நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, June 29, 2011

ஜஸ்ட் ஒரே வாரம் :(

          எப்படி ஒரு வாரத்துக்குள்ளே எல்லோரையும் பார்த்து ஒரு வருடக் கதையைப் பேசி முடிச்சேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு!!! ஆமா இந்த தடவை தமிழ்நாடு விஸிட் ஜஸ்ட் ஒரே வாரம்தான். எப்பவும் போல இந்த தடவையும் சென்னை போன போது பாண்டிச்சேரி மதர் ஆஷ்ரம் போயிருந்தோம். இந்த முறையும் புக்கிங்க் செய்யும் போது செய்த குழறுபடியால் ஆரோவில் உள்ள மாத்ரி மந்திர் என்ற ஒரு வட்ட வடிவான சர்வ சமயப் பிரார்த்தனைக் கூடத்திற்குள் செல்ல முடியவில்லை. இங்கு செல்வதென்றால், ஓரிரு நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
                                மாத்ரி மந்திர்
124 நாடுகளில் இருந்தும் வந்திருந்த அதன் பிரதிநிதிகள், தங்கள் தாய் நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கைபிடி மண்ணை, மனித இன ஒற்றுமையின் அடையாளத்தை வெளிபடுத்தும் வண்ணம் ஒரே இடத்தில் குவித்து இந்த மந்திர் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
                               வரவேற்பது போல நீர்ச் சுழல்! 
                               
   வழி நெடுக மூங்கில் காடு! அனைவரையும் ஈர்ப்பது சுற்றியுள்ள இயற்கை எழில். மூங்கில் மரங்கள் ஒரு பக்கம் விதம் விதமான மரங்கள் ஒரு பக்கமுமாக பின்னிப் பிணைந்து ஒரே மரமாக வளர்ந்து    
                         கிடக்கின்றது
அடித்துக் கிளப்பும் வெயிலிலும் குளிர் நிழல் தரும் மரக் கூட்டம்!

    மாத்ரி மந்திரின் சிறிய மாதிரியும் அதன் உள்கட்டமைப்புகளும் முகப்பில் உள்ள இன்ஃபர்மேஷன் சென்டரில் வைக்கப் பட்டிருக்கிறது.

            உள்ளே நுழைந்த நேரத்திலிருந்து இசைத்துக் கொண்டிருக்கும் உயர்ந்த மரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் விண்ட் சைம் ஒரு இனிமையான மன அமைதி கிடைக்கும் ஒரு வித்தியாசமான உணர்வு கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

Thursday, June 2, 2011

புகுந்து கொள்கிறது பொய்யும்.....

எந்தப் பேனாவால் எழுதினாலும்
எந்த மொழியில் எழுதினாலும் அதனுள்
கொஞ்சம் புகுந்து கொள்கிறது
பொய்யும்.....

எந்த தேசம் சுற்றினாலும்
எந்த உயரம் பறந்தாலும்
எந்தக் கடலின் ஆழம் அறிந்தாலும்
ஒடுங்கிக் கொள்ளத் தேவைப்படுகிறது
வீடும்

எத்தனை நிறைவேறிய
கனவுகள் முடிந்தாலும் ஒவ்வொரு
கனவின் முடிவிலும்
உயிர்ப்பித்துக் கொள்கிறது
ஒரு புதுக் கனவும்!

Saturday, May 28, 2011

அது ஒரு காலம்....

ஊருக்கு வரும்போதெல்லாம்
அம்மம்மாவின் சுருக்குப் பை
கொண்டு வந்த கனவுகள்
கழுத்துவரை உண்டு...
அது ஒரு காலம்....

காது குடையும் கோழிச்  சிறகும
கொஞ்சம் சில்லறையும்
கசங்கிய ஒத்த ரூபா நோட்டுக்களும்
எப்போதும்  கொண்டு வரும்
பெரும் பிரியத்தையும்
சுமந்திருக்கும் அந்தச்
சுருக்குப் பையைத் திறந்து
வாசம் பிடிச்சது ஒரு காலம்...

ஒல்லிக்குச்சி பாட்டிகள் எல்லோரின்
முகங்களும் ஒரே மாதிரியானதாக
சுருக்கங்களுடனும், இடுப்பில்
சுருக்குப் பைகளுடன்
பை நிறைய பிரியங்களுடனும்
இருக்கிறது எல்லா ஊரின்
அம்மம்மாக்களின் அடையாளங்களாய்...
என மயங்கியது ஒரு காலம்..

பட்டுத் துணியின் சுருக்குப் பையினுள்
சில்லறைகளுக்காக கைவிட்ட
சுருங்கிய கை விரல்களை இறுக்கி
"இதை எல்லோர் முன்னாலேயும்
வெளியே ஏன் எடுக்கிறே?"
என்று எரிச்சல்பட்டு
முகம் வாடிய அம்மம்மாவைக்
"கிழவி உயிரை எடுக்குது" ன்னு
சொல்ல வைத்ததுவும்
ஒரு காலம்.......


Monday, May 2, 2011

நினைவு வந்து விடாமலிருக்க...

மீன் தொட்டியில் கொஞ்சம் 
ப்ளாஸ்டிக் இலைகளையும்
செயற்கை அருவியும்
கூழாங்கற்களையும்
போட்டு வைத்தாள்
மீனுக்கு ஆற்று நினைவு
வந்து விடாமலிருக்க...

குருவிக்கூண்டில்
குட்டிக் குட்டியாய்
ப்ளாஸ்டிக் மரம் நட்டு
கிளை, பூ, பழம் 
தொங்க விட்டாள்
குருவிக்குக் கூடு நினைவு
வந்து விடாமலிருக்க...

அம்மா செருப்பு 
மாட்டிக் கொண்டே 
"ஆயாம்மாகிட்டே சேட்டை
பண்ணாம, அழாம இருக்கணும்..
சாக்லேட் வச்சிருக்கேன்" என்றாள்
பாப்பாவுக்கு அம்மா நினைவு
வந்து விடாமலிருக்க...