பின்னாலிருந்து புததகத்தைப் படிக்க ஆரம்பிக்கும் போதும்
புத்தகத்தை மூடும் போது மூலை மடக்கி வைக்கும் போதும்
வரி வரியாய் சிவப்பு மையால் அடிக்கோடிட்டு வைக்கும் போதும்
படித்துக் கொண்டே பென்சிலால் கோலம் போடும் போதும்
எழுதப் படாத பக்க நுனையைக் கிழித்துக் காது குடையும் போதும்
எச்சில் தொட்டுப் பக்கம் திருப்பும் கிறுக்குத்தனத்துக்காகவுமாய்
புத்தக நாயகிக்கு மீசையும் நாயகனுக்குப் பொட்டும் வரையும் போதும்
மேதாவியாய்க் குண்டுப் புத்தகத்தை தலையணையாக்கும் போதும்
ரயில் பயணத்தில் புத்தகத்தை இரவல் கொடுக்கும் போதும்
பாதியாய் மடக்கி வைத்துப் படிக்கும் போதும்
முதல் பக்கத்தில் யாருடைய புத்தகமாயிருந்தாலும் அதில் பேரெழுதிக் கொள்ளும் போதும்,திடீரென வந்த பேல்பூரிக்காரனிடம் பேல்பூரி வாங்க ஒரு பக்கத்தை விருட்டெனக் கிழிக்கும் போதும் அவனை உடனே டைவோர்ஸ் பண்ணி விடலாம் போலிருக்கும் அவளுக்கு.
அவளுக்கும் அவனுக்கும்தான் எவ்வளவு முரண்பாடுகள்.
புதுசாகப் புத்தகங்கள் வாங்கிக் குவித்துப் படித்துச் சேர்த்து வைக்க வேண்டும் அவளுக்கு. புத்தகம் படித்தவுடன் பழைய பேப்பர் கடைக்குப் போட்டு விடவேண்டும் அவனுக்கு.
பிடித்ததைப் படித்துப் பேசிப் பேசிக் களைக்கவேண்டும் அவளுக்கு. படித்து முடித்தவுடன் அடுத்தது என்ன என்று பறக்க வேண்டும் அவனுக்கு.
பாலகுமாரனைத் திகட்டத் திகட்டப் பக்கம் பக்கமாக ரசித்துப் படிக்கவேண்டும் அவளுக்கு. ஒரே மூச்சில் ஒரு இரவில் படித்து முடிக்கவேண்டும் அவனுக்கு.
பிடித்த புத்தகமென்றால் திரும்பித் திரும்பிப் படிக்கவேண்டும் அவளுக்கு. ஒரு தடவை படித்த புத்தகத்தைத் தொடக்கூடப் பிடிக்காது அவனுக்கு.
கதையின் மாந்தர்களை,புத்தகத்தின் நாயகன் நாயகியைப் பற்றிச் சிலாகித்து அந்தப் பெயர்களின் மயக்கத்தில் உழன்று கிடப்பது அவளுக்குப் பேரானந்தம். அவனுக்குப் படித்த நிமிடத்தில் மறந்து விடும் வினோத குணம் அவனுக்கு..
சின்ன வயதில் இருந்தே "என்ன புத்தகமெல்லாம் படிப்பீங்க? " என்ற கேள்வியுடன்தான் மனிதர்களிடம் அறிமுகப் பேச்சை ஆரம்பிக்கத் தெரியும். "நான் புத்தகம் படிப்பதில்லை" என்று யாரேனும் சொல்லி விட்டால் போதும் அடுத்தது என பேசுவதென்று தெரியாமல் முகம் திருப்பிக் கொள்வாள்.
இதென்ன பெரிய விஷயம்??? அவன் பெண் பார்க்க வந்த போது
"என்ன புத்தகமெல்லாம் படிப்பீங்க?" என்ற கேள்வியை கேட்டதனால்தான் அவனைப் பிடிக்க ஆரம்பித்ததே. ஆனால் இப்பிடிப் புத்தகம் படிக்கும் பழக்கமே ரெண்டு பேருக்கும் இடையில் விரிசலை உண்டு பண்ணும் என அவள் நினைத்திருக்கவில்லை. ஒரே கூரையின் கீழ் வாழ
இவையெல்லாம் பெரிய தடையாக அவளுக்குத தோன்றுவதில் வியப்பொன்றுமில்லை. ஏனெனில் அவள் புத்தகம் படிப்பது என்பதை வாழ்வியலாகப் பார்ப்பதுதான். அவனுக்கு இது ஒன்றும் பெரிய தடையில்லை.காரணம் புத்தகம் படிப்பது ஒன்றே வாழ்வியலின் ஆதாரமில்லை என்பது அவன் நினைப்பு.
இது ஒன்றும் பெரிய விஷயமில்லையென்று ஒதுக்க முடியவில்லை அவளால். ஓடி ஓடிப் படிப்பதை யாரிடம் பகிர? மனதுக்குள்ளேயெ போட்டு மூடி வைத்து ஒரே இறுக்கமாய் இருந்தது. புத்தகம் அவளின் நட்பு மாதிரி அவளுக்கு.
அவன் யாரிடமோ ஃபோனில் கத்திக் கொண்டிருந்தான். ம்ம்ம் இன்னுமொரு கெட்ட பழக்கம் ..ஃபோன் பேசினால் ஊர் முழுக்க கேட்கும். ஐயோ கொஞ்சம் பார்த்துப் பேசுங்க என்று சொல்லி விட்டால் போதும்.ஃபோன் லைனில் இருந்து கொண்டே எரிந்து விழுவான்.
"நாளைக்கா? ஊஹும் சான்ஸே இல்லை.நான் வர முடியாது.புரிஞ்சுக்கோப்பா....கொஞ்சம் அடுத்தவனையும் சம்பாதிக்க விடுவோம்...போனா போகுது....நான் வர முடியாதுப்பா ...அட எங்க கல்யாண நாளுப்பா ...கோவிலுக்குப் போகணும்."
இந்த வார்த்தைகளில் எத்தனையோ அன்பின் மனக்கதவுகள் திறந்தன...வெறுப்பின் கதவுகள் அடைபட்டன. இனிமையான தென்றல் நுழைந்து வாழ்வை இனிமையாக்கியது போலிருந்தது அவளுக்கு..பால்கனியில் வந்து வானத்தை அண்ணாந்து பார்த்தாள். சந்தோஷச் சாரல் பூப்பூவாய் பொழிய ஆரம்பித்தது!
36 comments:
அருமை அருணா. அதுவும் அந்த முதல் பத்தி ஒரு அழகான கவிதை:)!
இயல்பான வரிகள். முதல் பத்திக்கு ஸ்பெசல் பூங்கொத்து.
அட முதல் இரண்டு பின்னூட்டங்கள் ஒரே கருத்தில்...ஒரே நேரத்தில்...
இயல்பான வரிகளில் யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது...
ஆசிரியைக்கு பூங்கொத்து.... :)
திடீரென வந்த பேல்பூரிக்காரனிடம் பேல்பூரி வாங்க ஒரு பக்கத்தை விருட்டெனக் கிழிக்கும் போதும் அவனை உடனே டைவோர்ஸ் பண்ணி விடலாம் போலிருக்கும் அவளுக்கு.//
ஆஹா, ஆஹா என்ன ஒரு அற்புதமான மொழி நடை. இந்த வரிகள் தான் இவ் உரைநடையினை மேலும் மேலும் அழகுபடுத்துகின்றன. வாழ்வின் இனிமையான தருணங்களையும், ஒரே திசையில் ஒரே இரசனையோடு பயணிக்கும் இரு உள்ளங்களையும் எழுத்தோவியம் மூலம் படமாக்கியுள்ளீர்கள். அருமை.
ஆஹா............ கொன்னுட்டீங்க!!!!!!!!!!!!
எண்ண முடியாத பூங்கொத்துக்கள் !
:)
இந்த வார்த்தைகளில் எத்தனையோ அன்பின் மனக்கதவுகள் திறந்தன...வெறுப்பின் கதவுகள் அடைபட்டன. இனிமையான தென்றல் நுழைந்து வாழ்வை இனிமையாக்கியது போலிருந்தது அவளுக்கு..பால்கனியில் வந்து வானத்தை அண்ணாந்து பார்த்தாள். சந்தோஷச் சாரல் பூப்பூவாய் பொழிய ஆரம்பித்தது!
...How sweet!
wow....
sweetest writing
:))பூங்கொத்து கதைக்கு..
புத்தகக் காதலரும் அவர் காதலும் வாழ்க!
பிரமாதம்.. எக்கச்சக்க பூங்கொத்துகள் :-)))
அருமை. திருமணத்துக்கு முன் ரசனைகள் ஒரே மாதிரி இருக்க வேண்டுமென நினைப்பது இயல்பு தான். ஆனால் அவை வேறு வேறாய் இருக்கும் போது தான் நாம் மேலும் சில பக்கங்களை, நியாயங்களை உணர்கிறோம்; புரிகிறோம்
படிப்புலகையும், பதிவுலகையும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்! :)))
ஒன்றுமே இல்லாத சாதாரண நிகழ்வுக்கு வானமே இடிந்த வருத்தம். இயல்பாய் வரும் அன்புக்கு உலகமே கைக்குள் வந்த பேரானந்தம். :)
பூங்கொத்து பிடிங்க.
அருணா மேடம் பூங்கொத்து
//கொஞ்சம் அடுத்தவனையும் சம்பாதிக்க விடுவோம்...போனா போகுது....நான் வர முடியாதுப்பா ...அட எங்க கல்யாண நாளுப்பா ...கோவிலுக்குப் போகணும்."
இந்த வார்த்தைகளில் எத்தனையோ அன்பின் மனக்கதவுகள் திறந்தன..//
டச் பண்ணிட்டிங்க போங்க...
அத்தனையும் அழகு அருணா...
அட புத்தகம் படிப்பவர்கள் இந்த முதல் பந்தியில் சொல்லப்பட்ட இவ்வளவு சேட்டைகள் விடுவார்களா?
இந்தக் குணாதிசயங்களுக்காக விவாகரத்துக் கூட வாங்கிவிடலாமென எண்ணம் வருமா?
ஆனாலும் இவ்வளவையும் அந்த கடைசி முடிவில் துடைத்து விட்டீர்கள். இவற்றை நீங்கள் வெகுஜனப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதில்லையா?
கசப்பும் இனிப்பும் கலந்தது தான் வாழ்க்கை. நல்ல எழுத்தோட்டம் .
முகப்பை அலங்கரிக்கும் பாரதியின் வார்த்தைகளும் அழகு
மீண்டும் பூங்கொத்து.
pataaasaa irrunthathuuuuuuuuuuuuu
முதல் பத்தியில் அவனின் குணாதிசயங்கள் டைவோர்ஸ் பண்ணிவிடலாம் என்கிற அளவுக்கு யோசிக்க வைக்க கடைசி வரியில் இருவருக்கும் மணநாளை நினைவுபடுத்த அவளுக்கு சந்தோஷச் சாரல் பூப்பூவாய்த் தூவியது பொருத்தமில்லாத சம்பிரதாயத்தில் வாழ்க்கை ஊசலாடுவதாய்க் காட்டுகிறது அருணா.
அவன் பார்வையிலிருந்து அவள் எப்படிப்பட்டவளாய் இருப்பாளோ?
ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது.
ஒரு பிரச்சினைக்கு மூன்று பக்கங்கள்.
உன் பக்கம்.
என் பக்கம்.
நியாயத்தின் பக்கம்.
தவிர மிகச் சிறிய விஷயங்கள் சகிப்புத் தன்மையற்றதால் எத்தனை பூதாகாரமாய் உருவெடுக்கிறது டைவோர்ஸ் வரை?
வெவ்வேறு ரசனைகள் பொருந்தாது சேர்ந்து வாழ்பவர்களுக்கிடையேயான அன்பு எத்தகையதாய் இருக்குமென அதிர்ச்சியாயும் இருக்கிறது அருணா.
அருணா மேடம் பூங்கொத்து :)))
புத்தகத்தின் மீதுள்ள பிரியத்தை அழகாச் சொல்லியிருக்கீங்க அருணா. பாராட்டுக்கள்!
//அவனை உடனே டைவோர்ஸ் பண்ணி விடலாம் போலிருக்கும் அவளுக்கு.//
இதுக்கெல்லாம் டைவர்ஸா?? என்னங்க இது அநியாமா இருக்கு?
சுந்தர்ஜி said...
/ முதல் பத்தியில் அவனின் குணாதிசயங்கள் டைவோர்ஸ் பண்ணிவிடலாம் என்கிற அளவுக்கு யோசிக்க வைக்க கடைசி வரியில் இருவருக்கும் மணநாளை நினைவுபடுத்த அவளுக்கு சந்தோஷச் சாரல் பூப்பூவாய்த் தூவியது பொருத்தமில்லாத சம்பிரதாயத்தில் வாழ்க்கை ஊசலாடுவதாய்க் காட்டுகிறது அருணா./
இல்லை சுந்தர்ஜி..சிலச் சில நேரங்களில் கோபத்தில், நாம் நினைத்தபடி நடக்க முடியாத பட்சத்தில் வெறுப்பும், நம்மைப் பற்றி அக்கறை கொள்ளும் நேரத்தில் அன்பும் பொங்கி வருவது ரொம்ப இயல்பாகவே தோன்றுகிறது
/வெவ்வேறு ரசனைகள் பொருந்தாது சேர்ந்து வாழ்பவர்களுக்கிடையேயான அன்பு எத்தகையதாய் இருக்குமென அதிர்ச்சியாயும் இருக்கிறது அருணா./
சேர்ந்து வாழ்வோரின் ரசனையும் ஒன்றாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லைன்னு நினைக்கிறேன் சுந்தர்ஜி.இருவரின் ரசனைகளுக்கும் அவர்களுக்குரிய ஸ்பேஸ் இருந்தால் போதுமென்பது என் எண்ணம்!
அசத்தல்
ரசித்தேன்!!
அழகிய மணவாழ்க்கை, அதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். :)
கடைசி ரெண்டு பாரவுல வச்சீங்களே ஒரு ட்விஸ்டு, ஆஹா, அருமை.. தொடருங்கள், நன்றி.
ரொம்ப நாளைக்கப்புறம் இயல்பான இல்லறத்தைப் பார்க்கிறேன். இதுவே ஒரு கணவன் வாயிலாக வந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறது:)
அழகாகக் கணவனைப் புரிந்து கொண்ட மனைவிக்கும், இந்தப் பதிவினால் மாறப் போகும் மனங்களுக்கு,எழுதிய உங்களுக்கு பூமழை தூவ ஆசை அருணா.
புத்தகம் படிப்பதை விடுங்கள். தினமும் படித்துப் படித்துச் சொன்னாலும் ஈரத்துண்டை மெத்தையில் சுருட்டி வீசிவிட்டுப் போயிருப்பதைப் பார்க்கையிலும் அப்படித்தானே ஒரு கோபம் வரும். ஆனால் அந்தக் கோபமும், “சாப்டியா” என்று ஆஃபிஸிலிருந்து கேட்கும் ஒரு ஃபோன்காலிலோ, மாலை கொண்டுவரும் பூவிலோ காணாமல் போகுமே!!
பூங்கொத்து....
ராமலக்ஷ்மி
கலாநேசன்
மாணவன்
நிரூபன்
துளசி கோபால்
ஷர்புதீன்
Chitra
பார்வையாளன்
முத்துலெட்சுமி/muthuletchumi
middleclassmadhavi
அமைதிச்சாரல்
மோகன் குமார் அனைவருக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்(Johan-Paris) /இவற்றை நீங்கள் வெகுஜனப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதில்லையா?/
நிறைய அனுப்பி ஏமாந்த அனுபவம் உண்டு.இப்போதெல்லாம் அனுப்புவதில்லை!:)
மனம் திறந்து... (மதி)
சுல்தான்
எஸ்.காமராஜ்
ஆர்.சண்முகம்
பாச மலர் / Paasa Malar
/ஜீவன்சிவம்
எம்.எம்.அப்துல்லா
vinu
அனைவருக்கும் நன்றி!
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா