நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Saturday, May 22, 2010
மீண்டும் அழகி....
கோகுல்நாத் முருகேசன் என்பவரின் முயற்சியாலும் அழகியின் மாற்று ஒலிபெயர்ப்பு உதவியாலும் திருக்குறள் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கங்களுடனும் அது தவிர தமிழ் வாசிக்க முடியாதவர்களுக்காக தமிழை ஆங்கிலத்திலுமாகக் கொடுத்திருக்கிறார்.படிக்கும் போது அவரின் உழைப்பும் முனைப்பும் தெரிகிறது.
தமிழ் நாட்டில் இல்லாத தமிழர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.தமிழ்நாட்டுக் குழந்தைகள் பள்ளிகளில் திருக்குறள் படித்துக் கொள்வார்கள் .மற்றவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு திருக்குறளை அறிமுகப்படுத்த ஒரு நல்ல வழி!
பகிர்ந்து பயனடையுங்கள்!
Wednesday, May 19, 2010
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-4
வெள்ளை அடித்த சுவரில்
கிறுக்குதல் மகா சந்தோஷம்
பாப்பாவுக்கு....
குடுவையில் ஒரு பறவை பறந்து கொண்டும்
வானத்தில் ஒரு மீன் நீந்திக் கொண்டுமாய்
தரையில் சூரியனும் நட்சத்திரமும்
பக்கம் பக்கமாய்....
நீ உயிர் கொடுத்து உயிர்ப்பித்த
பூனையும் எலியும் உயிர்
பிழைக்க ஓடாமல்
பக்கம் பக்கமாய்.....
அம்மா அவசரமாய் அழித்துப் போன
ஓவியத்தில் மிச்சமிருக்கிறது
பாப்பாவின் கைரேகைகளும்
கொஞ்சம் பூமியின் கால் சுவடுகளும் ...
தரை ஈரம் காய்வதற்குள்
மீண்டும் பென்சிலும்
கலர் க்ரேயானுமாய்
குப்புறப் படுத்து வரைய
ஆரம்பித்த தருணத்தில்.........
மீண்டும் ஓடி வருகிறாள்
அம்மா ஈரத்துணியும்
கையுமாய்.......
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!!!
Saturday, May 15, 2010
எனக்கு மட்டும் ஏனிப்படீ???
ஆங்கிலப் பரீட்சையின் போது like வார்த்தையில் வாக்கியம் அமைக்க வேண்டும்.....பக்கத்திலிருந்த ப்ரிட்டானிக்கா பிஸ்கட் டப்பாவில் எழுதியிருந்த biscuits பார்த்து "I like biscuits" என்று எழுதியதுதான் நான் அடித்த முதல் காப்பி.நோட்டில் எழுதிப் போட்ட வாக்கியம் "I like cakes"....அதை எழுதாதாலோ என்னவோ மிஸ் அதை அடித்துத் திருத்தியதால் 100க்கு 99 மார்க்கில் நின்று போனேன்.அதிலிருந்து சொந்தமாக எழுதுவதை நிறுத்திவிட்டேன்.
அப்புறமாய் வந்த பரீட்சைகளில் நேரத்தையும் எனர்ஜியையும் தூக்கத்தையும் தொலைத்து மார்க் பின்னால் ஓடி ஓடிக் கொஞ்சம் அடைந்தும் நிறைய அடையாமலும்......இன்னமும் கண்ணில் ஏமாற்றத்துடன் நிமிர்ந்து பார்க்கும் இடம் மெடிகல் சீட்.பெர்சனல் இன்டர்வியு வரை அழைப்பு வந்த பின்னும் போய் பங்கு கொள்ள முடியாத பணக்கஷ்டம்....மனக் கஷ்டமும்தான் இப்போ வரைக்கும்.ம்ம்ம்ம்ம்ம் சரி விடுங்க....ஒரு நல்ல டாக்டரை இந்த மருத்துவ உலகம் இழந்து விட்டது!!!! !!!!!
பரீட்சையின் போது யாருக்கும் காட்டவும் கூடாது...யாரையும் பார்த்தும் எழுதக் கூடாதுன்னு ஒரு அதி பயங்கரக் கொள்கைவாதியாகவே இருந்திருக்கிறேன்.யுனிவெர்சிட்டிகளின் நிலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ஒரு பரீட்சை எம்.ஃபில்.இங்கே ஜெய்ப்பூரில்தான் எழுதினேன் .தமிழகத்தைச் சேர்ந்த ஒரு யுனிவெர்சிட்டிதான்.இங்கேயுள்ளவர்கள்தான் சென்டர் இன் சார்ஜ்.
பரிட்சை நேரம் மதியம் 2 மணி.திடீரென ஒரு ஃபோன் கால் பரீட்சை 12 மணிக்கு ஆரம்பித்து விடும்னும் சீக்கிரம் வாங்கன்னும்.நான் இருந்த இடத்திலிருந்து போய்ச் சேருவதற்கு மணி ஒன்றரையாகி விட்டது.பரீட்சை ஆரம்பித்து விட்டது.பரீட்சை ஹால் அமைதியாக இருந்தது.எல்லோரும் புத்தகத்தைக் கையில் வைத்துப் பார்த்து எழுதிக் கொண்டிருந்தார்கள்.Mass copying!.அமைதியாக என் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டேன்.நடப்பதைப் பார்த்து வேர்த்து ஊத்தியது.கேள்வித்தாளைப் பார்த்தால் ஒண்ணுமே தெரியாதது போலிருந்தது.இந்த இடத்தில் பரீட்சை எழுதி என்னத்தைக் கிழிக்க என்னும் எண்ணத்துடன் எழுந்து கொண்டேன்.நமக்கு முந்தி நம்ம கண்ணீர்தான் நம்மளைக் காட்டிக் கொடுத்து விடுமே ...பக்கத்திலிருந்த மாணவன் கேட்டான்."என்னாச்சு மேம்?"
"பரீட்சை எழுதி என்ன ஆகப் போகுது?அதான் போறேன்".
"மேம்..நீங்க போறதினாலெ யாருக்கு நஷ்டம்...நல்லா யோசிச்சுப் பாருங்க.உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்க பார்த்து எழுதாதீங்க.உங்க படிப்பு எதுக்கு வீணாகணும்.?" என்று சொல்லி விட்டு அவன் பாட்டுக்கு எழுத ஆரம்பித்து விட்டான்.
சரின்னு அமைதியா எழுத ஆரம்பித்தேன்.எனக்குத் தெரிந்ததை எழுதி முடித்து வெளியில் வந்ததும் அதே பையனும் இன்னொருவனும் மேம் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தும் காப்பியடிக்காமல் எழுதினீங்களே மேம்.உங்களுக்கு ஒரு சல்யூட்.....என்றார்கள்.
கொஞ்சமாய் மீண்டும் கண்ணில் நீர் எட்டிப் பார்த்தது.
அது எனக்காகவா?
அல்லது
வருங்கால சமுதாயத்துக்காகவா????
என்று இன்னமும் புரியாமல்......
தொடர அழைத்த முல்லைக்கு நன்றி !
தொடர அழைப்பது:
படித்தவுடன் அட!எனக்கும் எழுதணும் போலிருக்குன்னு நினைக்கும் எல்லோரையும்!
Wednesday, May 12, 2010
நானும் என் கடவுள்களும்!
அப்பிடி செய்யாதே... இப்பிடி செய்யக் கூடாது, சாமி தண்டிக்கும் சாமி கண்ணைக் குத்தும் .....இந்த வார்த்தைகளில் இருந்து நானும் தப்பிக்கவில்லை.
அப்புறம் என் ஷெல்ப் சுவரில் என் இஷ்ட தெய்வங்கள் அவ்வப்போது மாறுவதுண்டு.
மாற்றங்களுக்குப் பெரிய Strategy எதுவும் இருந்ததில்லை.
துணைவன் படம் பார்த்த மறுநாள் முருகன் படமும்,
திருமால் பெருமை பார்த்த பின் பெருமாள் படமும்,
சபரிமலை ஐயப்பன் பார்த்தபின் ஐயப்பன் படமும்,
ஜீஸஸ் பார்த்த பின் கர்த்தர் படமும்,
அன்னை வேளாங்கன்னி பார்த்த பின் வேளாங்கன்னியுமாக...
மாறிய படியே இருந்திருக்கிறது என் இஷ்ட தெய்வங்களின் வரிசை.
பின் சில காலங்களுக்கு சாமியிடம் வெறும் வியாபாரம் மட்டுமே நடத்தியிருக்கிறேன்.
80% மேல மார்க் தந்து விடு உனக்கு, ஒரு மாலை,
காணாமல் போன பேனாவைக் கண்டுபிடித்துக் கொடு, உனக்கு ஒரு ரூபாய்,
லேட்டா வீட்டுக்குப் போறதுக்கு அம்மா திட்டக் கூடாது, ஒரு விளக்கு.
இந்த ரேஞ்ச்லேதான் இருக்கும்.
இப்போ கொஞ்சம் மனது விரிந்து எண்ணங்கள் தெளிந்து கடவுள் உண்டு ...
அதற்கு கெட்டது செய்யவே தெரியாதுன்னும் நல்லது மட்டும்தான் செய்யும்னு தெளிவு வந்துருக்கு....
ரொம்ப எளிமையான வரிகளில் சொல்லணும்னா...
எனக்குக் கடவுள் உண்டு ஆனால் அதற்கு மதமும் பெயரும் கிடையாது! (இது என் நட்பின் பேட்டியிலிருந்து சுட்டது)
பின்னே நமக்கு நடக்கிற கெட்டதற்கெல்லாம் காரணம்...???
அட நாம் தாங்க!!!
அதுக்குப் போய் வீணாக் கடவுள் மேல பழியைப் போட்டுக்கிட்டு!!!!
இது ஒரு மீள் பதிவு...
படம் இணையத்திலிருந்து....
Monday, May 10, 2010
எப்போதாவாது யாரேனும் உணரலாம்....
வந்து விழும்
தூங்கணாங் குருவிக் கூடு
சொன்ன கதையும்.
தினம் உதிர்ந்து
குப்பைக்குப் போகும்
பூக்களும் இலைகளும்
சொன்ன கதையும்
வேறு வேறாயிருந்தாலும்
தார்ரோட்டில் தெரியாமல்
விழுந்து ஒட்டிக் கொண்ட
காலடித் தடங்கள்
சிக்கி கொண்டு சொன்ன கதையும்
வெட்டப் பட்ட மரம்
மண்ணுக்கடியில்
விட்டுச் சென்ற வேர்கள்
சொன்ன கதையும்
வேறு வேறாயிருந்தாலும்
மரித்துப் போன பட்டாம்பூச்சியை
இடம் பெயர்த்துத் தூக்கிப் போன
எறும்புக் கூட்டம் சொன்ன கதையில்
யாரேனும் உணரக் கூடும்
எல்லாக் கதைகளையும்.....
Saturday, May 8, 2010
எங்க ஊரு பசங்க-3
பசங்க சும்மா பூந்து விளையாடுற ஏரியாவாச்சே????விடுவாங்களா????
பதில்கள்....
"மேம்....காலைலே கிளம்பும் போது பார்த்து சட்டை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கிழிஞ்சுருச்சு மேம்.........."
"காலைலே டேபிள் மேலதான் வச்சேன் கிளம்பும் போது பார்த்துக் காணோம் மேம்............."
"மேம் ஷூ காலை நறுக்க்னு கடிச்சுடுச்சு மேம்..."
"டையை அப்பா கேஸ் சிலிண்டர் கட்டி எடுத்துட்டுப் போனாங்க மேம்...அப்புறமா திரும்பிக் கொண்டாரவேயில்லை!:
"ஸ்கூல் பேட்ஜ்தானே மேம்...இப்போ காட்டுறேன்....ஊக்கு கிடைக்கலியா பேட்ஜைத் திருப்பிப் போட்டு சட்டைக்கு ஊக்காக்கிட்டேன்!"
"ஐடி கார்ட்தானே மேம்...எங்க அப்பா அவரோட ஐ.டி கார்டைத் தொலைச்சுட்டாங்க.... அதான் ரெண்டு நாளா என்னோடதைப் போட்டுட்டுப் போறாங்க!"
Why nails are long?இது கேள்வி!
இதென்ன மேம் பெரிசு...எங்கம்மா நெயில் பார்க்கணுமே இத மாதிரி மூணு மடங்கு
நீளமாக்கும்.
Why didn't you go for a haircut ?
மேம் திங்கள் அம்மா போகக் கூடாதுன்னுட்டாங்க....செவ்வாய் அப்பா போகக் கூடாதுன்னுட்டாங்க....புதன் வியாழன் தாத்தா பாட்டிக்காக போகலை....வெள்ளி எனக்கே போகப் பிடிக்கலை!சனிக்கிழமை கடைக்காரனுக்கு நான் வர்றது பிடிக்கலை...கடையை மூடிட்டுப் போயிட்டான் ...ஞாயிற்றுக் கிழமை நான் எந்த வேலையும் செய்யறதில்லே!
ஙே!!
Wednesday, May 5, 2010
வளையல்,கொலுசு,ஜிமிக்கி, மருதாணி!!
"What do you want the most?"
இது கேள்வி.எல்லோரும் மார்க்,எஞ்சினியர்,டாக்டராகணும்,பணம்...அமெரிக்கா..இன்னும் பல பல எழுதியிருக்கும்போது என்னைக்கவர்ந்த பதில் இது.
வளையல்,கொலுசு,ஜிமிக்கி, மருதாணி என்று எழுதியிருந்த பெண்ணின் பதில்தான் அது.என்னை ஏன் கவர்ந்தது என்று நினைத்துப் பார்க்கையில் என்னையும் அந்த வயதில் ஈர்த்த விஷயங்கள் அதுவேதான்.
கலர் கலராய்க் கண்ணாடி வளையல்கள் போட்ட கைகளும்,அதன் உரசல்களும் மின்னல் வெட்டி வெட்டி சிணுங்கும் ஓசைகளுக்கும் அடிமை நான்...உடைந்த கண்ணாடி வளையல்களுக்காய் உயிர் போன மாதிரி அழுத அழுகைகள் தங்க மோதிரம் தொலைத்த போதும் கூட வராதது ஏன் என இன்றுவரை தெரியாத புதிரேதான்....
கொலுசு.....சொல்லும்போதே கிணி கிணியென மணியடிக்கும் மனதில்.பாதங்களில் கொலுசு போட ஆரம்பித்த நாளில் எத்தனை தடவை கால் அழகைப் பார்த்திருக்கிறேன் என்று எனக்குத்தான் தெரியும்.சன்னமாய்ச் சிணுங்கும் ஒலிக்காய் காலைத் தரையில் தோம் தோம் என அழுத்தி நடந்துப் பின் யாராவது கவனிக்கிறார்களா எனத் திரும்பி நாக்கைக் கடித்து வெட்கத்துடன் சிரித்த ஞாபகம் இப்போதும் மனதில் சாரலாய்.
பதின்ம வயதில் ஜிமிக்கி அணிந்த அத்தனை பெண்களையும் வயது வித்தியாசமின்றிப் பிடித்து விடும்.ஜிமிக்கி அணிந்த பெண்கள் பேசும்போது ஆடும் குடை ஜிமிக்கி கூந்தலிலும் காதோரத்திலும் ஏதோ ரகசியம் பேசுவது போலவேயிருக்கும்.ம.செ வரைந்த ஓவியங்களிலும் கூட இந்த ஜிமிக்கிக்காய்க் கொஞ்சம் கூடுதல் பிடிக்கும் இந்த ஓவியங்கள்.எல்லாப் பெண்களையும் அழகான தேவதையாக்கும் வித்தை தெரியும் இந்த ஜிமிக்கிகளுக்கு !
மருதாணிப் பேய் என்னும் பெயரே உண்டு எனக்கு.மிக்ஸியெல்லாம் கிடையாது அப்போ ...மாங்கு மாங்குன்னு அம்மியில் அரைக்கணும்.ஆனாலும் அம்மம்மா வீட்டுக்குப் போகும் போதெல்லாம் நாலு நாளைக்கு ஒரு தடவை இலை பறித்து அரைத்துக் கையெல்லாம் அப்பி விட்டு......அன்னிக்குன்னு பார்த்து மூக்குலெ அரிப்பு....கொஞ்சம் சொறிந்து விடுங்க அப்படீன்னு ஒருத்தர் மாற்றி ஒருத்தர்கிட்டே கெஞ்சி....காலையில் கழுவிப் பார்க்கும் ரத்தச் சிவப்பு விரல்களை அப்படியே திங்க வேண்டும் போலப் பிடிக்கும் எனக்கு.
அதனதன் வயதுக்குரிய இயல்பான ரசனைகளை மழுங்கடிக்கச் செய்யும்,மதிப்பெண்களின் பின்னாலும் ப்ரொஃபெஷன்களின் பின்னாலும் ஓடவைக்கும் கல்வி நிலை தேவைதானா? என்று கேள்வி எழுந்த போதும்
Goal Setting என்ற அடுத்த பாடத்தினை மனதின்றி நடத்தத் தொடங்கினேன்.