நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, May 5, 2010

வளையல்,கொலுசு,ஜிமிக்கி, மருதாணி!!

வாழ்வியல்(Life Skill) பாட வகுப்பின் போது ....
"What do you want the most?"
இது கேள்வி.
எல்லோரும் மார்க்,எஞ்சினியர்,டாக்டராகணும்,பணம்...அமெரிக்கா..இன்னும் பல பல எழுதியிருக்கும்போது என்னைக்கவர்ந்த பதில் இது.

வளையல்,கொலுசு,ஜிமிக்கி, மருதாணி என்று எழுதியிருந்த பெண்ணின் பதில்தான் அது.என்னை ஏன் கவர்ந்தது என்று நினைத்துப் பார்க்கையில் என்னையும் அந்த வயதில் ஈர்த்த விஷயங்கள் அதுவேதான்.

கலர் கலராய்க் கண்ணாடி வளையல்கள் போட்ட கைகளும்,அதன் உரசல்களும் மின்னல் வெட்டி வெட்டி சிணுங்கும் ஓசைகளுக்கும் அடிமை நான்...உடைந்த கண்ணாடி வளையல்களுக்காய் உயிர் போன மாதிரி அழுத அழுகைகள் தங்க மோதிரம் தொலைத்த போதும் கூட வராதது ஏன் என இன்றுவரை தெரியாத புதிரேதான்....

கொலுசு.....சொல்லும்போதே கிணி கிணியென மணியடிக்கும் மனதில்.பாதங்களில் கொலுசு போட ஆரம்பித்த நாளில் எத்தனை தடவை கால் அழகைப் பார்த்திருக்கிறேன் என்று எனக்குத்தான் தெரியும்.சன்னமாய்ச் சிணுங்கும் ஒலிக்காய் காலைத் தரையில் தோம் தோம் என அழுத்தி நடந்துப் பின் யாராவது கவனிக்கிறார்களா எனத் திரும்பி நாக்கைக் கடித்து வெட்கத்துடன் சிரித்த ஞாபகம் இப்போதும் மனதில் சாரலாய்.

பதின்ம வயதில் ஜிமிக்கி அணிந்த அத்தனை பெண்களையும் வயது வித்தியாசமின்றிப் பிடித்து விடும்.ஜிமிக்கி அணிந்த பெண்கள் பேசும்போது ஆடும் குடை ஜிமிக்கி கூந்தலிலும் காதோரத்திலும் ஏதோ ரகசியம் பேசுவது போலவேயிருக்கும்.ம.செ வரைந்த ஓவியங்களிலும் கூட இந்த ஜிமிக்கிக்காய்க் கொஞ்சம் கூடுதல் பிடிக்கும் இந்த ஓவியங்கள்.எல்லாப் பெண்களையும் அழகான தேவதையாக்கும் வித்தை தெரியும் இந்த ஜிமிக்கிகளுக்கு !

மருதாணிப் பேய் என்னும் பெயரே உண்டு எனக்கு.மிக்ஸியெல்லாம் கிடையாது அப்போ ...மாங்கு மாங்குன்னு அம்மியில் அரைக்கணும்.ஆனாலும் அம்மம்மா வீட்டுக்குப் போகும் போதெல்லாம் நாலு நாளைக்கு ஒரு தடவை இலை பறித்து அரைத்துக் கையெல்லாம் அப்பி விட்டு......அன்னிக்குன்னு பார்த்து மூக்குலெ அரிப்பு....கொஞ்சம் சொறிந்து விடுங்க அப்படீன்னு ஒருத்தர் மாற்றி ஒருத்தர்கிட்டே கெஞ்சி....காலையில் கழுவிப் பார்க்கும் ரத்தச் சிவப்பு விரல்களை அப்படியே திங்க வேண்டும் போலப் பிடிக்கும் எனக்கு.

அதனதன் வயதுக்குரிய இயல்பான ரசனைகளை மழுங்கடிக்கச் செய்யும்,மதிப்பெண்களின் பின்னாலும் ப்ரொஃபெஷன்களின் பின்னாலும் ஓடவைக்கும் கல்வி நிலை தேவைதானா? என்று கேள்வி எழுந்த போதும்

Goal Setting என்ற அடுத்த பாடத்தினை மனதின்றி நடத்தத் தொடங்கினேன்.

34 comments:

புலவன் புலிகேசி said...

நல்ல ரசனை..இப்போதெல்லாம் பிள்ளைகள் நீங்கள் சொல்வது போல் ரசிக்க கூட மனமும் நேரமும் இன்றித் திரிகிறார்கள்...

Porkodi (பொற்கொடி) said...

அழகான பதிவு. இவற்றை எல்லாம் ரசித்துக் கொண்டே மதிப்பெண்களிலும் கவனம் செலுத்த முடியும், அதற்கு சின்ன வதில் இருந்தே பழக்கப்படுத்தி விட்டால். எல்லாம் பெத்தவங்க/வளர்க்கறவங்க கைல தானே!

Porkodi (பொற்கொடி) said...

இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லணும்னா, மதிப்பெண்கள் முக்கியம்னு நினைக்க சரியான வயது எது? அப்படி ஒண்ணு இருந்த திடீர்னு அந்த வயதில் அந்த புரிதல் வந்துருமா? என் அனுபவத்தில் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் போதில் இருந்தே பரீட்சை, மதிப்பெண் எல்லாம் முக்கியம்னு வளர்க்கணும், அது அளவுக்கு அதிகமா தான் போக கூடாது. அப்படி இருக்கும் போது மத்த விஷயத்துக்கும் நேரம் இருக்கும்.. இப்போ நிறைய பேரு, 6 அல்லது 7ஆம் வகுப்பு வந்த பின்னும் படிப்பை ரொம்ப அசட்டையாக விடுகிறார்கள்.. அதுக்கு சொல்ல வந்தேன். உங்களுக்கு தெரியாதது அல்ல, ஏதோ சொல்லணும்னு தோணுச்சு. :)

காமராஜ் said...

தேவைகள் விரட்டும் வாழ்க்கையின் ஓட்டத்தில்.நிற்க ஆசுவாசமாய்த் திரும்பிப்பார்க்க கிடைக்கிற பொழுதுகள் குறுகுறுக்கும்.தூரப்புள்ளியில் ஏக்கங்கள் காத்துக்கிடக்கும்.
நல்ல நினைவு மீட்டல்.

ராமலக்ஷ்மி said...

//அதனதன் வயதுக்குரிய இயல்பான ரசனைகளை //

அந்தக் காலத்துக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்:)!

Madumitha said...

காலத்துக்குக் காலம்
ரசனை மாறிக்கொண்டேதானிருக்க
வேண்டும்.

Sanjai Gandhi said...

ஒரு வரி பதிலுக்கு இவ்ளோ விளக்கமா? சூப்பர்க்கா :)

Chitra said...

/////அதனதன் வயதுக்குரிய இயல்பான ரசனைகளை மழுங்கடிக்கச் செய்யும்,மதிப்பெண்களின் பின்னாலும் ப்ரொஃபெஷன்களின் பின்னாலும் ஓடவைக்கும் கல்வி நிலை தேவைதானா? என்று கேள்வி எழுந்த போதும்

Goal Setting என்ற அடுத்த பாடத்தினை மனதின்றி நடத்தத் தொடங்கினேன்.///



...... poetic post. Thank you. :-)

Maddy said...

ஏதோ ஒன்றிக்காக இந்த பொழுதின் இனிமையை நம்மில் பெரும்பாலும் மறந்தும் மறைத்தும் வாழ்கிறோம். அந்த பெண் ""லீவ் இன் தி மொமென்ட்"" என்பதை அறிந்தும் அறியாமலும் ரசித்து கொண்டிருக்கிறாள். நல்லது

pudugaithendral said...

வருடா வருடம் புதுக்கொலுசு போட்டுக்கொண்டது, ஜிமிக்கி இப்ப வரை என் ஃபேவரீட், மருதாணி ஆசையில் போன வருடம் மெஹந்தி போடக்கற்றுக்கொண்டேன். பசங்களுக்கு சின்னச்சின்ன ஆசைகள் ரொம்ப முக்கியம். அதை அழிச்சிட்டு இன்னா பெரிய வேலைக்கு படிப்பது.

கல்யாணி சுரேஷ் said...

எனக்கும் கூட மருதாணி, ஜிமிக்கி, கொலுசு எல்லாம் ரொம்ப பிடிக்கும் அருணா மேடம். அருமையான பதிவு. பூங்கொத்து. :)

Unknown said...

பூங்கொத்து

சந்தனமுல்லை said...

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை...ஒரு டீச்சரா நீங்க இதை சொல்றீங்கன்னா என்னாலே ஒப்புக்கொள்ள முடியவில்லை..அருணா என்ற தனிநபரின் கருத்துகளென்றால் ஏற்றுக்கொள்கிறேன் - மற்றவர்களின் லட்சியங்களுக்கும் ஆசைகளுக்கும் இந்த பெண்ணின் ஆசை குறைவில்லாதது என்றாலும்!

நேசமித்ரன் said...

அந்த பிஞ்சு கால்களின் கொலுசு சித்திரமும் இந்த இடுகையின் வரிகளும் அழைத்து செல்லும் தூரம் ....

நன்றி பூங்கொத்துகளுடன்

ஹேமா said...

அருணா இந்தக் காலத்தில் மருதாணி,கொலுசு,ஜிமிக்கி பிடிக்கும்ன்னு சொல்றதே பெரிய விஷயம் !

ஹுஸைனம்மா said...

ஜிமிக்கி - எந்த வயசானாலும், எல்லாருக்கும் ஃபேவரைட்!!

ஆனா, ஜிமிக்கி, கொலுசோட வாழ்க்கை முடிந்துவிடுவதில்லையே!! ஏன் விரும்பியவற்றை வாங்குமளவுக்கு வருவதற்கும் ஒரு “goal setting" தேவைதானே டீச்சர்!! இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும்.

அம்பிகா said...

அருணா,
ம. செ வின் ஜிமிக்கி அணிந்த பெண்முகங்கள் எனக்கும் மிக பிடித்தமானதே!
\\கலர் கலராய்க் கண்ணாடி வளையல்கள் போட்ட கைகளும்,அதன் உரசல்களும் மின்னல் வெட்டி வெட்டி சிணுங்கும் ஓசைகளுக்கும் அடிமை நான்...\\
:-)))
\\Goal Setting என்ற அடுத்த பாடத்தினை மனதின்றி நடத்தத் தொடங்கினேன்.\\
யதார்த்தம்.

*இயற்கை ராஜி* said...

very nice:-)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கவிதையான பதிவு. எல்லாரையும் அந்த நாளுக்கு கொண்டு போய்டீங்க அருணா... நானும் கொஞ்ச நாள் lecturer ஆ இருந்து இருக்கேன். உன்னதமான என்றும் இளமையா வெச்சு இருக்கற profession . வாழ்த்துக்கள்

Priya said...

உங்களைப்போலவே எனக்கும் கொலுசு ரொம்ப பிடித்த ஒன்று. மருதாணியும் பிடிக்கும். மிகவும் ரசித்து எழுதி இருக்கிங்க!

எல் கே said...

kavithai

sury siva said...

கை நிறைய வளையலிட்டு, உள்ளங்
கையிலே மருதானியிட்டு,
காலிலே கொலுசு மாட்டி, என்
காதுலேயும் ஜிமிக்கி போட்டு

கண் பட்டுவிடுமென்னு என்
கன்னத்திலுமோர் பொட்டு இட்டு,
கண்ணாடி முன் நிறுத்தி,
கண்ணே என் செல்லமென

கொஞ்சி மகிழ்ந்த அம்மா உன் அன்பை
விஞ்சுவது எதுவும் உண்டோ ?
பஞ்சு போல உன்னிதயம் இனி
பாரிலெங்கும் பார்ப்போமோ !!

அன்னை தினம் இன்று.
அவள் என்னை
அலங்காரம் செய்ததெல்லாம்
அத்தனையும் நினைக்கவச்ச
அருணா நின் பதிவின்
வருணனை நான் என் சொல்வேன் !
நின் நெஞ்சத்தின்
கருணையினை என் சொல்வேன் !!
காரிகையே !! நீ வாழி ! வாழி !!!

மீனாட்சி பாட்டி.

அன்புடன் அருணா said...

அதேதான் என் கவலையும் புலிகேசி!


/எல்லாம் பெத்தவங்க/வளர்க்கறவங்க கைல தானே!/
100% உண்மை பொற்கொடி!

Porkodi (பொற்கொடி) said...
/உங்களுக்கு தெரியாதது அல்ல, ஏதோ சொல்லணும்னு தோணுச்சு. :) /
அட!நீங்க தாராளமா சொல்லலாம்!
சமயங்களில் யாருமே குழந்தைகளை குழந்தைகளாய் இருக்க விடுவதில்லையென்பதுதான் என் கவலை!

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/ நல்ல நினைவு மீட்டல்./
நினைவு மீட்டல் சுகம் என்பதைப் புரியவைத்ததே வலைப்பூதானே காமராஜ்!

ராமலக்ஷ்மி said...
/ அந்தக் காலத்துக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள்:)!/
அட உங்களையுமா???
நன்றி Madumitha !
SanjaiGandhi™ said...
/ஒரு வரி பதிலுக்கு இவ்ளோ விளக்கமா? சூப்பர்க்கா :) /
சில நேரங்களில் ஒற்றை வரிகள் மனதைச் சுண்டி இழுத்துவிடும் சஞ்செய்!

அன்புடன் அருணா said...

நன்றி Chitra
Maddy said...
/ அந்த பெண் ""லீவ் இன் தி மொமென்ட்"" என்பதை அறிந்தும் அறியாமலும் ரசித்து கொண்டிருக்கிறாள். நல்லது/
அப்படி இருப்பதுவே இப்போதெல்லாம் அதிசயம்தானே maddy!

புதுகைத் தென்றல் / பசங்களுக்கு சின்னச்சின்ன ஆசைகள் ரொம்ப முக்கியம். அதை அழிச்சிட்டு இன்னா பெரிய வேலைக்கு படிப்பது./
ரொம்ப சரி தென்றல்!

கல்யாணி சுரேஷ்

அன்புடன் அருணா said...

நன்றி கல்யாணி சுரேஷ் !

Anonymous said...

"சிணுங்கும் ஒலிக்காய் காலைத் தரையில் தோம் தோம் என அழுத்தி நடந்துப் பின் யாராவது கவனிக்கிறார்களா எனத் திரும்பி நாக்கைக் கடித்து வெட்கத்துடன் சிரித்த ஞாபகம் இப்போதும் மனதில் சாரலாய்.""வாவ் cute..."

.அருணா அக்காவா இது.எவ்ளோ சின்ன சின்ன விசியங்கள் கூட அழகா தொகுத்து இருக்கீங்க


நன்றி
வாழ்க வளமுடன்
காம்ப்ளான் சூர்யா

அன்புடன் அருணா said...

நன்றி பூங்கொத்துகளுடன் நேசமித்ரன்
அதேதான் ஹேமா !

ஹுஸைனம்மா said...
/ ஏன் விரும்பியவற்றை வாங்குமளவுக்கு வருவதற்கும் ஒரு “goal setting" தேவைதானே டீச்சர்!! இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும். /
ரெண்டும் வேண்டும் ஆனால் ஒன்றின் பின்னாலேயே துரத்துவது எப்படி நியாயம் ஹுஸைனம்மா!?

அன்புடன் அருணா said...

நன்றி அம்பிகா !
நன்றி *இயற்கை ராஜி*!
அப்பாவி தங்கமணி /நானும் கொஞ்ச நாள் lecturer ஆ இருந்து இருக்கேன். உன்னதமான என்றும் இளமையா வெச்சு இருக்கற profession ./
முற்றிலும் உண்மை!
நன்றி Priya !
நன்றி LK !

அன்புடன் அருணா said...

ஹை!மீனாட்சி பாட்டி. ரொம்ப நன்றிம்மா...இவ்வ்ளோ பெரிய கவிதை எனக்காகவா!வாழ்த்துக்கு நன்றியும் வருகைக்கு அனபும்!

அன்புடன் அருணா said...

நன்றி complan surya !

இரசிகை said...

poongoththu......:)

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை said...
/எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை...ஒரு டீச்சரா நீங்க இதை சொல்றீங்கன்னா என்னாலே ஒப்புக்கொள்ள முடியவில்லை..அருணா என்ற தனிநபரின் கருத்துகளென்றால் ஏற்றுக்கொள்கிறேன் - மற்றவர்களின் லட்சியங்களுக்கும் ஆசைகளுக்கும் இந்த பெண்ணின் ஆசை குறைவில்லாதது என்றாலும்! /
இது சம்பந்தமாக ஒரு டீச்சராகவும் தனி நபராகவும் ஒரே கருத்துதான்.பொதுவில் நான் என்னை தனித் தனியாக அடையாளம் கண்டு கொண்டதேயில்லை.இது சம்பந்தமாக நிறைய பேசலாம் முல்லை!

கிறுக்கன் said...

அருமை அருணா!!!
பசிக்க புசித்தல் வெறும்
ருசிக்க புசித்தல்
பசித்து ருசித்து புசித்தல்
தினித்து புசித்தல்
போன்றவையே
இன்றைய குழந்தைகளின் எதிர்கால லட்சியங்கள்(கனவுகள்) கிறுக்கனின் பார்வையில்.

correctaa புரியாத மாதிரி கிறுக்கிருக்கேனு நினைக்குறேன்.

-
கிறுக்கன்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா