நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, May 28, 2011

அது ஒரு காலம்....

ஊருக்கு வரும்போதெல்லாம்
அம்மம்மாவின் சுருக்குப் பை
கொண்டு வந்த கனவுகள்
கழுத்துவரை உண்டு...
அது ஒரு காலம்....

காது குடையும் கோழிச்  சிறகும
கொஞ்சம் சில்லறையும்
கசங்கிய ஒத்த ரூபா நோட்டுக்களும்
எப்போதும்  கொண்டு வரும்
பெரும் பிரியத்தையும்
சுமந்திருக்கும் அந்தச்
சுருக்குப் பையைத் திறந்து
வாசம் பிடிச்சது ஒரு காலம்...

ஒல்லிக்குச்சி பாட்டிகள் எல்லோரின்
முகங்களும் ஒரே மாதிரியானதாக
சுருக்கங்களுடனும், இடுப்பில்
சுருக்குப் பைகளுடன்
பை நிறைய பிரியங்களுடனும்
இருக்கிறது எல்லா ஊரின்
அம்மம்மாக்களின் அடையாளங்களாய்...
என மயங்கியது ஒரு காலம்..

பட்டுத் துணியின் சுருக்குப் பையினுள்
சில்லறைகளுக்காக கைவிட்ட
சுருங்கிய கை விரல்களை இறுக்கி
"இதை எல்லோர் முன்னாலேயும்
வெளியே ஏன் எடுக்கிறே?"
என்று எரிச்சல்பட்டு
முகம் வாடிய அம்மம்மாவைக்
"கிழவி உயிரை எடுக்குது" ன்னு
சொல்ல வைத்ததுவும்
ஒரு காலம்.......


6 comments:

middleclassmadhavi said...

Unmai! Ellak kaalAththilum ammavin anbu maaruvathillai!

Karuththaana kavithai!

நிரூபன் said...

சுருக்குப் பை பற்றிய ஞாபக மீட்டல்களை உங்கள் கவிதை இப்போது கிளறி விட்டிருக்கிறது. பாட்டிமாரின் கைப் பக்குவமும், அவர்கள் எப்போதும் கூடவே வைத்திருக்கும் சுருக்குப் பையும், பாக்கு இடிக்கும் உரலும் எங்களூர்களில் பல கதைகளைச் சொல்லும் இயல்புகளைக் கொண்டவை.

CS. Mohan Kumar said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

சுருக்குப் பையினுள் பொதிந்து வைத்திருக்கும் வெற்றிலை, பாக்கு, வாசமும், தேடித் தேடி தரும் சில்லறைக் காசும்… நல்ல சுகமான நினைவுகள். …. நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பழைய நினைவலைகள்...
ம்... அது ஒரு பாலம்...

ராமலக்ஷ்மி said...

மிக அருமை அருணா. அம்மம்மாவின் நடுங்கும் சுருங்கிய கையும் சுருக்குப் பையும் மறக்க இயலாதவை.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா