நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, September 27, 2010

உடனடித் தேவை....

என்னை இழுத்துச் செல்லும் ஒரு நதியும்
பறவையிறகு போல் மிதக்கச் செய்யும் காற்றும்
நிமிர்ந்து பார்க்க ஒரு வானமும்
உடனடித் தேவை....

நினைத்ததைக் கொடுக்கும் ஜீ பூம்பா பூதங்கள் சிலவும்
சொர்க்கத்துக்கு வழி தெரிந்த தேவதைகளும்
உண்மை பேசிக் கொள்ளும் மனிதர்களும்
உடனடித் தேவை....

கொஞ்சம் என்னைத் தொலைக்கும் வெயிலும்
கொஞ்சம் என்னை மீட்டுத் தரும் மழையும்
நான் தூவும் அரிசி கொத்தக் கொஞ்சம் குருவிகளும்....
பிடித்த கையில் ஒட்டிக் கொள்ளும் வண்ணங்களுக்காக
சில வண்ணத்துப் பூச்சிகளும்.......
உடனடித் தேவை....

Wednesday, September 15, 2010

இராஜஸ்தானத்து ராணிகளின் கதை--1





பான்கட் (Bhangarh)... சூரியன் உதிக்கும் முன்னும், சூரியன் மறைந்த பின்னும் அரசால் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு சிதிலமடைந்த சிறு நகரம்.

ஜெய்ப்பூரிலிருந்து அல்வர் செல்லும் வழியிலிருக்கும் இந்த சிறு நகரத்தை, உலகத்திலேயே பேய் ஆட்கொண்ட இடங்களில் முதன்மையானது என்கிறார்கள். இந்த இடம் பற்றி நிறைய கதைகளும் வதந்திகளும் உலவுகின்றன.
17-வது நூற்றாண்டின் முதல் பாதியில், 'பான்கட்'டில் அரண்மனை கட்ட முனைந்தார், ஆம்பர் கோட்டை மஹாராஜா மாதோ சிங். அதற்காக, அந்த இடத்தில் தியானம் செய்துகொண்டிருந்த பாபா பாலாநாத் என்ற துறவியிடம் அனுமதி கேட்டார், ராஜா.
அரண்மனை கட்ட அனுமதி தந்த அந்தத் துறவி, மன்னருக்கு ஒரு கண்டிஷனும் போட்டார். அதாவது, எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்டப் போகும் அரண்மனைகளின் நிழல், தான் தியானம் செய்யும் பூமியின் மேல் விழக் கூடாது என்றும், அப்படி விழுந்தால் அன்றோடு அனைத்தும் தரை மட்டமாகிவிடும் என்றும் சொன்னாராம். அதற்கு மன்னரும் கட்டுப்பட்டார்.
பின்னர், மன்னர் மாதோ சிங்கின் வழி வந்த பிந்தைய தலைமுறையினர், அந்த ஒப்பந்த விவகாரம் தெரியாமல், அரண்மணையின் நிழல் குறிப்பிட்ட இடத்தின் தரையில் படும்படியாக உயர்த்திக் கட்ட, அந்த சம்ராஜ்யம் ஒரே இரவில் தரைமட்டமாகியதாகியது என்கிறது ஒரு கதை.
*
மற்றொரு வரலாறு சொல்லும் கதை...
பாங்கட் கோட்டையின் மகாராணி ரத்னாவதி ராஜஸ்தானத்துப் பேரழகி. அவள் மீது மையல் கொண்ட சிங்கா சேவ்ரா எனும் ஒரு கொடிய தந்திரவாதி, அவளைத் தன்வசமாக்க முயற்சித்துக் கொண்டேயிருந்தான்.
ராணிக்கும் தந்திரவாதிக்கும் இடையில் நடந்த தாந்த்ரீக சண்டையில், அவன் அந்தப் பேரழகியைத் தன் மந்திர வலையில் வீழ்த்துவதற்கு முயற்சித்துக் கொண்டேயிருந்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டேயிருந்தான். ஏனென்றால், ராணியும் தாந்த்ரீகக் கலைகளில் தேர்ச்சியடைந்தவள்.
ஒருநாள்.. ராணியின் வேலைக்காரி ராணிக்காக வாசனைத் தைலங்கள் வாங்குவதைக் கண்ட தந்திரவாதி, அந்த தைலத்தைத் தொட்டாலே ராணி மந்திரவாதியின் வசமாகும் ஒரு வித்தையை ஏவி விடுகிறான். இதைத் தெரிந்துகொண்ட ராணி, அந்த வாசனைத் தைலம் வைத்திருந்த கண்ணாடிக் குப்பியை பாறையாக மாற்றி அந்த மந்திரவாதி இருந்த குன்றின் மீது எறிகிறாள்.
அதைத் தடுக்க நினைப்பதற்குள் மந்திரவாதி மேல் உருண்டு விழுந்து தாக்கப்படுகிறான். உயிர் துறக்கும் நேரத்தில் தன் சக்தி அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, "நான் இறந்து விடுவேன்... ஆனாலும் ரத்னாவதி ராணியும் உயிரோடிருக்க மாட்டாள். அவள் மட்டுமல்ல... அவளைச் சார்ந்த யாரும் உயிரோடிருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல... இந்த சாம்ராஜ்யம், இந்தக் கோட்டை, அரண்மனை, வீதிகள், மக்கள்... அனைத்தும் ஒன்றுமில்லாமல் தரை மட்டமாகிவிடும். யாரும் நாளைச் சூரியனைப் பார்க்க மாட்டீர்கள்" எனச் சாபமிட்டுச் செத்துப் போனான்.
அதைப் போலவே மறுநாள் சூரியனை யாரும் பார்க்கவில்லை. அனைத்தும் ஓர் இரவுக்குள் தரமட்டமாகியதாகக் கதை.
*
இவை எல்லாவற்றையும் விட இப்போது, அந்தப் பகுதியைச் சுற்றி உலவுகின்றன பல கதைகள். சூரியன் மறைந்ததற்கு பிறகு அங்கே பழைய காலம் போலவே கடை வீதிகள் சுறுசுறுப்பாக வியாபாரம் நடைபெறுவதாகவும், அரண்மனை ராஜாங்க வேலைகள் நடைபெறுவதாகவும் சொல்கிறார்கள்.
பகலில் சுற்றிப் பார்க்க வருபவர்களாக இருந்தாலும், ஐந்து மணிக்கு மேல் அங்கே ஒருவர் கூடத் தங்குவதில்லை. ஐந்து கிலோ மீட்டர் சுற்றுவெளிக்குக் கடைகள் எதுவுமே இல்லை. இளைஞர்கள் வீம்புக்கு இரவுக்குத் தங்கி வந்து சொல்லும் கதைகள் ஆயிரம்.
நாங்கள் 'பான்கட்'டை பகலில் பார்த்து விட்டு வந்தோம்.
அங்கே... சிதிலங்களைப் பார்க்கும் போது கொஞ்சம் திகிலில் நடுக்கம் வந்ததும் நிஜம் தான்!
இத் யூத்ஃபுல் விகடனில்....

Sunday, September 5, 2010

தேவை எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஆசிரியர்கள்!

"நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
ஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி"
"மஹாகவி பாரதியார்"
நேர்மையாக இருப்பது கடினம்தான் ஆனால் முடியாததல்ல.
அறிவியல்,ஆங்கிலம்...அது இது என்று ஆயிரம் பாடங்களை எளிதாகக் கற்றுக் கொடுத்து விடலாம்.ஆனால் இந்த நேர்மை இருக்கே இதை எப்பைடிச் சொல்லிக் கொடுப்பதென்பது ஒரு பெரிய கலை.அதை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கற்றுக் கொள்ள வைப்பதே தவறான வழி...அதை நடைமுறைப்படுத்தி அதிலிருந்து கற்றுக் கொள்ளச் செய்வதே சரி.ஆசிரியர்கள் பெற்றோர்கள் ரோல் மாடல் அல்லது வழிகாட்டியாக இருப்பது அவசியம்.சமயங்களில் இது முடியாமல் போய் விடுகிறது ஆசிரியர்களுக்கு.
உதாரணம் ஒன்று:

எங்கள் பள்ளியில் 12-ம் வ்குப்பு மாணவர்களுக்கு ஐ.ஐ.டி பற்றிய செமினார் ஒன்றுக்கு வந்த ஒரு பெரிய அதிகாரி சொன்ன விஷயமிது.....
"எல்லோரும் காப்பியடிக்கும் ஒரு அறையில் நீங்கள் காப்பியடிக்க மாட்டேன் என்று அடம்பிடிப்பது உங்களின் நேர்மையை அல்ல உங்களின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது.அங்கே நீங்கள் சிறப்பாகக் காப்பியடித்து உங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டிய தருணமது.அங்கே நேர்மை அது இது என்று நினைத்து நேரத்தை வீணாக்கினால் நீங்கள் பிழைக்கத் தெரியாதவர் என்றுதான் முத்திரை குத்துவோம்"
முகத்திலறைந்தது உ ண்மை.
உதாரணம் இரண்டு:
ஒரு ஆசிரியர் தான் தயாரித்த கேள்வித்தாளில் வரும் அத்தனை கேள்விகளையும் டியூஷனுக்கு வரும் மாணவர்களுக்குச் சொல்லிப் படிக்க வைத்து விட்டார்.இது தெரிந்த நன்றாகப் படிக்கும் மாணவன் என்னிடம் முறையிட..உட்னடியாகக் கேள்வித்தாள் மாற்றியமைத்து அந்த ஆசிரியரின் பேரில் நடவடிக்கையும் எடுக்கப் பட்டது.
அடுத்த நாள் அந்த மாணவனை நிறைய மாணவர்கள் அடித்துத் துவைத்து விட்டார்கள்.ஆஸ்பத்திரியில் பார்க்கச் சென்ற போது...
"எல்லோரும் சும்மாயிருக்கும் போது இவனுக்கு மட்டும் என்ன வந்ததும்மா..?இவன் ஏம்மா கம்ப்ளெயின்ட் பண்ணணும்????இப்படிப் போட்டு அடிச்சுருக்காங்களே" என்றலறும் அம்மாவிடம் நேர்மை பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியவில்லை.
உதாரணம் மூன்று:

ஒரு பள்ளியின் 12ம் வகுப்புத் தேர்வுக்கு அடுத்த பள்ளியில் போய்தான் பரீட்சை எழுதவேண்டும்.சென்டர் எங்கு போட்டிருக்கிற்தோ அங்கு.அங்கு சென்று எழுதிய பள்ளி மாணவர்கள் திரும்பி வந்து அங்கு நடந்த முறைகேடுகளை ஒவ்வொன்றாகச் சொன்னார்கள் பள்ளி முதல்வரிடம்.பள்ளி முதல்வர் உடனடியாக இதை போர்ட் அதிகார்களுக்குத் தகவல் அளிக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிட் கொண்டு வந்து கொடுப்பதுவும்,விடைகளை சொல்வதுவுமாகவே பரீட்சைகளும் முடிந்தன.அந்தப் பள்ளி முதல்வரும் விடாது மேலிடத்துக்கு மேலிடம் என அனைத்து இடங்களிலும் முட்டி மோதிப் பார்த்துவிட்டார்.ஒன்றும் நடக்கவில்லை.எதுவும் முடியாமல் நேரில் சென்றும் முறையிட்டார்.அன்றிலிருந்து இன்றுவரை இப்போது அந்தப் பள்ளியின் மீதும் பள்ளி முதல்வர் மீதும் தேவையில்லாமல் தினமும் ஒரு கம்ப்ளெயின்ட் மேலிடத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது.பரீட்சை முறைப்படி நடக்க வேண்டும் எனப் பள்ளி முதல்வர் நினைத்தது தவறா?நேர்மையான எண்ணமுள்ளவர்கள் இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டுமா?
நேர்மையை இவ்வ்ளோ கஷ்டப்பட்டுக் கற்றும் அது நிறைய எதிரிகளை உருவாக்கும் என்பதுவும்,நண்பர்களைத் தூரம் விரட்டிவிடும் என்பதுவும் தெரிந்தால் எவ்வ்ளோ மாணவர்கள் நேர்மையை நிலைநாட்ட முயல்வார்கள் எனபதுவும் பெரிய கேள்விக்குறி.
பொதுவிடத்தில் நேர்மையைப் பற்றிச் சொல்வதற்கும் பதிவதற்கும் வேறு வேறு வார்த்தைகளும்,நாம் தனித்திருக்கும் போது பதிவு செய்யும் நேர்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என்பதை வேறு வேறு நிகழ்வுகளில் உணர்ந்தேயிருக்கிறேன்.கோடாரி தந்த தேவதையின் முன்னால் தங்க,வெள்ளிக் கோடரிகளை எனதில்லை எனச் சொல்லும் நேர்மை எனக்கிருக்கிறதா என்றும் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்...........
தேவை எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஆசிரியர்கள்!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!