நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, July 8, 2008

திண்ணையில் பூத்த மலர்கள்!!திண்ணைக்கு ஸ்ரீ கூப்பிட்டிருக்கார்.

எனக்கு நினைவு தெரிந்து நாங்கள் எந்தத் திண்ணை வைத்த வீட்டிலும் இருக்கவில்லை.

புகை மூட்டம் போல எங்கள் மாம்மை (அம்மா வழிப் பாட்டி)இருந்த ஏதோ ஒரு வீட்டில் சின்னத் திண்ணை இருந்ததாக நியாபகம்.

அந்தத் திண்ணை எங்களின் விளையாட்டுக் களமாக இருந்ததால் தான் அதைப் பற்றி நினைவு இருக்கிறதோ என்னவோ?.கல்லா மண்ணா,தாயம்,சுட்டிக் கல்...சீட்டுக் கட்டு.....பல்லாங்குழி .....இன்னும் எல்லாமே அந்தத் திண்ணையில்தான்..என் திண்ணை பற்றி இவ்வ்ளோதான் மலரும் நினைவுகள்..

ஆனால் எங்க மாம்மை வீட்டுக்குப் பக்கத்து வீட்டுத் திண்ணையும் அதையொட்டிய கதவும்(பெரிய ராஜா காலத்துக் கதவு பெரிய குமிழ் வைத்து, ஓரத் திண்டு வைத்து)அந்த ஓரத் திண்டில் கால் வைத்து செய்யும் ஒற்றைக் கால் சவாரியும் எனக்கு மட்டுமல்ல எங்க கூட்டத்துக்கே ரொம்பவும் பிடித்த விஷயம் ...ஆனால் அந்தப் பக்கத்து வீட்டுப் பாட்டிக்குப் பிடிக்காத விஷயம்..]

எப்போதும் அந்தப் பாட்டி அந்தத் திண்ணையில்தான் படுத்திருக்கும்.

நாங்கள் அது கண்ணயரும் நேரமாப் பார்த்து அந்தக் கதவில் ஏறி விர்ரென்று ஒரு சவாரி செய்வதுண்டு...

அந்தக் கதவு போடும் கிறீச் என்ற சத்தத்திற்கு...
பாட்டி கண் விழித்து காட்டுக் கத்தல் கத்த ஆரம்பித்து விடுவாள்.

வெள்ளைப் புடவையும் வெள்ளைச் சுருள் முடியுமாய் ஒல்லி உடம்புமாய் பாட்டி ஒரு வெண் பேயாய்தான் காட்சியளிப்பாள்.

அவளைச் சீண்டிப் பார்ப்பதில்தான் எவ்வ்ளோ சந்தோஷமோ?

அந்தப் பெர்ரீய கதவுக்குத் தொலையவே முடியாத ஒரு சாவி...

ஆனாலும் எப்போதும் அதை முந்தானையில் முடிந்து கொண்டு அந்தத் திண்ணையில் படுத்திருப்பாள்.

மெல்ல அதை எடுத்து ஒளித்து வைத்து அவளை அலைய வைப்போம்.

அந்த வயசிலும் கண் பக்கத்திலே வைத்துக் கொண்டு திண்ணைத் தூணில் சாய்ந்து உட்கார்ந்து ஆனந்த விகடன் படிப்பாள்...

அப்போ பின்னாலிருந்து வேப்பங்கொட்டை அடிப்போம்...

அவள் முற்றம் கூட்டிப் பெருக்கும் போது எங்க வீட்டு மாடிலேருந்து புஸ் புஸ் பாட்டிலிலிருந்து தண்ணீரடித்துக் கலாய்ப்போம்.

இரவானால் அவள் வீட்டிற்கு மட்டும் லைட் கிடையாது.

அந்தத் திண்ணையின் சுவரில் ஒரு விளக்குப் பிறை...

அதில் ஒரு மண்ணெண்ணை விளக்கு எரியும்.

அந்தப் பின்னொளியில் வெண் பாட்டி வெண் பேய் போலவே இருப்பாள்..

அப்புறம் ஒரு விடுமுறைக்குப் போயிருக்கும் போது அந்த வீடும் திண்ணையும் காலியாக இருந்தது.

மாம்மையிடம் பாட்டியைப் பற்றிக் கேட்டதற்கு செத்துப் போச்சு என்றார்கள்.அந்தப் பெர்ரீய கதவு திறந்துதான் கிடந்தது....

எனக்கு ஒற்றைக் கால் சவாரி மறந்தே போய் விட்டது.திடீரென்று மாம்மை வீடு பிடிக்காமல் போய் விட்டது.

இப்பவும் திண்ணை என்றால் வெள்ளைப் பாட்டிதான் நினைவுக்கு வருகிறது.பாவம் பாட்டி ..ரொம்பத்தான் பாடாய்ப் படுத்தியிருக்கிறோம்...

ரெண்டு பேரைத் திண்ணை மலரும் நினைவுக்குக் கூப்பிடணுமாமே???நான் நினைவுகளை மலர வைக்க அழைப்பது........

1.வினையூக்கி
2.அந்தோணிமுத்து...

வருவீங்கதானே???

15 comments:

shri ramesh sadasivam said...

ஒரு நல்ல சிறுகதை படித்த உணர்வு.

rapp said...

மிக நெகிழ்ச்சியூட்டும் பதிவு.

Vijay said...

நல்ல மணமான ஊதுவத்தி உங்களுது.

ஸ்ரீ said...

azhaga irundhahuka unga thinnai ninaivugal, Azhaippai etru ezhudhiyadhukku nandri :)

Aruna said...

shri ramesh sadasivam said...
ஒரு நல்ல சிறுகதை படித்த உணர்வு.

நன்றி ரமேஷ்.
அன்புடன் அருணா

Aruna said...

rapp said...
//மிக நெகிழ்ச்சியூட்டும் பதிவு.//

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி...rapp
அன்புடன் அருணா

Aruna said...

Vijay said...
//நல்ல மணமான ஊதுவத்தி உங்களுது.//

வஞ்சப் புகழ்ச்சி அணி எதுவும் இல்லையே??
அன்புடன் அருணா

Aruna said...

ஸ்ரீ said...
//azhaga irundhahuka unga thinnai ninaivugal, Azhaippai etru ezhudhiyadhukku nandri :)//

முதல் முதலா நம்மளை மதிச்சு அழைச்சிருக்கீங்க?? வராட்டா எப்படி
ஸ்ரீ??
அன்புடன் அருணா

அந்தோணி முத்து said...

அழைப்புக்கு மிக்க நன்றி அரசியாரே.

தங்களின் ஆணை நிறைவேற்றப்படும்.

என்ன? ஒரு 10 நாள், வாய்தா வேணும்.

அவ்ளோதான்.

கொடுக்கலைன்னா அரசர்கிட்ட ரிப்போர்ட் பண்ணுவேன்.

:-)

அந்தோணி முத்து said...

//நாங்கள் அது கண்ணயரும் நேரமாப் பார்த்து அந்தக் கதவில் ஏறி விர்ரென்று ஒரு சவாரி செய்வதுண்டு...//

எங்கள் வீட்டிலும் இது போன்ற ஒரு கதவுண்டு.

திண்ணை உண்டு.
(இன்னும் இருக்கிறது.)

நாங்களும் இது போல் விளயாடியதுண்டு.

ஆனா ஒண்ணு.
அண்ணனைத் தவிர யாருக்கும் நான் பயந்ததில்லை.

கயல்விழி முத்துலெட்சுமி said...

நன்றாக எழுதி இருக்கீங்க..
உங்க பக்கத்துல வந்தவங்க என்ணிக்கையை கணக்கிடும் எண்ணுவானை மாத்துங்களேன்.. அது ஒரு விளம்பரம் பக்கத்தை ஓப்பன் செய்யுது.. நேரம் எடுக்குது பக்கம் லோட் ஆக...

Aruna said...

அந்தோணி முத்து said...

//ஒரு 10 நாள், வாய்தா வேணும்.

அவ்ளோதான்.

கொடுக்கலைன்னா அரசர்கிட்ட ரிப்போர்ட் பண்ணுவேன்.//

10 நாள்தான்.....அதுக்கப்புறம் ஒரு நிமிடம் கூடக் கிடைக்காது...சரியா?
அன்புடன் அருணா

Aruna said...

கயல்விழி முத்துலெட்சுமி said...
//நன்றாக எழுதி இருக்கீங்க..
உங்க பக்கத்துல வந்தவங்க என்ணிக்கையை கணக்கிடும் எண்ணுவானை மாத்துங்களேன்.. அது ஒரு விளம்பரம் பக்கத்தை ஓப்பன் செய்யுது.. நேரம் எடுக்குது பக்கம் லோட் ஆக...///

நன்றி கயல்விழி...
எனக்கும் தெரியுது...ஆனால் ஏதோ corrupted script இருக்குன்னு நினைக்கிறேன்...சீக்கிரமே சரி செய்கிறேன்...
அன்புடன் அருணா

வினையூக்கி said...

திண்ணை அழைப்பிற்கு நன்றி . மிக விரைவில் திண்ணைப்பதிவு தரப்படும். ஸ்ரீரமேஷ் சதாசிவம் சொன்னது போல் அழகான சிறுகதை படித்த உணர்வு

lakshmi said...

Hi Aruna, short and sweet story "Thinnai" i like it.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா