நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, March 28, 2008

அன்றைக்கு ஒருநாள் ஜெயிலுக்குப் போனோமில்லே!!!!



அந்தப் போலீஸ் ஜீப்பில் ஒரே இட நெருக்கடி...பின்னே என்ன?ஆறு பேர் உட்கார்ந்து போற இடத்திலே பன்னிரண்டு பேரை அடைச்சு வச்சா எப்பிடி?? ஆனாலும் ஒரே அமர்க்களம்தான் போங்க....வேற யாரு நாங்கதான்...??ஜெயிலுக்குப் போறமேன்னு கொஞ்சம் கூடக் கவலைப் படாமல்..அத்தனை பேரும் பல்லைக் காட்டிக் கொண்டு இருந்தோம்!...அட நீங்க வேற!! ஒரு இன்டர் காலேஜ் போட்டிக்காக எங்க கல்லூரி நிர்வாகம் பாதுகாப்புக் கருதி ஏற்பாடு பண்ணின வண்டிதான் இந்த போலீஸ் ஜீப்!!நல்ல வேளை நாய் வண்டி வரல்லையேன்னு கொஞ்சம் ரொம்பவே சந்தோஷப் பட்டோம்....

போற வழிலெ கொஞ்சம் பின் அது இதுன்னு வாங்க வேண்டி இருந்ததால் இடையில் வண்டியை நிறுத்தி ரெண்டு பேர் மட்டும் இறங்கிப் போக நாங்க எல்லொரும் வண்டியிலேயே இருந்தோம்...கல்லூரிப் பெண்கள் போலீஸ் ஜீப்பில் காம்பினேஷன் கொஞ்சம் வினோதமாக இருந்ததனால் ஒரே கூட்டம் கூடிருச்சு...

அதிலே ஒரு பெரிசு என்னைப் பார்த்து "என்னம்மா என்ன ஆச்சு?" அப்பிடின்னு ரொம்ப சீரியஸாக் கேக்க நானும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு
"பரீட்சையில் காப்பி அடித்தோம் தாத்தா இதுக்குப் போய் ஜெயில்ல போடப் போறாங்க "என்றேன்.பெரிசு விடாமல்"எந்தப் போலீஸ் ஸ்டேஷன்?"என்றது...
வாய்க்கு வந்தபடி "சிதம்பர நகர் போலீஸ் ஸ்டேஷன்"என்று அழுற மாதிரி சொன்னேன்...அதிசயம் என்னன்னா....கூட இருந்ததுக அத்தனையும் சிரிக்காமல் இருந்ததுதான்....

அப்புறம் ? எனக்கெப்பிடிங்க தெரியும்?அந்தப் பெரிசுக்கு எங்க அப்பாவைத்
தெரியும்னு? அது போய் எங்க அப்பாகிட்ட ஊதின சங்குலெ என் சொந்தக்காரங்க எல்லாம்
" சித்தி வந்திருக்காக.......
சித்தப்பு வந்திருக்காக...மாமா வந்துருக்காக.......
அத்தை வந்துருக்காக....பெரியப்பா வந்திருக்காக......
பெரியம்மா வந்திருக்காக.......
அம்மா மின்னல் அருணா நீ எப்பம்மா வருவேன்னு கவலையான முகத்தோட உட்கார்ந்திருந்தாங்க....வேறென்ன நான் ஜெயிலுக்குப் போனதைக்
கொண்டாடத்தான்.....இது ஒண்ணும் தெரியாமல் போட்டியிலே ஜெயிச்ச சந்தோஷத்துலே அதே சனி பிடித்த போலீஸ் ஜீப்பிலே வந்திறங்கியதைப் பார்த்த அம்மா முந்தானையில் முகத்தை மூடிக் கொண்டு ஓ வென்று அலறியழ...ம்ம்ம்ம் அதுக்கப்புறம்........

நடந்த முதுகிலே டின் கட்டற விழா பற்றியெல்லாம் எழுதணும்னா இன்னொரு பதிவாதாங்க போட முடியும்...என்னங்க ஜெயிலுக்குப் போறேன்னு சொல்றதிலே இவ்வளோ வில்லங்கமா?...
ஆனால் அன்றொரு நாள் நான் ஜெயிலுக்குப் போகலையே!!!

Wednesday, March 19, 2008

அன்றொரு நாளில் முட்டாளாகிட்டொமில்லே!!!!



கல்லூரிக் காலங்களில் வம்புக்கும்,சிரிப்புக்குமா பஞ்சம்?அப்பிடித்தான் ஆரம்பித்தது தமிழ் வகுப்பு.அன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி.முட்டாள்கள் தினம்.

ஒவ்வொரு வகுப்பின் ஆரம்பத்திலும் ஒரு சின்ன ப்ரேயருடன் ஆரம்பமாகும்.அப்பிடி ப்ரெயர் நடந்து கொண்டு இருக்கும் போது வகுப்பின் ஒரு வால் ஒன்று மெதுவாக தமிழாசிரியையின் பின்னால் சென்று ஒரு பேப்பரில் "நான் ஒரு முட்டாளுங்க!" என்று எழுதி பின் பண்ணி விட்டாள்...என் நாக்கில் சனிதான்..... அதற்கு அப்போதுதானா தண்ணீர் தாகம் எடுத்திருக்க வேண்டும்..நான் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்தவள் "அடடா இதென்ன கலாட்டா" என்று அந்தப் பேப்பரை எடுத்துவிட நினைத்து மெதுவாக பின்னால் போய் அந்தப் பேப்பரில் கையை வைத்து.....அட! இதென்ன ?ப்ரேயர் முடிந்து தமிழாசிரியைத் திரும்பி ....ஒரே ஒரு வினாடிக்குள் தமிழாசிரியையின் கைகளில் என் கைகளும் ,என் கைகளுக்குள் அந்த முட்டாள் பேப்பரும்...

"There was no question of any questions you know?"

எந்தவிதமான கேள்விகளோ,விசாரணையோ,விளக்கத்துக்கோ இடமில்லாமல் நான் தான் கையும் களவுமாகப் பிடி பட்டிருக்கிறேனே....
தமிழாசிரியை ஒன்றும் பேசாமல் அமைதியாக என் சேலையில் அந்தப் பேப்பரை பின்னால் மாட்டி விட்டு ....ஒவ்வொரு வகுப்பாக ஒரு நாள் முழுவதும் வலம் வரச் சொன்னாங்க..பார்த்துக்கிட்டு இருந்த நம்ம சக ஜீவ ராசிகளெல்லாம் "என்னம்மா இப்பிடிப் பண்ணிட்டியேன்னு" ஒரு பார்வையோடு தேமேன்னு உட்கார்ந்துக்கிட்டு இருந்ததுகள்!


அப்புறமென்ன?திரு திருவென்று முழித்துக் கொண்டு.... ஒரு கையால் அந்தப் பேப்பரை மறைத்துக் கொண்டு.......முகம் முழுவதும் டன் டன்னாக அசடு வழிந்துக் கொண்டு........பிரின்ஸி பார்த்தால் என்ன ஆகும் என்று பயந்து பயந்து ஒளிந்துக் கொண்டு....அப்பப்பா "எனக்கு மட்டும் ஏனிப்படி? உருப்படியா ஒண்ணு பண்ண விட மாட்டீங்களாடா?" அப்பிடின்னு ஒரு தினுசாக செய்யாத தப்புக்காக தண்டனை அனுபவித்துக் கல்லூரியில் அன்னிக்கு முழுவதும் முட்டாளாகிட்டோமில்லெ!!!

Wednesday, March 12, 2008

ஒருநாள் கோவில் பூசாரியாகிட்டோமில்லே!!



திருமணமாகி ஒரு வாரம்தானிருக்கும்..மதுரைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காகப் போக வேண்டியதிருந்தது....சரி..மதுரை மீனாக்ஷியையும் போய் பார்த்து என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வந்துரலாம்னு கோவிலுக்குப் போனோம்.
"மாலை வாங்கலாமா?"
"பூசைத் தட்டு வாங்கலாமா?"
என்ற ஒவ்வொரு கேள்விக்கும் பிடிக்குதோ இல்லியோ...நாய்க்குட்டி போல "ம்ம்" "ம்ம்" என்று சொல்ல வேண்டிய அழகான தருணங்கள் (அட இம்ப்ரெஸ் பண்ணத் தாங்க!!)

மாலையும் ,பூசைத் தட்டுமாக பக்திப் பழங்களாக சன்னிதிக்குள் நுழைந்தோம்..கையில் மாலை,பூசைத் தட்டுக்களோடு பூசாரியை நோக்கி கையை நீட்டி தவமிருக்க ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது.கூட்டமோ பயங்கரக் கூட்டம்.பூசாரிக்கு மாலையுடன் 50/- 100/- ரூபாய் நோட்டுக்கள் பிடித்திருந்த தட்டுக்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.

பொறுமையிழந்து அவரும் ஒரு 50/-ரூபாய் நோட்டை எடுக்க நான் சாமி சன்னிதியுலுமா லஞ்சம் எனத் தடுத்தேன்..இப்போ அவர் நாய்க்குட்டியாக வேண்டிய அழகான தருணம்(அட இம்ப்ரெஸ் பண்ணத் தாங்க!!)ஒன்றும் பேசாமல் உள்ளே வைத்து விட்டார்.

இன்னும் அரை மணி நேரம் போனதுதான் மிச்சம்...எங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம் மீனாக்ஷியை என்ன ஏதுன்னு விசாரித்து விட்டுப் போய்க் கொண்டே இருந்தார்கள்.ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து ....தொண்டை அடைக்க .."வாங்க போகலாம்" என்று மீனாக்ஷியின் செக்ரட்டரியுடன் கோபித்துக் கொண்டு வெளியே வந்தோம்.....

அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தார்....பின் "இதை என்ன செய்வது" என்பது போல மாலையையும் பூசைத் தட்டையும் பார்த்தார்.

அமைதியாக ஆனால் அடங்காத கோபத்துடன் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம்....அங்கே ஒரு ஓரத்தில் இருட்டுக்குள் ஒரு விளக்கு கூட இல்லாமல்...ஒரு பூ கூட இல்லாமல், ஒரு பூ கூட இல்லாமல் ஒரு அம்மன் சிலை வருத்தத்துடன் இருந்தது...
அட! பளிச்சென்று ஒரு சூரியன் என் மனதில் உதித்தது...அந்தச் சிலையை நோக்கி நடக்கையில் என் எண்ணம் அவருக்கும் புரிந்தது போலும் .....புன்சிரிப்புடன் அவரும் கூடவே.....

கையால் அம்மன் சிலையைத் தூசி தட்டி, மாலையைப் போட்டு,ஊது பத்தி பொருத்தி ...விளக்கைப் ஏற்றி ....சூடத்தை ஏற்றி அம்மனுக்குக் காட்டி கண்ணில் ஒற்றிக் கொண்ட போது..."ஓவென்று அலறிய மனம் சட்டென்று நிசப்தமாகி....கண் ஓரம் துளிர்க்க ....

"அட அன்றைக்கு ஒருநாள் கோவில் பூசாரியாகிட்டோமில்லே!!

Monday, March 3, 2008

அப்பப்போ வில்லனாவோமில்லே!!!

அது கல்லூரிக் காலம்.எல்லோரும் "எனக்கொரு boy friend வேண்டும்...வேண்டும்னு ஏங்கும் காலம்.இந்த விடுதிப் பெண்கள் எல்லாம் எப்படித்தான் டே ஸ்காலர்ஸை
மடக்குவாங்கன்னு தெரியாது....எல்லாம் லெட்டர் எழுதி அவுட் போஸ்ட் பண்ணக்
கொடுக்கலாம்னுதான்...ஏன்னா விடுதி வார்டன் லெட்டரைப் படிப்பாங்கன்னுதான்...
எனக்கு எப்பவுமே ஒரு கேள்வியுண்டு...அப்பிடி வார்டனுக்குத் தெரியாமல் என்னதான் எழுதணும் வீட்டுக்குன்னு?..ஏன்னா போஸ்ட் பண்ணும்போது "விடுதி பற்றி அம்மாவுக்கு எழுதிருக்கேன்...வார்டன் படிச்சா அவ்வளவுதான்" ...அப்பிடின்னு டையலாக் வேற.

இப்பிடித்தான் அந்தப் பொண்ணு என்கிட்டயும் ஒரு லெட்டரைக் கொடுத்து போஸ்ட்
பண்ணச் சொன்னது...அவ்வளவுதான் எனக்கு அதை படிக்கத் தாங்க முடியாத ஒரு ஆவல்.வீட்டுக்குக் கொண்டு வந்த பின்பு...இதென்ன பெரிய தப்பா? ராணுவ ரகசியமா?
அப்பிடி என்னதான் எழுதிருக்குன்னு பார்க்கப் போறேன்...மற்படியும் ஒட்டி அனுப்பப் போறேன்...இதிலென்ன தப்பு? உலகத்திலே என்னன்னமோ தப்பெல்லாம் பண்றாங்க...இது கூடப் பண்ணக் கூடாதா?....என்று மனதில் நினைத்துக் கொண்டு.....
"தப்பு....தப்பு ...செய்யாதே...செய்யாதே"..என்று மிரட்டிய மனசாட்சியை.....
"அட அடங்குடா ..." என்று பதிலுக்கு விரட்டிவிட்டு...மெல்ல மெல்ல ஓரம் கிழிந்து விடாத படி தண்ணீர் தொட்டுத் திறந்தேன்

"அன்புள்ள அம்மா.,
நான் நலமே...அங்கு எல்லோரும் நலமா?...

"ஐயோ பாவம் ..அம்மாவுக்குத்தான் எழுதியிருக்கிறாள்"...என்று கொஞ்சம் (ரொம்பவே)ஏமாற்றத்துடன் மேலே படித்த என்னை ஒரேயடியாக ஏமாற்றியது அந்தக் கடிதம்.
அட அது ஒரு அருமையான காதல் கடிதமுங்க!
"அன்பே...பொன்னே...மானே.."போங்க எனக்கு வெட்கமாக இருக்கிறது!!!! இதற்கு மேல எழுத......கடைசியாக ஒரு வரி
"அடுத்த வாரக் கடைசியில் ஊருக்குக் கிளம்பும்போது "அம்மாவுக்கு சனிக்கிழமை காலை வருவதாகச் சொல்லி விடுகிறேன்...வெள்ளி மாலையே கிளம்பிடுவேன்...பாளையங்கோட்டை காளிமார்க் பக்கத்தில் நில்லு ....OK? I'm waiting for that day dear..............................என்றிருந்தது...

எனக்கு நானே அந்தத் தப்பைச் செய்வது போலிருந்தது.கை டப டப வென்று அடித்தது..அடடா....பட படவென்றுதான் அடித்தது.வேர்த்து வேர்த்து வழிந்தது....
இப்போ இதை போஸ்ட் பண்ணவா வேண்டாமா?ன்னு ஒரே மண்டைக் குழப்பமாக இருந்தது....கடிதத்தை மடித்து வைத்து விட்டு"ஒரே யோசனை..என்ன பண்ணலாம்?

அடியே ராணி...நீ இவ்வளவுதானாடி? என்று கேட்கலாமா?....
நேரா விடுதி வார்டன்கிட்ட கொடுக்கலாமா?
கல்லூரி முதல்வரிடம் கொடுக்கலாமா?
பேசாம அம்மாகிட்ட காட்டிரலாம்???
எதுவுமே புரியவில்லை....ஆனால் இவர்கள் அத்தனை பேரை விட என் மேல் எனக்கிருந்த நம்பிக்கைதாங்க ஜெயிச்சுது!!!!
நானே சமாளிக்கலாம்னு முடிவு பண்ணி ......
அந்தக் கடைசி வரிகளை பேனாவால் அடித்தேன்..கீழே
"இந்த லெட்டர் எங்கள் கையில் கிடைத்த நிமிடமே ராணியை கல்லூரியிலிருந்து நீக்கியிருக்க முடியும்.ஆனாலும் ஒரு படிக்கிற பெண்ணின் வாழ்க்கையை பாழ் பண்ண விரும்பவில்லை...இது கடைசி வாய்ப்பு.இனி அவளைப் பார்க்கவோ,அவளுடன் பேசவோ முயற்சி பண்ணினால் அவளைக் கல்லூரியிலிருந்து நீக்கி அவள் அப்பா அம்மாவிற்குத் தெரியப் படுத்துவோம்.
இப்படிக்குக் கல்லூரி முதல்வர்
Sr.Rita
என்று கையெழுத்திட்டு ஒட்டி அனுப்பி விட்டேன்..

அப்புறம் அந்த வாரக் கடைசியில் வீட்டுக்குப் போய் விட்டு வந்த பின்பு முதல் கடைசி வருடம் முடிக்கும் வரை ராணி என்னுடன் பேசவே இல்லை..
அவள் காதலை(காதல்தானா அது????)கட் பண்ணியதால் நான் வில்லனா?(வில்லியா?)அல்லது அதிலிருத்து காப்பாற்றியதால் கதாநாயகியா???....எனக்குத் தெரியலை...நீங்கதாங்க சொல்லணும்.....சொல்லுங்க ப்ளீஸ்

எப்படியிருந்தாலும் காதலுக்கு வில்லனாயிட்டோமில்லெ!!!!!!!