நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, March 30, 2010

ரயில் பயணங்கள் எனக்குப் பிடிப்பதில்லை...

எப்போதும் ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது.அதிலும் ஜன்னலோரமாய் ஓரிடமும் பாட்டுக் கேட்க ஒரு கருவியும் கையில் பிடித்தமான எழுத்தாளரின் புத்தகமும்..இருந்தால் நான் தனி உலகத்துள் நுழைந்து விடுவேன்.அம்மம்மா வீட்டின் எந்த ஜன்னலிலிருந்து பார்த்தாலும் தெரியும் தட தடத்து ஓடும் ரயிலின் நீள் உடல் அப்போது, எப்போதுதான் அதில் பயணம் வசப்ப்படும் என ஒரு எதிர்பார்ப்போடு.....யாராயிருந்தால் என்ன சந்தோஷமாகப் போய் வரட்டும் என்று வேகமாக ஆண் பெண் பேதமின்றிக் கையாட்டி வழியனுப்பும் வயது அது.

ஜன்னல் ஓரம் அமர்ந்து ஜன்னலை மூடத் தேவையில்லாத அளவு சாரல் அடித்தால் ம்ம்ம்...சொர்க்கமே ரயிலில்.அதுவும் ரொம்பத் தொண தொணக்காத சக பயணிகளுமாய் இருந்து விட்டால்....அன்றும் அப்படித்தான் ....என் அருகில் ஒரு வயதான தம்பதியர்.. மற்றும்.... அவள் தன் இரு குழந்தைகளுடன் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.ஒரு ஓவியம் போல் அழகாக இருந்தாள் .இரு குழந்தைகளும் பெர்த்தில் ஏறி ஆட்டம் போட்டன.இவள் எதையும் கண்டு கொள்ளவில்லை.தொண தொணப்புப் பிடிக்காத எனக்கே ஏதாவது பேச மாட்டாளா என்றிருந்தது.அவள் ஜன்னலில் கன்னம் வைத்தவாறு வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் மரம், செடி, மலைகளின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தாள்.அவளும் என்னைப் போல ரயில் பயணத்தில் மௌனம் விரும்புபவள் போல.

இப்படி நான் நினைத்துக் கொண்டிருந்ததில் மண் விழுந்தது.கொஞ்ச நேரம் கழித்து வயதான தம்பதியரைப் பார்த்துப் புன்னகைத்தாள். அப்புறமாய்ப் பேச ஆரம்பித்தவள்..................பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏசிக் கொண்டேயிருந்தாள்.பேசமாட்டாளா என நினைத்த எனக்கே இவள் வாய் மூட மாட்டாளா என்றிருந்தது.என்னவோ இன்றுதான் பேசக் கிடைத்தக் கடைசி நாள் போலப் பேசிக் கொண்டேயிருந்தாள்.

எனக்கென்னவோ அவள் சந்தோஷமாயிருப்பதைப் போலக் காட்டிக் கொண்டேயிருந்தாள் என்று தோன்றிற்று.இரவு வெகு நேரம் லைட்டை எரியவிட்டு அடுத்தவர் தூக்கம் பற்றிக் கவலையில்லாமல் கையில் ஒரு புத்தகத்துடன் இரவு வெளியில் ஏதும் தெரியாத கருப்பு இருளைச் சன்னல் வழியாகக் கோபமாக வெறித்துக் கொண்டிருந்தாள்.அந்த வயதானவர்களும் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள்

ரொம்பவும் தயங்கித் தயங்கி லைட்டை ஆஃப் பண்ணிடுங்களேன் எனப் பணிவாகத்தான் சொன்னேன். "இல்லை எனக்கு வேண்டும்" என்று கடுமையாகச் சொன்னாள்.எதுக்காக இவ்வளவு பணிவு???பதினோரு மணிக்கு மேலாகி விட்ட நிலையில் உரிமையாகவே லைட்டை ஆஃப் செய்யச் சொல்லலாமே என நினைத்துக் கொண்டு......"என்னங்க....இவ்வ்
ளோ நேரத்துக்கு லைட்டைப் போடணும்னு சொல்றீங்க....பாருங்க அவங்க எவ்வ்ளோ கஷ்டப் படறாங்க...லைட்டை ஆஃப் செய்யுங்க,...." அப்படீன்னு கொஞ்சம் கடுமையாகவே சொன்னேன்.
மறுபடியும் "இல்லை எனக்கு வேண்டும்" எனக் குரலை உயர்த்திச் சொல்லவும் எனக்கு ஒருமாதிரியாகப் போய் விட்டது. நான் இப்படி வீம்பு பிடிப்பவளிடம் என்ன சொல்வது என்று அமைதியாகத் திரும்பிப் படுத்துக் கொண்டேன்.இருந்தாலும் என் ஈகோ என்னும் பேய் தலை விரித்தாடியது.அதெப்படி அப்படி விட்டு விடுவது?...நானென்ன தவறாகக் கேட்டு விட்டேன்?.....என்று மனம் அடங்காமல் ஆடியது...கோபத்தில் நானே எதுவும் கேட்காமலும் சொல்லாமலும் லைட்டை ஆஃப் செய்து விட்டேன். இப்போதுதான் மனம் அடங்கியது.அவள் இன்னும் அசையாமல் ஜன்னலைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.

காலையில் சுமுகமாகக் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டே எழுந்தேன்.எல்லோரும் இறங்குவதற்கான ஏற்பாடுகளில் இருந்தார்கள். குழந்தைகள் சீக்கிரம் தூக்கம் கலைந்த எரிச்சலில் நச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.அவள் எந்த ஒரு உணர்ச்சியுமில்லாமல் இருந்தாள்.

நான் வழக்கம் போல் ஜன்னலில் பாட்டு,ஓடும் மரம் என ஐக்கியமாகியிருந்தேன். நிமிட நேரத்தில் ஏதோ ஒடியது போன்ற சிறு சலசலப்புக்குப் பிறகு ஜன்னலின் வழியாக அவள் விழுந்து புரண்டு உருள்வதையும் மீறி ரயில் வெகு வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை......தவறி விழுந்தாளா?????????தானாகவே விழுந்தாளா??????????????எல்லோரும் அலறி.....சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி விசாரணை......அது இது எல்லாம் முடிந்து......ஆம் எல்லாம் முடிந்துதான் போயிருந்தது.குழந்தைகள் ஒன்றும் புரியாமல் அங்குமிங்கும் பார்த்து அழக் கூடத் தெரியாமல் இருந்தனர்.
இன்றுவரை என் ரயில் பயணங்களில் ஜன்னலோரத்தைப் பார்த்தால் நடுங்குகிறேன்.ஜன்னலில் ஓடும் மரம் மலைகளுடன் அவள் ஆரஞ்சு நிறப் புடவையுடன் மீண்டும் மீண்டும் உருள்வது போன்ற பிரம்மை என் கூடவே ஒட்டிக் கொண்டுவிட்டது.........முடிந்தவரை ரயில் பயணங்களைத் தவிர்க்கிறேன்.இரவில் அவளுக்கென்ன கவலையோ..........?ஏன் அப்படிக் கடுமையாக நடந்து கொண்டேன்...?என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.எது அவளை இப்படி ஒரு மரணத்துக்குத் தூண்டியது? என்னும் கேள்விக்கு குழந்தைகளிடம் நடத்திய விசாரணையின் போது கணவனின் கொடுமை எனப் பின்பு தெரிந்து கொண்டாலும் தேவையில்லாமல் மனதில் ............மனித மனங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்னும் குற்ற உணர்ச்சியிருந்து கொண்டேதானிருக்கிறது.........இப்போதெல்லாம் ரயில் பயணங்கள் எனக்குப் பிடிப்பதில்லை

Saturday, March 27, 2010

என் பெயரில் ஒரு ஊரும்...தெருவும்...

தலைவரின் ஆசைப் பட்டியலில்....
என் பெயரில் ஒரு ஊரும்
எனக்கான ஒரு தெருவும்
அங்கே என் பெயரில் ஒரு பள்ளியும்
கல்லூரியை எட்டிப் பார்த்திராத
நானாகிய என் பெயரில்
ஒரு பல்கலைக் கழகமும்
மட்டும் போதும்
எனக்குப் பின் என் பெயர் சொல்ல.....

இறந்தபின் எனக்கு
இந்த இடத்தில் புகைப்படம்
மாட்டுங்கள் என்றும்
இங்கே சிலை வையுங்கள்
என்றும் வேண்டுமானால்
சொல்லி விட்டுப் போகலாம்....
எனக்குப் பின் என் பெயர் சொல்ல......
என்று அடுக்கிக் கொண்டே போக....

மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு பொருள்களில்
பேரெழுதி அவை யாருக்கு
என்று வேண்டுமானால்
நீங்கள் தீர்மானியுங்கள்............

பொதுவில் யாருக்கு எங்கே
இடமென்பதை நீங்களல்ல
உங்கள் தலைமுறைகள்
தீர்மானிக்கட்டும் தலைவரே!

Wednesday, March 24, 2010

அடப் போங்க கடவுளே!

திடீரென எல்லோருமாய்ச் சேர்ந்து என்னைக் கடவுளாக ஆகிவிடுங்கள் என்று சொல்லி விட்டுப் போனார்கள்...கடவுளாக இருப்பது கஷ்டமா?உள்ளங்கையைக் கொஞ்சம் விரித்துப் புன்னகைக்கத்தானே வேண்டும்! இதென்ன பெரிய விஷயம்?செய்து விடலாம்.என்றுதான் நினைத்தேன்.பிறகு சிலர் வந்து நிறைய நகைகளை அணிவித்து பெரிய கிரீடத்தையும் வைத்து விட்டுப் போய் விட்டார்கள்.சரி அழகாய்த்தானே இருக்கிறேன் என நினைத்துக் கொண்டேன்.

கொஞ்சம் அழகான பூக்களாலான மாலை தோள்களில்....கொஞ்சம் பூக்கள் கூந்தலில்...கொஞ்சம் பூக்கள் பாதங்களில்..........பாதங்களில் கிடந்த ஒரு பூ என்னைக் கேட்டது..
"ஏன் கடவுளே இந்தப் பாரபட்சம்? சில பூக்களை உன் தோள்களிலும்,சில பூக்களைக் கூந்தலிலும்,சில பூக்களைப் பாதங்களிலுமாய் ஏனிப்படி????பதில் சொல்லியே ஆக வேண்டும்...."எனப் பிடிவாதம் பிடித்தது.

எனக்குப் பதிலொன்றும் தெரியவில்லை...கடவுளாயிற்றே...
எப்படிப் பதில் தெரியாது எனச் சொல்வது?

"அட! நீயாவது பரவாயில்லை ...கடவுளின் பாதங்களில் இருக்கிறாய்....சில பூக்கள் பிணத்தின் மேல் மாலையாக....இருக்கிற இடத்தில் நிம்மதியாக இரு நிறைவாய் இரு..." புத்திசாலித்தனமாகப் பதில் சொல்லிவிட்டதாக நினைத்துப் புன்னகைத்தேன்..

"அடக் கடவுளே ...அதை எப்படி ஏன் செய்கிறாய் என்றுதான் கேட்டேன்.....எதை வைத்து நிர்ணயம் செய்கிறாய் இந்தப் பூ கடவுளுக்கென்றும் இந்தப் பூ பிணத்துக்கென்றும்???? ஏன் அப்படிப் பாரபட்சம் காட்டுகிறாய்? பெற்ற குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டாதீர்கள் எனப் பெற்றோருக்கும்...மாணவர்களிடம் பாரபட்சம் காட்டாதீர்கள் என்று ஆசிரியரிடமும் கத்திக் கொண்டியோருக்கும் காலகட்டத்தில் நீ மட்டும் எப்படிப் பாரபட்சமாயிருக்கிறாய்?"


எனக்குப் பதிலொன்றும் தெரியவில்லை.இந்தப் பூ என்ன இப்படியெல்லாம் கேட்கிறது.நாளைக்கு வேணும்னா இந்தப் பூ கடவுளுக்கு....இந்தப் பூ பிணத்துக்குன்னு செலெக்ட் பண்ணாம இருந்துடலாம்......ஆனா இப்போ பதில் தெரிலியே!கடவுளுக்கே தெரியவில்லையென்று எப்படிச் சொல்வது? அதனால் எப்போதும் போல புன்னகைத்துக் கையை உயர்த்திக் கண்களை மூடிக் கொண்டேன்.


பரீட்சைக் காலம்....பசங்க எல்லாம் எளிதான பேப்பர் வேண்டும் என்றும், நான் படித்தவையே வரவேண்டும் என்றும், டெரிவேஷன்ஸ் வரவேண்டும், என்றும், வரக் கூடாது என்றும்,ஈகுவேஷன்ஸ் வரவேண்டும் என்றும், வரக்கூடாது என்றும்,பலவிதமான வேண்டுதல்......யாரையும் ஏமாற்றக் கூடாது என்றும் ,எல்லோரையும் மகிழ்விக்கவேண்டும் என்றும் கங்கணம் கட்டிக் கொண்டு கேள்வித்தாள் தயாரிக்க ஆரம்பித்தேன்............அச்சோ.
..எப்பூடி...?ஒருத்தன் படித்ததை மட்டும் கேட்பது? அட? ஒருத்தனுக்கு ஈகுவேஷன்ஸ் வராதுன்னா...இன்னொருத்தனுக்கு அது மட்டும்தானே வருது....ஒண்ணும் புரிலியே...இப்போ என்னா பண்றது?...சரி சரி எப்போதும் போல கையை உயர்த்திப் புன்னகைத்துக் கண்களை மூடிக் கொண்டேன்.
ஐயய்யோ இவங்களுக்கு யார் கேள்வித்தாள் ரெடி பண்ணுவாங்கன்னு கவலையாயிருந்தாலும் நான் என்ன பண்ண?

"கடவுளே என் புள்ளே முதமுதல்லே பட்டணம் போறான் கூடவே இருந்து பர்த்துக்கோப்பா....."என்று வேண்டினான் அவன்.நான் பெட்டி ரெடி பண்ணி கிளம்பிட்டிருக்கப்ப.....
"Ohhh...God..my child first time அமெரிக்கா போறான்...Be with him....."என்று இவனும் வேண்ட.....சரி சரி அமெரிக்கா போலாம்னு நினைக்கும் போதே.....இன்னொருத்தன்.....ம்ம்
ம் எங்கதான் போறது? ம்ம்ம்ம் ஒண்ணும் முடிலை....
சரி சரி எப்போதும் போல கையை உயர்த்திப் புன்னகைத்துக் கண்களை மூடிக் கொண்டேன்.

யாரும் பார்க்காதபடி ஓடியே வந்து விட்டேன். ரூமுக்குள் போய் அடைந்து கொண்டேன்......காதை மூடிக் கொண்டேன்...........ஹையா! இனி யார் வேண்டினாலும் கேட்காது.....என நினைத்துக் கொண்டே தூங்கலாம்னு நினைத்த போது...........ஒரே குழப்பநிலையில் பலவேண்டுதல்கள் தெளிவில்லாமல்...எல்லோரும் வேண்டுதல்களும் கேள்விகளுமாகக் கேட்டுக் கத்திக் கொண்டிருந்தார்கள்.....சிலர் ஜப்பானிய மொழியிலும்,சில சீன மொழியிலும் ....பல்வேறு மொழிகளிலுமாய் காட்டுக் கத்தல்.....யாருக்குப் பதில் சொல்ல...யாரைக் காப்பாற்ற என்று பயங்கரக் குழப்பத்தில் ........அய்யோடா கடவுளாய் இருப்பதில் இவ்வ்ளோ கஷ்டமா???? அப்படீன்னு அடக் கடவுளேன்னு தலையில் கைவைத்துக் கொண்டேன்.

நாளைக்குக் காலையில் பூக்கள் எங்கே போகும்? நாம்தான் நம்ம வேலையைச் செய்யலியே????நாளைக்குப் பரீட்சை எப்பிடி நடக்கும்????நாம்தான் கேள்வித்தாள் தயாரிக்கலியே?????அவன் கூடச் சென்னைக்கு யார் போறது....இவன் கூட அமெரிக்கா யார் போறதுன்னு ஒரே குழப்பம்....கடவுளுக்கு இவ்வ்ளோ வேலையா???? போங்கடா...கொஞ்ச நாளைக்கு எதுவுமே செய்யப் போறதில்லை என்னதான் செய்றீங்கன்னு பார்க்கிறேன்..........அப்பிடி
யே தூங்கிட்டேன் போல.....காலையில் கண்ணக் கசக்கிட்டே வெளியே வந்தா அட....
சாமிப் படத்துலே பூ!
நம்மதான் இந்த உலகத்தைத் தாங்கிட்டிருக்கோம்னும்...நாம இல்லைன்னா எதுவும் நடக்காதுன்னும் நினைச்சுட்டிருந்தோமே.....இந்
தப் பூவை யார் சாமிக்குன்னு செலெக்ட் பண்ணுனது???

அடப் போங்க கடவுளே!
கடவுளையே படைச்சு........அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியிருக்கோமே!...இத்தனூண்
டுப் பூ...இதைக் கடவுளுக்குன்னு செலெக்ட் பண்றதா பெரிய விஷயம்னு.....மனிதன் சிரித்துக் கொண்டான்.!

Monday, March 22, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-4

அண்ணாவுக்குக் கல்யாணம்
முன் யோசனையுடன் முன் ரூம்
அண்ணா அண்ணிக்கும்
எழுதிக் கொடுக்கப் பட்டது...

தம்பிக்குக் கல்யாணம்
சமயோசிதமாய்ப் பின் ரூம்
தம்பிக்கும் மாலினிக்குமாய்
பத்திரப் படுத்தப் பட்டது....

ஒன்றும் சொல்லாமல்
அம்மாவும் அப்பாவும்
ஹாலுக்கு
இடம் பெயர்ந்து
கொண்டார்கள்.........

ஹாலிலிருந்து
பாட்டி வீடு ரெண்டு படும்படிக்
கத்திக் கொண்டே
பூனையை விரட்டி
மாடிப்படிக்கு அடியில்
குடி கொண்டாள்..............

பாட்டியும் அப்பாவும்
அடுத்தடுத்து படத்துக்குள்
நுழைந்து பொட்டும் பூவும்
வைத்துச் சாமியாகிப்
போனார்கள்

அதற்கப்புறமான அதிகாலையில்
யாரும் சொல்லாமலேயே
அம்மா அமைதியாக
மாடிப்படிக்குக் கீழே
முகம் மறைத்துக் கொண்டாள்

எல்லோருக்கும் பொதுவான
வீடு மட்டும் எப்போதும் போல
கலைந்து கொண்டேயிருந்தது........

Wednesday, March 17, 2010

மீன்களும் மீனாக்களும்!

ண்ணாடிக் குடுவை ஒன்றை இருப்பிடமாக்கி ஐந்து மீன்கள் அதில் குடியிருந்தது. ரொம்பவும் அலையாமல் கிடைத்தது இந்தக் குடுவை. பெரிய மீன்தொட்டிக்குள் ஆழமாகவும் விசாலமாகவும் நீந்தி வந்த மீன்களுக்குத் திடீரென குறுகிய குடுவைக்குள் வீடு மாற்றியதில் நிறைய சிரமங்கள் இருந்தன. எங்கு எப்போ திரும்பினாலும் கண்ணாடிச் சுவரில் முட்டிக் கொண்டன.

அந்தப் பெரிய தொட்டியில் நிறைய நட்பு மீன்களை விட்டு வந்ததில் வேறு வருத்தமாயிருந்தது. உணவுக்கு மட்டும் பஞ்சமில்லை. அங்கும் இங்கும் அலைந்து சக மீன்களோடு சண்டை போடாமலேயே தேவைக்கு அதிகமாகவே காலையும் மாலையும் கிடைத்தது. குடுவை வசதியாக இருக்கிறதா? பிடித்திருக்கிறதா? என்றெல்லாம் மீன்களிடம் யாரும் கேட்கவில்லை. பளிச் பளிச் பல்புகளையும்,ப்ளாஸ்டிக் செடிகளையும் ஃபௌன்டன்களையும் நட்டு அழகாக்கியாயிற்று.

மீனாவுக்குப் புது வீடு பிடிக்கவேயில்லை. பெரிய பெரிய தூண் வைத்து திண்ணையுள்ள வீட்டிலிருந்து இப்படி மாடியில் க்ரில் போட்ட வீடு சிறையாய்த் தெரிந்தது. எங்கு திரும்பினாலும் முட்டும் சுவரும் கதவுகளும் வினோதமாகத் தெரிந்தன. பாட்டி தாத்தாவையும் அம்பி, சவி, முத்து, லல்லி எல்லோரையும் விட்டு வந்ததில் ரொம்ப வருத்தத்தில் இருந்தாள் மீனா. அம்மா சந்தோஷத்தில் விதம் விதமாகச் சமைத்துக் கொடுத்தாள். போட்டி போட்டுச் சாப்பிடத்தான் ஆளில்லை.

வீடு பிடித்திருக்கிறதா, காற்று வருகிறதா, வசதியாக இருக்கிறதா என்றேல்லாம் யாரும் மீனாவிடம் கேட்கவில்லை. மீனாவின் அறை அழகழகான பொம்மைகளாலும் பூக்களாலும் அலங்கரித்தாயிற்று.

"மீனு... மீனாக்குட்டி அம்மா ஆஃபீஸ் போயிட்டு வரேன். கிரில்லுக்குப் பூட்டுப் போட்டாச்சு. சமத்தா இருக்கணும். சரியா? சாப்பாடு டேபிளில் வச்சுருக்கேன். எது வேணும்னாலும் ஃப்ரிட்ஜ்லேருந்து எடுத்துச் சாப்பிடு. அம்மா சீக்கிரம் வந்துருவேன். யாருக்கும் கதவு திறக்காதே... சரியா?"

பதிலை எதிர்பார்க்காமல் அம்மா போய் விட்டாள்.

மீனா மீன்குடுவைக்குப் பக்கத்தில் வந்து மீன்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். மீன்கள் ஒரு இடத்தில் இல்லாமல் நீந்திக் கொண்டேயிருந்தன. குடுவையை விரலால் தட்டினால் பயத்தில் மிரண்டவை போல் வேகம் வேகமாக நீந்தின. திரும்பத் திரும்பக் கண்ணாடிச் சுவரில் முட்டி முட்டிப் பார்த்து ஏமாந்தன. பயம் மீன்களுடன் எப்போதுமிருப்பது போலத் தோன்றும். மீனா என்ன செய்யவென்று அங்குமிங்கும் சுற்றி கொஞ்சம் சாப்பிட்டாள். இடையிடையே மீன்களையும் எட்டிப் பார்த்துக் கொண்டாள்.

மீனுக்குப் பசிக்குமோ என்றெண்ணிக் கொஞ்சம் மீனுக்குச் சாப்பாடு போட்டாள். டி.வி போட்டாள். பாட்டைச் சத்தமாக அலறவிட்டாள். எல்லாம் செய்தும் இன்னமும் நேரம் இருக்கவே என்ன செய்வதென்று பின்னால் பால்கனிக் கதவைத் திறந்து நீச்சலடிக்கும் குழந்தைகளை வேடிக்கை பார்த்தாள். கடல் வரைந்து அழகாய்க் கலர் அடித்தாள். அதற்குள் நிறைய மீன்கள் வரைந்து கலர் அடித்தாள்.

பின்பு மீன்குடுவைக்குப் பக்கத்தில் வந்தாள். மீன்கள் அப்போதும் கண்ணாடிச் சுவரில் முட்டி முட்டிப் பார்த்து ஏமாந்தன. ரொம்பப் பாவமாய் இருந்தது.

மீன் குடுவையை அப்படியே தூக்கிக் கொண்டு பால்கனிக்குப் போனாள். அங்கிருந்து குடுவையிலுள்ள மீன்களோடு தண்ணீரையும் நீச்சல்குளத்துக்குள் விழுமாறு வீசினாள்...

மீன்களின் மொழி மீனாவுக்குப் புரிந்திருந்தது.

மீனாக்களின் மொழி அம்மாக்களுக்குப் புரியுமா?

இது யூத்ஃபுல்விகடனில்.....

Tuesday, March 9, 2010

ஸ்பரிசம்

இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பது...- அருணா சுரேஷ்
இந்தக் கட்டுரையும் கவிதையும் மகளிர் தினம் ஸ்பெஷல் சக்தி-2010 இதழில்..........

குட்டிம்மாவின் பிறப்பில்
தேவதை இறக்கைகளுக்கான
தேடல் ஆரம்பம்...

ரோஜா நிறக் குட்டிக் கால்
கண்டதுமே சின்ட்ரெல்லாவின்
தொலைந்த காலணியைத் தேட
ஆரம்பித்தது மனது...

பயத்தில் குட்டிம்மாவின் கை
இறுக்கத்திலும் முதுகுப் பின்
மறைவிலும்
கடவுளானேன் சிலநேரம்...

எனதுடையணிந்து
என் முன் நிற்கும் போது
என் முற்றத்தில்
எனக்கான மழை

கண்ணாடிக் கைவளையோசையும்
சுவரில் நெற்றிப் பொட்டும்
மொட்டு சத்தமில்லாமல் மலர்வதைக்
கொஞ்சம் சத்தமாகவே சொல்லியது...

யாரையோ மணமகனாக்கி
உடன் ஏற்றி
ரயில் நகரும் போது
அவசரமாய்த் தொட்டுக்
கோர்த்துக் கொள்ளும் கைகளின்
ஸ்பரிசம்...

கைகளில் ஒட்டிக் கொண்டு வீடு
வந்து சேர்ந்து அழ வைத்தது...

வீடு முழுவதும் நீ செய்த
ப்ளாஸ்டிக் பூக்களும்
சுவர் கிறுக்கல்களும்
கொடியில் தொங்கும்
சூடிதார்களும்
கண்ணாடியில் ஸ்டிக்கர்
பொட்டுமாய்
கைநிறைய உன் பிரிவு
ஸ்பரிசமுமாய்...
கண் நிறைய ஒளித்து
வைத்த மழையுமாய்
அம்மா...Monday, March 8, 2010

மகள் தினம்!


மகளிர் தினம்.....என் மகளின் தினம்......இன்று அவளின் பிறந்த நாள்.எப்பவும் போல் இந்த முறையும் பரீட்சை நேரம்...சம்ஸ்கிருதம் பரீட்சை.ஒரே அழுகை.என்னை ஏம்மா இன்னிக்குப் பெத்தே?ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வேற வேற ரூம்லே இருப்பதனாலே என்னாலே செலிப்ரேட் பண்ண முடிலை...பார்ட்டி வைத்தாலும் யாரும் வர ரொம்ப யோசிக்கிறாங்க....பரீட்சை இருக்கே....இப்படி ஒரே அழுகை....

எப்பவும் சொல்லணும்னு நினைச்ச விஷயத்தை இன்னிக்குச் சொல்லலாம்னு "குட்டிம்மா.....அம்மா பிறந்த நாளுக்கு வீட்டில் அக்கா தங்கை தம்பிகளுக்கு ஐந்து பைசா மிட்டாய் வாங்கக் கூட வழியில்லாம இருந்துருக்குடா....பிறந்தநாளுக்கு புது ட்ரெஸ் என்பதெல்லாம் சினிமாலதாண்டா பார்த்திருக்கோம்..உனக்கு என்ன இல்லை?புது ட்ரெஸ், டெய்ரி மில்க் .....இன்னும் நீ ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சுருக்கு....பரீட்சை முடியட்டும் ....என்னைக்கு நினைக்கிறியோ அன்னைக்கு செலிப்ரேட் பண்ணலாம்...சரியா?.........அப்படீன்னு கேட்ட போது...
"இப்புடீல்லாம் கஷ்டப் பட்டுருக்கீங்களாம்மா"அப்படீன்னு கேட்டுக்கிட்டே விட்ட ஒரு சொட்டுக் கண்ணீரில் எனக்குப் புரிந்தது....என் மகளுக்குப் புரிந்த வாழ்வியல்.

Saturday, March 6, 2010

பத்தே நாள்லே வீடு வாங்கும் திட்டம்...

"கொஞ்சம் வெளைச்சல் நிலத்துலே இன்வெஸ்ட் பண்ணிருக்கேம்பா.."

"அப்பிடியா? எப்போ?"

நேற்றுச் சாயங்காலம்"

"அப்பிடியா? என்னா போடலாம்னு இருக்கே..?"

"அதான் யோசிச்சுட்டே இருக்கேன்...."

"இதிலென்ன யோசனை?"

"கொஞ்சமா பணம் போட்டு உடனே வெளையறதைப் போடவா....அல்லது நிறைய பணம் போட்டு நிறைய நாளாகுறதைப் போடவான்னு ஒரே ரோசனையா இருக்கு..."

"இதிலென்ன இவ்வ்ளோ ரோசனை பண்றே? சட்டுப்புட்டுனு ஆரம்பிச்சா மட மடன்னு ஆடு ,மாடு ,கோழிப் பண்ணைத், தோட்டம் தொரவுன்னு பெரியாளாயிடலாம்....."

"அதுசரி நீ என்னா போட்டுருக்கே?"

"நா எப்பவுமே அவசரக்காரனப்பா.....எது மட மடன்னு வெளையுதோ அதைப் போட்டு சட்னு ...வீடு அது இதுன்னு வாங்கி இப்போ ஜெகஜோதியா இருக்கோமாக்கும்!? அடுத்தாப்புலே பக்கத்துலேயே இன்னும் கொஞ்சம் நிலம் வேற வாங்கப் போறேன்"

"இருந்தாலும் பயமாவே இருக்கப்பா....."

அட! நம்பி இறங்குப்பா....பக்கத்து தோட்டத்துக்காராங்க அத இதைன்னு கொடுத்துதவி நல்லாப் பார்த்துப்பாங்க...கொஞ்சம் சூதானமா நடந்துக்கிட்டா நீயும் வீடு தோட்டம்னு பத்தே நாள்லே எங்கேயோ போயிரலாம்பா!!!!"

"பத்தே நாள்லேயெவா??????????ரைட்டு.....உன்னை நம்பி வெவசாயத்துலே இறங்கிடுறேம்பா! ஒகே...வா????"

அட! நீங்க வேற! நம்ம மக்கள் FARMVILLE பற்றித் தீவிரமா ஆராய்ச்சி பண்றதைப் பற்றிச் சொன்னா.............????

Tuesday, March 2, 2010

கடவுள் யார் பக்கம்????

நேற்றும் இன்றும்
விதம் விதமான
வேண்டுதல்களோடு விடிந்தன.

ஒற்றைப் புழு மாட்டி
மீனுக்குத் தூண்டிலிட்டு
பெரிய மீனுக்கான வேண்டுதலில்
அவனும்

இன்னிக்கு மட்டும் தூண்டிலில்
மாட்டி விட்டுராதே என்று
மீனும்................

இன்னிக்கு கெடா வெட்டிச்
சாமி கும்பிடுறேன் என் புள்ளையைக்
காப்பாற்று என
அவனும்
இன்னிக்கு ஒருநாள்
என்னைத் தப்பிக்க விட்டுரு என
கெடாவான ஆடும்.........

மழை தண்ணியில்லாமே
எம்பயிரெல்லாம் வாடுதே
மழை கொடுப்பான்னு
அவனும்.........
நல்லா உப்பு வெளைஞ்சுருக்கு
நாளை வரை மழை
வராமப் பார்த்துக்கோன்னு
இவனும்...........

நாளை தெரியும்
கடவுள் யார் பக்கம்னு?????