்களாம்மா?" என்றான் போலியோவினால் ஊனமான கைகளைக் காட்டி........

Tuesday, October 13, 2009

புன்னகையென்னும் கடவுச் சொல்....

புன்னகையென்னும் கடவுச் சொல்தான் உறவுக் கணக்கை நேர்ப் படுத்தும் எனத் தெரிந்திருந்தும் வேலைப்பளுவின் காரணமாக புன்னகைக்க மறந்தே போயிருந்தேன்...........

அதுவேதான் சண்டையின் ஆரம்ப காரணமாயிருந்திருக்கலாம்...அது வலுப்பெற்று பெரும் சண்டையாக மாறியிருந்தது.....
அவளிடம் அதிபயங்கரமாக சண்டை போட்ட அந்த அதிகாலை திடீரென்று ஒரு அதிசயமான உணர்வு..அத்தனை கடவுச் சொற்களும் மறந்து போயின....மறந்தே போயின.... ஜிமெயில்,யாஹூ...வலைப்பூ...ஃபேஸ் புக், டவிட்டர்.....இப்பிடி எல்லாமே மறந்து போயிருந்தது......அதுவா...இதுவா.என்று குத்துமதிப்பாக நிறைய வார்த்தைகளைப் போட்டுப் பார்த்தாயிற்று....ஒன்றும் வேலைக்காகவில்லை......கடவுச் சொற்கள் இல்லாமல் இன்னிக்கு வேலைக்குப் போய் என்னத்தைக் கிழிக்கப் போறேன்?....வீட்டிலிருந்தும்தான் என்னத்தைக் கிழிக்கப் போறேன்ன்?...எங்கேயாவது பத்திரப் படுத்தியிருக்கேனா என்று கணினியத் தலைகுப்புறப்போட்டுத் தேடியாயிற்று...ஊஹூம்....மனம் முழுவதும்....கடவுச் சொல்....கடவுச் சொல்....கடவுச் சொல்....

"கணக்கு ஆரம்பிப்பதென்பதுஒரு நிமிடத்துக்குள் முடிந்து விடுகிறது.....
இந்தக் கடவுச் சொல்தான்
அவ்வப்போது காலை வாரி விடுகிறது.....
எத்தனை கடவுச் சொல்தான் நினைவில் வைத்துக் கொள்வது...???"

இப்படித்தான் இவள் கூடச் சண்டைபோட்டாலே ஏதாவது ஏடாகூடமாகிப் போய் விடுகிறது....அது சரியாகினால்தான் எல்லாம் சரியாகும்........எபபடிச் சமாளிப்பது?எப்படிச் சமாதானப் படுத்துவது?????

என் மகள் தன் சினேகிதியுடன் பேசிக் கொண்டிருந்தாள்....
அவளின் சினேகிதி கேட்டாள்.....
" அந்த சிடுமூஞ்சிய எப்படிடீ சமாளிச்சே????"

என் பெண் சொன்னாள்....."I Just used my password!...........Everything was alright!"

கொஞ்சமும் நாகரீகமில்லாமல் நான் குறுககிட்டேன்....." அதென்னம்மா ஸ்பெஷல் பாஸ்வோர்ட்????"
"Just Smile Dad"
"ஆமா அங்கிள் ....எங்க பாஷையிலே பாஸ்வோர்ட்னா புன்னகைன்னு அர்த்தம்"

நான் புரிந்தது போல புன்னகைத்தேன்..............
என் கடவுச் சொற்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது போலிருந்தது....!!!

Friday, October 9, 2009

அதுவா??????இதுவா??????


"என்னாங்க தோசை ஊத்தவா? இட்லியா?"
"தோசை"
மாவு நல்லா பொஙகி வந்துருக்குங்க...இட்லி ஊத்தவா?"
"ம்"
"தேங்காய்ச் சட்னியா? தக்காளிச் சட்னியா???"
"தேங்காய்ச் சட்னி"
தேங்காய் முத்திப் போயிருககு.....தக்காளிச் சட்னி வச்சுடவா?
"ம்"
காபியா ,டீயா???
"காபி"
"டீ காலைலேயே போட்டது இருக்கு தரவா?"
"ம்"
பையனை நீங்க ஸகூல்ல விட்டுர்றீங்களா? நான் விடட்டுமா???
"நீ விட்டுரும்மா...."
"ஏற்கெனவே லேட்டு............அந்த டேமேஜர் கத்துவார்....நீஙகளே விட்டுருங்க!"
"ம்"
"இன்னிக்கு தீபாவளி ஷாப்பிங் முடிச்சுரலாமா????????நாளைக்கா????
"இன்னிக்கு வேலை நிறைய.............நாளைக்கு பார்க்கலாம்"
அட வேலையோட வேலையா இன்னிக்கே முடிச்சுடலாம்...."
"ம்"
"அப்புறம் மதியம் என்ன வைக்க?"
"ஏதாவது வைம்மா.........."
"உங்களைப் போய்க் கேட்டேன் பாருங்க?
ஏங்க இப்பிடி இருக்கீங்க?
எதுலேயாவது முடிவெடுக்கிற தன்மை இருக்கா???
எல்லாம் என் நேரம்!!! எல்லாம் நானே முடிவு பண்ண வேண்டியிருக்கு!"

எப்பவும் போல நான் ஙே!!!!!

அட! இது விகடன் குட் ப்லாக்லெ!!! அவ்வ்ளோ நல்லாருக்கா??

Monday, October 5, 2009

வானம் காணாமல் போயிருந்தது......................




முளைத்திருந்த சிறகுகளை விரித்துப்
பறக்கப் பார்த்தேன்..........
வானம் காணாமல் போயிருந்தது......................

தண்ணீரைக் கொண்டிருந்தது
ஆறு.................
பாதை முடிந்து போயிருந்தது......................

சூரியன் தகதகத்தது..........
என் நிழல் களவு போயிருந்தது...........

கனவு கண்ட இடம்
கை கூடியது...........
ஓட்டத்தின் முடிவில்
பரிசுக்கான நூலையும் அறுத்தாயிற்று........

இனி எனன?
தினமும் நகரும் வாழ்வு..........

மழை பெய்து கொண்டிருந்தது........
அது மட்டுமே மனதை நிறைப்பதாய்
வெற்றி தோல்விகள் பற்றிய நினைவினறி
விசிலடிக்கச் செய்வதாய்
இருந்தது.........