நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, March 3, 2011

இடங்களை அடையாளப்படுத்தும் மனிதர்கள்.

         ஒவ்வொரு தெருவின் முக்கிலும் ஒரு பெட்டிக்கடை வாய்த்து விடுகிறது.அதில் அங்கிள் ஸ்டீபனோ அல்லது கணேசனோ அந்தக் கடைக்குச் சொந்தக்காரர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டின் அடையாளத்துக்கு ஸ்டீபன் முக்குக்கடை திரும்பியதும் ஐந்தாவது வீடு என்று சொல்லிக் கொள்ள ஏதுவாக.

                    பெட்டிக்கடை என்றாலே ஒருமுறை அப்பாவுக்கு வாங்கி போன சிசர்ஸ் சிகரெட் வியர்வையால் நைந்து போனதால் அப்பா திட்டுவார்களே என்று வீட்டுக்குப் போகாமல் திரும்பவும் ஸ்டீபன் அங்கிளிடம் "இன்னொரு சிகரெட் கொடுங்க அங்கிள் காசு நாளைக்குத் தருகிறேன்" என்ற கடன் தான் நினைவுக்கு வருகிறது.இன்னமும் திருப்பிக் கொடுக்கவில்லை!!

                       பள்ளிக்கூடம் பக்கத்தில் ஜெயக்குமார் ஸ்டோர்ஸ் என்னுடைய நிறைய முதல்கள் இங்கேதான் வாங்கப்பட்டிருக்கிறது. முதல் மை பேனா,முதல் மேப் ட்ராயிங்க் புத்தகம்,க்ராஃப் நோட்டு என.....பள்ளி எங்கிருக்கு? என்றால் நேரடியாக ஜெயக்குமார் ஸ்டோருக்குப் பக்கத்தில் என்றுதான் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். ஜெயக்குமார் ஸ்டோர் எங்கிருக்கு என்றால் பள்ளியின் பக்கத்தில் என்பார்களோ?

                     அந்த ஜெயக்குமார் கடைச் சொந்தக்கரரா?இல்லை சொந்தக்காரரின் அப்பாவா? மகனா? எதுவும் தெரியாது. ஒருமுறை பத்து ரூபாய் திருப்பிக் கொடுப்பதற்கு கடைக்காரர் இருபது ரூபாய் கொடுத்ததைத் திருப்பிக் கொடுத்ததற்காக அவர் கொடுத்த சௌ மிட்டாய் இன்னமும் நாக்கில் ருசிக்கிறது.அதனால் இன்னமும் ஜெயக்குமர் ஸ்டோர்ஸ் என்னுடன் பயணிக்கிறது.

                    அடுத்த தெருவில் ஒரு நாடார் கடையும்,அங்கே காலையில் விழித்தவுடன் காபி போடுவதற்காய் கருப்பட்டிக்காகவும் காபிப் பொடிக்காகவும் கடன் வாங்க ஒரு சின்னப் பெண் " அப்பா நாளைக்குக் கொடுத்துருவாங்கண்ணே" என்று நின்று கொண்டிருந்தது கூட நினைவிருக்கிறது.அவர் பெயர் நாங்கள் குடியிருந்த வரை யாருக்குமே தெரியாது.எல்லோருக்கும் அவர் நாடார்தான். உறவுமுறைகள் வேண்டுமென்றால் மாறிக் கொள்ளும்.சிலருக்கு நாடாரண்ணே,சிலருக்கு நாடார் மாமா,சிலருக்கு நாடார் தாத்தா இப்படி.

                        யாரும் பல் டாக்டர் வீடு எங்கேன்னு கேட்டால் போதும் தொங்கட்டான் பாட்டி வீட்டை ஒட்டிய சந்தில் மூன்றாவது வீடு என்று சட்டென்று சொல்லி விடுவோம். தொங்கட்டான் பாட்டி என்றுதான் பாம்படக் கிழவி அறியப்படுகிறாள். எங்க தெருவின் கடை கோடி வீடு தொங்கட்டான் பாட்டியோடது.ரொம்ப நாள் வரைக்கும் அந்தப் பாம்படம் முழுவதும் தங்கம் என்று நினைத்து பாட்டி எவ்வ்ளோ பணக்காரங்க என வியந்திருக்கிறேன், ஒருநாள் பாட்டி இந்தத் தொங்கட்டானை வச்சாக் கூட கடனை அடைக்க முடியாது தாயீ"ன்னு அம்மாகிட்டே சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்கும் வரையில்.

                      சித்தி வீடு பூக்காரச் செல்வியக்கா வீட்டுக்குப் பக்கத்து வீடுதான். பூக்காரச் செல்வியக்கா குழந்தைகளுக்கும்,அவள் வயதையொத்தவர்களுக்கும்,அம்மாக்களுக்கும், பாட்டிமார்களுக்கும் கூட பூக்காரச் செல்வியக்காதான். செல்வியக்கா மல்லிப்பூ வைத்துப் பார்த்ததில்லை. எப்போதும் செவ்வந்திப்பூ தான்.

             "மல்லிப்பூ பிடிக்காதாக்கா?" எனக் கேட்டதற்கு "இல்லப்பா எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆனா அம்மா வையும். ரெண்டு காசு பாக்கத் துப்பில்லே..கொண்டைக்கு  மல்லிப்பூ கேக்குதோ? போதும் போதும் செவ்வந்திப்பூ" அப்படீன்னு பூக்கடைகளைப் பாக்கும் போதெல்லாம் பூக்காரச் செல்வியக்காதான் நினைவுக்கு வரும்.
                        
                       வீடுகளுக்கு எண்கள் இருந்தாலும் நினைவுக்கு வருவதில்லை.நினைவில் வைத்துக் கொள்வதுமில்லை. ஜெகஜோதி பேக்கரி தாண்டிப் போய்,ரெண்டாவது தெரு தாண்டி அம்பாள் காபிக்கடை பக்கத்திலேயேதான் இவங்க பாட்டி வீடிருக்கு. இப்படி இடங்கள் தோறும் யாரோ, யாரையோ ,யாருக்கோ நினைவு படுத்திக் கொண்டேதானிருக்கிறார்கள்.

                நிறைய பேரை இப்படி இடங்களை வைத்து அடையாளம் காட்டப்பட்டு முகங்கள் மறந்தே போய் விட்டது.அனாலும் அந்த முகங்களை விட அவர்கள் குறிக்கும் இடங்களால் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

                     இப்படிப் பெயர்களால் இடங்கள் யாரால் எப்போது அடையாளம் காட்ட ஆரம்பிக்கப்பட்டிருக்கும்?என் வீட்டை எப்படி அடையாளம் காண்கிறார்கள்?அல்லது காட்டுகிறார்கள். நான் எப்பிடி அடையாளம் காட்டப்படுகிறேன்? விடை தெரியாத பல கேள்விகளுடனே இந்தக் கேள்வியும் என்னோடு பயணிக்கிறது.

24 comments:

ஜெய்லானி said...

உண்மைதான் பல இடங்கள் சொல்லும் போது கூடவே வரும் நினைவுகள் அருமை

vinu said...

fantaastic; not just for sake , i meant it!


classic :-)

மாணவன் said...

நினைவலைகளின் உணர்வுகளை அழகாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள் அருமை....

//நிறைய பேரை இப்படி இடங்களை வைத்து அடையாளம் காட்டப்பட்டு முகங்கள் மறந்தே போய் விட்டது.அனாலும் அந்த முகங்களை விட அவர்கள் குறிக்கும் இடங்களால் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.//

முற்றிலும் உண்மை.... :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்லா இருந்தது அருணா.. எங்க ஊரின் இடங்களை அடையாளப்படுத்தும் மனிதர்களை நினைத்துக்கொண்டேன்..

இப்பக்கூட ஜெய்ப்பூரை நினைச்சிக்கிட்டா நீங்க நினைவுக்கு வரீங்க..:))

அப்பாதுரை said...

வீட்டை விடுங்க. நாட்டையே அப்படித்தான் அடையாளம் காட்டுறாங்களாம்.

Chitra said...

இப்படிப் பெயர்களால் இடங்கள் யாரால் எப்போது அடையாளம் காட்ட ஆரம்பிக்கப்பட்டிருக்கும்?என் வீட்டை எப்படி அடையாளம் காண்கிறார்கள்?அல்லது காட்டுகிறார்கள். நான் எப்பிடி அடையாளம் காட்டப்படுகிறேன்? விடை தெரியாத பல கேள்விகளுடனே இந்தக் கேள்வியும் என்னோடு பயணிக்கிறது.



......என்னவோ தெரியல... எனக்கு இந்த பதிவு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு.... நெல்லையில், எங்க தெரு ஆட்கள் ஞாபகம் எல்லாம் வந்துச்சு... உங்களுக்கு நன்றி சொல்லணும்.

Sundari said...

சில சமயங்களில் அடையாளங்களுக்கான தேடல்தான் வாழ்க்கையை நகர்த்துகிறது.

அருமையான பதிவு.

ஷர்புதீன் said...

:) entry

Yaathoramani.blogspot.com said...

பெட்டிக்கடை சினிமா தியேட்டர் டிரான்ஸ்பார்மர்
ஒயின்ஷாப் பிள்ளையார் கோவில் இப்படி
எத்தனையோ இடங்கள் நம் வீட்டை அடையாளம்
காட்டுவதற்காக தவம் செய்து கொண்டிருக்கின்றன
நாம் தான் அவைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

உண்மைதான்..

சாந்தி மாரியப்பன் said...

இடங்களை சில நேரங்களில் மனிதர்களும் சில நேரங்களில் இடங்களுமே அடையாளப்படுத்துதே.. சுவாரஸ்யமான பகிர்வு..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அற்புதமான பதிவு அருணா.

எதையுமே அடையாளப் படுத்தும் உயிருள்ள சாதாரண மனிதர்கள் அடையாளம் காட்டுபவர்களாயிருந்தார்கள்.

இன்றுள்ளவர்கள் பிறரோடு அன்பு செலுத்துவதையே தவிர்க்கும்போது உறவு எப்படி மலரும்?வான் நோக்கிய பார்வை பக்கத்து உறவுகளை எப்படிப் பார்க்கும்?

பிடியுங்கள் உங்கள் பூச்செண்டை.

சக்தி கல்வி மையம் said...

சரியாச் சொன்னீங்க..

அமுதா கிருஷ்ணா said...

அருமையான நினைவுகள்.எல்லோருக்கும் இருக்கும் இந்த அனுபவத்தை நினைவூட்டி விட்டீர்கள்.

http://rajavani.blogspot.com/ said...

பிடியுங்கள் உங்கள் பூச்செண்டை

காமராஜ் said...

அருணா மேடம்
என்ன அருமையான நினைவோடை.
படித்துக்கொண்டே போய் பாய் கடையை எட்டிப்பார்க்கிறேன். ஆட்டோவில் வந்த யாரோ யார்வீட்டையோ அடையாளம் கேட்கிறார்.

நடட்சத்திரப்பதிவரானதிலிருந்து டெம்ப்ளேட்டில் அழகழகான நட்சத்திரங்கள் எழுத்தில் அதைவிட அழகாய்.

CS. Mohan Kumar said...

பூங்கொத்து !

பாச மலர் / Paasa Malar said...

மலரும் நினவுகள் கிளறிவிட்டது இப்பதிவு அருணா...

ஈரோடு கதிர் said...

வெகு அருமை!

அமர பாரதி said...

அருணா,
அருமையான பதிவு. ஒவ்வொரு பெயரடையாளம் காணப்பட்ட வீடும் முதல் முறை ஏதாவதொரு வித்தியாசமான (முதல் முயற்சி) செயலுக்காக அறியப்பட்டிருக்கும். மிலிடரிக்காரர் வீடு, அந்த ஊரிலேயே முதல் முறை மிலிட்டரியில் சேர்ந்தவரால். அதாவது ஊருக்கு அந்த நபரின் முதல் அறிமுகம் கிடைத்த வகையில்.

வல்லிசிம்ஹன் said...

வீடும் பெயரும் கடையும் முதலாளியும் ஒன்றாக நினைவுக்கு வருகிறதே. அருணா. அருமையான பதிவு. நானும் எங்க ஊர்ல தோழிகளின் வீட்டை வைத்துதான் இதுவரை அடையாளப் படுத்திக் கொள்கிறேன்.

கோமதி அரசு said...

பிடிங்க அருணா பூங்கொத்தை.

மலரும் நினைவுகள் அருமை.

செ.சரவணக்குமார் said...

பூங்கொத்து டீச்சர்.

மணிவேலன் said...

அருமை..

பிடிங்க டீச்சர் பூங்கொத்தை.......

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா