நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, March 9, 2010

ஸ்பரிசம்

இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பது...- அருணா சுரேஷ்
இந்தக் கட்டுரையும் கவிதையும் மகளிர் தினம் ஸ்பெஷல் சக்தி-2010 இதழில்..........

குட்டிம்மாவின் பிறப்பில்
தேவதை இறக்கைகளுக்கான
தேடல் ஆரம்பம்...

ரோஜா நிறக் குட்டிக் கால்
கண்டதுமே சின்ட்ரெல்லாவின்
தொலைந்த காலணியைத் தேட
ஆரம்பித்தது மனது...

பயத்தில் குட்டிம்மாவின் கை
இறுக்கத்திலும் முதுகுப் பின்
மறைவிலும்
கடவுளானேன் சிலநேரம்...

எனதுடையணிந்து
என் முன் நிற்கும் போது
என் முற்றத்தில்
எனக்கான மழை

கண்ணாடிக் கைவளையோசையும்
சுவரில் நெற்றிப் பொட்டும்
மொட்டு சத்தமில்லாமல் மலர்வதைக்
கொஞ்சம் சத்தமாகவே சொல்லியது...

யாரையோ மணமகனாக்கி
உடன் ஏற்றி
ரயில் நகரும் போது
அவசரமாய்த் தொட்டுக்
கோர்த்துக் கொள்ளும் கைகளின்
ஸ்பரிசம்...

கைகளில் ஒட்டிக் கொண்டு வீடு
வந்து சேர்ந்து அழ வைத்தது...

வீடு முழுவதும் நீ செய்த
ப்ளாஸ்டிக் பூக்களும்
சுவர் கிறுக்கல்களும்
கொடியில் தொங்கும்
சூடிதார்களும்
கண்ணாடியில் ஸ்டிக்கர்
பொட்டுமாய்
கைநிறைய உன் பிரிவு
ஸ்பரிசமுமாய்...
கண் நிறைய ஒளித்து
வைத்த மழையுமாய்
அம்மா...



Monday, March 8, 2010

மகள் தினம்!


மகளிர் தினம்.....என் மகளின் தினம்......இன்று அவளின் பிறந்த நாள்.எப்பவும் போல் இந்த முறையும் பரீட்சை நேரம்...சம்ஸ்கிருதம் பரீட்சை.ஒரே அழுகை.என்னை ஏம்மா இன்னிக்குப் பெத்தே?ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வேற வேற ரூம்லே இருப்பதனாலே என்னாலே செலிப்ரேட் பண்ண முடிலை...பார்ட்டி வைத்தாலும் யாரும் வர ரொம்ப யோசிக்கிறாங்க....பரீட்சை இருக்கே....இப்படி ஒரே அழுகை....

எப்பவும் சொல்லணும்னு நினைச்ச விஷயத்தை இன்னிக்குச் சொல்லலாம்னு "குட்டிம்மா.....அம்மா பிறந்த நாளுக்கு வீட்டில் அக்கா தங்கை தம்பிகளுக்கு ஐந்து பைசா மிட்டாய் வாங்கக் கூட வழியில்லாம இருந்துருக்குடா....பிறந்தநாளுக்கு புது ட்ரெஸ் என்பதெல்லாம் சினிமாலதாண்டா பார்த்திருக்கோம்..உனக்கு என்ன இல்லை?புது ட்ரெஸ், டெய்ரி மில்க் .....இன்னும் நீ ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சுருக்கு....பரீட்சை முடியட்டும் ....என்னைக்கு நினைக்கிறியோ அன்னைக்கு செலிப்ரேட் பண்ணலாம்...சரியா?.........அப்படீன்னு கேட்ட போது...
"இப்புடீல்லாம் கஷ்டப் பட்டுருக்கீங்களாம்மா"அப்படீன்னு கேட்டுக்கிட்டே விட்ட ஒரு சொட்டுக் கண்ணீரில் எனக்குப் புரிந்தது....என் மகளுக்குப் புரிந்த வாழ்வியல்.

Saturday, March 6, 2010

பத்தே நாள்லே வீடு வாங்கும் திட்டம்...

"கொஞ்சம் வெளைச்சல் நிலத்துலே இன்வெஸ்ட் பண்ணிருக்கேம்பா.."

"அப்பிடியா? எப்போ?"

நேற்றுச் சாயங்காலம்"

"அப்பிடியா? என்னா போடலாம்னு இருக்கே..?"

"அதான் யோசிச்சுட்டே இருக்கேன்...."

"இதிலென்ன யோசனை?"

"கொஞ்சமா பணம் போட்டு உடனே வெளையறதைப் போடவா....அல்லது நிறைய பணம் போட்டு நிறைய நாளாகுறதைப் போடவான்னு ஒரே ரோசனையா இருக்கு..."

"இதிலென்ன இவ்வ்ளோ ரோசனை பண்றே? சட்டுப்புட்டுனு ஆரம்பிச்சா மட மடன்னு ஆடு ,மாடு ,கோழிப் பண்ணைத், தோட்டம் தொரவுன்னு பெரியாளாயிடலாம்....."

"அதுசரி நீ என்னா போட்டுருக்கே?"

"நா எப்பவுமே அவசரக்காரனப்பா.....எது மட மடன்னு வெளையுதோ அதைப் போட்டு சட்னு ...வீடு அது இதுன்னு வாங்கி இப்போ ஜெகஜோதியா இருக்கோமாக்கும்!? அடுத்தாப்புலே பக்கத்துலேயே இன்னும் கொஞ்சம் நிலம் வேற வாங்கப் போறேன்"

"இருந்தாலும் பயமாவே இருக்கப்பா....."

அட! நம்பி இறங்குப்பா....பக்கத்து தோட்டத்துக்காராங்க அத இதைன்னு கொடுத்துதவி நல்லாப் பார்த்துப்பாங்க...கொஞ்சம் சூதானமா நடந்துக்கிட்டா நீயும் வீடு தோட்டம்னு பத்தே நாள்லே எங்கேயோ போயிரலாம்பா!!!!"

"பத்தே நாள்லேயெவா??????????ரைட்டு.....உன்னை நம்பி வெவசாயத்துலே இறங்கிடுறேம்பா! ஒகே...வா????"

அட! நீங்க வேற! நம்ம மக்கள் FARMVILLE பற்றித் தீவிரமா ஆராய்ச்சி பண்றதைப் பற்றிச் சொன்னா.............????

Tuesday, March 2, 2010

கடவுள் யார் பக்கம்????

நேற்றும் இன்றும்
விதம் விதமான
வேண்டுதல்களோடு விடிந்தன.

ஒற்றைப் புழு மாட்டி
மீனுக்குத் தூண்டிலிட்டு
பெரிய மீனுக்கான வேண்டுதலில்
அவனும்

இன்னிக்கு மட்டும் தூண்டிலில்
மாட்டி விட்டுராதே என்று
மீனும்................

இன்னிக்கு கெடா வெட்டிச்
சாமி கும்பிடுறேன் என் புள்ளையைக்
காப்பாற்று என
அவனும்
இன்னிக்கு ஒருநாள்
என்னைத் தப்பிக்க விட்டுரு என
கெடாவான ஆடும்.........

மழை தண்ணியில்லாமே
எம்பயிரெல்லாம் வாடுதே
மழை கொடுப்பான்னு
அவனும்.........
நல்லா உப்பு வெளைஞ்சுருக்கு
நாளை வரை மழை
வராமப் பார்த்துக்கோன்னு
இவனும்...........

நாளை தெரியும்
கடவுள் யார் பக்கம்னு?????