நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, June 26, 2012

முன்பு போலில்லை எதுவும்.......

 தொலை பேசியிலும், ஈ- மெயிலிலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!!!

முன்பு போலில்லை எதுவும்.......

சோத்துத் தட்டு நாலு மூன்றாகியது....
காபிக் கோப்பைகள் பழைய ஞாபகத்தில்
நான்கில் நிரப்பப் பட்டு மூன்றாகிறது...
தோசையும் சப்பாத்தியும் சுடும் பொழுது
எண்ணிக்கையில் உன்னையும்
இன்னமும் சேர்த்துக் கொண்டிருக்கிறது......

உன் பொருட்களை நகர்த்தி வைக்கமுடியாமல்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன உன் நினைவுகள்
வீடு முழுக்க நிறைந்திருக்கும் உன் வாசனைச்
சிறையிலுருந்து விடுவித்துக் கொள்ளத் தெரியாமல்
விரும்பி அடைபட்டுக் கிடக்கிறோம்....

அழைக்கும் மணியோசைக்கும்
மினுக்கும் உன் முகத்திற்குமாய்
சில மைல்களுக்கப்பாலிருந்தபடி
தொலைபேசியைப் பார்த்துக் காத்திருப்பது
வழக்கமில்லாத வழக்கமாகி விட்டது....

தாரை வார்த்துக் கொடுத்ததும் தண்ணீராய்
உன்னைக் கொடுக்கத்தானா இவையத்தனையும்
என கண்ணில் கட்டிக் கொண்ட நீருடன் 
பிரியங்கள் இத்தனை நாளில்லாத அவசரத்துடன் 
உன்னை இறுக்கமாகப் பற்றிக் கொண்டது அன்று.....

எதற்காக இது அத்தனையும் என்னும் கேள்வியும்
நாமாகவே இழுத்துப்போட்டுக்கொள்கிறவைதானே 
இவை என்ற எண்ணமும்
பெண்ணைப் பெற்ற அனைவரிடமும் எப்போதாவது  
தோன்றியிருக்கலாம்.....என்ற எண்ண விதைகளுடன் 
உன் அம்மா........

26 comments:

ராமலக்ஷ்மி said...

அம்மாவின் அன்பு அத்தனை எழுத்திலும்.

மணமக்கள் பல்லாண்டு வாழ்க எல்லா வளமும் பெற்று!

ஹுஸைனம்மா said...

அட, மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா... வாழ்த்துகள் வருங்காலப் பாட்டிக்கு!! :-))

கவிதையும் அழகு - அம்மாவின் அழகு மனதும் தெரிகிறது...

Anonymous said...

miss u maaaa :'(
in tears
- S. Janani Ravishanker

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு வரியிலும் அம்மாவின் அன்பு மிளிர்கிறது.

மணமக்களுக்கு வாழ்த்துகள் பல.....

Anonymous said...

மணமக்கள் பல்லாண்டு வாழ நல்வாழ்த்துக்கள்...

Soon I will be on the same boat writing another "முன்பு போலில்லை எதுவும்.."...

Nice one Sis...

ஷர்புதீன் said...

மணமக்கள் எல்லாமும் பெற்று இன்புற்ற வாழ வாழ்த்துவோம்! வாழ்த்துவோம்!

"அருணா பாட்டி"!!

Ramani said...

இதே உணர்வை அனுபவித்திருப்பதால்
கவிதை கொஞ்சம் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்திப் போகிறது
மனம் நெகிழச் செய்து போகும் அருமையான பாசப் பதிவு
வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழையடி வாழையாகச் சமூகத்தில் நிகழ்வதுதான் என்றாலும், வாரிசுகளின் பிரிவை ஏற்றுக்கொள்ளத் தாய்மை தயக்கத்திலேயே வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ளூம். வாரிசுகளுக்கு வாரிசு வந்தபின் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! அந்தோணி முத்துவாக இருந்தால் இன்னும் சிறப்பாக எழுதியிருப்பார். பல்வித நலனும் பாங்குறப் பெற்று வாழிய நீடு!

ஜோதிஜி திருப்பூர் said...

பூங்கொத்து

மோகன் குமார் said...

ரொம்ப நெகிழ்ச்சியாய் இருக்கு. குறிப்பாய் உங்கள் பெண்ணின் பின்னூட்டம்

நானும் பெண்ணை பெற்றவன்

மணமக்களுக்கு வாழ்த்துகள்.

மோகன் குமார் said...

மணமக்களுக்கு பூங்கொத்து ! :))

Anonymous said...

இது வழக்கம் தான் அக்கா,
உன் அம்மாவை நினைத்து பார்...
5 பெண் பிள்ளைகள் உன்னையும் சேர்த்து....
இப்போது எல்லோரும் வேறு வேறு திசைகளில் ...வேறு வேறு ஊர்களில்......
நீ திருமணம் முடிந்து வடக்கே பல மைல்கள் செல்லவில்யா அம்மாவை பிரிந்து?
எல்லாம் வழக்கம் தான்....
இந்த பிரிவினால் உனக்கு கிடைத்தது ......
மாமியார் என்ற பதவி .......
பாட்டியாகும் பாக்கியம்....
மகனாக மருமகன் .............
வேறு என்ன வேண்டும்......?
சோத்து தட்டு நாலு மூன்றாகும் பின்னர் அதிகரிக்கும்.......
கவலை வேண்டாம் அக்கா.........
என்றும் அன்புடன்.........அன்பு தம்பி பாபு.................வாழ்த்துகளுடன் உமா & விக்கி..........

KParthasarathi said...

ஒரு தாயின் வார்த்தைகளில் உள்ள பரிவு,பாசம்,
அன்பு,தாபம் மனதை நெகிழ செய்கிறது.ஆனால் தன் வீடு,தன் கூடு என ,தன் வாழ்க்கையை துவக்கும் இந்த நன்னாளில் மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!

அன்புடன் அருணா said...

அன்புத் தம்பி பாபு., உமா & விக்கி,
மூளைக்கு எல்லாமே புரிகிறது ......
மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது....

அவ்வளவுதான்.... :(

சுந்தர்ஜி said...

சோத்துத் தட்டும், காஃபிக் கோப்பையும் குறைந்து பின் கூடும் ரகசியம்தான் வாழ்க்கையின் ஆணிவேர் என்பது நீங்கள் அறியாததா?

வேரிலிருந்து மரமும், மரத்திலிருந்து விழுதுமெனத்தானே வாழ்க்கை.

பிரிவின் கண்ணீர்த்துளிகள் விழிகளுக்கு விரைவில் திரும்ப, ஒளிந்துகொண்டிருக்கும் புன்னகைகள் விரைவில் வானவில்லாய் வெளிப்படும்.

வாழ்த்துக்கள் மகளுடன் வீட்டுக்குள் நுழைய இருக்கிற பாட்டிக்கு.

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி !
ஹுஸைனம்மா வருங்காலப் பாட்டிக்கு!! :-))
அதெல்லாம் காலாகாலத்துலெ நடக்கவேண்டியதுதானே ஹுசைனம்மா!!!!

அன்புடன் அருணா said...

Anonymous said...
miss u maaaa :'(
in tears
- S. Janani Ravishanker//
What to say? Same here Janani...

இரசிகை said...

vali....thaan,
vaazhthukalum thaan.
amma.:)

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள் அருணா.

அம்மாவின் அன்பு இழையோடும் கவிதை.
வலிகளும் புரிகிறது.

அன்புடன் அருணா said...

நன்றி வெங்கட் நாகராஜ் !
ரெவெரி said...
/ Soon I will be on the same boat writing another "முன்பு போலில்லை எதுவும்..".../
It's hard to take it....be prepared!

அன்புடன் அருணா said...

ஷர்புதீன் said...
/ "அருணா பாட்டி"!!/
இதிலொரு சந்தோஷமா????
Ramani said...
/இதே உணர்வை அனுபவித்திருப்பதால்
கவிதை கொஞ்சம் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்திப் போகிறது/
புரிகிறது ரமணி சார்!!

Anonymous said...

அருணா வணக்கம் இங்கே வரக்கொஞ்சம் லாஞ்சனையாக இருக்கிறது.மணநாளின் பரபரப்பினூடே உங்கள் கவிதைக்கைகள் பார்த்திருக்க வாய்ப்பில்லாது போனது.காரிலேறும் மகள் பார்த்து கண்கள் மீறும் கண்ணீர் கண்கள் பார்க்கமுடியாமல் போனது ஒவ்வொருவரையும் அவர் இவர் என அறிமுகப்படுத்தும் ஆசிரியை பார்க்கமுடியாமல்போனது ஏதோ இழந்தது போலுணர்கிறேன்.ஆயினும் இந்தப்படம் கொஞ்சம் குறைக்கும் குற்ற உனர்வை.வாழ்த்துக்கள்.நல்லா இருக்கீங்களா? காமராஜ்

ஸ்ரீராம். said...

மகளுக்கு வாழ்த்துகள் உணர்வுகள் வார்த்தைகளின் வரிகளில் வழிகின்றன. இந்நேரம் ஓரளவு சமனப் பட்டிருப்பீர்கள்.

இராஜராஜேஸ்வரி said...

காபிக் கோப்பைகள் பழைய ஞாபகத்தில்
நான்கில் நிரப்பப் பட்டு மூன்றாகிறது...

மூளைக்கு எல்லாமே புரிகிறது ......
மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது....

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

Bala Sankar said...

poonkoththu

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா