நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.

மகளிர் தினம்.....என் மகளின் தினம்......இன்று அவளின் பிறந்த நாள்.எப்பவும் போல் இந்த முறையும் பரீட்சை நேரம்...சம்ஸ்கிருதம் பரீட்சை.ஒரே அழுகை.என்னை ஏம்மா இன்னிக்குப் பெத்தே?ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வேற வேற ரூம்லே இருப்பதனாலே என்னாலே செலிப்ரேட் பண்ண முடிலை...பார்ட்டி வைத்தாலும் யாரும் வர ரொம்ப யோசிக்கிறாங்க....பரீட்சை இருக்கே....இப்படி ஒரே அழுகை....
எப்பவும் சொல்லணும்னு நினைச்ச விஷயத்தை இன்னிக்குச் சொல்லலாம்னு "குட்டிம்மா.....அம்மா பிறந்த நாளுக்கு வீட்டில் அக்கா தங்கை தம்பிகளுக்கு ஐந்து பைசா மிட்டாய் வாங்கக் கூட வழியில்லாம இருந்துருக்குடா....பிறந்தநாளுக்கு புது ட்ரெஸ் என்பதெல்லாம் சினிமாலதாண்டா பார்த்திருக்கோம்..உனக்கு என்ன இல்லை?புது ட்ரெஸ், டெய்ரி மில்க் .....இன்னும் நீ ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சுருக்கு....பரீட்சை முடியட்டும் ....என்னைக்கு நினைக்கிறியோ அன்னைக்கு செலிப்ரேட் பண்ணலாம்...சரியா?.........அப்படீன்னு கேட்ட போது...
"இப்புடீல்லாம் கஷ்டப் பட்டுருக்கீங்களாம்மா"அப்படீன்னு கேட்டுக்கிட்டே விட்ட ஒரு சொட்டுக் கண்ணீரில் எனக்குப் புரிந்தது....என் மகளுக்குப் புரிந்த வாழ்வியல்.
"கொஞ்சம் வெளைச்சல் நிலத்துலே இன்வெஸ்ட் பண்ணிருக்கேம்பா.."
"அப்பிடியா? எப்போ?"
நேற்றுச் சாயங்காலம்"
"அப்பிடியா? என்னா போடலாம்னு இருக்கே..?"
"அதான் யோசிச்சுட்டே இருக்கேன்...."
"இதிலென்ன யோசனை?"
"கொஞ்சமா பணம் போட்டு உடனே வெளையறதைப் போடவா....அல்லது நிறைய பணம் போட்டு நிறைய நாளாகுறதைப் போடவான்னு ஒரே ரோசனையா இருக்கு..."
"இதிலென்ன இவ்வ்ளோ ரோசனை பண்றே? சட்டுப்புட்டுனு ஆரம்பிச்சா மட மடன்னு ஆடு ,மாடு ,கோழிப் பண்ணைத், தோட்டம் தொரவுன்னு பெரியாளாயிடலாம்....."
"அதுசரி நீ என்னா போட்டுருக்கே?"
"நா எப்பவுமே அவசரக்காரனப்பா.....எது மட மடன்னு வெளையுதோ அதைப் போட்டு சட்னு ...வீடு அது இதுன்னு வாங்கி இப்போ ஜெகஜோதியா இருக்கோமாக்கும்!? அடுத்தாப்புலே பக்கத்துலேயே இன்னும் கொஞ்சம் நிலம் வேற வாங்கப் போறேன்"
"இருந்தாலும் பயமாவே இருக்கப்பா....."
அட! நம்பி இறங்குப்பா....பக்கத்து தோட்டத்துக்காராங்க அத இதைன்னு கொடுத்துதவி நல்லாப் பார்த்துப்பாங்க...கொஞ்சம் சூதானமா நடந்துக்கிட்டா நீயும் வீடு தோட்டம்னு பத்தே நாள்லே எங்கேயோ போயிரலாம்பா!!!!"
"பத்தே நாள்லேயெவா??????????ரைட்டு.....உன்னை நம்பி வெவசாயத்துலே இறங்கிடுறேம்பா! ஒகே...வா????"
அட! நீங்க வேற! நம்ம மக்கள் FARMVILLE பற்றித் தீவிரமா ஆராய்ச்சி பண்றதைப் பற்றிச் சொன்னா.............????
நேற்றும் இன்றும்
விதம் விதமான
வேண்டுதல்களோடு விடிந்தன.
ஒற்றைப் புழு மாட்டி மீனுக்குத் தூண்டிலிட்டு பெரிய மீனுக்கான வேண்டுதலில்அவனும்
இன்னிக்கு மட்டும் தூண்டிலில் மாட்டி விட்டுராதே என்றுமீனும்................இன்னிக்கு கெடா வெட்டிச் சாமி கும்பிடுறேன் என் புள்ளையைக்காப்பாற்று எனஅவனும்இன்னிக்கு ஒருநாள் என்னைத் தப்பிக்க விட்டுரு என கெடாவான ஆடும்.........மழை தண்ணியில்லாமே எம்பயிரெல்லாம் வாடுதேமழை கொடுப்பான்னு அவனும்.........நல்லா உப்பு வெளைஞ்சுருக்குநாளை வரை மழை வராமப் பார்த்துக்கோன்னுஇவனும்...........
நாளை தெரியும் கடவுள் யார் பக்கம்னு?????
"ராணி நாளைக்குச் சீக்கிரம் வந்துரு...அய்யாவும் நானும் விரதம்...என்னாலே ஒண்ணுமே பண்ண முடியாது. ரகு வெளிலே பார்த்துப்பான்."
"சரிங்கம்மா" என்ற ராணி அம்மா ஏதாவது தருவாங்கன்னு காத்துக் கொண்டு இருந்தாள். ரெண்டே கொய்யாப் பழத்தைக் கையில் கொடுத்துவிட்டு"நாளைக்கு விரதம்னு எல்லாம் கொஞ்சமா செய்ததுலே எதுவும் மிஞ்சலை ராணி.....இன்னிக்குப் பழம்தான்" என்று சொல்லி நகர்ந்தாள்.
ராணிதான் வீட்டில் மூத்தவள்.மூன்று தங்கைகள்.அப்பா அம்மா இதெல்லாம் சினிமாவில், கதைகளில் வருபவர்கள் அவளைப் பொறுத்தவரை.எப்போயிருந்துன்னு நினைவே இல்லாத நாளிலிருந்து இப்படி வீட்டு வேலை பார்த்துதான் தங்கைகளைக் காப்பாற்றுகிறாள்.
ராணி தங்கச்சிங்களுக்கான மிஞ்சிய சாப்பாட்டுக்காக பெருநம்பிக்கையுடன் காத்திருந்தவளுக்கு வீட்டில் இவள் வருகைக்காகக் காத்திருக்கும் மூன்று வயிறுகளும் நினைவுக்கு வந்து மனதை அழுத்தியது.வீட்டில் ஒருமணி அரிசியோ எதுவும் கிடையாது ....மாசக் கடைசி.ஏற்கெனவே அட்வான்ஸ்லேதான் ஓடிக் கொண்டிருக்கு.....அம்மாகிட்டேயும் எப்படிக் கேட்க என்று நடந்தாள்.வழியெல்லாம் ராத்திரிப் பொழுதை எப்பிடி ஓட்ட என்று ஒரே கவலை...கால் கிலோ அரிசி கடனாக செட்டியார் கடையில் வாங்கி தண்ணீர் நிறைய ஊற்றிக் கஞ்சி வடிக்காமல் பிள்ளைகளுக்குக் கொடுததாள்.கடைசியில் கிடந்த சோற்றுப் பருக்கைகளையும் கஞ்சியையும் தம்ளர் தம்ளராய்த் த்ண்ணீரையும் குடித்துப் படுத்தாள்.
விடிஞ்சதும் கருப்புக் கருப்பட்டிக் காபியைத் தொண்டையில் இறக்கிக் கொண்டையை முடிந்து கொண்டு "ஏய் சுமதி தங்கச்சிங்களைக் கிளப்பி நீயும் பள்ளிக்கூடம் போங்க....மதியம் சத்துணவு சாப்புட்டுக்கோங்க" என்றவாறே வேக வேகமாக நடையைப் போட்டாள்....ஏற்கெனவே நேரமாச்சு....அம்மா சத்தம் போடுவாங்க....அம்மாவுக்கும் அய்யாவுக்கும் விரதம் வேற..."என்று நினைத்தவாறே எட்டி நடையைப் போட்டாள்.
முற்றம் தெளித்துக் கோலம் போட்டு ,வீட்டைக் கழுவி, முன்னால் பின்னால் பெருக்கி எல்லாப் பாத்திர பண்டங்களையும் கழுவி,குத்து விளக்கைத் தேய்த்துக் கழுவி,மாலை போட்டு நிமிர்ந்த போது அம்மாவும் அய்யாவும் குளித்துப் பூஜைக்கு ரெடியாகியிருந்தார்கள்.ஒரு பொழுது சாப்பாடு என்றால் அன்று விசேடமாகச் சமைக்கவேண்டும்...............அவசர அவசரமாக காய் வெட்டிச் சமையலை முடித்து விட்டுப் பூஜை முடிவதற்காய்க் காத்திருந்தாள். எப்படியும் இன்னும் அரை மணி நேரம் ஆகும்....
வயிறு காலியாக அமிலமாய் எரிந்தது.முந்தைய நாளும் சாப்பிடாததால் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது...அப்படியே பூஜையறை வாசலில் தூணைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.கீழே விழுந்து விடக் கூடாதென்று இன்னும் இறுக்கமாகத் தூணைப் பிடித்துக் கொண்டாள்.
காயத்ரி மந்திரம் இப்போதுதான் ஆரம்பித்திருந்தார்கள்.அம்மா மந்திரம் சொல்லிக் கொண்டே சாமிக்கு இலை வைத்துப் பரிமாற ஆரம்பித்திருந்தாள்.பருப்பின் மேல் நெய் விட நெய்க் கிண்ணம் எடுக்க எழுந்தவள் கொஞ்சம் தடுமாறினாள்.
" ராணி அம்மா விரதம்னு தெரியாதா....காலைலேருந்து பல்லுலே தண்ணி கூடப் படாமெ, சாப்பிடாம விரதம் இருக்காங்களே...நாமளே எடுத்துக் கொடுக்கலாம்னு தோணறதா?.... எல்லாம் சொல்லணுமா?....இப்புடி உக்கார்ந்து வேடிக்கை பார்க்குறியே??.....போ...அம்மா கேக்குறதெல்லாம் எடுத்துக் கொடு... விரதமும் அதுவுமா நீ ஏம்மா அடுப்படிக்கும் பூஜையறைக்குமாய் அலையுறே?நீ அலையாமெ ஒரு இடத்துலே உக்காரும்மா......எல்லாம் ராணி செய்வா" என்றார் அய்யா .
அம்மா சாமிக்கு இலையில் கரண்டி நிரம்பp பருப்பின் மேல் நெய் ஊற்றினாள்.
படத்தில் முருகன் அழகாகச் சிரித்துக் கொண்டான்.