நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, December 14, 2011

சிக்கிக் கொண்டிருந்தாள் அம்மா ...

ரபுன்செல்லின் சிடுக்கில்லாத கூந்தலின்
இடுக்குகளிலும்

சின்ட்ரெல்லாவின் உடுப்புகளின்
மடிப்புகளிலும்

ஆலிஸ் இன் வொண்டர்லேண்டின்
குட்டி உலகத்தின்
குட்டிச் செப்புச் சாமான்களுக்குள்ளும்

குட்டித் தேவதை தம்போலினாவின்
இறகுகளுக்குள்ளும்

ஏழு குள்ளர்களின் சூப்
கிண்ணங்களுக்குள்ளுமாய்த்

தொலைந்து கொண்டிருந்த குட்டிம்மா
திடீரென வீட்டுப் பாடக் கணக்குகளில் மூழ்கிய போது

செய்ய ஒன்றுமில்லாமல்
தேவதைக் கதைகளுள்
கொஞ்சம் கொஞ்சமாய்ச்
சிக்கிக் கொண்டிருந்தாள் அம்மா ......