நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, December 31, 2008

இலக்கில்லாத இனிய பயணம்.........


இலக்கில்லாத இனிய பயணம்...
எப்போதும் போல வருடக் கடைசியில் ஒரு ரிவியு...
என்ன சாதித்தோம் இந்த வருடத்தில்????
ம்ம்ம்ம்....கனவுகளை நோக்கி ஒரு சில அடி முன்னேற்றம்...
நட்புச் சிறகில் சில இறகுகளின் சேர்ப்பு.
சில முயற்சிகளின் முட்டுக் கட்டை.
சில உழைப்புகளின் வெற்றி சில..... இழப்புக்கள் சில...
சந்தோஷமாக வானில் சிறகடித்த நேரம் சில....
கண்ணீர்த் துளிகள் கன்னம் வருடிய நேரம் சில....
இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாமோ?
இன்னும் கவனமாக இருந்திருக்கலாமோ?
அந்தத் தப்பைத் தவிர்த்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் அன்பைக் கொட்டியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் கோபம் குறைத்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கலாமோ?
இன்னும் நிறைய இன்னும்கள்.....
ஒரு வருடத்தின் இறுதியில் மட்டும் இந்தக் கணக்கெடுப்பு ஏன்?
இதுவே ஏன் ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும்,
வாரத்தின் இறுதி நாளிலும்,
ஏன் ஒரு நாளின் இறுதியிலும் இந்தக் கணக்கெடுத்திருக்கலாமே?
வருடத்தின் இறுதிக்கு ஏன் அத்தனை மரியாதை?

ம்ம்ம்ம்ம் அப்பிடில்லாம் கணக்கெடுத்திருந்தால் இப்பிடியா இருந்திருப்போம்?
இந்நேரம் எங்கேயோ போயிருக்க மாட்டோமா?

உயிர்ச் சேதமில்லாத
குண்டு வெடிக்காத
இயற்கை சீறாத
அமைதியான
புது வருடம்
அன்றி வேறொன்று
வேண்டிலன்.....
அமைதியான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!

Friday, December 26, 2008

அன்னிக்கு ஒரு நாள் எங்க வீட்டுக்குள் க்ராக்கடைல் வந்துச்சே!!!அன்றொரு நாள் சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.எங்க வீட்டுப் பெரிய செல்லம் அப்போ U.K.G படித்துக் கொண்டிருந்தாள்.

"மம்மீஈஈஈஈஈ"ன்ன்னு ஒரு அலறல்.கையிலிருந்ததெல்லாம் கீழே போட்டுட்டு ஓடிப் போய்ப் பார்த்தேன்.
"மம்மி மம்மி ஒரு க்ராக்கடைல் நம்ம வீட்டுக்குள்ளே வந்துருச்சும்மா" என்றபடி நடுங்கிக் கொண்டிருந்தாள்.க்ராக்கடைல் வராதும்மான்னு எவ்வ்ளோ சொன்னாலும் ஒரே அழுகை.

திடீரென்று ஓடிப் போய் அவளுடைய ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து வந்து அதில் மிகச் சரியாக முதலையைக் காட்டி "இதுதான் வந்தது "என்றாள்...எனக்கே கொஞ்சம் பயமாய்ப் போய் விட்டது.

"சரிம்மா வீட்டுக்குள்ளே வந்து அப்புறம் எங்கே போச்சு?"

"கட்டிலுக்கடியிலே போச்சும்மா" என்றாள்.

நானும் அர்த்தமில்லாமல் கட்டிலுக்கடியிலெல்லாம் தேடிப் பார்த்தேன்.கொஞ்ச நேரம் காலை மேலே தூக்கிக் கட்டிலில் வைத்துக் கொண்டு இருவரும் உட்கார்ந்திருந்த்தோம்....அவங்க வேற ஊரில் இல்லை.நான் வேற கரப்பான் பூச்சி வெட்டுக் கிளியெல்லாம் வீட்டுக்குள் வந்தால் விரட்டவோ அடிக்கவோ பயப்பட்டு டம்ளர் போட்டு மூடுற வகை வீரனியாக்கும் ( வீரனுக்குப் பெண்பால்)

ஒரு வழியாக என் பொண்ணு பார்த்த க்ராக்கடைலான ஒரு பல்லியைக் கட்டிலுக்கடியிலிருந்த்து விரட்டியப்புறம் நிம்மதியாகத் தூங்கப் போனோம் இருவரும் ........

Friday, December 12, 2008

என் மறதியும்.... 12B-யின் மறதியும்....
டூத் ப்ரஷ் எடுக்க
அடுப்படி போய்

காப்பியில் கொஞ்சம்
உப்பு போட்டு

குழம்பில் நிறைய
சீனி போட்டு

ப்ஃரிட்ஜைத் திறந்து
சீப்பைத் தேடி

முகக் க்ரீம் எடுத்து
தலையில் தடவி

தேங்காய் எண்ணையை
முகத்தில் அப்பி

நேற்றைய டிபன் பாஃக்ஸைக்
கழுவப் போட்டு
இன்றைய டிபன் பாஃக்ஸைக்
கைப்பையில் திணித்து

ஒரு கால் செருப்பிலும்
ஒரு கால் ஷூவிலும்
நுழைத்து

ஓடிப் போய்
மூச்சு வாங்கி.....
நின்று நிமிர்ந்தால்...
ஹ்ம்ம்...

கண்ணெதிரே 12B
ஒரு வினாடி முன்னாடி
என்னை ஏற்ற மறந்து
கடந்து சென்றது.....